செவ்வாய், 29 டிசம்பர், 2015

திறமைகள்...

சில சமயங்களில், நம் திறமைகளின் மீது, நமக்கே சந்தேகம் வந்து விடும் அளவிற்குச் சிலர்  நம்மை நடத்துவர். நமக்கு ஆயிரம் திறமைகள் இருக்கலாம். ஆனால், அவற்றில் எவை சரியான சமயத்தில்,  சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபர்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே, அதன் மதிப்பு அமைகிறது.

ஒருவருக்குப் பாடும் திறமை இருக்கலாம். ஆனால், அதை உற்சாகப்படுத்துவதற்கு ஆள் இல்லாமல் இருப்பதாலும், ஒருசில காரணங்களாலும் அவர் திறமை மறைக்கப்பட்டிருக்கும்.

இப்படிஒவ்வொரு திறமையும், ஒவ்வொரு இடத்தில் மறைக்கப்படுகிறது.

ஒரு மாணவனின் திறமை ஆசிரியருக்குத் தெரியும்...

ஒரு மகனின், மகளின் திறமை தாய்க்குத் தெரியும்...

ஒரு சகோதரனின் திறமை சகோதரிக்குத் தெரியும்...

ஒரு நண்பனின் திறமை அவன் நண்பனுக்குத் தெரியும்..

திறமை இல்லாத மனிதன் உலகில் இல்லை. ஆனால், அவன் திறமையை அவன் அறிந்து கொள்வது இல்லை. அதனை அவன் அறிந்தாலும், ஊக்கப்படுத்த ஆட்கள் இருப்பதில்லை.

நாம் ஒரு தவறு செய்தால், அதனைச் சுட்டிக் காட்டத் துடிக்கும் இந்த உலகம், ஒரு நன்மை செய்தால், அதைத் தாமதமாகத் தான் ஏற்றுக் கொள்ளும்.
'நான் இந்த உலகில் யாரையும் Impress(தன்னைப் பற்றி மற்றவர் நினைக்கச் செய்வது) செய்வதற்காகப் படைக்கப்படவில்லை. என் வாழ்க்கையை நான் வாழ படைக்கப்பட்டிருக்கிறேன்' என்று, என் நண்பர் கூறுவார்.

ஆம். நாம் யாருடைய வாழ்க்கையையும் வாழப் படைக்கப்படவில்லை. நம் வாழ்க்கையை, நாம் இனிதே வாழ வேண்டும். அதே வேளையில், நமக்குள் இருக்கும் நம் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை நல்ல முறையில் உபயோகப்படுத்துவதும் நம் கடமை.

புதிய ஆண்டின் பிறப்பிற்காய் காத்துக் கொண்டிருக்கும் நாம்... ஒரு அரை மணி நேரம் நமக்காக, நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள பயன்படுத்துவோம்.

ஒரு பேப்பர், பேனாவுடன் இன்று இரவு தனிமையில் அமருங்கள்.

உங்களிடம் இருக்கும் திறமைகளை வரிசைப்படுத்துங்கள்.

அவற்றில் எத்தனை திறமைகள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன?

எத்தனை மறைக்கப்பட்டிருக்கின்றன?

அவற்றை வெளிக்கொணர்வதற்கு என்ன முயற்சி எடுக்கப் போகிறீர்கள்?

உங்கள் திறமைகள் மட்டும் அல்ல. எங்கெல்லாம் திறமைகள் வெளிப்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிறிது ஊக்கம் கொடுங்கள். அந்தத் திறமையே அவர்களுக்கு மாபெரும் சக்தியாக மாறும்.

மற்றவர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். 'நான் ஏன் அவனிடம் அனாவசியமாகப் பேசவேண்டும். என் மனதில் உள்ளதைச் சொல்வதற்கு அவன் யார்?'என்றெல்லாம் வீண் பிடிவாதக் குணத்தோடு இல்லாமல், அனைவரிடம் அன்புடன் பழகுவோம்.

மற்றவரின் திறமையையும் மதிப்போம்.

நம் திறமையையும் வெளிப்படுத்துவோம்.

இனி வரும் காலம் நமதாகட்டும்.

இனிய காலை வணக்கங்களுடன்.
இனியா.

1 கருத்து:

naga சொன்னது…

M s Improve our creativity