'உன் சகோதரனோடு ஏதாவது மனத்தாங்கல் இருந்தால் அவனுடன் முதலில் சமரசம் செய்து விட்டு, பின் உன் காணிக்கையைச் செலுத்து' என்று பைபிளில் ஒரு வசனம் இருக்கும். திருப்பலியில் பங்கு கொள்ளும் பொழுதெல்லாம், என் மனதில் தோன்றும் ஒரு எண்ணம் 'நான் யாருடனாவது சண்டையிட்டுள்ளேனா என்று யோசித்துப் பார்ப்பேன்'. முக்கியமாக, என் தங்கையிடம் அல்லது என் மம்மியிடம் சண்டையிட்டிருந்தால், அவர்களுடன் சமாதானம் செய்த பின்பு தான் எனக்கு ஒரு திருப்தி இருக்கும்.
இன்று காலை டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். 'உங்களுக்கு யாருடனாவது மனத்தாங்கல் இருந்தால் பின் எப்படி உங்கள் வேண்டுதல்களை இறைவன் ஏற்றுக் கொள்வார். உங்கள் அருகில் இருப்பவரையே உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் எப்படி இறைவனை ஏற்றுக் கொள்வீர்கள். அவர் எப்படி நீங்கள் கேட்பதைச் செய்வார் என்று நினைக்கிறீர்கள்?' என்று தொடர்ந்தார்.
எனக்கு சிறு வயதில் இருந்து யாருடனெல்லாம் மனத்தாங்கல் இருக்கிறதென்று யோசித்துப் பார்த்தேன்.
நான் ஒன்றாம் வகுப்பு படித்த பொழுது, என்னுடன் பயின்ற, என் அண்டை வீட்டுத் தோழி கீர்த்தனா. அவள் வீடு மாறிச் செல்லும் போது என்னிடம் சொல்லாமலே சென்றுவிட்டாள். அவள் மீது சிறு மனத்தாங்கல். ஞாபகம் தெரிந்த வயதில் நான் பிடித்த, முதல் தோழி அவள். அவள் என்னிடம் சொல்லாமல் போனது வருத்தமாக இருந்தது.
பின் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடன் பி.நித்யா என்.நித்யா என இருவர் படித்தனர். இருவருமே என் பெஞ்ச் தான். ஆனால் எங்கள் மூவருக்கும் அடிக்கடி சண்டை வரும். என்.நித்யா என்னைப் பொறுத்துக் கொள்வாள். பி.நித்யாவும் நானும் பேசாமலே பாதி நாட்களைக் கடத்திவிட்டேன். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் வரும் சமயம்.. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் என்.நித்யாவிடம் சண்டை போட்டு, படிப்பு முடியும் வரை அவளுடன் பேசாமலே இருந்துவிட்டேன். அந்த இரண்டு நித்யாக்களிடமும் பேசி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்றுத் தோன்றியது.
காரணமே உணர்ந்து கொள்ளாமல், என் மீது அன்பு வைத்திருந்த ஒரு அம்மாவிடம் கோபப்பட்டு, இன்று வரை பேசாமல் மௌனமாய் இருக்கிறேன். இவரை நினைவு கூறும் பொழுதெல்லாம், நான் தவறு செய்துவிட்டதாய்த் தோன்றும். ஒருவேளை, நான் என் மனதில் உள்ளதை மறைக்காமல் பேசியிருந்தால் சரியான தீர்வு கிடைத்திருக்கும் என்று தோன்றியது.
என் தோழி, என்னைப் புரிந்து கொள்ளாமல், சட்டென்று 'நான் சொன்ன ஒரு வார்த்தைக்காகவா அல்லது அவளுக்கு வேறு நிறைய தோழிகள் கிடைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை!' இன்று வரை என்னுடன் பேசாமல் இருக்கிறாள். ஆனால், அவள் பிரிவு எனக்கு மிகுந்த வருத்தத்தையேத் தருகிறது. அது அவளுக்குப் புரியுமா என்று தெரியவில்லை!
மேற்சொன்னவர்களிடம், எனக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்...
கீர்த்தனாவிடம் ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய்? நீ இல்லாமல் நான் மூன்றாம் வகுப்பு வரைத் தனியாய் தான் இருந்தேன் என்று கூறுவேன்.
என்.நித்யா பி.நித்யா இருவரிடமும் மனம் விட்டுப் பேசுவேன்.
என் அம்மாவிடம் என் சுகங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்வேன் முன்புபோல...
என் தோழியின் அருமையை உணர்வேன். அவளிடம் சண்டை போட மாட்டேன்.
இவை எல்லாம் நிறைவேறினால்.. கண்டிப்பாக என் மனதில், ஒரு திருப்தி கிடைக்கும் எனத் தோன்றுகிறது. என் அருகில் உள்ளவர்களிடம் முதலில் நான் மனத்தாங்கல் இல்லாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். பின் இறைவன் நம் தேவைகளைத் தானே முன் வந்து செய்வார்.
உங்களுக்கும் யாருடனாவது மனத்தாங்கல் இருந்தால் சமரசம் செய்து விட்டு உறங்கச் செல்லுங்கள்.
நிம்மதியான தூக்கம் உங்களுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக