சனி, 11 பிப்ரவரி, 2017

Promise Day...

காதலர் தினத்திற்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், இன்று பிராமிஸ் டே அதாவது வாக்குறுதி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பிராமிஸ் என்ற வார்த்தைக்குத் தமிழில் அர்த்தம் பார்த்த போது, கிடைத்த வார்த்தை தான் 'வாக்குறுதி'. இந்த வார்த்தையை வாசிக்கும் போதே பயமாய் உள்ளது. எவ்வளவு பெரிய வார்த்தை? ஆனால், இந்த வார்த்தைக்கு இந்தக் காலத்தில் மதிப்பு இல்லாமல் போய்விட்டது.

இந்த நாளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கூட தெரியாது. ஆனால், யோசித்துப் பார்க்கும் போது இது காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படுகிறது. ஆகையால், இது காதலர்களுடன் தொடர்புடையது.

காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் விட்டுப் பிரிய மாட்டோம் என்று முடிவெடுப்பார்கள் போல... இதைப் பார்த்தவுடன் என் மனதில் எழுந்தது... கிறிஸ்தவ மரபில் திருமணத்தின் போது வாக்குறுதி கொடுப்பார்கள்... 'இன்பத்திலும் துன்பத்திலும், உடல்நலனிலும் நோயிலும் உன்னுடன் பிரமாணிக்கமாயிருக்க சம்மதிக்கிறேன்' என்றுத் தம்பதியினர் வாக்குறுதி எடுத்துக் கொள்வார்கள். எவ்வளவு அழுத்தம் திருத்தமான வரி... இதை வாசிக்கும் போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்!

இப்படியும் கணவன் மனைவி வாழ்வார்களா என்று கூட யோசித்ததுண்டு! இன்பத்தில் இருப்பவர்கள் துன்பத்தில் வர மாட்டார்கள்... நோயில் வாடும் போது வராதவர்கள், சுகமாக இருக்கும் போது வருவார்கள்.... இப்படிப்பட்ட உலகத்தில் எப்படி இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலனிலும் நோயிலும் உடனிருப்பார்கள்? உண்மையாகவே அன்பு இருந்தால் கண்டிப்பாக இருப்பார்கள்.

அந்த அன்பிற்கு அடித்தளம், இன்று நாம் எடுக்கும் இந்த வாக்குறுதி... எனக்குத் தெரிந்த ஒரு தோழி உண்டு...எப்போது பார்த்தாலும் வாக்குறுதி கொடுப்பது மட்டுமே அவள் வேலை... ஆனால், அவள் வாழ்நாளில் அவள் கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட அவள் நிறைவேற்றியதில்லை... இப்படியும் இருக்கத் தான் செய்கிறோம்...

வாக்குறுதி கொடுப்பது வாயில் வடை சுடுவது போன்றதாகி விட்டது.

வாக்குறுதி – என்று கூறும் போதே, அதில் எவ்வளவு பெரிய விசயம் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.

பெரும்பாலும் நம் அன்பிற்குரியவர்களிடம்... கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்றால், எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பதே நலம்...

இந்த வாக்குறுதியின் நாளில்... நாம் நம் கணவரிடம், பெற்றோரிடம், சகோதரர்களிடம், பிள்ளைகளிடம், நண்பர்களிடம் ஏதாவது வாக்குறுதி கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றித் தருவோம்.. அது எவ்வளவு பெரிய விசயமாக இருந்தாலும் சரி...

செய்து தான் பார்ப்போமே!

நாமும் திருந்துவோம்!

இனிய இரவு வணக்கங்களுடன்...
இனியா.

கருத்துகள் இல்லை: