இன்று, நான் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் வீடுகளை விசிட் செய்வதற்காக, சின்னமனூர் வரை சென்றிருந்தேன் எங்கள் பள்ளித் துணை முதல்வர் மற்றும் இன்னொரு ஆசிரியையுடன்.. இதுதான் எனக்கு முதல் முறை என்பதால் அனைத்து விசயங்களும் எனக்குப் புதிதாகப்பட்டன... இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் எனக்கு எவ்வளவு முக்கியம்... இந்நாளில் நான் என்ன கற்கிறேன் என்று அறிவதிலும், உறவுகளைப் பெருக்கிக் கொள்வதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறேன்!
இறைவனுக்கு நன்றி!
பள்ளியில் ஆரம்பித்த எங்கள் பேச்சு, சின்னமனூர் சென்று திரும்பும் வரை ஓயவில்லை... நிறைய விசயங்கள் பேசினோம். நிறைய விசயங்களை நான் கேட்டறிந்தேன். மூன்று குழந்தைகளின் வீட்டிற்குச் சென்று வந்தோம். மூன்று வீடுகளிலும் இருந்த ஒரு ஒற்றுமை என்னவென்றால் 'நல்ல உபசரிப்பு'. இது தமிழருக்கே உரிய பண்பாடு என்று நினைக்கிறேன் நான்...
ஒவ்வொரு வீட்டிலும் இருபது நிமிடங்கள் என்று மொத்தம் அறுபது நிமிடங்கள்... பெற்றோர்கள் மிகவும் அருமையாகப் பேசினார்கள்.. குழந்தைகளும் தான்... கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் கூறினார்கள்... அதிலும் கடைசியாக ஒரு வீட்டிற்குச் சென்றோம்... அந்தக் குழந்தையின் பெயர் அனிருதன்... வீட்டிற்கு வெளியிலே, அம்மா மற்றும் தன் தங்கையுடன் நின்று, எங்களை வரவேற்றான்.. உள்ளே நுழைந்ததும், என்னுடன் வந்த ஆசிரியர் அவனை அழைத்துப் பேசினார்... அவனும் அழகாகப் பேசி விட்டு அருகிலேயே நின்றிருந்தான்.. நான் என் அருகில் அழைத்து, அவனை உட்கார வைத்தேன்.. பிறகு அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்... அவனும் அழகாக பதிலளித்துக் கொண்டிருந்தான்..
எங்கள் பள்ளியில் ஆண்டுவிழா வர இருப்பதால், அனைத்துக் குழந்தைகளும் டான்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவனும் எப்படிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று கேட்டேன்... எங்கள் டான்ஸ் ஆசிரியர் நன்றாகவே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றான். 'எங்கே ஆடிக் காட்டு.... பார்க்கலாம்' என்று தான் கேட்டேன்... உடனே எழுந்து ஆட ஆரம்பித்தான்..
அழகாக ஆடினான்... அழகாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. பொதுவாகப் பிள்ளைகளிடம் சொன்னால், சிறிது நேரம் கூச்சப்பட்டுவிட்டு, பின் வளைந்து நெளிந்து விட்டு, அதன் பின் ஆடுவார்கள்.. அவன், நான் சொன்னதும் ஆடியது ஆச்சரியமாக இருந்தது. ஆடிய பிறகும், என் அருகிலேயே அமர்ந்து, நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறிக் கொண்டிருந்தான்..
குழந்தைப் பருவம்.... ஒன்றும் அறியாத வயது... நாம் எதைச் சொன்னாலும் செய்யும் வயது... மனதில் கள்ளம் கபடம் இல்லாமல்... அனைத்தையும் ஒன்றாய் பாவிக்கம் மனம்!
இத்தகைய மனத்தை எங்களுக்கும் அருளும் இறைவா!
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக