செவ்வாய், 8 டிசம்பர், 2015

புதுமை – 8

இன்றைய அற்புதம் : பேய் பிடித்தவரை நலமாக்குதல் (லூக்கா 8: 26 – 39)
இயேசு, கலிலேயா என்ற இடத்திலிருந்து, கெரசேனர் என்ற பகுதியை நோக்கி, படகில் வந்து கொண்டிருந்தார். கரையில் இறங்கியதும், அந்நகரைச் சார்ந்த ஒருவர் அவரை எதிர்கொண்டு வந்தார். பேய் பிடித்திருந்த அவர், நெடுநாளாய் ஆடை அணிவதில்லை. வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கி வந்தார். இயேசுவைக் கண்டதும், கத்திக் கொண்டு அவர் முன் விழுந்து, ' இயேசுவே! உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? என்னை வதைக்க வேண்டாம்' என்று உரத்த குரலில் அவரிடம் மன்றாடினார். ஏனென்றால், அத்தீய ஆவியை அவரிடமிருந்து வெளியேறுமாறு, அதற்கு கட்டளையிட்டார். இயேசு, அவரிடம் 'உம் பெயர் என்ன?' என்று கேட்டார்.  அதற்கு அவர், 'இலேகியோன் - (அதாவது இலேகியோன் என்பது, உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட பெரும் பிரிவு என்பது பொருள்)' என்று கூறினார். ஏனெனில், பல பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன. அவை தங்களைப் பாதாளத்திற்குப் போக பணிக்க வேண்டாமென்று அவரை வேண்டிக்கொண்டன.

அங்கு, ஒரு மலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்குள் புகும்படி தங்களை அனுமதிக்குமாறு பேய்கள் அவரை வேண்டின. அவரும் அவற்றிற்கு அனுமதி கொடுத்தார். பேய்களும், அந்த நபரை விட்டு வெளியேறி, அந்தப் பன்றிகளுக்குள் புகுந்தன. பன்றிக்கூட்டம், செங்குத்துப் பாறையிலிருந்து, ஏரியில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், நடந்ததைக் கண்டு ஓடிப்போய் நகரிலும், நாட்டுப் புறத்திலும் அறிவித்தார்கள். பேய்கள் நீங்கப் பெற்றவர், ஆடை அணிந்து அறிவுத் தெளிவுடன், இயேசுவின் காலடியில் அமர்ந்திருந்தார்.
இன்றைய இயேசுவின் அற்புதம், நான் பலமுறைப் படித்ததே. ஆனால், இன்று ஒரு வகையான தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது.
நானும், அந்தப் பேய் பிடித்தவரைப் போலத் தான்...
என்னுள்ளும்...
அகந்தை

அகம்பாவம்

இச்சை

சுயநலம்

பேராசை

தற்பெருமை

கோபம்

தீய சொற்களைப் பேசுதல்

பொறாமை

சோம்பேறித்தனம்

போன்ற, பல வகையான பேய்கள் பிடித்து, அந்தப் பேயை விட மனமில்லாமல், அலைந்து கொண்டு இருக்கிறேன்.
இன்று, சிறப்பாக என்னுள் இருக்கும் மேற்சொன்ன பேய்களை, என்னிடம் இருந்தும் அகற்றும்படி இறைவனிடம் வேண்டுகிறேன்.

தீய ஆவிகள் என்னை விட்டு நீங்கும் போது, தானாகவே இறைவனின் குணங்கள் என்னுள் குடிகொள்ளும்.

இந்தச் சிந்தனையுடன், இந்த இனிய நாளைத் தொடங்குவோம்.

அன்பு வணக்கங்கள்

கருத்துகள் இல்லை: