வியாழன், 31 டிசம்பர், 2015

காதணி...

இன்று இந்த ஆண்டின் இறுதி நாள். இன்று, என் மனதிற்குப் பிடித்த ஒரு விசயத்தைப் பற்றி எழுதி, இந்த ஆண்டை நல்ல முறையில் நிறைவு செய்யலாம் என நினைத்தேன். காதணி – தோடு என்று பேச்சு வழக்கில் கூறுவோம். பெண்கள் விரும்பி அணியும் ஒன்று. சிறு வயதிலிருந்தே காதணிகள் மீது ஒரு மோகம். வாங்கி அணிவதை விட, அதைப்பார்த்துக் கொண்டு இருப்பதிலேயே அலாதி பிரியம்.
சிறு குழந்தைகளின் காது மடல்கள் பார்க்க அழகாய் இருக்கும். என் காது மடல்களையே நான் அடிக்கடி பார்த்து இரசிப்பதுண்டு. இதில் அந்தக் காதுகளுக்கு, மேலும் அழகூட்ட காதணி அணிவது பார்ப்பவரைக் கூட கவரும்.
காதணி – காதல் அணி. விரும்பி அணிவது என்று கூட வைத்துக் கொள்ளலாம். நம் அன்புக்குரியவர்களுக்கு, இந்தக் காதணி வாங்கிக் கொடுக்கும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வாங்கிக் கொடுத்த நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்.

இந்த வருடத்தின் இறுதி நாள் இந்தக் காதணி பற்றிய என் கிறுக்கல்களுடன் நிறைவு செய்கிறேன்.

வருகின்ற புதிய ஆண்டில் ஒரு தொடர்கதை எழுதப் போகிறேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனியா.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

திறமைகள்...

சில சமயங்களில், நம் திறமைகளின் மீது, நமக்கே சந்தேகம் வந்து விடும் அளவிற்குச் சிலர்  நம்மை நடத்துவர். நமக்கு ஆயிரம் திறமைகள் இருக்கலாம். ஆனால், அவற்றில் எவை சரியான சமயத்தில்,  சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபர்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே, அதன் மதிப்பு அமைகிறது.

ஒருவருக்குப் பாடும் திறமை இருக்கலாம். ஆனால், அதை உற்சாகப்படுத்துவதற்கு ஆள் இல்லாமல் இருப்பதாலும், ஒருசில காரணங்களாலும் அவர் திறமை மறைக்கப்பட்டிருக்கும்.

இப்படிஒவ்வொரு திறமையும், ஒவ்வொரு இடத்தில் மறைக்கப்படுகிறது.

ஒரு மாணவனின் திறமை ஆசிரியருக்குத் தெரியும்...

ஒரு மகனின், மகளின் திறமை தாய்க்குத் தெரியும்...

ஒரு சகோதரனின் திறமை சகோதரிக்குத் தெரியும்...

ஒரு நண்பனின் திறமை அவன் நண்பனுக்குத் தெரியும்..

திறமை இல்லாத மனிதன் உலகில் இல்லை. ஆனால், அவன் திறமையை அவன் அறிந்து கொள்வது இல்லை. அதனை அவன் அறிந்தாலும், ஊக்கப்படுத்த ஆட்கள் இருப்பதில்லை.

நாம் ஒரு தவறு செய்தால், அதனைச் சுட்டிக் காட்டத் துடிக்கும் இந்த உலகம், ஒரு நன்மை செய்தால், அதைத் தாமதமாகத் தான் ஏற்றுக் கொள்ளும்.
'நான் இந்த உலகில் யாரையும் Impress(தன்னைப் பற்றி மற்றவர் நினைக்கச் செய்வது) செய்வதற்காகப் படைக்கப்படவில்லை. என் வாழ்க்கையை நான் வாழ படைக்கப்பட்டிருக்கிறேன்' என்று, என் நண்பர் கூறுவார்.

ஆம். நாம் யாருடைய வாழ்க்கையையும் வாழப் படைக்கப்படவில்லை. நம் வாழ்க்கையை, நாம் இனிதே வாழ வேண்டும். அதே வேளையில், நமக்குள் இருக்கும் நம் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை நல்ல முறையில் உபயோகப்படுத்துவதும் நம் கடமை.

புதிய ஆண்டின் பிறப்பிற்காய் காத்துக் கொண்டிருக்கும் நாம்... ஒரு அரை மணி நேரம் நமக்காக, நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள பயன்படுத்துவோம்.

ஒரு பேப்பர், பேனாவுடன் இன்று இரவு தனிமையில் அமருங்கள்.

உங்களிடம் இருக்கும் திறமைகளை வரிசைப்படுத்துங்கள்.

அவற்றில் எத்தனை திறமைகள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன?

எத்தனை மறைக்கப்பட்டிருக்கின்றன?

அவற்றை வெளிக்கொணர்வதற்கு என்ன முயற்சி எடுக்கப் போகிறீர்கள்?

உங்கள் திறமைகள் மட்டும் அல்ல. எங்கெல்லாம் திறமைகள் வெளிப்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிறிது ஊக்கம் கொடுங்கள். அந்தத் திறமையே அவர்களுக்கு மாபெரும் சக்தியாக மாறும்.

மற்றவர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். 'நான் ஏன் அவனிடம் அனாவசியமாகப் பேசவேண்டும். என் மனதில் உள்ளதைச் சொல்வதற்கு அவன் யார்?'என்றெல்லாம் வீண் பிடிவாதக் குணத்தோடு இல்லாமல், அனைவரிடம் அன்புடன் பழகுவோம்.

மற்றவரின் திறமையையும் மதிப்போம்.

நம் திறமையையும் வெளிப்படுத்துவோம்.

இனி வரும் காலம் நமதாகட்டும்.

இனிய காலை வணக்கங்களுடன்.
இனியா.

திங்கள், 28 டிசம்பர், 2015

நன்றி கூறும் நாள்

2015 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். நம் அன்புக்குரியவர்களுக்கு நன்றி கூறத் தகுந்த நேரம். 2015 ஆம் ஆண்டு ஆரம்பித்த முதல் நாள், நான் என் அறையில் ஒரு சார்ட் ஒட்ட வைத்தேன். அதில் எனக்குப் புதிதாக கிடைக்கும் நண்பர்களின் பெயர்களை எழுதி வைத்து, அவர்களுக்காகச் சிறப்பாகச் ஜெபிக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன். அதில் தற்போது 35 புதிய நண்பர்களின் பெயர்கள் உள்ளன. அதைப் பார்க்கும் பொழுதெல்லாம், என் நண்பர்களுக்காகச் ஜெபிப்பேன். 2016 புதிய ஆண்டில் என் நண்பர்களுக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இன்று சிறப்பாக என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை விட, என் கஷ்ட நேரங்களில் என்னுடன் இருந்த என் அன்புக்குரிய உறவினர், நண்பர் ஒருவருக்கு நன்றி கூற வேண்டும் என்று நினைக்கிறேன். சிறு வயதிலிருந்தே என்னைப் பற்றித் தெரிந்த ஒருவர். என் ஒரு பிறந்த நாளைக் கூட மறவாமல் எனக்கு வாழ்த்துக் கூறும் என் நண்பர். என்னைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர். என் எண்ணங்களை அறிந்து கொண்டவர். நான் பேசும் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருப்பவர். எனக்கு ஒரு தேவை என்று கூறினால், உடனே அதை நிறைவேற்றித் தர வேண்டுமென்று நினைப்பவர். நான் என்ன கூறினாலும் தலையாட்டி பொம்மை போல் தலை ஆட்டும் இயல்பு கொண்டவர். அவருடைய உடல், உள்ள, ஆன்ம நலனுக்காக இன்று சிறப்பாக இறைவனிடம் வேண்டுகிறேன்.

உங்களுக்கும் நிறைய நண்பர்கள் இருக்கலாம். அவர்களுக்கு நன்றி கூற மறவாதீர்கள்.

உங்கள் அன்புக்குரியவரைத் தேவை இல்லாமல் காயப்படுத்தாதீர்கள்.

அவ்வாறு காயப்படுத்தினால் உடனே மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.

பிறக்கும் புதிய ஆண்டு நமக்கும், நம் அன்புக்குரியவர்களுக்கும் இனிய ஆண்டாய் அமையட்டும்.

இனிய வணக்கங்களுடன்,
இனியா.


ஞாயிறு, 27 டிசம்பர், 2015

சிரி...

பல நேரங்களில் நம்மால் மறக்கப்பட்ட ஒன்று. அல்லது, சில நேரங்களில் நம்மால் மறைக்கப்படுகின்ற ஒன்று. சிரிப்பு. இந்த வார்த்தையை, என் அம்மா அடிக்கடி உபயோகிப்பார். சிரித்துக் கொண்டே இரு என்று கூறுவார்.

சிரிப்பதில் இருவகையுண்டு.

ஒன்று : பெயருக்குச் சிரிப்பது

மனதில் ஆயிரம் கவலைகள் இருக்கும். ஆனால், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு, ஒரு சிறு புன்னகை புரிவது. இந்த வகையில் பெரும்பாலான நம்மோர் அடங்குவர். தன் கவலை, மற்றவர்களை பாதித்துவிடக்கூடாது என்பதற்காகச் சிரிப்பது. சில சமயங்களில், நம் இந்த வகையான சிரிப்பு தெளிவாகக் காட்டிக் கொடுத்துவிடும், நாம் பெயருக்குத் தான் சிரிக்கிறோம் என்று. வீட்டிற்கு யாராவது வந்தால், பெயருக்காவது வந்து ஒரு வணக்கம் சொல்லி, சிரித்துவிட்டுப் போ என்று கூறுவதுண்டு. இதனால் யாருக்கும் பயன் இல்லை.

இரண்டு : மனம் விட்டுச் சிரிப்பது

இந்த இரண்டாம் வகைச் சிரிப்பு, எல்லா நேரங்களிலும் வருவதில்லை. சில நேரங்களில், அப்படிப்பட்ட தருணங்கள் கிடைக்கும் போது வரும். இந்த வகைச் சிரிப்பு தான், நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது. இந்த வகைச் சிரிப்பு வரவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் போது,  நாமும் நம்மையறியாமல் மனம் விட்டுச் சிரிப்போம். மனம் விட்டுச் சிரிப்பதனால் நோய் கூட தீரும் என்று சொல்வார்கள்.

சிரிப்பு - நம் வாழ்வில் முக்கியமான ஒன்று.

இன்று எதார்த்தமாகத் தான் சிரிப்பு என்ற தலைப்பை எடுத்தேன். ஆனால், இன்று 'திருக்குடும்பத்திருநாள்'. அதாவது, கிறிஸ்துமஸ் முடிந்த முதல் ஞாயிற்றை திருக்குடும்பத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான குடும்பங்களில் தன் அம்மாவிடமோ, சகோதரனிடமோ சண்டையிட்டு பேசாமல் இருப்போம். ஆனால், வெளியில் நண்பர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ சகஜமாகப் பேசிச் சிரிப்போம். அவர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம். அவர்களுடன் செலவிடும் நேரத்தை, நம் குடும்பத்தினருடன் செலவிட்டால் அவர்களும் நம் நண்பர்கள் தான்.

இந்தத் திருக்குடும்பத் திருநாளில், நம் குடும்பங்களுடன் சிறிது நேரமாவது செலவிடுவோம்.

அவர்கள் மனம் விட்டுச் சிரிக்க நாமும் ஒரு காரணமாய் இருப்போம்.

நாம் கடைசியாக மனம் விட்டுச் சிரித்த தருணத்தை எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

நாமும் மனம் விட்டுச் சிரித்து, மற்றவர்களும் மனம் விட்டுச் சிரிக்க காரணமாவோம்.

இனிய வணக்கங்களுடன்.
இனியா.

சனி, 26 டிசம்பர், 2015

இனிய இரவு...

மூன்று நாட்களாக, வீட்டில் வேலை இருந்ததால் என்னால் எழுத முடியவில்லை. நேற்று இரவு தான் அனைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் நிறைவுற்று எழுத அமர்ந்தேன். கடந்த மூன்று நாட்களாக, அதிக வேலைப்பளு. இந்த மூன்று நாட்களில், நான் இரசித்தது,  24 ஆம் தேதி இரவைத் தான். இந்த இரவு என்னுள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது. எங்கள் சர்ச்சின் பாடகர் குழுவில் நானும் இருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குப் பாடல் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர், என்னை உன் குரல் நன்றாய் இருக்கிறது. ஆனால், நீ உணர்ந்து பாடவில்லை என்று கூறினார். இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். 24 அன்று இரவு எப்படியாவது என் ஆசிரியரிடம் திட்டு வாங்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

சினிமா பாடல்களை உணர்ச்சி பொங்க பாடத்தெரிந்த எனக்கு, ஏன் இயேசுவின் பாடல்களை உணர்ந்து பாட முடியவில்லை என்று யோசித்தேன். நாம் பாடும் ஒவ்வொரு பாடலும், யாராவது ஒருவரை மையப்படுத்தியதாக இருக்கும்.

உதாரணமாக....

சென்டிமென்ட் பாடல்கள் என்றால், உடனே நம் அம்மாவும் அப்பாவும் கண்முன்னே வந்து விடுவார்கள்.

காதல் சம்பந்தமான பாடல்கள் என்றால், காதலி அல்லது காதலன் நினைவிற்கு வருவார்கள்.

நண்பர்களைப் பற்றிய பாடல்கள் என்றால், அவர்கள் நினைவிற்கு வருவார்கள்.

இப்படி ஒவ்வொரு பாடலுக்கும், ஒவ்வொரு உருவம் வரைந்து கொள்கிறோம். அதைப் போல், ஆலயத்தில் பாடப்படும் பாடல்களுக்கும் 'இயேசுவை' உருவமாகப் பாவித்துப் பாடினால், அந்தப் பாடல் அர்த்தம் பெறும். நம் உணர்ச்சிகள் வெளிப்படும். இதை 24 இரவு அன்று உணர்ந்தேன்.
என் அம்மா, என்னை எப்போதும் ஆலயத்தினுள் பேசாதே, சிரிக்காதே என்று சொல்லுவார். அன்று நானாகவே அதைச் செய்தேன். யாரிடமும் அனாவசியமாகப் பேசவில்லை. பாடல் பாடுவதையும், ஆராதனையை மட்டுமே கருத்தில் கொண்டேன். அன்றைய நாள் ஏனோ தெரியவில்லை...என்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். என் திறமை முழுமையையும், இறைவனுக்காக உபயோகித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என் ஆசிரியரிடமும் நான் திட்டு வாங்கவில்லை.

இந்த இரவில், என் மனம் ஏங்கிய ஒன்று, நடந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.
எதையும் முழுமனதோடு செய்யும் போது, நம்முடன் சேர்ந்து, நம் உள்ளமும், ஆன்மாவும் மகிழ்வுறும்.

இனிய இரவை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!!!

இனிய காலை வணக்கங்களுடன்...
இனியா.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

புதுமை – 17

இன்றைய அற்புதம் - பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுதல் (லூக்கா 18:35-43)
இயேசு, எரிகோவை நெருங்கிவந்த போது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து, பிச்சையைடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க் கொண்டிருந்ததைக் கவனித்த அவர், 'இது என்ன?' என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள். உடனே அவர், 'இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'என்று கூக்குரலிட்டார். முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால், அவர் 'தாவீதின் மகனே எனக்கு இரங்கும்'என்று இன்னும் உரக்கக் கத்தினார்;. இயேசு நின்று அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், 'நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'என்று இயேசு கேட்டார். அதற்கு அவர் 'ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்றார். இயேசு அவரிடம் 'பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். அவர் உடனே பார்வை பெற்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே, இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.

இன்றைய அற்புதமானது மற்ற எல்லாஅற்புதங்களையும் விட சற்று வித்தியாசப்படுகிறது. இதுவே, லூக்கா நற்செய்தியில் வரும் கடைசி அற்புதமும் ஆகும். இந்தப் புதுமையில், பார்வையற்றவர் பெரும் கூட்டத்தின் இரைச்சலிலும், தனக்கு சுகம் தரும்படி இயேசுவை வேண்டுகிறார்.

கூட்டநெரிசலில் இயேசுவை நெருங்க முடியவில்லை. கூட்டத்தில் உள்ளவர்கள் அமைதியாய் இருக்கச் சொன்ன பிறகும், தனக்குப் பார்வை தர இயேசுவால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையில் மீண்டும் கத்துகிறார். பார்வை பெற்றுக் கொள்கின்றார்.

நாமும் சில நேரங்களில், தூர நின்று கொண்டே தான் இயேசுவை அழைப்போம். பொறாமை, திருட்டு, கோபம் போன்ற அனைத்தையும் செய்துவிட்டு காலை, மாலை தவறாமல், 'இயேசுவே! தாவீதின் மகனே! என் இறைவா! என் உயிரே!' என்று பாடிக் கொண்டிருப்போம். ஆனால், திடீரென வாழ்வில் ஒரு ஏமாற்றம், தோல்வி, கவலை,கண்ணீர் வரும் போது, 'என்னைப் போல் உருக்கமாகச் ஜெபிக்க யாருமில்லை' என்னும் அளவிற்கு உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள்.

நம் இறைவன்.. நம்மைப் பற்றி முற்றிலும் அறிந்தவர். நமக்குச் செய்ய அவருக்குத் தெரியும். இருந்தும், 'என் பிள்ளை என்னிடம் அனைத்தையும் கேட்டுப் பெற்றுக் கொள்கிறானா? என் மீது நம்பிக்கை கொண்டுள்ளானா?'என்று நம்மை ஒவ்வொருபொழுதும் சோதிக்கிறார்.

கவலைகள் வரும் போது மட்டும்...

தேவைகள் இருக்கும் போது மட்டும்...

தனிமை வாட்டும் போது மட்டும்...

பிணி தீர்க்கும் போது மட்டும்...

அவரை அழைக்காமல்!!!

எப்போதும் அவரே,எனக்கு எல்லாம் என்று சரணாகதியாவோம்.

அவர் மீதுள்ள, நம் நம்பிக்கையே நம்மைக் குணமாக்கும்.

அன்புடன்
இனியாள்.

திங்கள், 21 டிசம்பர், 2015

புதுமைகள் 15, 16

இன்றைய அற்புதங்கள் : நீர்க்கோவை நோயாளி குணமடைதல்(லூக்கா 14:1-6)மற்றும் தொழுநோயாளர்களின் நோய் நீங்குதல்(லூக்கா 17:11-19)

ஓய்வு நாள் ஒன்றில் இயேசு, பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கே, நீர்க்கோவை நோயுள்ள ஒருவர், அவர் முன் இருந்தார். இயேசு, அவரது கையைப் பிடித்து, அவரை நலமாக்கி அனுப்பி விட்டார்.

இயேசு, எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்த போது, கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்த பொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர் கொண்டுவந்து, தூரத்தில் நின்று கொண்டே, 'ஐயா! இயேசுவே எங்களுக்கு இரங்கும்', என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர், அவர்களைப் பார்த்து, 'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது, அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர், தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு, உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவருடைய காலில் முகங்கப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, 'பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ, அன்னியராகிய உம்மைத் தவிர, வேறு எவரும் திரும்பி வரக் காணோமே!'என்றார். பின்பு அவரிடம் 'எழுந்து செல்லும் உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது' என்றார்.

முதல் அற்புதத்தில் இயேசு, ஒரு நோயாளியைப் பார்த்து அவரின் பிணி தீர்க்கிறார்.

இரண்டாவது அற்புதத்தில் இயேசுவிடம் பத்துப் பேர் வந்து, தங்களின் நோய் நீங்குமாறு வேண்டிக் கொள்கின்றனர். அனைவரின் நோயும் நீங்கிற்று. ஆனால், சமாரியரான ஒருவர் மட்டுமே இயேசுவிடம் வருகிறார். அதாவது, நம் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்.. ஒன்பது கிறிஸ்தவர்களும், ஒரு இந்துவும் இயேசுவிடம் வேண்டுகின்றனர். அனைவரின் நோயும் நீங்குகிறது. ஆனால், இந்துவாகிய அந்த ஒருவர் மட்டுமே, இயேசுவிடம் திரும்பி வந்து தம் நன்றியைத் தெரிவிக்கிறார்.

பலநேரங்களில், கிறிஸ்தவர்களாகிய நாம் இந்துக்கள் கொண்டிருக்கும் அளவிற்குக் கூட இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதில்லை.

இயேசுவின் மீது நம் முழு நம்பிக்கையையும் வைக்கும் மனம் வேண்டுவோம்..
இறைவன் நமக்கு எல்லா வளங்களையும் அருள்வாராக!

அன்புடன்
இனியாள்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

நான் நானாக!

'நம்மில் எத்தனை பேர் நம் விருப்பப்படி வாழ்கிறோம்' என்று நம்மை நாமே கேட்டுப் பார்த்தால், பெரும்பாலான பதில்கள் இப்படித் தான் இருக்கும்....'சில நேரங்களில், என் விருப்பப்படி இருப்பேன். சில நேரங்கள், என் பெற்றோரின் விருப்பப்படியும், என் அன்புக்குரியவர்களின்  விருப்பப்படியும் இருப்பேன்.'
நாம் நாமாக வாழ வேண்டுமென்று நினைப்பது தவறல்ல. ஆனால், சில அனுபவசாலிகள், 'நாம் ஒரு குழுவாக சமுதாயம் (சமூகம்) என்ற பெயரில் வாழ்கிறோம். நான எனக்காக வாழ்வேன் என்பதெல்லாம் முட்டாள்தனம்' என்பார்கள்.

முதலில் தனக்காக முழுமையாக வாழ்வோம். மற்றவருக்காக வாழ, நாம் ஏன் வாழ வேண்டும்? அவர்களே வாழலாமே! இதை நினைக்கும் போது, 'சந்தோஷ் சுப்ரமணியம்' படம் தான் ஞாபகத்திற்கு வரும்.

'நீ எல்லாவற்றிலும் நன்றாய்த் தான் இருக்கிறாய். உன் சுட்டித் தனத்தை மட்டும் குறைந்துக் கொண்டால் நன்றாய் இருக்கும', என்று என் அம்மா என்னிடம் கூறினார். சுட்டித்தனம் என் உடன் பிறந்தது. அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று அவர்களுடன் விவாதம் பண்ணிக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனிச் சிறப்பு என்று ஒன்று இருக்கும். அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.

உனக்கு மழையில் நனைய பிடிக்கிறதா? நனைந்து விடு... யாரைப் பற்றி உனக்கு என்ன கவலை?

பாதையில் செல்லும் போது, அழகான ஒரு ஆடவனைப் பார்க்கத் தோன்றுகிறதா? பார்த்துவிடு...

ரோட்டில் கஷ்டப்படுகிறவருக்கு உதவத் தோன்றுகிறதா? உதவி விடு...

இயற்கையை இரசிக்கத் தோன்றுகிறதா? இரசித்து விடு... அது உன்னை இரசிக்கும்.

நண்பர்களுடன் வெகு நேரம் உரையாடத் தோன்றுகிறதா? அதில் ஒன்றும் தவறில்லை.

இப்படி உனக்குப் பிடித்த ஒவ்வொன்றையும், இரசித்துச் செய்.. மற்றவர்கள் உன்னை ஆழும்படி என்றும் விட்டுவிடாதே..

உன் வாழ்க்கையை நீ தான் வாழ வேண்டும்.. அதுவும் உன் விருப்பப்படி...

இதுவே சரியான தருணம்... உனக்காக நீ வாழ...

யாரும் உன் மகிழ்ச்சியைக் கலைக்க நீ இடம் கொடுக்காதே...

இனிய வணக்கங்களுடன்..
இனியாள்.







சனி, 19 டிசம்பர், 2015

ராணி

நேற்று இரவு, 'குயின்' என்ற இந்தித் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்ப முதலே, அடுத்து என்ன நடக்கும் என்று ஆச்சரியப்படும் வகையில் இயக்கப்பட்டுள்ளது. திருமணம் நின்றபின், தன் தேனிலவிற்காக எடுத்து வைத்திருந்த டிக்கெட்டில் 'பாரீஸ்' செல்கிறார், கதாநாயகியான அப்பாவி ராணி. அங்கு சென்றபின், அவருக்குக் கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தும், அவர் வாழ்க்கையையே மாற்றிப் போடுகிறது.படம் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்திலிருந்து, சில நல்ல கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். பெண்ணானவள், ஒரு வட்டம் வரைந்து, அதற்குள் தன்னை அடைத்துக் கொள்ளும் போது, தான் விரும்பும் ஒன்று மட்டுமே, தனக்கு உலகம் என்று நினைத்துக் கொள்வாள். ஆனால், அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது தான், உலகம் எவ்வளவு பெரியது என்று புரிந்துகொள்வாள்.
வெளி உலகத்தைப் பார்த்த பின், தான் விரும்பியதைக் கூட பெரிதாக நினைப்பதில்லை. தன் இலட்சியம் ஒன்றையே இலக்காகக் கொள்கிறாள். நிறைய பெண்கள், தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க விரும்புவார்கள். ஆனால், அதற்குத் தடையாக அவள் குடும்பமோ அல்லது உறவுகளோ அமைந்துவிடும்.

பெண்கள், தரமான கல்வி அறிவு பெறவேண்டும் என்பது என் கருத்து. தைரியமானவர்களாகவும், எதையும் எதிர் கொள்ளும் சக்தி உடையவர்களாகவும் இருக்க வேண்டும். அதைப் போல் மகிழ்ச்சியைத் தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க நான் தற்சமயம் எனக்காக கண்டுபிடித்திருக்கும் வழி, 'என்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்வது'.

எனக்குப் பிடித்த விசயங்களில், என் நேரத்தைச் செலவிடுவது.
திரைப்படங்கள் பார்ப்பது. அதைப் பற்றிய நேர்மறைக்கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது.

பெண்ணே....

உனக்கான இன்றைய சிந்தனை:
பாதையில்லாத போதும் உன் சுவடுகளைப் பதிய வை.

அன்புடன்
இனியாள்.
வாழ்க்கையை இனிமையாய் வாழ, இனியாளின் வாழ்த்துகள்.

வெள்ளி, 18 டிசம்பர், 2015

பக்குவம்

பெரும்பாலும் 'குழந்தைகள்' என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சிறுவயதில் குழந்தையாய், நம்மைப் பிடிக்கும் பெற்றோருக்கு, நாம் வளர்ந்து, நான்கு வயதைத் தாண்டிய பின், அந்த அளவுக்குப் பிடிப்பதில்லை. காரணம்? சிறு குழந்தையாய் இருக்கும் போது அதற்கு ஒன்றும் தெரிந்திருக்காது. அதனால், அந்தக் குழந்தையை இரசித்துக் கொண்டிருந்தோம்.ஆனால், இப்போது தான் விவரம் தெரியும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். இனியும் கொஞ்சிக் கொண்டா இருப்பது என்று சில பெற்றோர்கள் கேட்கலாம்! என்னைப் பொறுத்தவரை, பள்ளிப் பருவம் முடியும் வரை, நாம் நம் குழந்தையைச் சிறுகுழந்தைபோல் தான் பாவிக்க வேண்டும்.
குழந்தைப் பருவம் தான் வாழ்வில் முக்கியமான தருணம்.கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது, உணர்ந்துகொள்ள முடியாத நிறைய விசயங்கள், ஆசிரியர் வேலையில் தெரிந்து கொண்டு இருக்கிறேன்.

உண்மையில், ஆசிரியர் பணி மிகவும் உயர்ந்த பணி தான். ஆனால், அதற்கு பொறுமை மிகவும் அவசியம்.

கடந்த வருடம், கோபம் வந்தால் உடனடியாக என் குழந்தைகளிடம் காட்டி விடுவேன். ஒருநாள், மூன்றாம் வகுப்பு மாணவி ஒருத்தி என்னிடம் வந்து, 'மேம்.. நீங்கள் சிரித்தால் அழகாய் இருக்கிறீர்கள். ஆனால், கோபப்படும் போதுதான் உங்கள் அழகே கெட்டு விடுகிறது'என்று கூறினாள். எனக்கு அந்தக் குழந்தை கூறிய பின் தான், என் மேலிருந்த தவறை உணர முடிந்தது.

இந்த வருடம் தேவையில்லாமல், குழந்தைகளிடம் கோபப்படக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். இப்போதெல்லாம் மூன்றாம் வகுப்பிற்குச் சென்றால் அனைவர் முகமும் சிரிப்பால் மலர்வதை என்னால் காணமுடிகிறது. நானும், அதையே வகுப்பு முடியும் வரைக் கடைபிடிக்கிறேன்.

ஆக, இந்தக் குழந்தைப் பருவத்தில் அவர்கள் என்ன கற்றுக் கொள்கிறார்களோ, அதுதான் அவர்கள் வாழ்க்கையில் கடைசிவரை நிலைத்திருக்கும்.

சில குழந்தைகள், தன் ஆசிரியரைப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றனர்.

சிலகுழந்தைகள், தன் பெற்றோரைப் பார்த்துகற்றுக் கொள்கின்றனர்.

சிலகுழந்தைகள், தன் நண்பர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றனர்.

நம் குழந்தைகள், யாருடன் பழகுகிறார்கள், யாருடன் அதிகம் நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிப் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகள் எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளக் கூடியவர்கள். அவர்களுடன் பேசும் போதோ, அல்லது நாம் வேறு யாருடனும் பேசும் போதோ, அவர்கள் நம்மை அப்படியே உட்கிரகித்துக் கொள்கின்றனர். நாம் தான் அவர்களுக்கு முன் மாதிரி. நம்மைப் போல் தான் நம் குழந்தைகளும்.

நேற்று மாலை, என் அண்ணன் மகன் எங்கள் வீட்டிற்கு வந்தான். என் அண்ணன், 'அவன் படிப்பதற்குஅழுகிறான்'என்று அவனைப் பற்றிப் புகார் கூறிக் கொண்டிருந்தார்கள். நேற்று, பள்ளியில் அவன் செய்த ஒரு காரியத்தையும் சொன்னார்கள். அவன், பள்ளி கரும்பலகையில், 'நாளை முதல் நான் பள்ளிக்கு வரமாட்டேன். எனக்கு என் அம்மாவும், அப்பாவும் பிடிக்கவில்லை.'என்று எழுதியிருந்திருக்கிறான். அதை அவன் ஆசிரியர் பார்த்துவிட்டு, என் அண்ணனை அலைபேசியில் அழைத்து, விசயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். ஆசிரியர், என் அண்ணனுக்கு அறிவுரையும் கூறி இருக்கிறார். இதை நினைத்து என் அண்ணன் மிகவும் வருந்திக் கொண்டிருந்தான்.

நான் என் அண்ணன் மகனைத் தனியாக அழைத்து அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். 'ஏன் கண்ணா அப்படி எழுதினாய்?'என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான், 'என் அப்பாவும், அம்மாவும் எப்போது பார்த்தாலும் என்னை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடிப்பதனால் எனக்குப் படிக்கப் பிடிக்கவில்லை. நான் படிக்காததனால் பள்ளிக்குச் செல்லப் பிடிக்கவில்லை' என்று கூறினான். 'சரி. உன்னை எதற்கு அடிக்கிறார்கள்? நீ வீட்டுப்பாடங்களை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதானே அடிக்கிறார்கள்!'என்று கேட்டேன். 'ஆம். ஆனால் அன்பாய் எனக்குச் சொல்லிக் கொடுத்தால், நான் கேட்டுக் கொள்வேன்.'என்று பதில் கூறினான். ஆகையால், அவன் மீது தவறொன்றும் இல்லை. அவனும் சிறு குழந்தை தான்.

அன்பான பெற்றோர்களே!தயவுசெய்து குழந்தைகளை அடித்துப் பழகாதீர்கள். 'அடி உதவுவது போல், அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' என்பதெல்லாம் பழைய காலத்துப் பழமொழி. அதெல்லாம், இந்தக் காலத்திற்கு ஒத்துவராது. அதனால் தான், சிலபள்ளிகளில் குழந்தைகளை, ஆசிரியர் அடிப்பது தவறு என்று கூறுகிறார்கள். யாரையும் யாருக்கும் அடிக்க உரிமையில்லை.

குழந்தைகள் அன்பாய்ச் சொன்னால் எதையும் கேட்பார்கள். அதற்கு, நாம் தான் பக்குவப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், வாழ்க்கைக்கல்வியையும் கற்றுத் தருவது பெற்றோரின் கடமையாகும்.

எங்கள் பள்ளியில் நாங்கள் உபயோகிக்கும் நான்கு பொன்னான வார்த்தைகள்....

Please (தயவுசெய்து)

Pardon(பொறுத்துக் கொள்ளுங்கள்)

Sorry(மன்னியுங்கள்)

Thanks(நன்றி)

நாம் பழக்கினால் தான், நம் குழந்தைகளும் பழகுவார்கள்.

அன்புடன்
இனியாள்.


வியாழன், 17 டிசம்பர், 2015

My Favorite Poem


O God Beautiful; O God Beautiful;
At Thy feet, O I do bow. 

In the forest Thou art green;
In the mountain Thou art high; 
In the river Thou art restless;
In the ocean Thou art grave. 

O God Beautiful; O God Beautiful! At Thy feet, I do bow! 
To the serviceful Thou art service; 
To the lover Thou art love; 
To the sorrowful Thou art sympathy; 
To the yogi Thou art bliss. 

                                                                             - Nanak

புதன், 16 டிசம்பர், 2015

KISS

ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க ஜனாதிபதியாகச் செனட் சபையில் பேசுகிறார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்த அவர் மனைவி, பாதுகாவலரிடம் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்து, அதை லிங்கனிடம் கொடுக்கும்படி பணிக்கிறார். பாதுகாவலர், அந்தச் சீட்டை லிங்கனிடம் கொடுக்க, லிங்கன் அதை வாங்கிப் பார்க்கிறார். அதில், K.I.S.S  என்று எழுதி இருந்தது. என்ன இவள்!!! சபை நாகரிகம் கூடத் தெரியாமல், kiss என்று எழுதி, துண்டுச் சீட்டு அனுப்புகிறாளே எனக் குழம்பியவாறு, தன் உரையை முடித்துவிட்டுத் தன் மனைவியிடம் வருகிறார்.

'என்ன இப்படிச் செய்து விட்டாயே?' என்று லிங்கன் கேட்க, மனைவி கூறுகிறார் 'ஏன் என்ன தவறு என்னிடம் கண்டீர்கள்? சுருக்கமாகப் பேச வேண்டும் என்பதைத் தான், "Keep It Short and Sweet “KISS” என்று எழுதியிருந்தேன்' என்று கூறினாராம்.

ஒருவேளை, லிங்கன் தன் மனைவியைப் புரிந்துகொள்ளாமலும், அவருக்கு மதிப்பளிக்காமலும் இருந்திருந்தால், சபை கலைந்தவுடன் நேராகத் தன் மனைவியிடம் வந்து, அவரிடம் சண்டை போட்டிருந்திருப்பார். அல்லது தன் கோபத்தை அவர் மீது காட்டியிருந்திருப்பார். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல், முதலில் தன் மனைவியிடம் வந்து விசாரிக்கிறார். "ஏன் அவ்வாறு எழுதினார்" என்பதன் காரணத்தை அறிந்து கொள்கிறார்.

நாமும், பல நேரங்களில் நம் பெற்றோர்களிடமோ, நம் நண்பர்களிடமோ அவர்களைச் சுட்டிக் காட்ட, ஏதாவது ஒன்று கிடைத்து விட்டால் போதும்... அதை வைத்துக் கொண்டு, அவர்கள் மீது கோபப்படுவதும், அவர்களுடன் ஒரு வகையான மனத்தாங்கல்களுடன் வாழும் சூழல் தான் அநேக நேரங்களில் நிகழ்கின்றது.

ஒருவரைப் பற்றி தவறான எண்ணங்களை உருவாக்கிக் கொள்வதற்கு முன், அவர்களுடன் பழகுவோம். அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஒருவரைப் பற்றிய நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அவர்களை விட்டு விலகி இருப்பதே நல்லது.

ஆபிரகாம் லிங்கன், தன் மனைவிக்கு உரிய மதிப்புக் கொடுத்தார். அதைப் போல் நாமும் நம் உறவுகளுக்கும், நம் நண்பர்களுக்கும் உரிய மதிப்பை அளிப்போம்.

என்னப்பா? இன்று புதுமை இல்லையா?
இன்னும் 3 புதுமைகள் தான், லூக்கா நற்செய்தியில் நாம் பார்க்க வேண்டியது. அதை வருகிற நாட்களில் பார்க்கலாம்.

இன்று மாலை, கோமுகி பதிப்பகத்தால் வெளியிடப்படும் 'கல்வி' மாத இதழைப் படித்துக்கொண்டிருந்தேன். இந்தக் கதை, என்னை வியக்க வைத்தது. ஆபிரகாம் லிங்கனின் பொறுமையும், அவரது மனைவியின் அன்பான பேச்சும் என்னை இந்த வலைப் பதிவை எழுத வைத்தது.

அனைவருக்கும் நன்றி

இனிய காலைவணக்கம்
அன்புடன்...

செவ்வாய், 15 டிசம்பர், 2015

புதுமை– 14

இன்றைய அற்புதம்: உடல் ஊனமுற்ற பெண் குணமடைதல் (லூக்கா 13: 10-13)

ஓய்வுநாளில், இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து, உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு, கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு, அப்பெண்ணைக் கண்டு, அருகே அழைத்து, 'அம்மா உமது நோயிலிருந்து, நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்' என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே, அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

நம்மையும் இறைவன் பெயர் சொல்லி அழைத்து, நமக்கு விடுதலை வாழ்வை அருள்கின்றார்.

அவரைப் போற்றிப் புகழ, நாமும் மறக்கக் கூடாது.

இனிய காலை வணக்கம்.

அன்புடன்
இனியாள்.


Today’s thought:

“Never tell an unnecessary lie. The truth has great authority. P.D. James

ஒவ்வொரு வார்த்தையும், மற்றவர்களுக்குச் சொல்லும் போது இனிக்கும். அதை நமது வாழ்வாக்க வேண்டுமென்றால் கசக்கும்.

இன்றைய நாளில் சிறப்பாக...மற்றவர்களுக்காக எழுதுவதில் மட்டும் நின்றுவிடாமல், அதையே என் வாழ்வாக்கவும் முயற்சி செய்கிறேன்.

திங்கள், 14 டிசம்பர், 2015

புதுமை – 13

இன்றைய அற்புதம் : பேய் பிடித்தவரைக் குணமாக்குதல் (லூக்கா 11:14)
ஒருநாள் இயேசு, பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார்.
இன்றைய அற்புதமானது, மிகச் சுருக்கமாக பைபிளில் (திருவிவிலியம்) கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அவர் பேய் பிடித்ததற்கு முன்பு, பேசக் கூடியவராக இருந்திருக்கலாம். பேய் பிடித்த பின், பேச்சுத் திறன் அற்றவராக மாறி இருக்கலாம். ஆனால், இன்று யேசு அவரிடமிருந்து பேயை ஓட்டியதும், அவர் பேசஆரம்பித்தார். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு, அளவே இருந்திருக்காது. இறைவனிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளும் போது நாமும் அப்படித் தானே?

2015-2016 – ஜீபிலி (யூபிலி) ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள், இதை இந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதியிலிருந்து, 'இரக்கத்தின்'ஆண்டாகக் கொண்டாடுகிறோம்.

இயேசு பெருமானின் புதுமைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், 'இரக்கத்தைப்' பற்றியும் சிந்திப்போம், வருகிற நாட்களில்.

இதைப் பற்றிய விரிவான விளக்கவுரையை, அடுத்த பதிவுகளில் தருகிறேன்.
இந்தப் புதிய வாரம், இறைவன் திருவருளால் நமக்கு என்றும் இனிமையை அள்ளித் தரட்டும்.
நமக்குள் இருக்கும் இனிமையை உணர்வோம்.

வாழ்வை இனிதாக்குவோம்.

இனிய காலைவணக்கம்.

அன்புடன்
இனியாள்.

சனி, 12 டிசம்பர், 2015

புதுமை – 12

இன்றைய அற்புதம் : இயேசு, பேய் பிடித்த சிறுவனின் பிணி தீர்த்தல் (லூக்கா 9: 37-42)
இயேசு, பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்து ஒருவர், 'போதகரே!என் மகன் மீது, அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன். ஓர் ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. உடனே அவன் அலறுகிறான். வலிப்பு உண்டாகி நுரை தள்ளுகிறான். அது அவனை நொறுக்கிவிடுகிறது. அவனை விட்டு எளிதாகப் போவதில்லை,' என்று உரக்கக் கூறினார். அதற்கு இயேசு, 'உம் மகனை இங்கே கொண்டு வாரும்' என்று அம்மனிதரிடம் கூறினார். அவன் அவரிடம் வந்த போது, பேய் அவனைக் கீழே தள்ளி, வலிப்புண்டாக்கியது. இயேசு, அத்தீய ஆவியை அதட்டி, சிறுவனின் பிணி தீர்த்து, அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார். அப்பொழுது, எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு, மலைத்து நின்றார்கள்.

இன்றைய அற்புதத்தில், பேய் பிடித்த அச்சிறுவன், நேரடியாக இயேசுவிடம் சென்று வேண்டவில்லை. அவனுடைய தந்தை, அவனுக்காக இயேசுவிடம் போய் வேண்டுகிறார்.

பல நேரங்களில், நமக்காக நம் பெற்றோர்களும், நம் அன்புக்குரியவர்களும் விடாமல் இறைவனிடம் வேண்டிக்கொள்வது உண்டு.

அவர்களின் வேண்டுதலும் நிச்சயம் கேட்கப்படும்.

இன்றைய நாளில், நம் பெற்றோர்களுக்காகவும், நம் நண்பர்களுக்காகவும், நம் உறவினர்களுக்காவும் சிறப்பாக இறைவனிடம் வேண்டுவோம்.

நம் உள்ளத்து விருப்பங்களை நிச்சயம் அவர் நிறைவேற்றுவார்.

இனிய காலை வணக்கம்.

அன்புடன்
இனியாள்.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

புதுமை – 11

இன்றைய அற்புதம் : ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
இயேசு, திரளான மக்கள் கூட்டம் தன்னைப் பின் தொடர்வதைப் பார்த்து, அவர்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும், பட்டிகளுக்கும் சென்று தங்கவும், உணவு வாங்கிக் கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்'என்றனர்.

இயேசு அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்றார். அவர்கள் 'எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால் தான் முடியும்' என்றார்கள். ஏனெனில், ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு, அவருடைய சீடர்களை நோக்கி,'இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்' என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

இயேசு அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசி கூறி, பிட்டு மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து அவற்றை பலுகிப் பெருகும் படிச் செய்து, ஆயிரக்கணக்கானவர்களுக்கு உண்ணக் கொடுத்ததே இயேசு செய்த அற்புதம்.

இந்த அற்புதத்தைப் போல், நம் ஆசீர்வாதங்களையும் இயேசு பலுகச் செய்வார்.
இன்று, என் மனம் கவர்ந்த கவி 'பாரதி'யின் பிறந்தநாள். அவர் எழுதிய ஒவ்வொரு வரியும், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவே இருக்கின்றன. சமீபத்தில் தான் அவருடைய வாழ்க்கைப் படத்தைப் பார்த்து,அவர் மீது ஆர்வம் கொண்டேன்.

இந்த நாளில், அவரைச் சிறப்பாக நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.
அவருடைய 'நின்னைச் சரணடைந்தேன்...கண்ணம்மா' பாடல், தனிமையில் கேட்கும் போது, கண்களில் நீரை வரவழைக்கும்.

மகாகவியைச் சிறப்பாக நினைக்கும் இந்த நன்னாளில், அவரைப் போல் நிறைய கவிகள் நம்மிலும் மலர முயற்சி செய்வோம்.

நின்னைச் சரணடைந்தேன் பாடல் இதோ...

Ninnai Saranadanthen

இனிய காலை வணக்கம்
இனியாள்.

வியாழன், 10 டிசம்பர், 2015

புதுமை – 10

இன்றைய அற்புதம் : இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்த்தெழுதலும்

இயேசு, மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர்(அவரதுபெயர் யாயிர்), அவரிடம் வந்து, அவரது காலில் விழுந்து, தம் வீட்டிற்கு வருமாறு வேண்டினார். ஏனெனில், பன்னிரண்டு வயதுடைய அவரது மகள், சாகும் தருவாயில் இருந்தாள்.

இயேசு,அங்குச் செல்லும் வழியில், மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது. பன்னிரண்டுஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர்,  'இயேசுவின் ஆடையின் நுனியைத் தொட்டாலாவது நான் குணம் பெறுவேன்'என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, அந்தக் கூட்டத்திலும், இயேசுவைத் தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று. இயேசு, 'என்னைத் தொட்டவர் யார்?'என்று கேட்டார். அனைவரும் மறுத்தனர். இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய பேதுரு,'ஆண்டவரே! மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறதே! இதில், உம்மைத் தொட்டவர் யார்? என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்'என்று கூறினார்.

அதற்கு இயேசு, 'யாரோ ஒருவர் என்னைத் தொட்டார். என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை நான் உணர்ந்தேன்' என்றார். அப்பெண், தான் இனியும் மறைந்து இருக்க முடியாது என்று கண்டு, நடுங்கிக் கொண்டே வந்து, அவர்முன் விழுந்து, தாம் அவரைத் தொட்ட காரணத்தையும், தம் நோய் நீங்கியதையும் மக்கள் அனைவர் முன்னிலையிலும் கூறினார். இயேசு அவரிடம் 'மகளே! உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ' என்றார்.
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து ஒருவர் வந்து, 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். இனி போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்'என்றார்.

இதைக் கேட்ட இயேசு, அவரைப் பார்த்து, 'அஞ்சாதீர்! நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைத்துக் கொள்வாள்;' என்றார். வீட்டிற்குள் நுழைந்ததும், அச்சிறுமியை வைத்திருந்த இடத்திற்கு, அச்சிறுமியின் தாய் தந்தையுடனும், தனது சீடர்களான பேதுரு,யோவான், யாக்கோபு உள்ளே சென்றார்.
அவளுக்காக அனைவரும் மாரடித்துப் புலம்பிஅழுது கொண்டிருந்தார்கள். இயேசுவோ 'அழாதீர்கள்! சிறுமி இறக்கவில்லை; உறங்குகிறாள்'என்றார். அவள் இறந்துவிட்டாள் என்று அறிந்திருந்ததால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். இயேசு, அச்சிறுமியின் கையைப் பிடித்து "சிறுமியே எழுந்திடு!'என்று கூப்பிட்டார். உடனே அச்சிறுமி எழுந்தாள். இயேசு அவளுக்கு உணவு கொடுக்கும் படி, அதன் தாயிடம் கூறினார். அவளுடைய பெற்றோர் மலைத்துப் போயினர்.
இன்றைய இரண்டுஅற்புதங்களும் நமக்கு உணர்த்துவது...
நம்பிக்கை. இறைவன் மீது நம்பிக்கை கொண்டால், எத்தனை வருடங்கள் ஆகியும் முடியாத,காரியம் கூட சீக்கிரம் கை கூடும்.
ஒருமுறை முயன்று, அந்தக் காரியம் நடக்கவில்லை என்றால் மனம் உடைந்து போகாதீர்கள்.
நமக்கென போடப்பட்ட தரி நமக்கு மட்டும் தான்.
அந்தக் காரியம் கிட்டும் வரை முயன்று கொண்டே இருப்போம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்
இனியாள்.

புதன், 9 டிசம்பர், 2015

புதுமை – 9

இன்றைய அற்புதம் : இயேசு, காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் அடக்குதல் (லூக்கா 8:22 -25)
ஒருநாள், இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், 'ஏரியின் அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்' என்று, அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும், படகைச் செலுத்தினார்கள்.படகு போய்க் கொண்டிருந்தபோது, அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது, ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் அவரிடம் வந்து, 'ஆண்டவரே, சாகப் போகிறோம்', என்று சொல்லி, அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து, காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்து கொண்டார். உடனே அவை ஓய்ந்தன. அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம், 'உங்கள் நம்பிக்கை எங்கே?' என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், 'இவர் காற்றுக்கும் நீருக்கம் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?'என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
இன்று நாம் மேற்கண்ட அற்புதம்,  இன்றைய நம் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்துள்ளது. சென்னை மக்கள், மழையினால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இச்சூழலில் இந்த அற்புதத்தை வாசிக்கும் போது....
நாமும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து, அவரிடம் சென்னை மக்களுக்கு ஒருபுதிய நல்வாழ்வு மலர வேண்டுவோம்.
இறைவன் இயற்கையையும் அடக்கவல்லவர்.

இறைவன் நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!

அன்புடன்
இனியாள்.


செவ்வாய், 8 டிசம்பர், 2015

புதுமை – 8

இன்றைய அற்புதம் : பேய் பிடித்தவரை நலமாக்குதல் (லூக்கா 8: 26 – 39)
இயேசு, கலிலேயா என்ற இடத்திலிருந்து, கெரசேனர் என்ற பகுதியை நோக்கி, படகில் வந்து கொண்டிருந்தார். கரையில் இறங்கியதும், அந்நகரைச் சார்ந்த ஒருவர் அவரை எதிர்கொண்டு வந்தார். பேய் பிடித்திருந்த அவர், நெடுநாளாய் ஆடை அணிவதில்லை. வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கி வந்தார். இயேசுவைக் கண்டதும், கத்திக் கொண்டு அவர் முன் விழுந்து, ' இயேசுவே! உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? என்னை வதைக்க வேண்டாம்' என்று உரத்த குரலில் அவரிடம் மன்றாடினார். ஏனென்றால், அத்தீய ஆவியை அவரிடமிருந்து வெளியேறுமாறு, அதற்கு கட்டளையிட்டார். இயேசு, அவரிடம் 'உம் பெயர் என்ன?' என்று கேட்டார்.  அதற்கு அவர், 'இலேகியோன் - (அதாவது இலேகியோன் என்பது, உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட பெரும் பிரிவு என்பது பொருள்)' என்று கூறினார். ஏனெனில், பல பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன. அவை தங்களைப் பாதாளத்திற்குப் போக பணிக்க வேண்டாமென்று அவரை வேண்டிக்கொண்டன.

அங்கு, ஒரு மலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்குள் புகும்படி தங்களை அனுமதிக்குமாறு பேய்கள் அவரை வேண்டின. அவரும் அவற்றிற்கு அனுமதி கொடுத்தார். பேய்களும், அந்த நபரை விட்டு வெளியேறி, அந்தப் பன்றிகளுக்குள் புகுந்தன. பன்றிக்கூட்டம், செங்குத்துப் பாறையிலிருந்து, ஏரியில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், நடந்ததைக் கண்டு ஓடிப்போய் நகரிலும், நாட்டுப் புறத்திலும் அறிவித்தார்கள். பேய்கள் நீங்கப் பெற்றவர், ஆடை அணிந்து அறிவுத் தெளிவுடன், இயேசுவின் காலடியில் அமர்ந்திருந்தார்.
இன்றைய இயேசுவின் அற்புதம், நான் பலமுறைப் படித்ததே. ஆனால், இன்று ஒரு வகையான தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது.
நானும், அந்தப் பேய் பிடித்தவரைப் போலத் தான்...
என்னுள்ளும்...
அகந்தை

அகம்பாவம்

இச்சை

சுயநலம்

பேராசை

தற்பெருமை

கோபம்

தீய சொற்களைப் பேசுதல்

பொறாமை

சோம்பேறித்தனம்

போன்ற, பல வகையான பேய்கள் பிடித்து, அந்தப் பேயை விட மனமில்லாமல், அலைந்து கொண்டு இருக்கிறேன்.
இன்று, சிறப்பாக என்னுள் இருக்கும் மேற்சொன்ன பேய்களை, என்னிடம் இருந்தும் அகற்றும்படி இறைவனிடம் வேண்டுகிறேன்.

தீய ஆவிகள் என்னை விட்டு நீங்கும் போது, தானாகவே இறைவனின் குணங்கள் என்னுள் குடிகொள்ளும்.

இந்தச் சிந்தனையுடன், இந்த இனிய நாளைத் தொடங்குவோம்.

அன்பு வணக்கங்கள்

திங்கள், 7 டிசம்பர், 2015

புதுமைகள் – 6, 7

இன்றைய அற்புதங்கள்
6 : கை சூம்பியவரைக் குணமாக்குதல் (லூக்கா 6: 6– 11)
இயேசு வழக்கம் போல், தொழுகைக் கூடத்தில் கற்பித்துக் கொண்டிருந்தார். அங்கே, கை சூம்பிய ஒருவர் இருந்தார். இயேசு, அவரை நோக்கி, 'எழுந்து  நடுவே  நின்று, உம் கையை நீட்டும்' என்றார். அவரும் கையை நீட்டினார். அவருடைய கை நலமடைந்தது.

7 : நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர் பெறுதல் (லூக்கா 7: 11– 17)

ஒரு நாள், இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவர், அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன். அவன் தாயோ, ஒரு கைம்பெண்(விதவை). இயேசு, அவர் மீது பரிவு கொண்டு, அந்தப் பாடையின் அருகில் சென்று, அதைத் தொட்டார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து, பேசத் தொடங்கினார். இயேசு, அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.

மேற்சொன்ன, இரண்டு அதிசயங்களும் இன்று நமக்கு உணர்த்துவது... விசுவசித்தால்(நம்பினால்) இறைவனுடைய வல்லமையை நம்மிலும் உணர முடியும்.
மனிதர்களை நம்புவதை விட, இறைவன் மீது முழு நம்பிக்கை வைப்போம்.
அவர் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.
இனிய காலை வணக்கம்.

சனி, 5 டிசம்பர், 2015

புதுமை – 5


இன்றைய அற்புதம் : முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்.

ஒருநாள், இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது சுற்றிலுமுள்ள ஊர்களிலிருந்து வந்திருந்த அனைவரும் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அப்போது, முடக்குவாதமுற்ற ஒருவரைச் சிலர் கட்டிலோடு சுமந்து கொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டு போய், இயேசு முன் வைக்க வழி தேடினர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரை உள்ளே கொண்டுபோக முடியவில்லை. ஆகையால், அவர்கள் கூரை மேல் ஏறி, ஓடுகளைப் பிரித்து,அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு,அந்த மனிதரைக் குணமாக்கினார்.

இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைத் தேடுவோர் அனைவரும் அற்புதத்தைக் கண்டு கொள்வர்.

'என் வாழ்வில் எப்போது அற்புதம் நடக்கும்?' என்று காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்று ஒரு இனிய நாளாக இருக்கும்.

இயேசுவின் மீது மட்டும் நம்பிக்கையை வைப்போம்.

நம் வேண்டுதல்களை அவர் நிறைவேற்றுவார்.
இனிய காலை வணக்கம்.


அன்புடன்
இனியாள்.

வெள்ளி, 4 டிசம்பர், 2015

புதுமை – 4


இன்றைய அற்புதம் : பேய் பிடித்தவரைக் குணப்படுத்துதல் (லூக்கா 1: 31-37)
இயேசு கப்பற்நாகும் என்ற ஒரு ஊருக்குச் சென்றார். அந்த ஊரின் தொழுகைக் கூடத்தில், தீய ஆவியான பேய் பிடித்திருந்த, ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், 'ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்து விடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்று,உரத்த குரலில் கத்தியது. 'வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ' என்று இயேசு அதனை அதட்டினார். அப்போது, பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல், பேய் அவரை விட்டு வெளியேற்றியது. பேயை,அந்த மனிதரிடமிருந்து விரட்டியதே, இயேசு செய்த அற்புதம்.
இன்றும் நம்மில் குடிகொண்டிருக்கும் அகந்தை,அகம்பாவம், கோபம்,  பொறாமை போன்ற பேய்களை விரட்டி, நம்மையும் புது மனிதர்களாக மாற்ற, இறை இயேசுவிடம் வேண்டுவோம்.

இந்தநாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்
இனியாள்.

வியாழன், 3 டிசம்பர், 2015

புதுமை – 3


இன்றைய புதுமை : இயேசு குணமாக்குதல்
இயேசுவிற்குப் பன்னிரண்டு சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் ஒருவர் தான் பேதுரு. இயேசு, ஒருநாள் இவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது நடந்த அற்புதத்தை ஒரு நாடக வடிவில் கூறினால், நன்றாய் இருக்கும் என நினைக்கிறேன்.

(இயேசு பேதுருவின் வீட்டிற்குள் நுழைகிறார்)

பேதுருவின் மனைவி : வாங்க போதகரே! எப்படி இருக்கீங்க?

இயேசு : ம்ம்.. நான் நன்றாய் இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? வீட்டில் அனைவரும் சுகமா?

பேதுருவின் மனைவி : நான் நலமாய் இருக்கிறேன். என் அம்மா தான் தீராத காய்ச்சலால் வருந்திக் கொண்டு இருக்கிறார்.

இயேசு : அவர் எங்கே இருக்கிறார்?

பேதுருவின் மனைவி : உள்ளே படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருக்கிறார்.

இயேசு : வா போய்ப் பார்க்கலாம்.

(இயேசு, பேதுரு, பேதுருவின் மனைவி மூவரும் படுக்கை அறைக்குள் நுழைகின்றனர். இயேசு, அவரைத் தொட்டு,அவருக்கு சுகம் கொடுக்கிறார். பேதுருவும், அவர் மனைவியும் மகிழ்ச்சியால் இயேசுவைப் புகழ்ந்தனர். பேதுருவின் மாமியார் எழுந்து, இயேசுவிற்குப் பணிவிடை செய்தார்)

இயேசு : ஆஉறா!!! என்ன ஒரு அருமையான சாப்பாடு.நன்றி அம்மா.

பேதுருவின் மாமியார் :அம்மாவிற்கு ஏன் நன்றி?

இயேசு புன்னகைக்கிறார். அவர்களது உரையாடல் தொடர்கிறது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், இயேசுவைப் பார்க்க ஆவலுடன் வருகின்றனர். இயேசுவும் அவர்களுடன் உரையாடுகிறார்.மாலையானதும் இயேசு வீடு திரும்புகிறார்.
ஆக, இன்றைய புதுமை: இயேசு, பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்துகிறார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டதுபோல் உணர்கிறேன். இப்போதிலிருந்தே நண்பர்கள் எல்லாரும் கிறிஸ்துமஸ் குறித்தும், வீட்டில் அமைக்கும் குடில் குறித்தும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த நான்கு வருடங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை என்னை மிகவும் பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்வு நடக்கும் மாதமாக மாறிவிட்டது.

இந்த மாதத்தில், நான் மேற்கொள்ளும் ஒறுத்தல்களில், பிறர் மீது கோபப்படக் கூடாததைமுக்கியமாகக் கொள்ள வேண்டும். சட்டென்று கோபம் வருகிறது. இல்லை என்றால் அழுகை வருகிறது. இவை இரண்டையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அன்று பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைக் குணமாக்கியவர், என்னுடைய உள்ள நோய்களையும் சீக்கிரம் குணமாக்குவார்.

இனிய காலை வணக்கம்.


அன்புடன்,
இனியாள்

அன்பு அம்மு!!!

கொஞ்சிக் கொண்டே இருப்பேன்
உன் குட்டிக் கன்னங்களை முத்தமிட்டுக் கொண்டு...
இரசித்துக் கொண்டே இருப்பேன்
உன் பிஞ்சு விரல்களின் தழுவல்களை...
ஏங்கிக் கொண்டே இருப்பேன்
உன் பார்வை என் மீது படுமா என்று...
மயங்கிக் கொண்டே இருப்பேன்
உன் உடை அழகில்...
சிந்தித்துக் கொண்டே இருப்பேன்
உன் சிரிப்பில் எப்போது விழுவேனென்று...
மொத்தத்தில்
உன் முழு அழகில்
மயங்கிய
ஒருத்தி 'நான் மட்டும் தான்' – அன்புடன் இனியாள்.

யாரும் தன்னைப் பற்றித் தானே கவிதை எழுதிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், எனக்கு எழுத வேண்டும் போல் தோன்றியது. என்னைப் பற்றி நானே பெருமிதம் கொள்வதில் என்ன தவறு?


புதன், 2 டிசம்பர், 2015

புதுமை – 2


இன்று காலையில் இருந்து மனதில் ஏகப்பட்டஎண்ணங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கவலைகள். வருடத்தின் கடைசி மாதமும்ஆரம்பித்து விட்டது. இந்த மாதம் எப்படி இருக்கப் போகிறதோ என்று, இன்று முழுவதும் எண்ணிக் கொண்டே இருந்தேன். நேற்று இரவு, ஒரு மலையாளப் படம் பார்த்தேன். இந்தப் படத்தில், பேஸ்புக்கில் பழகிய ஒரு பையனுக்காக, கதாநாயகி காத்திருப்பது போலும், ஆனால் அந்தப் பையன் ஒரு வருடத்திற்கு முன்பே இறந்து விட்டதாகவும், அவனது கணக்கை வேறொருவர் உபயோகித்து, அவளிடம் இருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பணம் பறிப்பதாகவும், அதை ஒருவன் கண்டுபிடிப்பதாகவும்... என்று கதை ஓடும். இந்தப் படத்தில் இருந்து நான் புரிந்து கொண்ட ஒரு விசயம்..
'நம் கண்ணுக்குத் தெரியாத, ஏதோ ஒரு விசயத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்போம்.ஆனால், நம் அருகிலேயே, நம்மை அனுதினமும் அன்பு செய்து கொண்டிருப்பவரைக் கண்டு கொள்ளமாட்டோம்'.

எனக்கென யாரும் இல்லை என்று ஏங்கிய நாட்கள் உண்டு.

நான் யாருக்காவும் இல்லை என்று முடிவெடுத்த நாட்களும் உண்டு.

ஆனால், உண்மையில் நமக்காக நம்மைப் பற்றி நினைக்க யாராவது இருக்கிறார்கள் என்று எண்ணும் போது, மனதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நாம் பழகிய வருடங்கள் முக்கியமில்லை.

பழகி எத்தனை நாட்களாக இருந்தாலும், நம் பழக்கம் எப்படி இருக்கிறது என்பதுதான் யோசிக்க வேண்டியது.

நாம் நண்பர்களாகி ஐந்து வருடங்கள் கடந்து விட்டன என்பதில் இல்லை பெருமை.

'இந்த ஐந்து வருடங்களில், நான் உனக்கு எப்படி இருந்தேன்?

உன் சுக துக்கங்களில் பங்கெடுத்தேனா?

உன் துயரங்களில் நான் ஆறுதலாக இருந்தேனா?

உன் சுமைகளைச் சுமந்தேனா?

உன் துணையாக இருந்தேனா?'

என்பதில் தான் இருக்கிறது.

மன்னிக்கவும். தலைப்பை மறந்துவிட்டேன். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.

இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்களைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா?

இன்றைய அற்புதம் : ஒரு தலைவரின் பணியாளைக் குணமாக்குவது
ஒரு ஊரில் ஒரு தலைவர் இருந்தார்(உதாரணமாக,நம் ஊர் கவுன்சிலர் போல).அவரிடம், சில வேலையாட்கள் பணிபுரிகின்றனர். ஒரு பணியாளன் நோயுற்று, சாகும் நிலையில் இருந்தார். இந்தத் தலைவர், அந்தப் பணியாளன் மீது அதிக மதிப்பு வைத்திருந்தார். அதனால், அவன் மீது பரிவு கொண்டு, இயேசுவை அழைத்து வர, தம் மற்ற பணியாளர்களை இயேசுவிடம் அனுப்பினார்.  'ஐயா! நீர் எங்கள் வீட்டிற்கு வரத் தகுதியற்றவன். ஆனால் நீர் ஒரு வார்த்தை சொன்னால்,என் ஊழியன் குணம் பெறுவான்'என்று சொல்லும்படிச் சொல்லி அனுப்பியிருந்தார், அந்தத் தலைவர். அவர்களும் அவ்வாறே கூறினார்கள். இதைக் கேட்ட இயேசு, மிகவும் மகிழ்வுற்று 'தன் பணியாளருக்காக இவ்வளவு செய்கிறாரே'என்று இவரைக் குறித்து வியப்புற்றார். அந்நேரமே, அந்தப் பணியாளின் நோய் நீங்கி, அவர் முழு சுகம் பெற்றார்.

தலைவர் என்பவர் தொண்டனாக இருக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பார்த்தோம் அல்லவா?

இவரும் நல்ல தலைவராக இருந்திருக்கிறார்.

இன்றைய தலைவர்கள், தங்கள் சுயநலனையும், தன் குடும்பத்தை மட்டுமே கண்ணோக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மத்தியில், மக்களை வழிநடத்தும் ஒரு நல்ல தலைவரைத் தரும்படி இறைவனிடம் வேண்டுவோம்.

காலை வணக்கம்.

அன்புடன் இனியாள்

செவ்வாய், 1 டிசம்பர், 2015

திருவருகைக் காலம்(Advent Season) – புதுமை 1


இன்று டிசம்பர் ஒன்றாம் நாள். இன்று முதல், இந்த மாதத்தில் சிறப்பாக ஒரு செயலைச் செய்யலாம் என்று நினைத்தேன். யோசித்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றேன். அங்கு, என் மாமா கொடுத்ததாக என் அப்பா ஒரு புத்தகத்தை வாங்கி வந்திருந்தார். அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் ஒரு யோசனை தோன்றியது.
'கிறிஸ்தவர்கள்' என்று நம்மை அடையாளப்படுத்துவார்கள் பிற மதச் சகோதரர்கள்.

அவர்களுக்கு இயேசுவையும் மரியாவையும் மட்டுமே தெரியும்.
அதை விடுத்து மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கத் தெரியும்.
முழந்தாளிட்டு வேண்டத் தெரியும்.
முக்காடிட்டுக் கொள்வது தெரியும்.
இதைத் தவிர, தெரிந்து வைத்திருப்பார்களா என்றால் பெரும்பாலும் இல்லை தான்.
அதனால் என் அன்பு நண்பர்களுக்கு, இயேசுவைப் பற்றி இன்னும் அதிகமாகச் சொல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

அதன் படி, இயேசு செய்த புதுமைகளைப் பற்றி உங்களுடன் தினமும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து 33 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் செய்த அற்புதங்களை தினமும் ஒன்றாக உங்களுக்கு விளக்குகிறேன்.

கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதற்கு முன் உள்ள ஒரு மாத காலத்தை 'திருவருகைக் காலம்' என்று அழைக்கிறோம். இயேசு கிறிஸ்து மீண்டும் இந்த உலகத்திற்கு வருவார் என்று ஆவலுடன் காத்திருக்கும் காலமாக இந்தத் திருவருகைக்காலம் கொண்டாடப்படுகிறது. அதன் பின் டிசம்பர் 25ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுவோம்.

இந்த திருவருகைக் காலத்தில் ஒரு சிலர் சில ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
ஒறுத்தல் என்றால்...
தனக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை விட்டுக் கொடுப்பது...

ஆசையாய்ச் செய்யும் ஏதாவது ஒன்றைச் செய்யாமல் இருப்பது...

மற்றவர்களுக்கு உதவுவது...

தன் நேரத்தைச் செலவிடுவது...

இப்படி நிறைய இருக்கின்றன.

நான் மேற்கொண்டிருக்கும் ஒறுத்தல் முயற்சி... இந்த மாதத்தில் நான், என்னை அழகு செய்வதற்காய் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, அந்த நேரத்தில் மற்றவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதனால் இனி நெற்றியில் பொட்டு வைப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து ஜெபிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எனக்காக எதுவும் வேண்டுவதாக இல்லை.

எல்லாம் இருக்கட்டும். இன்று இயேசு செய்த அற்புதங்களில் ஒன்றைப் பார்ப்போம்.

இராமாயணம், மகாபாரதம் போல் பைபிளிலும் புத்தகம், பிரிவு, அதிகாரம், வசனம் எனப் பிரித்து வைத்திருப்பார்கள்.
நான் கூறப்போகும் புதுமைகள் அனைத்தும் 'லூக்கா' புத்தகத்தில் உள்ளன.
1. தொழுநோயினை குணப்படுத்திய இயேசு
இயேசுவின் காலத்தில் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே கருதப்பட்டனர். ஒரு நாள், இயேசு ஒரு ஊருக்குச் சென்றிருந்தார். அங்கு, தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் இயேசுவிடம் 'ஆண்டவரே நீர் விருப்பப்பட்டால் என் நோயை நீக்க உங்களால் முடியும்' என்று வேண்டினார். இயேசுவும் தம் கையை நீட்டி 'நான் விரும்புகிறேன்; உமது நோய் உம்மை விட்டு நீங்குக' என்றார். உடனே அவரது தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் மகிழ்வுடன் தன் வீட்டிற்குச் சென்றார்.

இதைப் போல் இயேசு செய்த மற்ற புதுமைகளையும் வருகிற நாட்களில் பார்ப்போம்.

இன்று மாதத்தின் முதல் நாள். மாதத்தில் கடைசி மாதம். மிகவும் விசேசமான மாதம்.

இந்த மாதம் முழுவதும் நாம் விரும்பும் அனைத்தும் நமக்குக் கிடைக்க இறைவனைப் பிராத்தித்து, இந்த நாளை இனிதே தொடர்வோம்!

அன்பே கடவுள்.

திங்கள், 30 நவம்பர், 2015

தலைமைத்துவப்பண்பு (Leadership Quality)

நேற்றைய தினம் மற்ற நாட்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது.

எங்கள் சர்ச்சில் இருந்து, ஐந்து இளைஞர்கள், உத்தமபாளையத்தில் இருக்கும் சர்ச்சுக்கு 'தலைமைத்துவப் பண்பு' பற்றிய பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தோம், எங்கள் ஃபாதருடன்.

நாள் முழுவதுமே நன்றாகச் சென்றது.
 30 இளைஞர்கள் பங்கேற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

 நேற்று நடந்தவற்றில், எனக்குப் பிடித்த சில விசயங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

எனக்குப் பிடித்த அழகான பாடலுடன்(தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீதானய்யா) பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

'தன்னைப் பற்றிய அறிமுகத்துடன்' பயிற்சியை ஆரம்பித்தார், மதுரை ஞானஒளிவுபுரத்திலிருந்து வந்திருந்த திரு.விஜய் அவர்கள்.

தலைவன் என்றால் யார் என்பதற்கு, பொது வாழ்க்கையில் மூவரை(சே குவேரா, அப்துல்கலாம் மற்றும் காந்தியடிகள்) எடுத்துக் காட்டாய் கூறினார்.

மதவாழ்க்கையிலும், நால்வரைப்(தூய பேதுரு, இயேசு, போப் மற்றும் மோசே) பற்றிக் கூறினார்.

நல்ல உரையாடல் நடந்தது.

தலைவன் என்பவன் மக்களை எவ்வாறெல்லாம் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும், அவனுடைய நடத்தை, பண்பாடு, ஒழுக்கம் குறித்தும் விளக்கினார்.

நம்மை நாமே எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்?

  1. Self-motivated (External)
  2. Self-interest (Internal)
  3. Self-knowledge
  4. Self-talent
  5. Quality of life
மேற்சொன்ன ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கினார்.

குறும் படங்கள் மற்றம் சில திரைப்படப் பாடல்கள் பகிரப்பட்டன.

இடையிடையே கதைகளும் கூறினார்.

நம்முள் நேர்மறை எண்ணங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்;

எதிர்மறை எண்ணங்கள் உண்டாகாமல் எவ்வாறு நம்மை மெழுகேற்றிக் கொள்வது என்பதை, நகைச்சுவை கலந்த குரலில் அனைத்தையும் அழகாக எடுத்துரைத்தார்.

'வளர வேண்டும் என முடிவு செய்துவிட்டால்
வாய்ப்புக்களை நீ தான் தேட வேண்டும்'

ஒரு மனிதனின் வலிமைகள், இயலும் தன்மைகள் பற்றி சிந்தித்தோம்.

ஆறு வகைகளாக அதைப் பிரித்திருந்தனர்.

அதில் கடைசியாகச் சொன்ன, சமுதாய வலிமையில் அவர் கூறிய ஒரு சொற்றொடர் அனைவரையும் சிந்திக்க வைத்தது.... 'யாருக்கு நாம் தேவையோ அவர்கள் நமக்கும் தேவை'.

'நான் யார்?' என்ற தலைப்பின் கீழ் 'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்......'பாடலைக் கேட்டோம். அதில் அவர் கூறிய ஒரு கருத்து மிகவும் பிடித்திருந்தது.

'ஊரில் இருப்பவர்கள் மேல் பார்வை
உடன் இருப்பவர்கள் மேல் இருப்பதில்லை'

சிறந்த எடுத்துக்காட்டுகள் கொடுத்தார்.

எத்தனையோ நடிகர் நடிகைகளைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால், தன் பெற்றோர், தன் உடன்பிறந்தோர், தன் அன்புக்குரியவர், தன் நண்பர் எனத் தன் உடன் இருப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறோமா என்றால் பல நேரங்களில் இல்லை என்ற பதிலே வரும்.

நம் அருகில் இருப்பவர் தானே.. இவரைப்பற்றி என்ன தெரிந்து கொள்வது என்ற எண்ணமா?

இல்லை...

உடன் இருக்கும் போது, அவர்கள் அருமை தெரிவதில்லையா? என்பது புரியவில்லை.

யாருக்குமே ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. ஆனால், அது இல்லாத போது அவர்கள் மனம் படும் பாடு அவர்கள் மட்டும் அறிந்ததே...

என் தோழி,அவள் கணவர் அருகில் இருக்கும் போது, எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள். ஆனால், அவள் கணவர் வேலை நிமித்தம் வெளியூர் சென்று விட்டார் என்றால் 'அவள் ஃபோன் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான்....'.நான் கேட்பேன் அவளிடம் 'ஏன்டி பக்கத்தில் இருக்கும் போது, எப்ப பாரு சண்டை போட்டுட்டு இருக்க! ஊருக்குப் போனதும் எங்க இருந்து வந்துச்சுடி இந்தப்பாசம்? என்று'.

ஆகையால், எல்லாருமே ஒருவர் இல்லாத போது தான் அவரின் அருமையை உணர்கிறார்கள். பிடித்திருந்த செய்தி இது.


SWOT Analysis (Strength, Weakness, Opportunities, Threats) –ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாய் அழகாய் விளக்கினார் பயிற்சியாளர்.

'படிப்பிற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை'- புதிதாய்த் தெரிந்த வரி.

படித்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இந்த வரி சற்று சவாலாக இருந்தது.

"நம் வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும்; அந்த இலட்சியங்கள் பற்றியே இரவும் பகலும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்; "என்று சமூக அக்கறைகளைக் குறித்தும் விளக்கினார்.

உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல... மன ஊனம் இருக்கக் கூடாது.

ஒரு பிரச்சனை என்றால், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

நல்ல தலைவன் என்பவன் அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்து, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவான் என்று கூறினார்.

உடல் மொழி குறித்து சில டிப்ஸ் கொடுத்தார்.

நன்றியுரையுடன் அன்றைய பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது.

பின் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இன்றைய நாளில், என் தோழியின் ஞாபகங்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
ஏனென்றால், அவள் கூறிய நிறைய வார்த்தைகள், நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டவைகள் அனைத்தையும், இன்று கேட்டது போல் இருந்தது.

இன்றைய திருப்பலி ஒரு ஸ்பெஷலாக இருந்தது.

அன்றொரு நாள் என் தோழியுடன் நான் பங்கெடுத்த சிலுவைப்பாதைத் திருப்பலி போல் இன்றும் இருந்தது.

பாடல் பாடினேன்.

பக்தியில் நனைந்தேன்.

அனைவருக்காகவும் வேண்டினேன்.

மாலையில் வீடு திரும்பினேன்.

இன்றைய நாள் ஒரு அர்த்தமுள்ள நாளாகவே இருந்தது.

அதிசயமாக இன்று என் மம்மி 'இன்று என்ன சொல்லிக் கொடுத்தார்கள்?' என்று கேட்டார். நிறைய விசயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். திருப்தியாக இருந்தது.

அங்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். புதுவரவு. புதுவரவு என்றாலே நிறைய விமர்சனங்களும் வரத்தானே செய்யும். நல்லவற்றை எடுத்துக் கொள்வோம். தீயவற்றை விட்டுவிடுவோம்.

இப்போது...

நான் காயப்படுத்தியவர்களை, எண்ணிப்பார்த்து அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.

அருகில் இருக்கும் போது, நம் அன்பானவரின் அருமை தெரிவதில்லை.

அனுபவங்கள் பகிரப்படுவது பெருமிதத்திற்காக அல்ல....

அதில் ஏதாவது ஒரு வரி கூட படிப்பவரையோ கேட்பவரையோ பாதிக்காதா என்பதற்காகத் தான்..

என் கிறுக்கல்களையும் படித்து அதற்கு விமர்சனம் தரும் என் அன்புத் தோழிக்கு நன்றி!

இனிய காலை வணக்கங்கள்....










சனி, 28 நவம்பர், 2015

கோபம் சரியா?

நம் அம்மா நம்மிடம் நன்றாய்த் தான் பேசிக் கொண்டிருப்பார்.
திடீரென்று ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு பெரிய சண்டையில் போய் முடியும்.

"எனக்குத் தொல்லைக் கொடுக்காமல், போய்த்தொலைந்தால் கூட, இரண்டு நாட்கள் அழுதுவிட்டு, நான் சந்தோஷமாக இருப்பேன்" என்று சொல்லுமளவுக்குக் கூட சண்டை வரலாம்.

அப்போது 'இந்த உலகில் என்னை அன்பு செய்ய யாருமில்லை. பெற்ற தாயே இப்படிப் பேசுகிறார் என்றால், மற்றவர் பேசுவதில் தவறொன்றுமில்லை' என்றெல்லாம் நம் மனதில், வீணான எண்ணங்கள் தோன்றும்.

அந்த நேரத்தில் தான் மனதில் உறுதி வேண்டும்.

கோபத்தில், யார் திட்டினாலும், அதைப் பொருட்படுத்திக் கொள்ளக் கூடாது.

அது அவர்களின் இயலாமையேத் தவிர, உண்மையாக நம்மைத் திட்டவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்காது.

சில சமயம் நான் செய்வதுண்டு...

என் அம்மா என்னைஅடித்துவிடுவார்.

அவரைத் திரும்ப அடிக்க முடியாது.

அதனால், என்னை நானே மேலும் காயப்படுத்திக் கொள்வேன்.

என் கோபத்தை என்மீதே காட்டிக் கொள்கிறேன்.

இது தவறான செயல். எதற்காக நான் அடிக்கப்பட்டேன் என்பதை உணர்ந்து, நான் என்னைத் திருத்திக் கொண்டால், என்னை அடிக்க வேண்டிய அவசியம் என் அம்மாவிற்கும் இல்லை.

கோபப்பட்டு, என்னைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டியஅவசியம் எனக்கும் இல்லை.

கோபத்தில் அடி வாங்குவது கூட நல்லது.

ஆனால், அவர்களின் பேச்சு தான் நம்மை மிகவும் காயப்படுத்தும், வள்ளுவர் சொன்னது போல..
'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'

காயப்படுத்துவது எளிது.
ஆனால், அதை ஆற்றுவது மிகக் கடினம்.

"நாம் சொல்வது அனைத்திற்கும் தலைஆட்டுகிறார் என்பதற்காக, ஒருவரின் மேல், நம் கோபம் அனைத்தையும் காட்டுவது மிகவும் தவறான செயல்."

கோபம் வரும் போது, நம் வாயிலிருந்து என்னென்ன சொற்கள் வருகின்றன என்று நமக்கேத் தெரியாது.

ஆனால், கோபம் குறைந்த பின், யோசித்துப் பார்த்தால், நம் மீது தான் தவறு இருக்கும்.

ஆனால், காயப்பட்டவர் நிலைமை அதே தான்.

அவர் காயத்தை எப்படி ஆற்றுவது?

ஒரு மன்னிப்பில் எல்லாம் முடிந்துவிடுமா?

இப்படி நம் மத்தியில் நிறைய கோபக்காரிகளும், கோபக்காரன்களும் இருக்கத்தான் செய்கிறோம்.

ஒருவரின் மேல் கோபப்படுவதற்கு முன், சில நொடிகளாவது சிந்திப்போம்.

அந்த நிலையில் நம்மை வைத்துப் பார்ப்போம்.

பெரும்பாலும், மேலானவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் மீதே, தங்கள் கோபத்தைக் காட்டுவார்கள்.

இது என்ன சமூக நியதியா?

அநியாயமாய்த் தோன்றாதா இந்த மேலானவர்களுக்கு?

'மேலானவர் - கீழுள்ளவர்' என் நண்பன் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள்.

மேலானவர்கள், தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.
அவர்களைப் பகடைக்காய்களாக உபயோகிப்பதை நிறுத்திவிட்டு,
அவர்களும் மனிதர்கள்...

அவர்களுக்கும் கோபம் வரும்...

என்பதை நினைத்து...

நம் கோபத்தை மற்றவர் மீது காட்டுவதற்குமுன், சிந்தித்து செயல்படுவோம்.

கோபம் வரும் போது, நமக்குப் பிடித்தவரை(அல்லதுபிடித்தபெயரை), நினைத்துக் கொண்டால், குறைந்து விடும் என்று கூறுவார்கள்.

எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்.

எனக்குப் பிடித்த ஒரு பெயர் உண்டு. அது, வெளியில் சொல்லமுடியாத பெயர். அதனால் மனதிற்குள் தான் சொல்லிக் கொள்வேன்.

கோபமில்லாத குணவதியாக வாழ,

முயற்சி செய்வோம்!

அன்பு வணக்கங்கள்!!!

இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இரு மடங்காகப் பெருகும்.








வெள்ளி, 27 நவம்பர், 2015

நன்றி கூறும் நாள்...

பரபரப்பான இந்த உலகில் மனிதர்களுக்கு நன்றி கூறுவதற்குக் கூட நேரம் இல்லை போல...

நேற்று தான், இப்படி ஒரு நாள் கொண்டாடப்படுவதே எனக்குத் தெரியும்.
நேற்று, நவம்பர் 26 ஆம் நாள், நன்றி கூறும் நாளாகக் கொண்டாடப்பட்டது.(Thanksgiving day).

இந்த நாளை எண்ணிப் பார்க்கும் போது, நான், மூவருக்கு இந்தத் தருணத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

முதலாவது என் ஆசான்... என் நண்பன்... என் எல்லாம்... என்று இருந்து, இன்று என்னோடு இல்லாத என் அருமைத் தோழன் இனியன். எனக்கு இந்த உலக விசயங்களை அறிமுகப்படுத்தி வைத்தது, என்னை வார்த்தெடுத்தது அனைத்தும் அவன் தான். எப்படிப் பேச வேண்டும்.... எப்படிப் பழக வேண்டும்..... எப்படி நடக்க வேண்டும்... இப்படி அனைத்தையும் கற்றுக் கொடுத்தவன். இந்த நாளில் அவனைச் சிறப்பாக நினைவு கூர்ந்தேன்.

இரண்டாவது என் மம்மி. மன்னிக்கவும். என் அம்மா. என் அம்மையை, அம்மா என்று அழைத்ததை விட மம்மி என்று அழைத்ததே அதிகம். மம்மி என்று அழைப்பதில் ஒரு நெருக்கத்தை உணர்கிறேன்.

சிறு வயதில் என் அம்மாவிடம் அதிகமாக அடி வாங்கியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே நன்றாகச் சமைப்பேன் என்று என் அம்மா கூறுவார். இப்போது தான் எந்த வேலையும் செய்வதில்லையே!!! அதனால், இப்போது நன்றாகச் சமைப்பதென்பது கடினம். நான், முதல் முதலாக என் குடும்பத்தைப் பிரிந்தது, கல்லூரிக்குச் சென்ற பிறகு தான். விடுதியில் தங்கிப் படித்தேன். அடிக்கடி அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க வருவார்கள்.

முதல் முதலாக நான் என் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசியது, கல்லூரியில் பயிலும் போது தான். என் நண்பன் என்னிடம் பேசவில்லை என்று அவரிடம் கூறி அழுதேன். அன்று என் கண்ணீருக்கு ஆறுதலாக, என் தாய் மடி தான் இருந்தது.

விடுமுறையில் வீட்டிற்கு வரும்போதெல்லாம், தவறாமல் என்னை கடைக்கு அழைத்துச் சென்று, தேவையான அனைத்தையும் வாங்கித்தருவார். வாங்கித் தந்ததால் மட்டும் நன்றி கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். வாங்கித் தரும் போது, அவர் முகத்தில் நான் கண்ட அந்த மகிழ்ச்சி என்னை ஆச்சரியப்பட வைக்கும்.

படித்து சில வருடங்கள் கழித்து, மறுபடியும் இப்போது என் பெற்றோருடன் இருக்கும் இந்நேரத்தில் என் அம்மாவின் பாசத்தை அளவிட முடியவில்லை.

உடல் நிலை சரியில்லாத போது என் அருகில் படுத்துக் கொண்டு எனக்கு ஆறுதல் சொல்வது...

மதிய உணவு பேக் செய்வது...

நான் அணியும் மிதியணிகளை எடுத்து வைப்பது...

என்னை வழியனுப்பி வைப்பது...

நான் கேட்காமலே என் தேவைகளை நிறைவேற்றுவது...

எனக்காக பலரின் அவப்பேச்சுகளுக்கு ஆளாவது..

எனக்கேத் தெரியாமல் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது...

இந்த நேரத்தில் எனக்கு அம்மை வந்த நேரத்தை எண்ணிப் பார்க்கிறேன். என்னால் எழுந்து அமர கூட முடியாத அந்த நேரங்கள்.. என் மம்மி இல்லை என்றால் நான் எப்படி இருந்திருப்பேன் என்று நினைக்கும் போது, கண்களில் நீர் வழிகின்றது.

இப்படி எனக்காக, இத்தனை தியாகங்கள் செய்த என் அம்மாவிற்கு நன்றி கூறுவதில் எனக்கு மிகுந்த சந்தோசம். என் அம்மாவிற்கு வாழ்த்து கூறினேன்.

மூன்றாவது என் டாடி. என் மம்மி எனக்கு எந்த அளவிற்கோ, அந்த அளவிற்கு என் டாடியும் மறைமுகமாக என் அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்திருக்கிறார். அவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்.

இந்த மூவரும் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதவர்கள்.

நான் இப்போது இருப்பதற்குக் காரணமே இந்த மூவரும் தான்.

இவர்களுக்கு நன்றி கூறும் இந்நாளில், என் நண்பர்கள், என் உறவினர்கள் அனைவருக்கும் என் நன்றியைக் கூற ஆசைப்படுகிறேன்.

நாம் ஒவ்வொருவரும், ஏதாவது ஒருவகையில், ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன்பட்டவர்களே!!!




வியாழன், 26 நவம்பர், 2015

கார்த்திகைத் திருநாள்...


இன்று திருக்கார்த்திகைத் திருநாள்.

ஒளி இருக்கும் இடத்தில் இறைவன் என்றும் நிறைந்திருப்பான்.

இன்று, தீபங்களை ஏற்றும் போது மனதில் ஒருபுத்துணர்ச்சி பிறந்தது போல் தோன்றியது.

 பழைய உறவுகளைச் சந்தித்தேன். புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது, இந்நாள்.

ஒருவருக்காய் வாழ்வதைவிட, பலருடன் ஒன்றித்து வாழ்வது அதை விட மகிழ்ச்சியையேத் தரும்.

இந்த ஒளிநாளில் மற்றவரின் வாழ்விலும், என்னால் ஒளியேற்ற முடிகிறதா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

அதற்காக சிறிதாவது முயற்சி எடுக்கிறேன்.

இறைவன் அருளால் அனைத்தும் நன்றாய் அமையும்.

இனிய காலை வணக்கம்.



புதன், 25 நவம்பர், 2015

குட்டிக் குறும்புகள்...

நான் சிறு வயதாய் இருந்தபோது, அதாவது இரண்டாம் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டின் அருகில் நிறைய சிறு பிள்ளைகள் இருப்பார்கள். சனி ஞாயிறு என்றால் ஒரே ஆட்டம், பாட்டம் தான். தெருவே திருவிழா போலக் காட்சியளிக்கும். என் சிறுவயது நண்பர்கள் தேவி,பிரபு, ராஜி இன்னும் பலர்.

நாங்கள் பெரும்பாலும் விளையாடும் விளையாட்டு,ஓடிப்பிடித்து  இல்லையைன்றால் ஒளிந்து விளையாடுவது.

சிலநேரம் சைக்கிள் வாடகைக்கு எடுத்து, அதை ஓட்டிப் பழகி விளையாடுவோம்.

சிலநேரம் வீட்டிற்குத் தெரியாமல், சமையல் பொருட்களைத் திருடிக்கொண்டு வந்து தேங்காய் சரட்டையில் சமையல் செய்து உண்டு மகிழ்ந்து விளையாடுவோம்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து, குளித்துவிட்டு ஆலயத்திற்குச் செல்வது வழக்கம்.

வீட்டில் உட்கார்ந்து படித்த ஞாபகமும் இல்லை.
படிக்காமல் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் இல்லை.

எங்கள் தெருவில், துணிசலவை செய்யும் ஒரு தாத்தா இருப்பார். அவர், ஒரு குட்டி தள்ளுவண்டி வைத்திருப்பார். அதன் பக்கத்தில் செங்கல்களால் ஒரு வீடு கட்டி, அதற்குள் சில சாமி படங்களை வைத்து, அதற்கு சூடம் ஏற்றிக் கும்பிட்ட ஞாபகம் எல்லாம் இருக்கிறது.

அப்போது நான் என்ன ஜாதி என்று தெரியாது.

யாரிடம் மட்டும் பேசவேண்டுமென்று தெரியாது.

யார் வீட்டிற்கெல்லாம் செல்லக் கூடாது என்பது தெரியாது.

தெரு மட்டுமே எங்கள் சொத்து...

எந்நேரமும் தெருவில் தான் கிடப்போம்.

மதியவேளைத் தூக்கம் கூட அறிந்தது கிடையாது.

அந்த நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது, மனதிற்குள் ஒரு உற்சாகம் பிறந்தது.


நான் சைக்கிள் ஓட்டப் பழகியது அந்தத் தெருவில் தான்...

நான் ஓடியாடப் பழகியதும் அந்தத் தெருவில் தான்...

அழகான நண்பர்களைப் பெற்றதும் அந்தத் தெருவில் தான்...

அந்த நாட்கள் திரும்ப வராதா என்று ஏக்கமாய் இருக்கிறது.


கடந்த காலம் எப்போதும் திரும்ப வராது. ஆனால், கடந்த காலத்தைப் போல் நம்மால் வாழ முடியும்.

எதைப் பற்றியும் நினைக்காமல் மகிழ்ச்சியாய், அமைதியாய், பொறாமை இல்லாமல், சண்டைசச்சரவுகள் இல்லாமல், போட்டி, பகை இல்லாமல் நம்மால் வாழ முடியும்.

அப்படி வாழும் போது, நிகழ்காலமும் கடந்த காலத்தைப் போல் மகிழ்ச்சியானதாய் அமையும்.








செவ்வாய், 24 நவம்பர், 2015

பிடிக்கவில்லை...

பேசிக் கொண்டிருக்கப் பிடிக்கிறது...
எழுதப் பிடிக்கவில்லை...

பகிர்ந்து கொள்ளப் பிடிக்கிறது...
பகிரப்படுவது பிடிக்கவில்லை...

அழப் பிடிக்கிறது...
அழ வைக்கப் பிடிக்கவில்லை...

நேசிக்கப் பிடிக்கிறது...
நேசிக்கப்படுவது பிடிக்கவில்லை...

மழையில் நனைவது பிடிக்கிறது...
மழையில் அழுவது பிடிக்கவில்லை...

பாடல் கேட்கப் பிடிக்கிறது...
அதன் வரிகள் பிடிக்கவில்லை...

இயற்கை இரசிக்கப் பிடிக்கிறது...
அதன் ஆணவம் பிடிக்கவில்லை...

அறிவுரை கூறப் பிடிக்கிறது...
அறிவுரை கூறப்படுவது பிடிக்கவில்லை...

காதல் பிடிக்கிறது...
காதலியாவது பிடிக்கவில்லை...

நட்பு பிடிக்கிறது...
போலி நண்பர்கள் பிடிக்கவில்லை...

காயங்கள் பிடிக்கிறது...
காயப்படுத்துவது பிடிக்கவில்லை...

முத்தம் பிடிக்கிறது...
அதன் ஈரம் பிடிக்கவில்லை...

அழகு பிடிக்கிறது...
அதன் கர்வம் பிடிக்கவில்லை...

குரல் பிடிக்கிறது...
அதன் குற்றப்பழி பிடிக்கவில்லை...

ஏக்கம் பிடிக்கிறது...
ஏங்கவைக்கும் தருணங்கள் பிடிக்கவில்லை...

மௌனம் பிடிக்கிறது...
உறைய வைக்குமளவிற்குப் பிடிக்கவில்லை...

சண்டை பிடிக்கிறது...
அது தொடர்ந்துகொண்டிருப்பது பிடிக்கவில்லை...

ஆக...
பிடிக்கும் ஒவ்வொன்றிற்குப் பின்னும்
பிடிக்காத ஒன்று இருக்கிறது...
இது
என் தவறு  அல்ல...




திங்கள், 23 நவம்பர், 2015

தாங்கக்கூடிய வலி...


ஒரு குட்டி உதாரணம். ஆற்றுநீரைச் சூடுபடுத்தினால், கலங்கிய தண்ணீர் அடியில் தங்கிவிடும். சுத்தமான நீரை எளிதாக, வடிகட்டியின் உதவியுடன் பிரித்து எடுத்துவிடலாம்.
இதில், ஒரு மிகப் பெரிய வாழ்க்கைத்தத்துவம் அடங்கி உள்ளது.
வாழ்க்கையில், நமக்கு துன்பமும் இன்பமும் கலந்து தான் இருக்கும். ஆனால், சூடுபடுத்துதல் என்ற சிலநேர சோகங்கள், கஷ்டங்கள் வரும் போது மனம் கலங்காமல் காத்திருந்தால் நம்மிலிருக்கும் கசடு என்ற துன்பங்கள் அடியில் தங்கிவிடும். அமைதி, மகிழ்ச்சி போன்ற நல்லவவைகளை எளிதாகப் பிரித்துவிடலாம்.

நம்மால் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுதான் கஷ்டங்கள் வரும். அப்படியே உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான சக்தியை இறைவன் தருவார்.

எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்களா? என்று மற்றவரைப் பற்றித் தெரிந்து கொள்ளாதபோது பேசுவோம். ஆனால், அவரின் கஷ்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, நாம் படும் துயரங்கள் சாதாரணமாகவே தெரியும்.

துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் அதைத் தாங்கிக் கொள்ளும் தைரியத்தை மட்டும் கொண்டிருப்போம்.
நம் துன்பங்களுக்கே இவ்வளவு சிரமப்படுகிறோம். பின் எப்படி மற்றவரின் துயரத்தைத் துடைப்பது?
எனக்குப் பிடித்த திரைப்படத்தில் வரும் வசனம் இது.... 'நம்ம ஆசையை நாமலே நிறைவேத்துறதுல என்ன kick இருக்கு? மற்றவர்கள் ஆசையை நிறைவேற்றதுல தான் உண்மையான kick இருக்கு'என்று வரும். அருமையான வசனம். எனக்குப் பிடித்த வசனமும் கூட. என் அறையின் ஒரு மூலையில் எழுதி ஒட்டப்பட்டிருக்கும் இதைஎப்போதாவது படிப்பதுண்டு.

இங்கு திருவள்ளுவரின் ஒரு குறள் ஞாபகம் வருகிறது..
'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்'
துன்பம் வரும்போது,அதைக் கண்டு கலங்காமல் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி, அத்துன்பத்தை வென்றுவிட வேண்டும்.

முதலில் நம் துன்பங்களைக் களையத் துவங்குவோம்.

பின் மற்றவரின் துயர் துடைக்க சக்தி கிடைக்கும்.



சனி, 21 நவம்பர், 2015

மனத்தாங்கல்..


'உன் சகோதரனோடு ஏதாவது மனத்தாங்கல் இருந்தால் அவனுடன் முதலில் சமரசம் செய்து விட்டு, பின் உன் காணிக்கையைச் செலுத்து' என்று பைபிளில் ஒரு வசனம் இருக்கும். திருப்பலியில் பங்கு கொள்ளும் பொழுதெல்லாம், என் மனதில் தோன்றும் ஒரு எண்ணம் 'நான் யாருடனாவது சண்டையிட்டுள்ளேனா என்று யோசித்துப் பார்ப்பேன்'. முக்கியமாக, என் தங்கையிடம் அல்லது என் மம்மியிடம் சண்டையிட்டிருந்தால், அவர்களுடன் சமாதானம் செய்த பின்பு தான் எனக்கு ஒரு திருப்தி இருக்கும்.

இன்று காலை டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர்  உரையாடிக் கொண்டிருந்தார். 'உங்களுக்கு யாருடனாவது மனத்தாங்கல் இருந்தால் பின் எப்படி உங்கள் வேண்டுதல்களை இறைவன் ஏற்றுக் கொள்வார். உங்கள் அருகில் இருப்பவரையே உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் எப்படி இறைவனை ஏற்றுக் கொள்வீர்கள். அவர் எப்படி நீங்கள் கேட்பதைச் செய்வார் என்று நினைக்கிறீர்கள்?' என்று தொடர்ந்தார்.

எனக்கு சிறு வயதில் இருந்து யாருடனெல்லாம் மனத்தாங்கல் இருக்கிறதென்று யோசித்துப் பார்த்தேன்.

நான் ஒன்றாம் வகுப்பு படித்த பொழுது, என்னுடன் பயின்ற, என் அண்டை வீட்டுத் தோழி கீர்த்தனா. அவள் வீடு மாறிச் செல்லும் போது என்னிடம் சொல்லாமலே சென்றுவிட்டாள். அவள் மீது சிறு மனத்தாங்கல். ஞாபகம் தெரிந்த வயதில் நான் பிடித்த, முதல் தோழி அவள். அவள் என்னிடம் சொல்லாமல் போனது வருத்தமாக இருந்தது.

பின் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடன் பி.நித்யா என்.நித்யா என இருவர் படித்தனர். இருவருமே என் பெஞ்ச் தான். ஆனால் எங்கள் மூவருக்கும் அடிக்கடி சண்டை வரும். என்.நித்யா என்னைப் பொறுத்துக் கொள்வாள். பி.நித்யாவும் நானும் பேசாமலே பாதி நாட்களைக் கடத்திவிட்டேன். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் வரும் சமயம்.. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் என்.நித்யாவிடம் சண்டை போட்டு, படிப்பு முடியும் வரை அவளுடன் பேசாமலே இருந்துவிட்டேன். அந்த இரண்டு நித்யாக்களிடமும் பேசி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்றுத் தோன்றியது.

காரணமே உணர்ந்து கொள்ளாமல், என் மீது அன்பு வைத்திருந்த ஒரு அம்மாவிடம் கோபப்பட்டு, இன்று வரை பேசாமல் மௌனமாய் இருக்கிறேன். இவரை நினைவு கூறும் பொழுதெல்லாம், நான் தவறு செய்துவிட்டதாய்த் தோன்றும். ஒருவேளை, நான் என் மனதில் உள்ளதை மறைக்காமல் பேசியிருந்தால் சரியான தீர்வு கிடைத்திருக்கும் என்று தோன்றியது.

என் தோழி, என்னைப் புரிந்து கொள்ளாமல், சட்டென்று 'நான் சொன்ன ஒரு வார்த்தைக்காகவா அல்லது அவளுக்கு வேறு நிறைய தோழிகள் கிடைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை!' இன்று வரை என்னுடன் பேசாமல் இருக்கிறாள். ஆனால், அவள் பிரிவு எனக்கு மிகுந்த வருத்தத்தையேத் தருகிறது. அது அவளுக்குப் புரியுமா என்று தெரியவில்லை!

மேற்சொன்னவர்களிடம், எனக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்...

கீர்த்தனாவிடம் ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய்? நீ இல்லாமல் நான் மூன்றாம் வகுப்பு வரைத் தனியாய் தான் இருந்தேன் என்று கூறுவேன்.

என்.நித்யா பி.நித்யா இருவரிடமும் மனம் விட்டுப் பேசுவேன்.

என் அம்மாவிடம் என் சுகங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்வேன் முன்புபோல...

என் தோழியின் அருமையை உணர்வேன். அவளிடம் சண்டை போட மாட்டேன்.

இவை எல்லாம் நிறைவேறினால்.. கண்டிப்பாக என் மனதில், ஒரு திருப்தி கிடைக்கும் எனத் தோன்றுகிறது. என் அருகில் உள்ளவர்களிடம் முதலில் நான் மனத்தாங்கல் இல்லாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். பின் இறைவன் நம் தேவைகளைத் தானே முன் வந்து செய்வார்.

உங்களுக்கும் யாருடனாவது மனத்தாங்கல் இருந்தால் சமரசம் செய்து விட்டு உறங்கச் செல்லுங்கள்.

நிம்மதியான தூக்கம் உங்களுக்கே!

வெள்ளி, 20 நவம்பர், 2015

சபிக்காதீர்கள்.


சாபம் - பெரும்பாலும் நாம் இந்தவார்த்தையை சண்டையிடும் போது கேட்டிருப்போம். அல்லது, வீட்டில் யாராவது பேசிக் கொண்டிருக்கும் போது 'அவன் இப்படிச் செய்தான்...அவன் செய்தது தான், இப்போது, இந்தக் குடும்பத்திற்குச் சாபமாய் வந்து நிற்கிறது' என்று பேசுவார்கள்.சாபம் கொடுப்பதைப் பற்றியோ அல்லது சாபம் பெறுவதைப் பற்றியோ  எனக்கு எந்த ஒரு உடன்பாடும் இல்லை.

திடீரென எனக்கு இந்த வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. என் நண்பர் என்னிடம் சொன்ன ஒரு வரிதான் இது. 'எனக்குசாபம் கொடுக்காதே!!' அதை எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் சாபத்தைப் பற்றி இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அன்று அவன் அப்படி செய்ததால், நான் அவனைத் திட்டினேன். ஆனால், அது உண்மையாகும் என்று நினைக்கவில்லை. ஆனால் அது எப்படி நடந்தது?

பைபிளில் படித்த ஞாபகம். 'நான்கு தலைமுறைக்கு நாம் பெற்ற சாபம் நீடிக்குமென்று.'

எதனால் சாபம் பெறுகிறோம்?

எதனால் மற்றவரைச் சபிக்கிறோம்?

இதிலிருந்துவிடுதலை இல்லையா?

என் அம்மா அடிக்கடி கூறுவார் 'கிறிஸ்தவர்களுக்கெல்லாம் சாபம் பழிக்காது. இருந்தாலும் பெரியவர்கள் வாயில் விழக் கூடாது'

சாபத்தைப் பற்றிஅதிகம் தெரியாது. இருந்தாலும் இருவருக்கு மட்டும் ஒரு சிலவரிகள் கூற ஆசைப்படுகிறேன்.

ஒன்று சாபத்தைக் கொடுப்பவர்
யாரையும் சபிப்பதற்கு முன் 'அது தனக்கு வந்தால் எப்படி இருக்கும்? தன் குடும்பம் என்றால் நம்மால் தாங்கிக் கொள்ளமுடியுமா? தன் அன்பிற்குரியவருக்கு என்றால் நாம் பொறுத்துக் கொள்வோமா?' என்பதை யோசித்துப் பார்த்து, பின் மற்றவரைப் பற்றிப் பேசுவோம்.


இரண்டு சாபத்தைப் பெறுபவர்
நம்மை மற்றவர் சபிக்கிறார் என்று தெரிந்தும், வீண் பிடிவாதம் பிடித்தும், திமிர் கொண்டும் இருப்பது நல்லதல்ல. அவரைப் பொறுத்துப் போவோம். இல்லையென்றால், அந்த இடத்தில் இல்லாமல் இருத்தல் நல்லது.
மற்றவரின் சாபத்தால் நடந்த உண்மைகள் நிறையவே இருக்கின்றன. என் வாழ்விலும், நான் கண்கூடாக பார்த்த சம்பவங்கள் இருக்கின்றன.
அதனால் மற்றரைச் சபிக்காமலும், நாம் சாபம் பெறாமலும் இன்பவாழ்க்கை வாழ்வோம்.

இனிய காலைவணக்கம்.




வியாழன், 19 நவம்பர், 2015

ஆபத்துக் காலத்தில் உதவுபவனே...

"ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்"

நண்பர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால், நாம் கஷ்டப்படும் காலங்களில் நமக்கு யார் உதவுகிறார்கள் என்பது தான் கேள்வி?
எங்கள் பள்ளியில் மயக்கம் போடும் ஆசிரியர், நான் ஒருத்தி மட்டும் தான். அதை எங்கள் பள்ளியில் அனைவரும் அறிவர். நேற்றும் அதைப்போல் தான். பள்ளியில் 40 ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால், எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதைப் பார்த்ததும், எனக்கு உதவி செய்ய மூன்று ஆசிரியர்கள் முன் வந்தார்கள்.
அவர்களுக்கு நன்றி சொல்லஅப்போது எனக்கு நேரம் இல்லை.. ஆனால், அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

கன்ஸலோ அனோன்ஸியா ஆசிரியர். என் உடன் பணியாற்றுகிறார். அவரை நான் எப்போதும் அம்மா என்றே அழைப்பேன். அழைப்பதற்கு ஏற்றார்போல் எனக்குத் தேவையான நேரத்தில், தேவையானஅறிவுரைகள் வழங்குவார். அவர் தான் நேற்று எனக்கு சாதம் ஊட்டிவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டார்.

கவிதா ஆசிரியர். இவர் தான் என் நெருங்கிய நண்பர் என்பது என் பள்ளியில் அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாய்த்தான் இருந்தோம். சில வேலைகள் காரணமாக இப்போது நாங்கள் இருவரும் சந்திப்பது சற்று குறைந்துவிட்டது. இருந்தும், எனக்கு ஏதாவது ஒன்று என்றால், இவள் துடிதுடித்துப் போய்விடுவாள். இவளை என் தோழியாகப் பெற்றது, நான் செய்த பாக்கியமே.

மூன்றாவது, எங்கள் பள்ளியின் நர்ஸ் மேம். எனக்கு எப்போது உடல் நிலை சரியில்லை என்றாலும், என் அருகில் இருந்து, என்னைப் பார்த்துக் கொள்பவர் அவர் மட்டும் தான். நான் எடுக்கும் வாந்தியைச் சுத்தம் செய்பவரும் இவர் தான். என் வீட்டிற்குத்  தகவல் சொல்பவரும், இவர் தான்.
இந்த மூவரும் நேற்று என் வாழ்வில் என் கடவுளாகவேத் தெரிந்தார்கள்.

இதுவரை பைபிளிலும், படங்களிலும் மட்டுமே பார்த்த இயேசுவை நேற்று இவர்கள் மூலம் பார்த்தேன். இன்றும் நேற்று நடந்த ஒவ்வொரு விசயமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

நண்பர்களுக்கு உதவுவது என்பது இறைவனுக்கே உதவிசெய்வது என்பதை நேற்று உணர்ந்து கொண்டேன்.

என் ஒவ்வொரு நண்பர்களுக்கும் நன்றி சொல்ல விழைகிறேன்.

நன்றி நண்பர்களே!

புதன், 18 நவம்பர், 2015

அன்பே கடவுள் என்றால்...

'அன்பே கடவுள் என்றால் அன்பிற்கு ஈடேது சொல்'

அன்பு கடவுளா?

அன்பு செய்தலில் கடவுள் இருக்கிறாரா?

கடவுள் அன்பாய் இருக்கிறாய் என்றால்,
அன்பு செய்தலுக்கு ஈடானது எதுவும் இல்லை.

ஆதலால், அன்பு செய்தலின் மூலம், நாம் இறைவனைஅறிந்து கொள்ளலாம். இறைவனை நம் மூலமாக மற்றவரும் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் அன்பு செய்வதற்கு எங்குநேரம் இருக்கிறது?

நாம் அனுப்பும் ஒவ்வொரு குறுஞ்செய்தியிலும், மின்னஞ்சலிலும் மட்டும் அன்பு என்ற வார்த்தையைக் குறிப்பிட்டால் போதுமா?

நாம் அவரை அன்பு செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடுமா?

கண்ணெதிரேக் காதல் எல்லாம் மறைந்து
கணினிக்காதல் பெருகிவிட்ட காலம்..

அன்பு என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்பவர்கள் தான் அனேகம். கணவன்-மனைவி, அம்மா-மகள்(ன்),  காதலன்-காதலி இவர்களுக்கு இடையில் இருப்பது மட்டும் அன்பு அல்ல.

அன்பிற்குப் பலமுகங்கள் உண்டு...

விட்டுக்கொடுத்தல்...

பகிர்ந்தளித்தல்...

உரையாடுதல்...

புன்சிரிப்பு...

நல்லஉறவு...

நல்லெண்ணம்...

பொறுமையோடிருத்தல்...

ஏற்றுக்கொள்ளுதல்...

இவை அனைத்தும் அன்பின் வெளிப்பாடு தான்.

நான் அன்பாய் இருக்கிறேன் என்று வெளியில் பீற்றிக் கொண்டிருப்பதால், ஒன்றும் பயனில்லை. உண்மையில், நாம் அன்பானவர் தானா என்று சுயபரிசோதனை செய்து பார்ப்போம்.

அன்பு செய்வது எவ்வளவு உயர்வானதோ
அதே அளவு உயர்வானது
அன்பு செய்பவரைக் கடைசிவரையில் ஒரே மாதிரியாக அன்பு செய்வது.

இன்ப இனிய இயேசுவே...
புனித அசிசியாரின் 'அன்பைப் பெற விரும்புவதை விட, பிறருக்கு அன்பை அளிக்கவும் எனக்குஅருள்வீராக!' என்ற ஜெபத்தைப் போல், நானும் பிறருக்கு அன்பை அளிக்கவும், அந்த அன்பில் நிலைத்திருக்கவும் எனக்கு அருள்தாரும்.


இந்தநாள் என் வாழ்வின் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நாளாய் அமையட்டும்.