செவ்வாய், 31 ஜனவரி, 2017

இனிய நல் வாழ்த்துகள்!

இன்று 27 ஆம் ஆண்டு

தங்கள்

திருமண நாள் நிறைவு தினத்தைக்

கொண்டாடும்

என் இனிய

பெற்றோர்களுக்கு வாழ்த்துகள்!

தங்களை உருக்கி

எங்களுக்கு

ஒளி கொடுக்கும் நீங்களும்

ஒரு புனிதர் தான்!

உங்கள் திருமண வாழ்வில்

சந்தித்த

கஷ்டங்கள்

நஷ்டங்கள்

இழப்புகள்

போராட்டங்கள்

இவைகளுக்கு மத்தியில்

எங்களையும்

வார்த்தெடுத்து இன்று

இந்த நிலைமையில்

எங்களை

நிற்க வைத்த

என் அன்புப் பெற்றோர்

இன்றுபோல்

என்றும்

நலமுடன்

வாழ வாழ்த்துகள்!

அன்புடன்
இனியா.

திங்கள், 30 ஜனவரி, 2017

நீரே!

கோபத்தில் குணவதியாய்!

அன்பில் அடக்கமாய்!

ஆறுதலில் அன்னையாய்!

தேற்றுவதில் நல் தந்தையாய்!

நல் உணர்வுகளை மதிப்பவளாய்!

நண்பர்களைப் போற்றுபவளாய்!

இயற்கையை இரசிப்பவளாய்!

இறையடியில் அமர்பவளாய்!

இளமையில் பகட்டற்றவளாய்!

முதுமையை மதிக்கக்கூடியவளாய்!

குழந்தைக்குக் குழந்தையாய்!

மாணவர்களுக்கு நல் ஆசிரியராய்!

உறவுகளுக்கு உற்ற துணையாய்!

என்றும்

நான்

உன் அருளால்

நல்லது செய்ய

நீரே என்னுடன் இருந்து என்னை வழிநடத்தும் இறைவா!

அன்புடன்,

இனியா.

சனி, 28 ஜனவரி, 2017

மக்களால் மக்களுக்காக....

இன்று எங்கள் பள்ளியில் நடந்த அழகான குட்டி குட்டி அனுபவங்கள். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்தல் பற்றியும், எப்படி வாக்களிப்பது, தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றியும் படிக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு அனுபவ முறைக் கல்வியைத் தர வேண்டுமென்று நினைத்து, பள்ளியில் மாதிரித் தேர்தல் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.

அதற்காக வகுப்பிலுள்ள மாணவர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் என்று தேர்ந்தெடுத்தோம்.

இன்று அந்தத் தலைவர்கள், தங்கள் கட்சிகளைப் பற்றி மக்களிடம்(மற்ற மாணவர்களிடம்) எடுத்துக் கூறினார்கள்.

அரசியல் தலைவர்கள் கூட பேச முடியாத அளவிற்கு அவர்கள் பேசினார்கள். மாணவர்களின் தேவைகள் என்னென்னவாக இருக்கும் என்று உணர்ந்து, அதற்கேற்றார் போலப் பேசினார்கள். கேட்கவே ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தது.

இந்தக் காலத்துப் பிள்ளைகளிடமிருந்து நாம் தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

வாழ்க நம் பாரதம்!

இனியா.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

பாரதியும் செல்லம்மாவும்....

நேற்று மாலை, எங்கள் ஊரில் உள்ள, ஒரு நர்ஸரி தோட்டத்திற்குச் சென்று, இரண்டு ரோஜாச் செடிகள் வாங்கி வந்தோம். அழகான சிவப்பு நிற ரோஜா அதில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அதற்கு மண் எடுத்து வந்து, இன்று தான் அதை ஒழுங்குபடுத்தி எடுத்து வைத்தேன்.

அதற்கு என்ன பெயரிடலாம் என்று யோசித்த போது, என் தங்கை 'பாரதி – செல்லம்மா' என்றாள். ஒரு செடிக்குப் பாரதி என்றும், இன்னொன்றிற்குச் செல்லம்மா என்றும் பெயரிட்டு இருவரையும் அருகருகே வைத்துள்ளேன்.

பார்க்கவே அழகாய் உள்ளன.

ஏதோ எங்கள் வீட்டு உறுப்பினர்களில் இருவர் கூடிவிட்டது போன்ற ஒரு உணர்வு.

மனதில் ஒருவிதமான மகிழ்ச்சி!

பாரதியும் செல்லம்மாவும் உறங்கச் சென்றுவிட்டனர்.

நானும் உறங்குகிறேன்!

இனிய இரவு வணக்கங்களுடன்,

இனியா.

வியாழன், 26 ஜனவரி, 2017

தியாகத்தின் சாயல்....

இன்று அழகான கதை ஒன்று வாசித்தேன்..

'ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைகிறார். மாணவர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். ஒரு கப்பலில், ஒரு தம்பதி பயணம் செய்கின்றனர். அப்போது, கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் மட்டும் தப்பிக்க வசதியாக, படகு ஒன்று மாத்திரமே இவர்களுக்குக் கிடைக்கிறது.

மனைவியைப் பின்னேத் தள்ளிவிட்டு, கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச் செல்கின்றார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி, சத்தமாக அந்த மனைவி என்ன சொல்லியிருப்பார்? என்று மாணவர்களை நோக்கிக் கேட்டார், ஆசிரியர்.

எல்லா மாணவர்களும் பலவிதப் பதில்களைக் கூறினர்.

ஒருவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

'ஏனப்பா நீ மிகவும் அமைதியாக இருக்கிறாய்?' என்று ஆசிரியர் கேட்டார்.

'நம்ம குழந்தையை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லியிருப்பார் என்றான், அந்த மாணவன்.

'எப்படி நீ சரியான பதிலைக் கண்டுபிடித்தாய்?' என்று ஆசிரியர் கேட்டார். அதற்கு அவன் 'இல்லை டீச்சர், எங்க அம்மாவும் சாகறதுக்கு முன்னாடி எங்க அப்பா கிட்ட இதையேதான் சொன்னாங்க' என்றான்.

பலத்த மௌனத்திற்குப் பிறகு, ஆசிரியர் கதையைத் தொடர்ந்தார்.

தன் மனைவியின் இறப்பிற்குப் பின், தனி ஆளாக இருந்து, அவர்களது குழந்தையை வளர்த்து வந்தார், தந்தை. அந்தப் பெண் குழந்தை வளர்ந்து, பெரியவளான பல வருடங்கள் கழித்துத் தன் தந்தையின் டைரியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவளது தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்தது அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது.

அவள் அப்பா, கப்பல் கவிழ்ந்த சம்பவத்தைக் குறித்து இவ்வாறு எழுதியிருந்தார்.

'உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்.

நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும்.

நான் என்ன செய்ய?

நம் குழந்தையை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியதாயிற்று!'

என்று அதில் எழுதியிருந்தது.

கதையை அத்தோடு முடித்துவிட்டு அந்த ஆசிரியர் கூறினார்....

வாழ்க்கையில் நல்லது, கெட்டது இரண்டும் நடக்கும். எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கும். சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள இயலாமல் போகலாம்.
அதனால் நாம் ஆழமாக யோசிக்காமலோ, சரியாகப் புரிந்துகொள்ளாமலோ யாரைப் பற்றியும் முடிவிற்கு வந்துவிடக் கூடாது.

நம் நண்பர்களுடன் உணவருந்த வெளியே செல்லும் போது, அவன் நமக்கும் சேர்த்துப் பணம் செலுத்துகிறான் என்றால், அவன் பணக்காரன் என்று அர்த்தமில்லை... அவன் பணத்தை விட 'நம் நட்பை உயர்வாக மதிக்கிறான்' என்று அர்த்தம்.

முதலில் மன்னிப்புக் கேட்கிறார்கள் என்றால், அவர்கள் தான் தவறு செய்தவர்கள் என்று அர்த்தமில்லை... 'ஈகோ' வை விட 'நம் உறவை உயர்வாக மதிக்கிறார்கள்' என்று அர்த்தம்.

நாம் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், நமக்கு கால் பண்ணி பேசினால், அவர்கள் வெட்டியாக இருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை... நாம் 'அவர்களுடைய மனதில் இருக்கின்றோம்' என்று அர்த்தம்.

பின்னொரு காலத்தில் நம் பிள்ளைகள் நம்மிடம் கேட்கும் 'யாருப்பா அந்தப் ஃபோட்டோவில் உள்ளவர்கள்' என்று...

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோடு நாம் சொல்லலாம் 'அவர்களுடன் தான் என் சில நல்ல தருணங்களை நான் கழித்திருக்கிறேன்' என்று...

இந்தக் கதையில் வரும் அம்மா, தன் உயிரைத் தியாகம் செய்தார்.

ஆனால், அப்பாதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறார். தன் குழந்தைக்காக, மறுமணம் கூட முடிக்காமல், அவளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்.

அவர் தான் இன்றைய வலைப்பதிவின் நாயகன்.

மேற்சொன்ன ஆசிரியரின் கூற்று, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்...

இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியா.

புதன், 25 ஜனவரி, 2017

தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது!

கவிஞர் வைரமுத்து அவர்களின் அழகான வரிகள்...

வாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
     தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
     அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
    பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
     இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
     கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
     வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
     கால்களுக்கும் வணக்கம்

சதுராடிக் களம்கண்ட
     சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
     நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
     நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
     புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
    ஆராய வேண்டும்.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

பெயரிட முடியவில்லை!

அனுதினமும் உன்னால் தான்
நான் விழிக்கிறேன்!

பல்லியைக் கண்டால்
வருகிறாய்!

குளிர்ந்த நீரில் குளிக்கும் போது
தெரிகிறாய்!

நேரம் ஆகும் போதும்...

என் வேலையைச் செய்யாத போதும்...

பிறர் என்னைப் பற்றிப் பேசும் போதும்...

நீ...

என் அருகில் இருப்பது போன்ற உணர்வு!

மதிய வேளைகளில்
உணவு மிச்சமானால்...

மாலைப் பொழுதில்
வீட்டிற்கு
நேரம் கழித்துச் சென்றால்....

இரவு நேரங்களில்
அலைபேசியின் ஒளியில்
இளைப்பாறிக் கொண்டிருக்கையில்!

தூங்கச் செல்லும் முன்
'நாளை எப்படி
இருக்கப் போகிறது?'
என எண்ணுகிற வேளையில்!

தூக்கத்தில் வருகிற
பேய் கனவில்!!!

என

எல்லாமுமாய் என்னில்

கலந்து விட்டது

நீ

மட்டுமே!!!

'பயம்'

எப்போது என்னை விட்டு விலகப் போகிறாய்?

'நான்'

அன்புடன்
இனியா.

திங்கள், 23 ஜனவரி, 2017

மேற்கோள்களோடு....

அனுதினமும், அன்பின் பாதையில், எனது கிறுக்கல்களை வாசித்துக் கொண்டிருக்கும், என் அன்பு நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்!!!

எனக்கு ஏதாவது மேற்கோள் வாசகம் படிக்கும் போது பிடித்திருந்திருந்தால், அதைக் குறிப்பெடுத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. அதை வீட்டிற்கு வந்ததும் ஒரு சார்ட்டில் எழுதி, என் அறையில் ஒட்டி வைத்துவிடுவேன். என் அறை முழுவதும் பல மேற்கோள்களால் தான் நிறைந்திருக்கும்.

இரவு தூங்கச் செல்லும் முன், இந்த மேற்கோள்களும், ஒரு சில என் நினைவுகளும்(நிஜங்களும்) தான் நான் கடைசியாகப் பார்ப்பது.

என் பழக்கம் இது. இந்த மேற்கோள்கள் நான் மகிழ்ச்சியாய் இருக்கும் தருணங்களில் எனக்கு விழிப்புணர்வையும், நான் துக்கப்படும் சமயங்களில் எனக்குத் தூண்டுதலாகவும் இருக்கின்றன. எதையாவது யோசிக்கும் போது, என் கண்களில் படும் இந்த மேற்கோள்கள் எனக்கு வலுவூட்டும்.

என் அறை, என்னைத் தவிர எவருக்கும் பிடிக்காத அளவிற்கு, மேற்கோள்கள் மட்டும் என் அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

நண்பர்களைப் போல் எப்போதும் என்னுடன் இருப்பவை.... என்னையே எனக்குக் காட்டுபவையாக உணர்கிறேன்!!!

என் இரசனையும், அவன் இரசனையும் ஒத்துப்போகாத என் நண்பன் ஒருவன்,  நான் இவ்வாறு மேற்கோள்கள் உபயோகிப்பதை முற்றிலும் வெறுப்பவன்..

அவன் இதைப் பற்றிப் பேசியது தான்,  இதை நான் எழுத வேண்டுமென்று என்னைத் தூண்டியது.

ஒருசில நேரங்களில், இந்த வார்த்தைகள் கூட நம் வாழ்வாக இருக்கலாம்...

என் அறையில் அதிக நாட்களாக என்னை ஒட்டிக்கொண்டே இருக்கும் ஒரு மேற்கோள்:

"இன்பத்தைத் தேடுபவனும் நீ தான்!!!!
இன்பமும் நீ தான்!!!!"

அடிக்கடி எனக்கு நானே இதைச் சொல்லிக் கொள்வேன்!!!

எனது கிறுக்கல்களை வாசிக்கும், என் அன்புத் தோழிகளுக்கு மிக்க நன்றி!!!

அவர்கள் தான், நான் அனுதினமும் எழுத என்னைத் தூண்டுபவர்கள்!!!

நன்றி தோழிகளே!!!

இனிய

இனியா.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஆகையால் நான்!

வந்தேன்... பொறுத்திருந்தேன்...

கண்டேன்... திகைத்தேன்....

அமைதியாய் இரசித்தேன்...

சிந்தித்தேன்...

அந்தப் பேரின்ப நேரங்களை!

கண்கள் மூடத் தோன்றவில்லை!

உன்

பாவனைகளின் மிரட்டலால்!

கைகோர்க்கும் விதம்

மாறவில்லை!

கண் சிமிட்டும் அழகு

குறையவில்லை!

உனக்கே உரித்தான

அந்தத்

தோரணை!

சில நொடிகள் யோசித்தேன்!

ஏன் என்னைக்

கண்டுகொள்ளாமல்

நிற்கிறாய் என்று!

பின் தான் தெரிந்தது

நான்

உன்னைப் பார்க்கவில்லை!

உன் உள்ளம்

போன்ற

ஒரு சிறு குழந்தையைக்

கண்டேன்

என்று!

அன்புடன்

இனியா.

சனி, 21 ஜனவரி, 2017

அருகாமை!!!

இன்று எங்கள் ஆலயத்திற்கு, மாலைத் திருப்பலிக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல் இல்லாமல் இன்று ஒரு சிறப்பு என்னவென்றால் 'புனித ஆக்னஸ்' திருநாள் இன்று... அதனால்...  இன்று எங்கள் இயக்கத்தில் உள்ள அனைத்து இளம் பெண்களும், மாலைத் திருப்பலிக்கு வர வேண்டுமென்று முடிவெடுத்திருந்தோம். அதன்படி எல்லோரும் சென்றிருந்தோம். திருப்பலியில் முன்னுரை, பாடல், வாசகம், மன்றாட்டு என எல்லாவற்றையும் முன்னெடுத்து செய்தோம்.

இன்றைய மறையுரையை, எங்கள் உதவிப் பங்குத் தந்தை, எப்போதும் போல ஒரு கதையுடன் ஆரம்பித்தார். அந்தக் கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே கண்டிப்பாக இதை என் நண்பர்களிடம் பகிர வேண்டுமென்று நினைத்தேன்.

அழகிய குடும்பம் ஒன்று. அம்மா தவறியதால், தன் மகளை ஆசையாக, அந்தத் தந்தை வளர்த்து வந்தார். தினமும் இரவு தூங்கச் செல்லும் போது, மகளைத் தன் மடியில் படுக்க வைத்து, அவளுக்குக் கதைகள் கூறுவது வழக்கம். இது தினமும் நடக்கும். கதை சொன்னால் தான் மகள் தூங்குவாள். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, தந்தைக்குக் கதை சொல்வதே வெறுத்துவிட்டது.

அதனால் ஒரு கேசட்டில் பல கதைகளை அவர் பதிவு செய்து, அந்தக் கேசட்டை மகளிடம் கொடுத்து 'நீ தூங்கச் செல்வதற்கு முன் இதைப் போட்டுக் கேட்டுவிட்டுத் தூங்கு' என்று கூறி, அதை எப்படிப் போடுவது என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.

மகளும் அடுத்த நாள் முதல் அந்தக் கேசட்டில் தந்தை பதிவு செய்து வைத்திருந்து கதைகளைக் கேட்டுத் தூங்க ஆரம்பித்தது. தந்தையும் நிம்மதியாகத் தூங்கினார்.

இரண்டு நாட்கள் கழிந்தன. மகள் தந்தையிடம் மறுபடியும் வந்து 'அப்பா எனக்கு இந்தக் கேசட்டில் நீங்கள் கூறும் கதையைக் கேட்கப் பிடிக்கவில்லை... உங்கள் மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்கும் போது தான் எனக்கு நிம்மதியாகத் தூக்கம் வருகிறது' என்றாள்.

ஞானம் பெற்றார் தந்தை.

எப்போது நமக்கும், நம் உறவுகளுக்கும் இடையில் ஏதாவது ஒன்று நுழைகிறதோ, அது நிம்மதியாக நம்மைத் தூங்கக் கூட விடுவதில்லை.

பெரும்பாலும் இந்தக் காலக்கட்டத்தில் சிறுநுட்பக் கருவிகள் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். அது தான் நம்மை ஆள்கிறது.

நமக்கு பாட்டு பாடிக் காட்டுகிறது.

நமக்கு கதை சொல்கிறது.

என அடுக்கிக் கொண்டே போகலாம்.

நம் உறவு நிலைகளில்...

நாம் மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல்...

இது போன்று, நம் ஞாபகமாக ஏதாவது ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து, அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளக் சொல்லும்போது, அந்த இடத்தில் "வெறுமை" மட்டுமே மிஞ்சுகிறது.

அவர்களுக்கு நம் உடனிருப்புத் தேவைப்படலாம்... ஆனால், நாம் அதைப் புரிந்து கொள்ள மறந்து விடுகிறோம்.

மாறாக....

வாட்ஸ்ஆப்பில் மெஸ்ஸேஜ் செய்வது

ஸ்கைப்பில் பேசுவது

ஐ எம் ஓ வில் பேசுவது

வைபரில் ஸ்மைலிஸ் அனுப்பிக் கொள்வது

ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொள்வது

என்று நம் அன்பைச் சுருக்கிக் கொள்ள நினைக்கும் போது...

நம் அருகாமைக்காக...

ஒரு உள்ளம்...

அலைந்து கொண்டிருக்கிறது...

என்பதை
மறந்து விடுகிறோம்!!!

இனியா.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

நல்லதே நடக்கும்!

இன்றைய பொழுதும் மறக்க முடியாத நாளாகத் தான் இருந்தது. காலையில் எழுந்தது முதல், நான் என் அம்மாவிடம் 'நானும் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறேன்' என்றேன். அவரும் ஒத்துக் கொண்டார்.

காலை 10 மணிக்குப் போராட்டக் களத்திற்குச் சென்றேன். தேனியில் புது பஸ்டாண்ட் முன்பு நடந்தது. நான் எதிர்பார்த்ததை விட நிறைய பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டத்தில் ஒரு இடத்தைப் பிடித்து அமர்ந்தேன். அனைவருக்கும் விடுமுறை என்பதால் நிறைய குட்டிக் குழந்தைகள் கூட கலந்து கொண்டனர்.
அங்கு நிறைய பேர் மைக்கைப் பிடித்துப் பேசினர். நிறைய நல்ல விசயங்களைக் கூறினர். சிலர் நமது முதலமைச்சர் மற்றும் பாரதத் தலைவர் அவர்களைப் பற்றியும் சில வேடிக்கையான கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

நான் கேட்பதெல்லாம்... 'நமக்கு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். பீட்டா இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.'. இதற்கு சரியானத் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைவிடுத்து தேவையில்லாமல் மற்றவர்களைத் தரக்குறைவாகப் பேசுவது மிகவும் தவறு. அதுவும் அந்தக் கூட்டத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். நாளை பெற்றோர்களைப் பிள்ளைகள் இது போல் பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், வந்திருந்த பாதிப் பேர் தங்கள் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்ஸை அப்பேட் செய்வதிலும், வாட்ஸ்ஆப்பில் சேட் பண்ணுவதிலும், செல்ஃபி எடுத்துக் கொள்வதிலுமே தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். இது போன்ற பொதுக் கூட்டங்களில் இப்படிச் செய்வதை இளைஞர்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

அதைவிடக்கொடுமை... இன்று இரவு ஒரு 8:30 மணிக்கு மறுபடியும் சென்றேன். தேனி பஸ்டாண்டிற்குள் ஜோடி ஜோடியாகச் சுற்றிக் கொண்டிருந்தனர். இப்போது தான் தெரிகிறது... 'பெண்களைப் பெற்றவர்கள் ஏன் வெளியில் விடுவதில்லை என்பதும்... இளைஞர்கள் மீது ஏன் இன்னும் நம்பிக்கை வரவில்லை என்பதும்....'

தயவுசெய்து ஒரு பொதுவான, சமூக நலனுக்காகப் போராடும் போது நம்மை நாமே முதலில் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்... 'நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தகுதியானவளா என்று?'

கண்டிப்பாக ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தால், இந்த இளைஞர் கூட்டம் ஒரு நல்ல வழியை நோக்கிச்செல்லும்.

இன்று மாலை ஆலயத்திற்குச் சென்று ஜெபித்தேன். இன்று செபஸ்தியார் திருநாள். எங்கள் உதவிப்பங்குத்தந்தைக்காக சிறப்பாகச் ஜெபித்தோம்.

இப்படி நாட்களைப் பயனுள்ள முறையில் செலவழிப்பது மிகவும் பிடித்திருக்கிறது.

இறைவன் அருள் நம்மோடு!

நன்றியுடன்

இனியா.

வியாழன், 19 ஜனவரி, 2017

நாமும் செல்வோம்!

அன்பார்ந்த பெற்றோர்களே!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மத்திய அரசும் மாநில அரசும் கைவிரித்துவிட்டன. இனியும் எங்களால் பொறுத்திருக்க முடியாது என்று, இளைஞர்கள் கொதித்து எழுந்து கொண்டு இருக்கின்றனர். இன்றைய இந்த நிலையில் அப்துல் கலாம் ஜயா இருந்திருந்தால், இந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்துப் பெருமிதம் கொண்டிருப்பார்..

மத்திய அரசின் செயலைக் கண்டித்து, நாளை தமிழகத்தில் எதுவும் இயங்காது. அதனால், இளைஞர்கள் ஒவ்வொருவரும் நம் தமிழ்நாட்டின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்த சிறந்த தருணம். பெற்றோர்கள் தயவு செய்து இளைஞர்களையும், இளம்பெண்களையும் வீட்டிற்குள் அடைத்து விடாதீர்கள்!

நாளைய நல்ல சமுதாயத்தை உருவாக்க வழி செய்யுங்கள்!

நாளைய தினம் ஒவ்வொரு தமிழன் வாழ்க்கையிலும் மறக்க முடியாததாக இருக்கட்டும்!

இறைவன் அருள் என்றும் நம்மோடு!

அன்புடன்

இனியா.

புதன், 18 ஜனவரி, 2017

என்ன செய்வது?

ஒரு பெண் அனைவரிடமும் சகஜமாகவும், அன்பாகவும் பேசும் போது, அதைத் தவறென்று சொல்லும் சமூகமும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளும் பெண்களும் சத்தியமாக இந்த உலகில் இருக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை...
பேருந்தில் செல்லும் போது ஒரு ஆணைப் பார்த்து சிறு புன்னகை புரிய முடியவில்லை...
அடுத்த இரண்டு நிமிடங்களில் உன் அலைபேசி எண்ணைக் கேட்கிறான்!
வீட்டிற்கு நண்பர்கள் வந்தால்
அதைப் பார்த்துக் கொண்டே இருந்து
அவன் சென்ற பின்
அடுத்த நாள் பேச்சிற்கு ஒரு தலைப்பு கிடைத்துவிட்டதென்று
பெருமைப்படும் பக்கத்து வீட்டு அத்தைகள்!
உறவினர்களுடன் மோட்டார் வாகனத்தில் சென்று வருவதைப்
பார்த்துக் கொண்டே இருக்கும்
அண்டை வீட்டு அரைவேக்காடுகள்!
தெருவில் வரும்போது ஃபோனில் ஏதாவது
ஒரு முக்கிய நபருடன்
பேசிக் கொண்டு வந்திருப்போம்!
நமது ஃபோன் பில்லை
தாங்கள் கட்டுவது போல்
அலட்டிக் கொள்ளும் தெருக் கூட்டங்கள்!
பெண்களை எந்தவிதப் பொதுக் கூட்டங்களிலும்
அனுமதிக்காத
அகம்பாவம் பிடித்த ஆண் கூட்டங்கள்!
நான் இல்லை என்றால்
நீ இல்லவே இல்லை....
என்று எண்ணியே தன் வாழ்க்கையை இழக்கிறது
இந்தக் கூட்டம் தான்!
இவற்றை எல்லாம் மீறி
யாரிடமாவது நன்றாகப் பேசினால்
தவறாகப் புரிந்து கொண்டு
காதல் சொல்லத் துடிக்கும்
ஆண்கள் கூட்டம் மறுபக்கம்!
நான் இந்த உடை உடுத்தினால்
என்னில் ஏற்படும் ஆனந்தத்தை விட
மற்றவர் பார்வைக்கு எப்படி இருக்கும்
என்பதை உணர்ந்து
உடை உடுத்த வேண்டிய கட்டாயம்!
வேலைக்குச் செல்லுமிடத்தில்
மேலிருந்து கீழ் வரை
நோட்டமிடும் மேனேஜர்!
எங்கு தான் என்னை நிம்மதியாக
வாழ விடுவீர்கள்!
என் பாரதி மட்டும் இப்போதிருந்தால்
'நீ அடுப்பறைக்குள்ளேயே பத்திரமாக இரு கண்ணம்மா!'
என்றிருப்பான்!
கவலை வாட்டுகிறது. பொறுப்பை உணர்ந்து அனைவரும் வாழ்வோம்.
ஏதோ படிப்பதற்காக அல்ல...
பெண்களின் இன்றைய நிலைமை ஒவ்வொருவராலும் உணரப்பட வேண்டும்.
இனிய இறைவா! என்னைப் போல், என் அடுத்திருப்பவரையும் பார்க்கும் மனம் தா!
அன்பை ஆண், பெண் பாராமல் அனைவருக்கும் தர எனக்குப் பரந்த மனம் தா!
அன்புடன்
இனியா.

செவ்வாய், 17 ஜனவரி, 2017

பிரியாவிடை

'பிரிவு' என்று சொன்னாலே, கொஞ்சம் வலிக்கத் தான் செய்கிறது. அதுவும் நமக்குப் பிடித்தவர்கள் என்றால் சொல்லவா வேண்டும்? தாராவுடன் பழகியது என்னவோ ஒரு சில நாட்கள் தான். ஆனால், அவளது அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இன்று பள்ளிக்கு வருவாளோ, வரமாட்டாளோ என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், வந்தாள்... இன்று தான் எங்கள் பள்ளியில் கடைசி நாள். நாளை காலை, அவள் ஊருக்குக் கிளம்புகிறாள்.
அவள் வந்ததும், அவளிடம் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து சென்ற இடங்களின் ஃபோட்டோக்களை என்னிடம் காட்டிக் கொண்டிருந்தாள். மிகவும் நன்றாய் இருந்தன. அவளுடனான என் நாட்கள் என்றும் நினைவினின்று நீங்காதவை...
சீக்கிரம் அவளைக் காண, அவளுடன் சேர்ந்து ஊர் சுற்ற, அவள் ஊருக்குச் செல்ல வேண்டும்.
மாலை பள்ளியிலிருந்து செல்லும் போது, என்னைக் கட்டித் தழுவி, 'சென்று வருகிறேன்' என்றாள். என்னிடம் இருந்த 'ஒரு அதிசய பறவை' என்னை விட்டுப் பறந்து செல்கிறது போன்ற ஒரு உணர்வு...
சற்று வருத்தமாகத் தான் உள்ளது.
எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நம் வேலைகளைச் செய்ய ஆரம்பிப்போம்.
வாழ்க்கை என்னவோ, எப்போதும் இரயில் பாதை போலத் தான்.... நிறைய வழித்தடங்கள் இருக்கும்... நிறைய நண்பர்கள் இருப்பார்கள்...  ஆனால், கடைசி வரை சேரவே முடியாது. இறுதி வரை ஒன்றாக இருக்கவே முடியாது.
ஆனால், இறைவன் அருளால், அவர்களை என்றாவது ஒருநாள் சந்திக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தூங்கச் செல்கிறேன்.
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியா.

திங்கள், 16 ஜனவரி, 2017

காணும் பொங்கல்

மாட்டுப் பொங்கலைப் போல் இந்நாளும் கலகலப்பாகவே இருந்தது. இந்தப் பொங்கல் பண்டிகை வாழ்க்கையில் மறக்க முடியாத பொங்கலாகவே அமைந்தது. காரணம் 'தாரா'. தாராவுடனான இந்த ஐந்து நாட்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. நேற்று இரவு தாராவிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. 'நான் நாளை மறுநாள் ஊருக்குக் கிளம்புவதால், நாளை மாலை நாம் சந்திக்கலாமா?' என்று அதில் கேட்டிருந்தாள். நாளும் மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்.
மதியம் சரியாக மூன்று மணிக்குச் சென்றேன். இருவரும் சேர்ந்து ஒரு பேக்கரிக்குச் சென்றோம். அங்கு சரியாக அரைமணி நேரம் அமர்ந்தோம் 'வெறும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு....' அவளுடனான அந்த நிமிடங்கள் பேசிக் கொண்டே சென்றது. எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்க அவளால் மட்டும் எப்படி முடிகிறது என்று யோசித்துக் கொண்டே அவளை இரசித்துக் கொண்டிருந்தேன்.
பின் இருவரும் சேர்ந்து, எங்கள் ஊரின் மிகப் பெரிய கடைத்தெருவான 'பகவதியம்மன் தெருவிற்கு' சென்றோம். என்ன வேண்டுமென்று கேட்டால் 'என்னிடம் எல்லாம் இருக்கிறது!' என்ற பதில் மட்டும் தான் அவள் வாயிலிருந்து வந்தது.
கடைசியாக அவளது தங்கைகளுக்கு, ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தேன்.. அவளுக்கு விநாயகர் சிலை பிடிக்கிறது என்றாள். அவளுக்கு ஒன்றும், அவள் தங்கைக்கு ஒன்றுமாக இரண்டு நிறங்களில் வாங்கினேன். அவளுக்கு மிகவும் பிடித்த நிறம், ஆரஞ்சு. அந்த நிறத்திலேயே விநாயகர் சிலையும் இருந்தது பார்த்து மகிழ்ந்தாள்.
உன்னுடன் அனுதினமும் இருப்பவர்களுக்கே என்ன பிடிக்குமென்று தெரியாத நீயா தாராவிற்கு என்னவெல்லாம் பிடிக்குமென்று சொல்கிறாய் என்று என் மனச்சாட்சி என்னையே கேள்வி கேட்டுக் கொண்டது. இருந்தாலும், தாராவுடன் இருக்கும் போது என் மனம் ஏதோ என் நெருங்கியவரிடம் இருப்பது போல் இருந்தது. அவளுடன் நேரம் செலவிட வேண்டும் போல் இருந்தது.
கடைசியாக இருவரும் நடந்தே வீட்டிற்கு வந்தோம். அவளுடன் இருந்த ஒவ்வொரு பொழுதும் மறக்க முடியாதவை. என்னை அணைத்துக் கொண்டு அவள் விடைபெற்றாள்.
காணும் பொங்கலன்று நண்பர்களைக் காணச் செல்லலாம் என்ற என் திட்டம் எல்லாம் போய், கடைசியாக தாராவை மட்டுமே கண்டேன்.
இருந்தாலும், என் எல்லா நண்பர்களையும் கண்டு விட்ட மகிழ்ச்சி.
எல்லா நலமும், வளமும் எந்நாளும் அவளுடன் இருக்க தினமும் இறைவனைப் பிராத்திப்பேன்.
இனியா.

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு நடந்தால், கண்டிப்பாக அதைப் பார்க்க வேண்டுமென்று நேற்று முதல் நினைத்துக் கொண்டே இருந்தேன். இன்று அதற்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

காலை தாராவை அழைத்துக் கொண்டு, எங்கள் ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். மிகவும் அமைதியாக அமர்ந்து, அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். பின், என் தோழிகள் அனைவரிடமும் அவளை அறிமுகம் செய்து வைத்தேன்.

பிடிக்குதோ பிடிக்கலையோ, வேணுமோ வேணாமோ அவளிடமிருந்து வரும் ஒரே பதில் 'Ya... I am fine!'. என்னவோ தெரியவில்லை அவளது எளிமை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

வீட்டிற்கு வந்ததும், அவளும் நானும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை எனக்குப் பரிசளித்தாள். மிகவும் பிடித்திருந்தது.

அத்தோடு இல்லாமல் அவளுடன் சேர்ந்து வெளியில் பேக்கரிக்குச் சென்றேன்.. அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவள் அறைக்கு என்னை அழைத்துச் சென்று, அவள் குடும்பத்திற்காக என்னனென்னவெல்லாம் வாங்கியிருக்கிறேன் என்று என்னிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.

பின், மாலை வேளையில் எங்கள் பள்ளி துணை முதல்வருடன் சேர்ந்து, வயல்பட்டி என்ற கிராமத்திற்கு தேவராட்டம் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். அங்கு அவர்கள் பூஜை செய்தது, தேவராட்டம் ஆடியது அனைத்தும் மிக அருமையாக இருந்தது. எதிர்பாராத விதமாக அங்கு ஜல்லிக்கட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

காளைகளை எல்லாம், ஒரு வெட்ட வெளியாக இருந்த அறையில் அடைத்து வைத்திருந்தனர். ஒரு ஆட்டை வெட்டிப் பலி கொடுத்துவிட்டு, பூஜைகள் எல்லாம் செய்துவிட்டு, அந்த மாடுகளைத் திறந்து விட்டனர். அருகில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் வியப்பாய் இருந்தது. தாராவும் மிகவும் இரசித்தாள். பின் அருகில் இருந்த வீடுகளுக்குச் சென்றோம். பின் அருகிலுள்ள ஒரு ஆற்றிற்குச் சென்று சிறிது நேரம் விளையாடினோம். அங்கு சூரியகாந்தி மலர்கள் அழகாய் இருந்தன. அதன் அருகில் சென்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது தொட்டாற்சுருங்கி செடி அருகிலிருப்பதைப் பார்த்து அவளிடம் அதைக் காட்டினேன். அதைப் பார்த்ததும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். இப்படி ஒரு செடியை அங்கு பார்த்ததே இல்லை என்று சொல்லி, அதை என்னைத் தொடச் சொல்லி, வீடியோவும் எடுத்துக் கொண்டாள். கடைசியாக அவளது நியூசிலாந்து சாக்லேட்டை இருவரும் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த வருடம்... பொங்கல் ... எனக்கு ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அநேக மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு பொழுதையும் இரசித்தேன்.

என் அன்புக்குரியவர்கள் என்னிடம் பேசாத போது நினைப்பேன்... 'அப்படி என்ன தான் செய்து கொண்டிருக்கிறாயோ?': என்று திட்டுவேன்... இப்படி மற்றவர்களுக்காக நேரம் செலவிடும்போது நமக்கென்று நேரமே கிடைப்பதில்லை என்பதை இந்த மூன்று நாட்களில் உணர்ந்தேன்!

இந்த நாட்களை எனக்கு நல்ல முறையில் அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!

இனிய இரவு வணக்கங்களுடன்,

இனியா.