வியாழன், 10 டிசம்பர், 2015

புதுமை – 10

இன்றைய அற்புதம் : இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்த்தெழுதலும்

இயேசு, மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர்(அவரதுபெயர் யாயிர்), அவரிடம் வந்து, அவரது காலில் விழுந்து, தம் வீட்டிற்கு வருமாறு வேண்டினார். ஏனெனில், பன்னிரண்டு வயதுடைய அவரது மகள், சாகும் தருவாயில் இருந்தாள்.

இயேசு,அங்குச் செல்லும் வழியில், மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது. பன்னிரண்டுஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர்,  'இயேசுவின் ஆடையின் நுனியைத் தொட்டாலாவது நான் குணம் பெறுவேன்'என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, அந்தக் கூட்டத்திலும், இயேசுவைத் தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று. இயேசு, 'என்னைத் தொட்டவர் யார்?'என்று கேட்டார். அனைவரும் மறுத்தனர். இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய பேதுரு,'ஆண்டவரே! மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறதே! இதில், உம்மைத் தொட்டவர் யார்? என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்'என்று கூறினார்.

அதற்கு இயேசு, 'யாரோ ஒருவர் என்னைத் தொட்டார். என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை நான் உணர்ந்தேன்' என்றார். அப்பெண், தான் இனியும் மறைந்து இருக்க முடியாது என்று கண்டு, நடுங்கிக் கொண்டே வந்து, அவர்முன் விழுந்து, தாம் அவரைத் தொட்ட காரணத்தையும், தம் நோய் நீங்கியதையும் மக்கள் அனைவர் முன்னிலையிலும் கூறினார். இயேசு அவரிடம் 'மகளே! உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ' என்றார்.
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து ஒருவர் வந்து, 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். இனி போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்'என்றார்.

இதைக் கேட்ட இயேசு, அவரைப் பார்த்து, 'அஞ்சாதீர்! நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைத்துக் கொள்வாள்;' என்றார். வீட்டிற்குள் நுழைந்ததும், அச்சிறுமியை வைத்திருந்த இடத்திற்கு, அச்சிறுமியின் தாய் தந்தையுடனும், தனது சீடர்களான பேதுரு,யோவான், யாக்கோபு உள்ளே சென்றார்.
அவளுக்காக அனைவரும் மாரடித்துப் புலம்பிஅழுது கொண்டிருந்தார்கள். இயேசுவோ 'அழாதீர்கள்! சிறுமி இறக்கவில்லை; உறங்குகிறாள்'என்றார். அவள் இறந்துவிட்டாள் என்று அறிந்திருந்ததால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். இயேசு, அச்சிறுமியின் கையைப் பிடித்து "சிறுமியே எழுந்திடு!'என்று கூப்பிட்டார். உடனே அச்சிறுமி எழுந்தாள். இயேசு அவளுக்கு உணவு கொடுக்கும் படி, அதன் தாயிடம் கூறினார். அவளுடைய பெற்றோர் மலைத்துப் போயினர்.
இன்றைய இரண்டுஅற்புதங்களும் நமக்கு உணர்த்துவது...
நம்பிக்கை. இறைவன் மீது நம்பிக்கை கொண்டால், எத்தனை வருடங்கள் ஆகியும் முடியாத,காரியம் கூட சீக்கிரம் கை கூடும்.
ஒருமுறை முயன்று, அந்தக் காரியம் நடக்கவில்லை என்றால் மனம் உடைந்து போகாதீர்கள்.
நமக்கென போடப்பட்ட தரி நமக்கு மட்டும் தான்.
அந்தக் காரியம் கிட்டும் வரை முயன்று கொண்டே இருப்போம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்
இனியாள்.

கருத்துகள் இல்லை: