திங்கள், 23 நவம்பர், 2015

தாங்கக்கூடிய வலி...


ஒரு குட்டி உதாரணம். ஆற்றுநீரைச் சூடுபடுத்தினால், கலங்கிய தண்ணீர் அடியில் தங்கிவிடும். சுத்தமான நீரை எளிதாக, வடிகட்டியின் உதவியுடன் பிரித்து எடுத்துவிடலாம்.
இதில், ஒரு மிகப் பெரிய வாழ்க்கைத்தத்துவம் அடங்கி உள்ளது.
வாழ்க்கையில், நமக்கு துன்பமும் இன்பமும் கலந்து தான் இருக்கும். ஆனால், சூடுபடுத்துதல் என்ற சிலநேர சோகங்கள், கஷ்டங்கள் வரும் போது மனம் கலங்காமல் காத்திருந்தால் நம்மிலிருக்கும் கசடு என்ற துன்பங்கள் அடியில் தங்கிவிடும். அமைதி, மகிழ்ச்சி போன்ற நல்லவவைகளை எளிதாகப் பிரித்துவிடலாம்.

நம்மால் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுதான் கஷ்டங்கள் வரும். அப்படியே உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான சக்தியை இறைவன் தருவார்.

எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்களா? என்று மற்றவரைப் பற்றித் தெரிந்து கொள்ளாதபோது பேசுவோம். ஆனால், அவரின் கஷ்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, நாம் படும் துயரங்கள் சாதாரணமாகவே தெரியும்.

துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் அதைத் தாங்கிக் கொள்ளும் தைரியத்தை மட்டும் கொண்டிருப்போம்.
நம் துன்பங்களுக்கே இவ்வளவு சிரமப்படுகிறோம். பின் எப்படி மற்றவரின் துயரத்தைத் துடைப்பது?
எனக்குப் பிடித்த திரைப்படத்தில் வரும் வசனம் இது.... 'நம்ம ஆசையை நாமலே நிறைவேத்துறதுல என்ன kick இருக்கு? மற்றவர்கள் ஆசையை நிறைவேற்றதுல தான் உண்மையான kick இருக்கு'என்று வரும். அருமையான வசனம். எனக்குப் பிடித்த வசனமும் கூட. என் அறையின் ஒரு மூலையில் எழுதி ஒட்டப்பட்டிருக்கும் இதைஎப்போதாவது படிப்பதுண்டு.

இங்கு திருவள்ளுவரின் ஒரு குறள் ஞாபகம் வருகிறது..
'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்'
துன்பம் வரும்போது,அதைக் கண்டு கலங்காமல் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி, அத்துன்பத்தை வென்றுவிட வேண்டும்.

முதலில் நம் துன்பங்களைக் களையத் துவங்குவோம்.

பின் மற்றவரின் துயர் துடைக்க சக்தி கிடைக்கும்.



கருத்துகள் இல்லை: