சனி, 14 ஜனவரி, 2017

பொங்கலோ பொங்கல்...

எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து, எங்கள் வீட்டில் பொங்கல் கொண்டாடியது கிடையாது. பக்கத்து வீடுகளில் பொங்கல் வைத்துத் தருவார்கள். அதைத் தான் பெற்று உண்போம்.. அருகில் தெருக்களில் நடக்கும் சில போட்டிகளைக் காணச் செல்வோம்..

இன்றும் அதைப் போல் ஒரு அனுபவம் தாராவால் கிடைத்தது... தாராவிற்கு பொங்கலன்று நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் காட்ட வேண்டும் என்பதற்காக, எங்கள் துணை முதல்வருடன் சேர்ந்து நானும் சென்றிருந்தேன்..

ஒரு இனிய அனுபவம்.. சில கசப்பான சம்பவங்களும் நடந்தன.

'பொங்கல்' ஒரு புனிதமான, தமிழர் பண்பாட்டை உணர்த்தும் விழா. அந்தப் புனிதத்தைக் கெடுக்கும் வகையில், ஒரு சிலர் நடந்து கொள்வது மற்றவர்களுக்கு வருத்தத்தை வருவிக்கிறது.

முதலில் ஒரு தெருவிற்குச் சென்றோம். கபடிப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அண்ணல் அம்பேத்கார் பெயரில் ஒரு மன்றம் வைத்து, அந்தத் தெருவில் இருந்த இளைஞர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள் போல. அதைப் பார்க்க ஆவலாய் சென்றோம். தாராவைப் பார்த்ததும் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் விளையாட்டை விட்டுவிட்டு அவளுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமென்று அவளருகில் மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். எங்களுக்கே மிகவும் சங்கடமாகிவிட்டது. இதில், குடித்து விட்டு இளைஞர்கள் 'அவள் தோளில் கைபோட்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறோம்' என்று வேண்டுகோள் வேறு... எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த இளைய சமுதாயம் என்று எனக்கு ஒன்றும் விளங்கவில்லை!

ஒருபுறம் மத்திய அரசின் கொடுமையான செயல்கள்.. மறுபுறம் தமிழக அரசின் செயலற்ற நிலை.. இதில் இப்படிப்பட்ட இளைஞர்கள்... நாடு 2025 க்குள் கண்டிப்பாக வல்லரசாகிவிடும்!

அந்த இடத்தைவிட்டு ஒதுங்கி, மேல்தட்டு மக்கள் வசிக்கக் கூடிய இடங்களில் கொண்டாடிய பொங்கலைக் காணச் சென்றோம்.
அங்கும் தாராவைக் கவனித்தார்கள். அவளை வரவேற்றார்கள்.. ஆனால், முந்தையதைப் போன்றது அல்ல... இதனால் தான்.. 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!' என்ற சொல்லாடல் உண்டு போல.

அங்கு அழகாக, வரிசைப் படி ஒவ்வொரு போட்டியாக நடத்தினார்கள்.. பரிசுகள் கொடுத்தார்கள்.. எல்லாரையும் வரவேற்றார்கள்.. இனிப்புகள் வழங்கினார்கள்..

எனக்க ஒருபுறம் கவலை வேறு... மேல்தட்டு மக்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இவ்வளவு அழகாக ஒரு விழாவைக் கொண்டாடுகிறார்கள்... ஆனால், கீழ்த்தட்டு மக்களின் நிலை கவனிக்கும் பட்சத்தில் கூட இல்லையே!!! எப்போது இந்த சமத்துவம்,சகோதரத்துவம், எல்லோரையும் ஒன்றாய் மதிக்கும் நிலை இந்த நாட்டில் வரும் என்று எனக்குத் தெரியவில்லை!

இவை எல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, என் நண்பன் ஒருவனுக்கு 'அவன் ஜியோ சிம்மில், ஒழுங்காக இன்டெர்நெட் கனெக்ட் ஆகவில்லை' என்ற கவலை....

இப்படிப் பலவிதப் பிரச்சனைகளை நோக்கிப் பார்த்து விட்டு, கடைசியாக என் நண்பர்களுக்குப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் கூற மறந்து விட்டேன்!!!

இது என் கவலை!!!

கவலையற்ற நாட்டிற்காக தினமும் இறைவனிடம் வேண்டுவோம். அவர் அருள் நம்மோடு!

இனியா.

கருத்துகள் இல்லை: