தங்கத் தாரகை 'தாரா'...
இவளுடனான என் இரண்டு மணி நேர அனுபவம் தான், இன்று என் வலைப்பதிவில் பதிவிடப்பட வேண்டும் என்பது என் விருப்பம்...
தாரா நான் வேலை பார்க்கும் பள்ளியில், பயிற்சிக்காக, நியூசிலாந்தில் இருந்து வந்திருக்கும் ஒரு அழகுப் பதுமை... அவள் எங்கள் பள்ளிக்கு வந்து ஒரு மாதம் ஆகின்றது.. அவள் வந்த புதிதில் அவளுடன் பேசுவது சற்று சிரமமாகத் தான் இருந்தது... பிறகு அவளுடன் அனுதினமும் மதிய வேளைகளில் பேசிப் பேசி அவளுடைய உச்சரிப்புகளைப் புரிந்து கொண்டேன்...
தினமும் மதிய உணவு வேளைகளில் மட்டும் தான் அவளைச் சந்திப்பேன்... நான் கொண்டு சென்ற ஏதாவது ஒன்றைக் காட்டி அவளுக்கு வேண்டுமா என்று கேட்பேன்.. அவளுக்குப் பிடித்தால் எடுத்துக் கொள்வாள்.. இல்லை என்றால், வேண்டாம் என்று சொல்லி விடுவாள்... ஆங்கிலத்தில்....
அவளுக்கு மிகவும் பிடித்தது, உருளைக்கிழங்கில் செய்த அனைத்தும்...
இப்படியாக மதிய வேளைகளில் ஆரம்பித்த எங்கள் நட்பு... நான் ஏதாவது வகுப்பிற்குச் சென்றால், அவளும் என்னுடன் வர ஆசைப்படுவாள்.. நானும் அவளை அழைத்துச் செல்வேன்...
நான்கு நாட்களுக்கு முன்பு, அவளே என்னிடம் வந்து, அவள் குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள்... இன்னும் நிறைய பேசிக் கொண்டோம்.. இப்போது நல்ல நண்பர்களாகிவிட்டோம்...
விடுவோமா நாம்!!!
'நம்ம ஊருல இருக்குறவங்களவே விடுறது இல்லை... இதுல வெளிநாடு வேறு!' கலக்கு இனியா!
இன்று எதார்த்தமாக அவளுடன் பொங்கல் திருநாளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்... அப்போது உனக்கு சேலை கட்டப் பிடிக்குமா? என்று கேட்டேன்.. அவள் 'பிடிக்கும்.. ஆனால், கட்டியது கிடையாது!' என்றாள்.. சரி... என்னுடன் என் வீட்டிற்கு வா... உனக்கு என் புடவைகளில் ஒன்றைத் தருகிறேன்.... என்றேன்.. அவளும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டாள்...
இரவு ஏழு மணி.....
அவள் தங்கியிருந்த இடத்திற்கு ஆட்டோவில் சென்று இறங்கினேன்.. நான் அழைத்த மறு நொடியே ஃபோனை எடுத்து, இதோ வந்துவிட்டேன்.. என்றாள்.... ஒரு கைப்பை மற்றும் கேமிராவுடன் வெளியே வந்தாள்.. இருவரும் ஆட்டோவில் ஏறினோம்..
வழக்கம் போல்... முதலில் கோவிலுக்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு வெளியில் வந்தோம்.. நியூசிலாந்தில் இருப்பது போலவே இங்கும் அழகாக இருக்கின்றது, உங்கள் ஆலயம் என்றாள்.. ஆனால் அவள் எந்த மதத்தையும் சாராதவள்...
நேராக வீட்டிற்கு வந்தோம்.. அவளது எளிமை என்னைக் கவர்ந்து... காலணிகளை அழகாக வெளியில் கழட்டி எடுத்து வைத்து விட்டு, வீட்டிற்குள் வந்து நாற்காலியில் அமர்ந்தாள்... என் அறைக்கு அழைத்தேன்... அவளும் வந்தாள்.. என் வீட்டிற்கு அவளை அழைத்தது என்னவோ அவளுக்கு அழகான புடவையை உடுத்திப்பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான்.. எனது அலமாரியைக் காட்டினேன்.. என் சேலைகளைப் பார்த்துவிட்டு 'இவ்வளவு சேலைகள் வைத்திருக்கிறாயா?' என்று வாயைப் பிளந்தாள்...
இருவரும் சேர்ந்து சிரித்தோம்..
அவளிடம் சொன்னேன் 'உனக்கு எது பிடிக்கிறதோ எடுத்துக் கொள் என்று'... அவள் ஒரு ஆரஞ்சு நிற, அவளுக்கு எந்த விதத்திலும் பொருந்தாத ஒரு புடவையை எடுத்து... 'இது தான் வேணும்' என்றாள்.. இது உனக்கு நன்றாக இருக்காது.. உனக்கு அழகான புடவையை நானே தேர்ந்தெடுக்கிறேன் என்று சொல்லி, நானே கருஞ்சிவப்பு நிறப் புடவையை எடுத்து அவளுக்குக் கொடுத்தேன்.. அவளும் பிடித்திருக்கிறது என்றாள்..
மகிழ்ச்சி...
அந்தப் புடவைக்கு ஜோடியாக எல்லாம் வாங்க கடைக்குச் சென்றோம்.. அங்கு அவளுக்கு வளையல், பாசி, பொட்டு என எல்லாம் வாங்கினோம்.. அப்போது அவர்கள் ஊரில் உள்ள பில்லிங் சிஸ்டம் பற்றி விவரித்தாள்..
பின் வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் அவளுக்கு அணிவித்தோம்.. இந்த ஊரு மகாலட்சுமி.... இந்த நியூசிலாந்து மகாலட்சுமி முன் தோற்றுவிடும் போல் இருந்தது...
வளையல் மாட்டிக் கொண்டிருக்கும் போது என்னிடம் 'நீ எப்போது திருமணம் செய்து கொள்வாய்? என்று கேட்டாள்... விரும்பினால் 21 வயதிற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம்.. நான் இன்னும் முடிவெடுக்கவில்லை' என்றேன்...
அவள் சொன்னாள்... 'எங்கள் ஊரில் எந்த மதத்தையும் சாராதவருக்கு திருமணம் ஒரு பொருட்டல்ல.. அவர்கள் விரும்பினால் 45 வயதிலும் கூட திருமணம் செய்து கொள்ளலாம்... இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்' என்றாள்..
கொடுத்து வைத்தவர்கள்!!!
பிறகு எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள அனைவரையும் சந்திக்க அவளை அழைத்துச் சென்றேன்... அவளும் வந்தாள்.. யார் அவளைப் பாசமாக அழைத்தாலும், அவர்கள் வீட்டிற்குள் செல்வது, அவர்கள் கொடுப்பதை வாங்கி உண்பது, அவர்களுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொள்வது என்று அவளிடம் அனைத்தையும் இரசித்தேன்...
ஒவ்வொருவர் வீட்டிற்குள்ளும் அவள் பாதத் தடங்கள் பதிந்துவிட்டன...
பின் என் தோழியின் வீட்டிற்கு இரவு உணவிற்காகச் சென்றோம்..
அவளுக்குப் பிடித்தது சப்பாத்தி மட்டும் தான்.. ஆகையால் என் தோழியை அதையே செய்யச் சொல்லி இருந்தேன்.. அவளும் தாராவிற்குப் பிடிப்பது போலவே செய்து வைத்திருந்தாள்.. மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டாள்.. பின் அவள் வீட்டிலிருந்து தாராவின் இருப்பிடம் நோக்கி ஆட்டோவில் நகர்ந்தோம்...
பேசிக் கொண்டே சென்றோம்...
அப்போது அவள் சொன்னாள் 'நான் நியூசிலாந்தில் இருக்கும் போது, இந்தியா நன்றாக இருக்காது என்று என் நண்பர்கள் கூறினார்கள்... ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு எனக்கு இந்தியாவை மிகவும் பிடித்துவிட்டது.. நான் இங்கு இருக்க ஆசைப்படுகிறேன்.. இந்த மக்கள் மிகவும் பாசமாய் பழகுகிறார்கள்!' என்றாள்..
இந்தியன் என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமையாக இருக்கின்றது.
இன்று அவளுடனான இந்த இரண்டு மணி நேரங்கள் எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்தது...
முக்கியமாக...
வீட்டிற்குள் அடைந்து கிடப்பதாலோ.. ஏதோ ஒரு விசயத்தில் மட்டும் நம் கவனத்தைச் செலுத்துவதாலோ நம்மால் ஒன்றும் சாதித்துவிட முடியாது..
வெளி உலகிற்கு வருவோம்.... மக்களுடன் பழகுவோம்... மகிழ்ச்சியைப் பகிர்வோம்!
இனி வரும் நாட்கள் இனிதாகட்டும்!
இனிய இரவு வணக்கங்களுடன்...
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக