புதன், 2 டிசம்பர், 2015

புதுமை – 2


இன்று காலையில் இருந்து மனதில் ஏகப்பட்டஎண்ணங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கவலைகள். வருடத்தின் கடைசி மாதமும்ஆரம்பித்து விட்டது. இந்த மாதம் எப்படி இருக்கப் போகிறதோ என்று, இன்று முழுவதும் எண்ணிக் கொண்டே இருந்தேன். நேற்று இரவு, ஒரு மலையாளப் படம் பார்த்தேன். இந்தப் படத்தில், பேஸ்புக்கில் பழகிய ஒரு பையனுக்காக, கதாநாயகி காத்திருப்பது போலும், ஆனால் அந்தப் பையன் ஒரு வருடத்திற்கு முன்பே இறந்து விட்டதாகவும், அவனது கணக்கை வேறொருவர் உபயோகித்து, அவளிடம் இருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பணம் பறிப்பதாகவும், அதை ஒருவன் கண்டுபிடிப்பதாகவும்... என்று கதை ஓடும். இந்தப் படத்தில் இருந்து நான் புரிந்து கொண்ட ஒரு விசயம்..
'நம் கண்ணுக்குத் தெரியாத, ஏதோ ஒரு விசயத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்போம்.ஆனால், நம் அருகிலேயே, நம்மை அனுதினமும் அன்பு செய்து கொண்டிருப்பவரைக் கண்டு கொள்ளமாட்டோம்'.

எனக்கென யாரும் இல்லை என்று ஏங்கிய நாட்கள் உண்டு.

நான் யாருக்காவும் இல்லை என்று முடிவெடுத்த நாட்களும் உண்டு.

ஆனால், உண்மையில் நமக்காக நம்மைப் பற்றி நினைக்க யாராவது இருக்கிறார்கள் என்று எண்ணும் போது, மனதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நாம் பழகிய வருடங்கள் முக்கியமில்லை.

பழகி எத்தனை நாட்களாக இருந்தாலும், நம் பழக்கம் எப்படி இருக்கிறது என்பதுதான் யோசிக்க வேண்டியது.

நாம் நண்பர்களாகி ஐந்து வருடங்கள் கடந்து விட்டன என்பதில் இல்லை பெருமை.

'இந்த ஐந்து வருடங்களில், நான் உனக்கு எப்படி இருந்தேன்?

உன் சுக துக்கங்களில் பங்கெடுத்தேனா?

உன் துயரங்களில் நான் ஆறுதலாக இருந்தேனா?

உன் சுமைகளைச் சுமந்தேனா?

உன் துணையாக இருந்தேனா?'

என்பதில் தான் இருக்கிறது.

மன்னிக்கவும். தலைப்பை மறந்துவிட்டேன். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.

இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்களைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா?

இன்றைய அற்புதம் : ஒரு தலைவரின் பணியாளைக் குணமாக்குவது
ஒரு ஊரில் ஒரு தலைவர் இருந்தார்(உதாரணமாக,நம் ஊர் கவுன்சிலர் போல).அவரிடம், சில வேலையாட்கள் பணிபுரிகின்றனர். ஒரு பணியாளன் நோயுற்று, சாகும் நிலையில் இருந்தார். இந்தத் தலைவர், அந்தப் பணியாளன் மீது அதிக மதிப்பு வைத்திருந்தார். அதனால், அவன் மீது பரிவு கொண்டு, இயேசுவை அழைத்து வர, தம் மற்ற பணியாளர்களை இயேசுவிடம் அனுப்பினார்.  'ஐயா! நீர் எங்கள் வீட்டிற்கு வரத் தகுதியற்றவன். ஆனால் நீர் ஒரு வார்த்தை சொன்னால்,என் ஊழியன் குணம் பெறுவான்'என்று சொல்லும்படிச் சொல்லி அனுப்பியிருந்தார், அந்தத் தலைவர். அவர்களும் அவ்வாறே கூறினார்கள். இதைக் கேட்ட இயேசு, மிகவும் மகிழ்வுற்று 'தன் பணியாளருக்காக இவ்வளவு செய்கிறாரே'என்று இவரைக் குறித்து வியப்புற்றார். அந்நேரமே, அந்தப் பணியாளின் நோய் நீங்கி, அவர் முழு சுகம் பெற்றார்.

தலைவர் என்பவர் தொண்டனாக இருக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பார்த்தோம் அல்லவா?

இவரும் நல்ல தலைவராக இருந்திருக்கிறார்.

இன்றைய தலைவர்கள், தங்கள் சுயநலனையும், தன் குடும்பத்தை மட்டுமே கண்ணோக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மத்தியில், மக்களை வழிநடத்தும் ஒரு நல்ல தலைவரைத் தரும்படி இறைவனிடம் வேண்டுவோம்.

காலை வணக்கம்.

அன்புடன் இனியாள்

கருத்துகள் இல்லை: