இன்று எங்கள் ஆலயத்திற்கு, மாலைத் திருப்பலிக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல் இல்லாமல் இன்று ஒரு சிறப்பு என்னவென்றால் 'புனித ஆக்னஸ்' திருநாள் இன்று... அதனால்... இன்று எங்கள் இயக்கத்தில் உள்ள அனைத்து இளம் பெண்களும், மாலைத் திருப்பலிக்கு வர வேண்டுமென்று முடிவெடுத்திருந்தோம். அதன்படி எல்லோரும் சென்றிருந்தோம். திருப்பலியில் முன்னுரை, பாடல், வாசகம், மன்றாட்டு என எல்லாவற்றையும் முன்னெடுத்து செய்தோம்.
இன்றைய மறையுரையை, எங்கள் உதவிப் பங்குத் தந்தை, எப்போதும் போல ஒரு கதையுடன் ஆரம்பித்தார். அந்தக் கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே கண்டிப்பாக இதை என் நண்பர்களிடம் பகிர வேண்டுமென்று நினைத்தேன்.
அழகிய குடும்பம் ஒன்று. அம்மா தவறியதால், தன் மகளை ஆசையாக, அந்தத் தந்தை வளர்த்து வந்தார். தினமும் இரவு தூங்கச் செல்லும் போது, மகளைத் தன் மடியில் படுக்க வைத்து, அவளுக்குக் கதைகள் கூறுவது வழக்கம். இது தினமும் நடக்கும். கதை சொன்னால் தான் மகள் தூங்குவாள். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, தந்தைக்குக் கதை சொல்வதே வெறுத்துவிட்டது.
அதனால் ஒரு கேசட்டில் பல கதைகளை அவர் பதிவு செய்து, அந்தக் கேசட்டை மகளிடம் கொடுத்து 'நீ தூங்கச் செல்வதற்கு முன் இதைப் போட்டுக் கேட்டுவிட்டுத் தூங்கு' என்று கூறி, அதை எப்படிப் போடுவது என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.
மகளும் அடுத்த நாள் முதல் அந்தக் கேசட்டில் தந்தை பதிவு செய்து வைத்திருந்து கதைகளைக் கேட்டுத் தூங்க ஆரம்பித்தது. தந்தையும் நிம்மதியாகத் தூங்கினார்.
இரண்டு நாட்கள் கழிந்தன. மகள் தந்தையிடம் மறுபடியும் வந்து 'அப்பா எனக்கு இந்தக் கேசட்டில் நீங்கள் கூறும் கதையைக் கேட்கப் பிடிக்கவில்லை... உங்கள் மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்கும் போது தான் எனக்கு நிம்மதியாகத் தூக்கம் வருகிறது' என்றாள்.
ஞானம் பெற்றார் தந்தை.
எப்போது நமக்கும், நம் உறவுகளுக்கும் இடையில் ஏதாவது ஒன்று நுழைகிறதோ, அது நிம்மதியாக நம்மைத் தூங்கக் கூட விடுவதில்லை.
பெரும்பாலும் இந்தக் காலக்கட்டத்தில் சிறுநுட்பக் கருவிகள் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். அது தான் நம்மை ஆள்கிறது.
நமக்கு பாட்டு பாடிக் காட்டுகிறது.
நமக்கு கதை சொல்கிறது.
என அடுக்கிக் கொண்டே போகலாம்.
நம் உறவு நிலைகளில்...
நாம் மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல்...
இது போன்று, நம் ஞாபகமாக ஏதாவது ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து, அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளக் சொல்லும்போது, அந்த இடத்தில் "வெறுமை" மட்டுமே மிஞ்சுகிறது.
அவர்களுக்கு நம் உடனிருப்புத் தேவைப்படலாம்... ஆனால், நாம் அதைப் புரிந்து கொள்ள மறந்து விடுகிறோம்.
மாறாக....
வாட்ஸ்ஆப்பில் மெஸ்ஸேஜ் செய்வது
ஸ்கைப்பில் பேசுவது
ஐ எம் ஓ வில் பேசுவது
வைபரில் ஸ்மைலிஸ் அனுப்பிக் கொள்வது
ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொள்வது
என்று நம் அன்பைச் சுருக்கிக் கொள்ள நினைக்கும் போது...
நம் அருகாமைக்காக...
ஒரு உள்ளம்...
அலைந்து கொண்டிருக்கிறது...
என்பதை
மறந்து விடுகிறோம்!!!
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக