ஞாயிறு, 27 டிசம்பர், 2015

சிரி...

பல நேரங்களில் நம்மால் மறக்கப்பட்ட ஒன்று. அல்லது, சில நேரங்களில் நம்மால் மறைக்கப்படுகின்ற ஒன்று. சிரிப்பு. இந்த வார்த்தையை, என் அம்மா அடிக்கடி உபயோகிப்பார். சிரித்துக் கொண்டே இரு என்று கூறுவார்.

சிரிப்பதில் இருவகையுண்டு.

ஒன்று : பெயருக்குச் சிரிப்பது

மனதில் ஆயிரம் கவலைகள் இருக்கும். ஆனால், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு, ஒரு சிறு புன்னகை புரிவது. இந்த வகையில் பெரும்பாலான நம்மோர் அடங்குவர். தன் கவலை, மற்றவர்களை பாதித்துவிடக்கூடாது என்பதற்காகச் சிரிப்பது. சில சமயங்களில், நம் இந்த வகையான சிரிப்பு தெளிவாகக் காட்டிக் கொடுத்துவிடும், நாம் பெயருக்குத் தான் சிரிக்கிறோம் என்று. வீட்டிற்கு யாராவது வந்தால், பெயருக்காவது வந்து ஒரு வணக்கம் சொல்லி, சிரித்துவிட்டுப் போ என்று கூறுவதுண்டு. இதனால் யாருக்கும் பயன் இல்லை.

இரண்டு : மனம் விட்டுச் சிரிப்பது

இந்த இரண்டாம் வகைச் சிரிப்பு, எல்லா நேரங்களிலும் வருவதில்லை. சில நேரங்களில், அப்படிப்பட்ட தருணங்கள் கிடைக்கும் போது வரும். இந்த வகைச் சிரிப்பு தான், நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது. இந்த வகைச் சிரிப்பு வரவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் போது,  நாமும் நம்மையறியாமல் மனம் விட்டுச் சிரிப்போம். மனம் விட்டுச் சிரிப்பதனால் நோய் கூட தீரும் என்று சொல்வார்கள்.

சிரிப்பு - நம் வாழ்வில் முக்கியமான ஒன்று.

இன்று எதார்த்தமாகத் தான் சிரிப்பு என்ற தலைப்பை எடுத்தேன். ஆனால், இன்று 'திருக்குடும்பத்திருநாள்'. அதாவது, கிறிஸ்துமஸ் முடிந்த முதல் ஞாயிற்றை திருக்குடும்பத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான குடும்பங்களில் தன் அம்மாவிடமோ, சகோதரனிடமோ சண்டையிட்டு பேசாமல் இருப்போம். ஆனால், வெளியில் நண்பர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ சகஜமாகப் பேசிச் சிரிப்போம். அவர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம். அவர்களுடன் செலவிடும் நேரத்தை, நம் குடும்பத்தினருடன் செலவிட்டால் அவர்களும் நம் நண்பர்கள் தான்.

இந்தத் திருக்குடும்பத் திருநாளில், நம் குடும்பங்களுடன் சிறிது நேரமாவது செலவிடுவோம்.

அவர்கள் மனம் விட்டுச் சிரிக்க நாமும் ஒரு காரணமாய் இருப்போம்.

நாம் கடைசியாக மனம் விட்டுச் சிரித்த தருணத்தை எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

நாமும் மனம் விட்டுச் சிரித்து, மற்றவர்களும் மனம் விட்டுச் சிரிக்க காரணமாவோம்.

இனிய வணக்கங்களுடன்.
இனியா.

கருத்துகள் இல்லை: