செவ்வாய், 22 டிசம்பர், 2015

புதுமை – 17

இன்றைய அற்புதம் - பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுதல் (லூக்கா 18:35-43)
இயேசு, எரிகோவை நெருங்கிவந்த போது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து, பிச்சையைடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க் கொண்டிருந்ததைக் கவனித்த அவர், 'இது என்ன?' என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள். உடனே அவர், 'இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'என்று கூக்குரலிட்டார். முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால், அவர் 'தாவீதின் மகனே எனக்கு இரங்கும்'என்று இன்னும் உரக்கக் கத்தினார்;. இயேசு நின்று அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், 'நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'என்று இயேசு கேட்டார். அதற்கு அவர் 'ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்' என்றார். இயேசு அவரிடம் 'பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். அவர் உடனே பார்வை பெற்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே, இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.

இன்றைய அற்புதமானது மற்ற எல்லாஅற்புதங்களையும் விட சற்று வித்தியாசப்படுகிறது. இதுவே, லூக்கா நற்செய்தியில் வரும் கடைசி அற்புதமும் ஆகும். இந்தப் புதுமையில், பார்வையற்றவர் பெரும் கூட்டத்தின் இரைச்சலிலும், தனக்கு சுகம் தரும்படி இயேசுவை வேண்டுகிறார்.

கூட்டநெரிசலில் இயேசுவை நெருங்க முடியவில்லை. கூட்டத்தில் உள்ளவர்கள் அமைதியாய் இருக்கச் சொன்ன பிறகும், தனக்குப் பார்வை தர இயேசுவால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையில் மீண்டும் கத்துகிறார். பார்வை பெற்றுக் கொள்கின்றார்.

நாமும் சில நேரங்களில், தூர நின்று கொண்டே தான் இயேசுவை அழைப்போம். பொறாமை, திருட்டு, கோபம் போன்ற அனைத்தையும் செய்துவிட்டு காலை, மாலை தவறாமல், 'இயேசுவே! தாவீதின் மகனே! என் இறைவா! என் உயிரே!' என்று பாடிக் கொண்டிருப்போம். ஆனால், திடீரென வாழ்வில் ஒரு ஏமாற்றம், தோல்வி, கவலை,கண்ணீர் வரும் போது, 'என்னைப் போல் உருக்கமாகச் ஜெபிக்க யாருமில்லை' என்னும் அளவிற்கு உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள்.

நம் இறைவன்.. நம்மைப் பற்றி முற்றிலும் அறிந்தவர். நமக்குச் செய்ய அவருக்குத் தெரியும். இருந்தும், 'என் பிள்ளை என்னிடம் அனைத்தையும் கேட்டுப் பெற்றுக் கொள்கிறானா? என் மீது நம்பிக்கை கொண்டுள்ளானா?'என்று நம்மை ஒவ்வொருபொழுதும் சோதிக்கிறார்.

கவலைகள் வரும் போது மட்டும்...

தேவைகள் இருக்கும் போது மட்டும்...

தனிமை வாட்டும் போது மட்டும்...

பிணி தீர்க்கும் போது மட்டும்...

அவரை அழைக்காமல்!!!

எப்போதும் அவரே,எனக்கு எல்லாம் என்று சரணாகதியாவோம்.

அவர் மீதுள்ள, நம் நம்பிக்கையே நம்மைக் குணமாக்கும்.

அன்புடன்
இனியாள்.

கருத்துகள் இல்லை: