நான் ஆறாம் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எனக்கொரு ஆசை இருந்தது. நான் பார்க்கும் யாவரிடமும், அவர்கள் பிறந்த நாளைக் கேட்டு, என் வீட்டுப்பாட நோட்டின் கடைசி பக்கத்தில் குறித்துக் கொள்வேன். அவர்கள் பிறந்த நாளன்று அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அவர்களை வாழ்த்த வேண்டுமென்று நினைப்பேன்.
பேருந்தில் சென்றாலும், நடந்து சென்றாலும், பள்ளிக்குச் சென்றாலும், தெருவில் நடந்தாலும் பார்ப்பவர்களை எல்லாம் நண்பர்களாக்கிக் கொள்வேன்...
அந்த நாட்களை எண்ணிப் பார்க்கும் போது, இந்த நாட்களில் கொண்டாடப்படும் பிறந்த நாள் விழாக்கள் மிகவும் வேடிக்கையாக உள்ளன. முகநூலில் நம் பிறந்த நாளை முன்னரே சேகரித்து வைத்துக் கொள்வது.... நம் பிறந்த நாளன்று எத்தனை பேர் நமக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள் என்று பார்ப்பது...
வாட்ஸ்ஆப்பில், குரூப்பில் எத்தனை பேர் நம் படத்தை வைக்கிறார்கள், எத்தனை பேர் நமக்கு அதன் மூலம் வாழ்த்துச் சொல்கிறார்கள் என்று பார்ப்பது... இதைப் பார்ப்பதிலேயே அந்த நாள் ஓடிவிடும்.
சிறு வயதில் பதினைந்து ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை... தோழர்களின் பிறந்த நாள் வரப்போகிறது என்றால், ஒரு வாரத்திற்கு முன்னரே அப்பாவிடம் சொல்லி வைத்துவிடுவாேம் 'எனக்கு 15 ரூபாய் வேண்டுமென்று.'. அவன் பிறந்த நாளுக்கு முந்தைய நாள் கடைக்குச் சென்று அழகிய பொம்மையோ, ஒரு பேனாவோ வாங்கி, அதை அழகாகப் பேக் செய்து அடுத்த நாள் அவனைப் பார்த்துக்கொடுப்பதிலும்.... அவன் முகத்தில் தோன்றும் அந்தச் சிறு புன்னகையைக் காண்பதிலும் அலாதி இன்பம் இருந்தது.
காலங்கள் மாறலாம்... கலாச்சாரம் மாறக் கூடாது.
நானும் இன்று முதல் என் நண்பர்களின் பிறந்த நாள்களைச் சேகரிக்கப் போகிறேன்... பெரிய அளவில் செய்ய முடியவில்லை என்றாலும்... ஏதோ என்னால் முடிந்ததை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து அவர்களைச் சந்தோசப்படுத்துவேன்.
இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள்!
அவரைப் போல் வீரத்தில் சிறந்து விளங்க இறைவனை வேண்டுவோம்...
உள்ளதை உள்ளதென்றும்... இல்லதை இல்லை என்றும் கூறி நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்!
நலமுடன் வாழ்வோம்!
இறைவன் அருள் நம்மோடு!
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக