வெள்ளி, 11 டிசம்பர், 2015

புதுமை – 11

இன்றைய அற்புதம் : ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
இயேசு, திரளான மக்கள் கூட்டம் தன்னைப் பின் தொடர்வதைப் பார்த்து, அவர்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும், பட்டிகளுக்கும் சென்று தங்கவும், உணவு வாங்கிக் கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்'என்றனர்.

இயேசு அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்றார். அவர்கள் 'எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால் தான் முடியும்' என்றார்கள். ஏனெனில், ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு, அவருடைய சீடர்களை நோக்கி,'இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்' என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

இயேசு அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசி கூறி, பிட்டு மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து அவற்றை பலுகிப் பெருகும் படிச் செய்து, ஆயிரக்கணக்கானவர்களுக்கு உண்ணக் கொடுத்ததே இயேசு செய்த அற்புதம்.

இந்த அற்புதத்தைப் போல், நம் ஆசீர்வாதங்களையும் இயேசு பலுகச் செய்வார்.
இன்று, என் மனம் கவர்ந்த கவி 'பாரதி'யின் பிறந்தநாள். அவர் எழுதிய ஒவ்வொரு வரியும், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவே இருக்கின்றன. சமீபத்தில் தான் அவருடைய வாழ்க்கைப் படத்தைப் பார்த்து,அவர் மீது ஆர்வம் கொண்டேன்.

இந்த நாளில், அவரைச் சிறப்பாக நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.
அவருடைய 'நின்னைச் சரணடைந்தேன்...கண்ணம்மா' பாடல், தனிமையில் கேட்கும் போது, கண்களில் நீரை வரவழைக்கும்.

மகாகவியைச் சிறப்பாக நினைக்கும் இந்த நன்னாளில், அவரைப் போல் நிறைய கவிகள் நம்மிலும் மலர முயற்சி செய்வோம்.

நின்னைச் சரணடைந்தேன் பாடல் இதோ...

Ninnai Saranadanthen

இனிய காலை வணக்கம்
இனியாள்.

கருத்துகள் இல்லை: