திங்கள், 21 டிசம்பர், 2015

புதுமைகள் 15, 16

இன்றைய அற்புதங்கள் : நீர்க்கோவை நோயாளி குணமடைதல்(லூக்கா 14:1-6)மற்றும் தொழுநோயாளர்களின் நோய் நீங்குதல்(லூக்கா 17:11-19)

ஓய்வு நாள் ஒன்றில் இயேசு, பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கே, நீர்க்கோவை நோயுள்ள ஒருவர், அவர் முன் இருந்தார். இயேசு, அவரது கையைப் பிடித்து, அவரை நலமாக்கி அனுப்பி விட்டார்.

இயேசு, எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்த போது, கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்த பொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர் கொண்டுவந்து, தூரத்தில் நின்று கொண்டே, 'ஐயா! இயேசுவே எங்களுக்கு இரங்கும்', என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர், அவர்களைப் பார்த்து, 'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது, அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர், தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு, உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவருடைய காலில் முகங்கப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, 'பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ, அன்னியராகிய உம்மைத் தவிர, வேறு எவரும் திரும்பி வரக் காணோமே!'என்றார். பின்பு அவரிடம் 'எழுந்து செல்லும் உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது' என்றார்.

முதல் அற்புதத்தில் இயேசு, ஒரு நோயாளியைப் பார்த்து அவரின் பிணி தீர்க்கிறார்.

இரண்டாவது அற்புதத்தில் இயேசுவிடம் பத்துப் பேர் வந்து, தங்களின் நோய் நீங்குமாறு வேண்டிக் கொள்கின்றனர். அனைவரின் நோயும் நீங்கிற்று. ஆனால், சமாரியரான ஒருவர் மட்டுமே இயேசுவிடம் வருகிறார். அதாவது, நம் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்.. ஒன்பது கிறிஸ்தவர்களும், ஒரு இந்துவும் இயேசுவிடம் வேண்டுகின்றனர். அனைவரின் நோயும் நீங்குகிறது. ஆனால், இந்துவாகிய அந்த ஒருவர் மட்டுமே, இயேசுவிடம் திரும்பி வந்து தம் நன்றியைத் தெரிவிக்கிறார்.

பலநேரங்களில், கிறிஸ்தவர்களாகிய நாம் இந்துக்கள் கொண்டிருக்கும் அளவிற்குக் கூட இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதில்லை.

இயேசுவின் மீது நம் முழு நம்பிக்கையையும் வைக்கும் மனம் வேண்டுவோம்..
இறைவன் நமக்கு எல்லா வளங்களையும் அருள்வாராக!

அன்புடன்
இனியாள்.

கருத்துகள் இல்லை: