புதன், 16 டிசம்பர், 2015

KISS

ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க ஜனாதிபதியாகச் செனட் சபையில் பேசுகிறார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்த அவர் மனைவி, பாதுகாவலரிடம் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்து, அதை லிங்கனிடம் கொடுக்கும்படி பணிக்கிறார். பாதுகாவலர், அந்தச் சீட்டை லிங்கனிடம் கொடுக்க, லிங்கன் அதை வாங்கிப் பார்க்கிறார். அதில், K.I.S.S  என்று எழுதி இருந்தது. என்ன இவள்!!! சபை நாகரிகம் கூடத் தெரியாமல், kiss என்று எழுதி, துண்டுச் சீட்டு அனுப்புகிறாளே எனக் குழம்பியவாறு, தன் உரையை முடித்துவிட்டுத் தன் மனைவியிடம் வருகிறார்.

'என்ன இப்படிச் செய்து விட்டாயே?' என்று லிங்கன் கேட்க, மனைவி கூறுகிறார் 'ஏன் என்ன தவறு என்னிடம் கண்டீர்கள்? சுருக்கமாகப் பேச வேண்டும் என்பதைத் தான், "Keep It Short and Sweet “KISS” என்று எழுதியிருந்தேன்' என்று கூறினாராம்.

ஒருவேளை, லிங்கன் தன் மனைவியைப் புரிந்துகொள்ளாமலும், அவருக்கு மதிப்பளிக்காமலும் இருந்திருந்தால், சபை கலைந்தவுடன் நேராகத் தன் மனைவியிடம் வந்து, அவரிடம் சண்டை போட்டிருந்திருப்பார். அல்லது தன் கோபத்தை அவர் மீது காட்டியிருந்திருப்பார். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல், முதலில் தன் மனைவியிடம் வந்து விசாரிக்கிறார். "ஏன் அவ்வாறு எழுதினார்" என்பதன் காரணத்தை அறிந்து கொள்கிறார்.

நாமும், பல நேரங்களில் நம் பெற்றோர்களிடமோ, நம் நண்பர்களிடமோ அவர்களைச் சுட்டிக் காட்ட, ஏதாவது ஒன்று கிடைத்து விட்டால் போதும்... அதை வைத்துக் கொண்டு, அவர்கள் மீது கோபப்படுவதும், அவர்களுடன் ஒரு வகையான மனத்தாங்கல்களுடன் வாழும் சூழல் தான் அநேக நேரங்களில் நிகழ்கின்றது.

ஒருவரைப் பற்றி தவறான எண்ணங்களை உருவாக்கிக் கொள்வதற்கு முன், அவர்களுடன் பழகுவோம். அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஒருவரைப் பற்றிய நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அவர்களை விட்டு விலகி இருப்பதே நல்லது.

ஆபிரகாம் லிங்கன், தன் மனைவிக்கு உரிய மதிப்புக் கொடுத்தார். அதைப் போல் நாமும் நம் உறவுகளுக்கும், நம் நண்பர்களுக்கும் உரிய மதிப்பை அளிப்போம்.

என்னப்பா? இன்று புதுமை இல்லையா?
இன்னும் 3 புதுமைகள் தான், லூக்கா நற்செய்தியில் நாம் பார்க்க வேண்டியது. அதை வருகிற நாட்களில் பார்க்கலாம்.

இன்று மாலை, கோமுகி பதிப்பகத்தால் வெளியிடப்படும் 'கல்வி' மாத இதழைப் படித்துக்கொண்டிருந்தேன். இந்தக் கதை, என்னை வியக்க வைத்தது. ஆபிரகாம் லிங்கனின் பொறுமையும், அவரது மனைவியின் அன்பான பேச்சும் என்னை இந்த வலைப் பதிவை எழுத வைத்தது.

அனைவருக்கும் நன்றி

இனிய காலைவணக்கம்
அன்புடன்...

கருத்துகள் இல்லை: