செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பொருளுணர்ந்து செய்தல் நலம்...

நாளை முதல், நாற்பது நாட்களுக்கு, எந்த வகையான அசைவ உணவும் கிடையாது. மற்ற நாட்களில் இறைவனைத் தேடினோமோ இல்லையோ...இனிவரும் நாற்பது நாட்களும் மிகவும் ஆவலாய் நாடுவோம்...

அசைவ உணவு கிடையாது...

அதிக நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடையாது...

வீட்டில் சண்டை கிடையாது...

வெள்ளிக்கிழமைகளில் சமையல் கிடையாது...

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கும்..

இதை எல்லாம் கேட்கும் போதும் நன்றாய் இருக்கும். இந்த நாற்பது நாட்கள் செயல்படுத்தும் போதும் நன்றாய்த் தான் இருக்கும்.. அதன் பின், இந்த நல்ல குணங்கள் தொடர்கிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி தான்!

மற்ற நாட்களில் இறைவனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் நாம், இந்த நாட்களில் அவரை அதிகமாய்த் தேடும் போதும், நாம் கேட்கும் அனைத்தையும் நமக்குச் செய்கிறார்.

இந்த வருடம் உயிர்ப்புத் திருநாள், எனக்கு ஒரு மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும். அதற்கு என்னை நாளையிலிருந்து தயார்படுத்த வேண்டும்.

எனக்குப் பிடித்த ஏதாவது ஒரு பழக்கத்தை இந்த நாற்பது நாட்களும் ஒதுக்கி வைக்கலாம் என நினைத்துள்ளேன்...

கண்டிப்பாக நாற்பது நாட்கள் கழித்து அது பிடிக்காமல் போய் விடும்.

அதிகமாக மற்றவரைப் பற்றிப் பேசக் கூடாதென்றும்

இரவு நேரங்களில் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாதென்றும்

அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டுமென்றும்

உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும்

நிறைய நினைத்துள்ளேன்!

இறைவன் தான் வழிநடத்திச் செல்ல வேண்டும்!

இனிய இரவு வணக்கங்களுடன்...

இனியபாரதி.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

இன்னா செய்தாரை...

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்'

என்றொரு அழகான திருக்குறளைக் கொடுத்த நம் திருவள்ளுவருக்கு, முக்கியமாக இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

நமக்குத் தீமை செய்தவருக்குக் கூட, நாம் நன்மை தான் செய்ய வேண்டுமாம்! இது உண்மையிலேயே மிகவும் கடினமான செயல் தான்!

திருக்குறளைப் படிக்கும் போது, அநேக நேரங்களில் எனக்குள் எழும் கேள்விகள் பல...

திருவள்ளுவர் எப்படி வாழ்ந்திருப்பார்?

அவர் எழுதிய எல்லாவற்றையும், அவரும் கடைபிடித்திருப்பாரா?

உண்மையில் இவ்வளவு நல்லவராக இருந்திருப்பாரா?

இன்னும் நிறைய கேள்விகள்.. நானும் பல நேரங்களில் வலைப்பதிவில் எழுதுவேன்.. ஆனால், அதைப் பல நேரங்களில் கடைபிடிக்கத் தவறிவிடுவேன். இந்தத் திருவள்ளுவர் மட்டும், எப்படி இத்தனை விசயங்களையும் கடைபிடித்திருப்பார் என்று தான் புரியவில்லை...

தனக்குத் தீங்கு செய்தவருக்கு, நானும் தீங்கு செய்யாமல், நன்மை செய்யும் போது, அவர் நம் செயலால் வெட்கி நாணுகிறார். எவ்வளவு நிதர்சனமான உண்மை...

நாமும் பல நேரங்களில், சிலர் செய்த தவறுகளை மட்டும் நினைத்துக் கொண்டு, அவருடன் பேசாமல் பழகாமல் இருக்கிறோம்.. அப்படிப்பட்ட நேரங்கள் நம் வாழ்வில் இருந்தால், அதைக் களைந்து, நாம் அவர்கள் வெட்கும் படியாகச் செய்வோம்..

இனிய இரவு வணக்கங்களுடன்,

இனியபாரதி.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

போதும் என்ற மனமே!

இன்று, அழகான,ஒரு குட்டிக் கதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு காட்டு வழி, ஒரு செல்வந்தரும், ஒரு வயதான மூதாட்டியும் நடந்து செல்கின்றனர். செல்லும் வழியல், ஒரு முட்புதரின் இடுக்கில், ஏதோ பளபளவென மின்னுவது, மூதாட்டியின் கண்ணில் படுகிறது. அதன் அருகில் சென்று அதை எடுத்துப் பார்க்கிறார். அவருக்கு அது என்னதென்று தெரியவில்லை.
அதனை அந்தச் செல்வந்தரிடம் காட்டுகிறார். அவரோ பார்த்துவிட்டு 'ஐயோ! இது அழகிய வைரக்கல்லாய் உள்ளதே! இது எப்படி இந்த மூதாட்டியின் கண்ணில் பட்டது. என் கண்ணில் பட்டிருந்தால் எனக்குச் சொந்தமாகி இருக்கும். இதை எப்படியாவது நமதாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறான்'.
அந்தப் பாட்டியிடம் 'இது வைரக்கல்' என்கிறான். பின்.. தொடர்ந்து 'இதை நான் வைத்துக் கொள்ளட்டுமா?' என்கிறான். அதற்கு அந்த மூதாட்டி 'சரி' என்கிறான்.

இருவரும் அவரவர் வீட்டிற்குச் செல்கின்றனர். அந்தச் செல்வந்தனுக்குத் தூக்கமே வரவில்லை. எப்படி இந்த மூதாட்டி இவ்வளவு விலை உயர்ந்த வைரக்கல்லை எனக்குக் கொடுத்துவிட்டார்? ஒருவேளை அவரிடம் இதைவிட விலைஉயர்ந்த ஏதாவது ஒன்று இருக்க வேண்டுமென்று எண்ணி, அடுத்த நாள் அந்த மூதாட்டியின் வீட்டைக் கண்டுபிடித்துச் செல்கிறான்..

அந்த மூதாட்டியிடம் 'வைரம் மிகவும் விலை உயர்ந்தது. அதை எப்படி எனக்குக் கொடுத்தீர்கள்? அப்படி என்றால், உங்களிடம் இதைவிட விலை உயர்ந்த ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்!' என்றான்.

அதற்கு அந்த மூதாட்டி சிரித்துக் கொண்டே 'போதும் என்ற மனம் தான்' என்றார்.

ஞானம் பெற்றார் செல்வந்தர்...

நாம்?

இனியபாரதி.

சனி, 25 பிப்ரவரி, 2017

அன்பு செய்தல்...

இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?

வேறு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!

மகாகவி பாரதியார்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

என்ன தான் செய்ய?

இன்று சுஜாதா அவர்கள் எழுதிய 'ஜன்னல்' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான்கு பக்கக் கதை தான். அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

நாம் தினமும் காலையிலிருந்து மாலைவரை என்ன செய்கிறோம்!?

காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை அனுதினமும்,  ஏறக்குறைய ஒரே வேலையைத் தான் செய்கிறோம். இதனால், சில நேரங்களில் விரக்தியடைந்து, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்துவிடுகிறோம். இதைப்போல ஒரு கதாப்பாத்திரம் தான் அந்தக் கதையில் விளக்கப்பட்டிருந்தது.

இன்றைய நாட்களில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது... நாம் நேரத்தைச் செலவிடும் முறை...
சில நேரங்களில் வெளியில் நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.. நன்றாக ஊர் சுற்றுவோம்... ஆனால், வீட்டில் யாருடனும் பேச மாட்டோம்.

சிலர் வீட்டில் அனைவரிடமும் நன்றாய்ப் பேசுவார்கள். வெளியில் சென்றால் வாய் திறக்க மாட்டார்கள்.
இன்னும் சிலர் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி... வாய் திறந்தால் மூட மாட்டார்கள்.

அனைவரிடமும் கலகலப்பாக பேசக்கூடிய பழக்கம் நல்லது தான்.
அதுவும் நம் அன்றாட வேலைகளில், நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் தான். அவர்களுடன் பேசும் போது, நம் மனம் லேசானது போல் உணரலாம். இல்லை... அவர்களுக்கு நம் பேச்சு பிடித்திருக்கலாம்.. இதனால் அவர்கள் மனம் லேசாக வாய்ப்பு இருக்கிறது...

வெளியில் எங்கு சென்றாலும், நம் கண்கள் நோக்குவது ஒன்றை மட்டும் தான்...
'அலைபேசி'

என் சிறுவயது நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்...

ஓடியாடி விளையாடிய காலங்கள்...

கூடிச் சேர்ந்து மொட்டை மாடியில் ராஜா ராணி விளையாடிய காலங்கள்...

கோயில் கட்டிக் கும்பிட்ட காலங்கள்...

சோறு வடித்து பரிமாறின காலங்கள்...

எல்லாம்... மலையேறி விட்டன...

இப்போதெல்லாம் தனிமை மட்டும் தான்... வீட்டில் தனிமை... நண்பர்களுடன் சேராத்தனிமை... உறவுகளுடன் இணையாத் தனிமை... எங்கும் தனிமை... எதிலும் தனிமை... அதை மட்டுமே மனம் விரும்புகிறது!

இதில் எப்படி நம் வழக்கத்தை மாற்றிக் கொள்வது?

நம்மை நாமே மெழுகேற்றிக் கொள்வது?

'சோம்பேறியாய் வீட்டில் அடைந்து கிடக்காமல், சுறுசுறுப்பாய், எப்போதும் வேலை இருப்பது போலவே நம்மை வைத்துக் கொள்வது தான், ஒரே வழி!'

என்ன தான் செய்ய?

இனியபாரதி.

வியாழன், 23 பிப்ரவரி, 2017

அம்மா...

உருவாக்கினாள்... உருக்கொடுத்தாள்...

வார்த்தெடுத்தாள்... வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தாள்...

இவள் இல்லாமல் நான் இல்லை
என்று உணரச் செய்தாள்!

இவளின் மூச்சுக் காற்று பட்டு தூங்கிய பொழுதுகள்
இன்னும் வேண்டும் போல் தோன்றுகின்றன!

இவளின் அரவணைப்பில் இன்னும்
இரண்டு மணி நேரம் அதிகமாகத் தூங்கலாம்!

இவளின் காலடிகளில் அமரும் பொழுதுகள்
நம் கவலைகள் எல்லாம் காற்றில் பறந்து விடும்!

இவள் தூக்கம் கெட்டாலும்
நம் தூக்கம் கெடாமல் பார்த்துக் கொள்வாள்!

தன் உடல் நலனைக் கூட இரண்டாம் பட்சமாய் நினைத்து
நம்மைக் காப்பதிலேயே கருத்தாய் இருப்பாள்!

கருவறைக்குள் என்னைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்ட உன்னை
இப்போது வெளியில் நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன்!

அன்புடன்
இனியபாரதி.

புதன், 22 பிப்ரவரி, 2017

இரசிக்கும் விசயமா?

இன்றைய நாட்களில், அநேகம் மாணவர்கள் அலைபேசிக்கும், கம்ப்யூட்டருக்கும் அடிமைகளாகிவிட்டனர். குறிப்பாக, மூன்றாம் வகுப்பிலேயே அனைத்தையும் கற்றுக் கொள்கின்றனர். நான்காம் வகுப்பில் இருந்து, வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்களுடன் உரையாடும் போது, அவர்கள் கூறும் சில காரணங்கள் மனதை மிகவும் பாதித்தன.

பெற்றோர்கள் தங்களுடன் நேரம் செலவிடுவது இல்லை...

நாங்கள் எது செய்தாலும் எங்களைக் கண்டுகொள்வதே இல்லை...

எங்களை வெளியில் சென்று விளையாட அனுமதிப்பதில்லை...

என்று பல காரணங்களுடன் வந்தார்கள். கேட்கவே வேதனையாக இருந்தது. சரி...

இப்படிப்பட்ட காரணங்களைக் குழந்தைகள் கூறும் போது, இது குழந்தைகளிடம் பேச வேண்டிய விசயமல்ல. பெற்றோர்களிடம் பேச வேண்டியது தான்.

ஒவ்வொருவரும் தன் குழந்தைகளுக்கு அலைபேசி, கம்ப்யூட்டர் இவற்றின் அவசியத்தையும், அவைகளைப் பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு தர வேண்டும்.

குழந்தைகள் பேச வந்தால்...உடனே.. நீ எப்போதும் எதையாவது உளரிக்கொண்டு தான் இருப்பாய்...போய்த் தூங்கு.. என்று சொல்லாதீர்கள்.. அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகத் தான் கேளுங்கள்.

இப்போது வழக்கத்தில் உள்ளது... பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எல்லாம், தங்கள் அம்மாவின் மொபைல் ஃபோன்களை உபயோகிப்பது. தயவுசெய்து இதுபோன்ற தவறுகளைச் செய்யாதீர்கள் பெற்றோர்களே!

அவர்கள் உபயோகிக்கும் போது, நன்றாகத் தான் இருக்கும். பெருமையாகத் தான் தோன்றும். ஆனால், அதன் பின்வரும் பின்விளைவுகளை நீங்களும், உங்கள் குழந்தைகளும் சேர்ந்து தான் அனுபவிக்க வேண்டும்.

நாம் கொஞ்சம் கவனமாக இருப்போம்!

இனியபாரதி.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சர்வதேச தாய்மொழி பேசும் நாள்...

இன்று, சர்வதேச அளவில், தங்கள் தாய்மொழியில் பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நாள். இந்த நாளையும், இந்த நாள் வந்ததற்கான பின்னணியையும் படித்த போது வியந்தேன். முதல் முறை இதைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். இதைப் படித்த போது பெருமையடைந்தேன். நானும், என் தாய்மொழியில், அழகாக பேசவேண்டுமென்று நினைத்து, என் தங்கையிடம் சிறிதுநேரம் பேசிவிட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தேன்.

மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி சேனல்... பாடல் போடுவதற்கு முன் ஃபோனில் பேசுவார்களே!!! அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த பெண், தான் தமிழில் பேசப் போவதாகச் சொல்லி ஆரம்பித்தார். ஆரம்பித்த முப்பது நொடிகள் தான் அதைப் பார்க்க முடிந்தது. தமிழில் இந்த அளவிற்கு இவர் மட்டும் தான் பேசுவார் போல... நல்ல வேளை... பாரதியோ... வேறு கவிஞர்களோ... இவள் பேச்சைக் கேட்கவில்லை... கேட்டிருந்தால் தூக்குப் போட்டு இன்றே இறந்திருப்பார்கள்...

இதில்... நம் தாய்மொழிப்பற்று எப்படி இருக்கிறது பாருங்கள்... என் வகுப்பில் குழந்தைகளிடம் 'எத்தனை பேருக்குத் தமிழ் பிடிக்கும்?' என்று கேட்டேன். ஒரு மாணவன் மட்டும் கை உயர்த்தினான். 'ஏன் தம்பி உனக்குத் தமிழ் பிடிக்கும்?' என்றேன். 'என் அம்மா எனக்குத் தமிழ் கதைகள் சொல்லித் தருவார். அதனால் எனக்குப் பிடிக்கும்.' என்றான்.

இப்படித் தான் நம் தாய்மொழியை நேசிக்கிறோம்! வெளியிடங்களுக்குச் சென்றாலும், ஆங்கிலத்தில் உரையாடுவதையே விரும்புகிறோம்.
அயல்மொழி தேவைதான். ஆனால், தாய்மொழியின் மீதுள்ள பற்று குறையக்கூடாதே!

தன் தாய்க்கும், பெரியம்மாவிற்கும் உள்ள வித்தியாசம் தான் தாய்மொழிக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள வித்தியாசம்....
என்ன தான் பெரியம்மாவோ, சித்தியோ நம்மை வளர்த்தாலும், தாயானவள் காட்டக் கூடிய அன்பைக் காட்ட முடியாது. அதைப் போலத் தான், நம் தாய் மொழிப்பற்றும் இருக்க வேண்டும்!

இனிய இரவு வணக்கங்களுடன்...

இனியபாரதி.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

படித்ததில் பிடித்தது...

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்....

மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
சாந்தனுவாய்....

சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்..

முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
பாண்டுவாய்....

வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
சகுனியாய்...

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
குந்தியாய்...

குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்....

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்...

பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
துரியோதனனாய்...

கூடா நட்பு
கேடாய் முடியும்
கர்ணனாய்...

சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
பாஞ்சாலியாய்..

தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய்.....

பலம் மட்டுமே
பலன் தராது
பீமனாய்....

இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
அர்ஜூனனாய்....

சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகாதேவனாய்..

விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
அபிமன்யூ

நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்....

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

நான் செய்கிறேனா?

இன்று, எங்கள் ஆலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு, எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது, எதார்த்தமாக நான் எழுதிய ஒரு குறிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு ஃபாதர், 'நாம் சொல்வதற்கு முன் அதைச் செய்கிறோமா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்' என்றார். என் குறிப்பைப்பற்றிச் சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னார்.

ஆனால், அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை உணர்ந்தேன்.

நான் அதிக நேரம் உறங்குகிறேன்!
என் தங்கையைத் தூங்காதே என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை!

நான் காதலிக்கிறேன்!
மற்றவரைக் காதலிக்காதே என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை!

நான் நேரத்திற்குச் செல்வதில்லை!
மற்றவரை நேரத்திற்கு வரவேண்டுமென்று கட்டளையிட எனக்கு உரிமை இல்லை!

நான் நன்றாகப் படிப்பதில்லை!
மற்றவரைப் படி படி என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை!

நான் வேலை செய்வதே இல்லை!
மற்றவரை வேலை செய் என்று கட்டாயப்படுத்த எனக்கு உரிமை இல்லை!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இனி... மற்றவரைச் சொல்லும் முன், நான் அதைச் செய்கிறேனா என்று யோசித்த பின்னே சொல்ல வேண்டும்!

நன்றி தந்தையே!

இனியபாரதி.

சனி, 18 பிப்ரவரி, 2017

நானும் நீயும்!

அருகிலேயே அமர்ந்து என்னை ஏங்க வைத்தாய்!

அழைத்தாலும் வராமல் என்னைத் தனிமையில் விட்டாய்!

உன்னைக் காண என் மனம் ஏங்கிற்று!

அனதினமும் நீ என்கண்முன் மிளிர்கிறாய்!

இரவின் ஜாமத்தில் உன்னைத் தேடி அலைகிறேன்!

விடியற்காலையில் என்னை எழுப்பி விடுகிறாய்!

உன்னைக் காணும்போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன்!

உன்னைப் பார்க்காத நாளில்லை!

உன்னை நினைக்கவே தேவையில்லை!

உன்னை இழக்கும் அந்தத்தருணங்களில்
அழ ஆரம்பித்துவிடுகிறேன்!

ஆறுதல் தர நீயும் இல்லை!

ஆறுதல் பெற நானும் முன்வரவில்லை!

வேடிக்கையான உன் செய்கைகள் தான்
என்னை இன்னும் வாழ வைக்கின்றன!

உன் அருளின்றி நானில்லை!

நானும் நீயும் இல்லாமல் என் நாளில்லை!

இனியபாரதி.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

கர்வம் தேவையோ!

சில நேரங்களில், தோழிகளுக்குள், சகோதரிகளுக்குள் கொஞ்சம் போட்டி, பொறாமை வருவதுண்டு. அவள் அழகாக இருக்கிறாள்... இவள் இந்த வகையான உடைகள் எல்லாம் வைத்திருக்கிறாள்.... என்று நமக்கு நாமே மற்றவர்களைப் பற்றிப் பேசிக்கொள்வோம்.

திருமண வயதை நெருங்கும் போது, எல்லா ஆண்களும் 'எனக்கு அழகான, படித்த, வேலை பார்க்கும் பெண் வேண்டும்' என்றும், எல்லா பெண்களும் 'எனக்கு அழகான, அறிவான, நிறைய சம்பாதிக்கும் ஆண் வேண்டும்' என்றும் நினைப்பது சகஜம் தான்.

ஆனால், எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை... அப்படி அமைந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை செவ்வனே வாழ்ந்தால் நலமே!

நிறம், பணம் இவைகளை விட குணம் முக்கியமே... நான் அதிகமாக என்னுடன் பழகுபவர்களிடம் பார்ப்பது இதுதான்.. கொஞ்சம் சிவப்பாக இருந்தால் இருக்கும் மரியாதை, கொஞ்சம் நிறம் குறைவாக இருப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை...

இதை நிறைய மாணவர்களும் என்னிடம் சொல்லிப் பார்த்திருக்கிறேன்.

ஒருவேளை நாம் அழகானவர்களாக இருக்கலாம்.. அதற்காக நம்முடன் பழகும் அனைவரும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் தவறு தான்..

இப்போதெல்லாம் ஒரு பழக்கம் வந்துவிட்டது... பையன்கள், தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகும் பெண் கலராக இருக்க வேண்டும் என்று முக்கிய கண்டிஷன் போடுகிறார்கள். ஏனென்றால், அப்போது தான் தன் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியுமென்று!

எப்போது தான் இந்தக் கலாச்சாரம் மாறும் என்று தெரியவில்லை!

ஆனால், தன் நிறத்தை வைத்து யாரும் கர்வப்படக் கூடாது என்பதே நான் சொல்ல வருவது!

இனிய இரவு வணக்கங்களுடன்...
இனியபாரதி.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

அச்சமில்லை அச்சமில்லை...

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

புதன், 15 பிப்ரவரி, 2017

கருப்புக் காய்கறி...

சத்துள்ள உணவுப் பொருள்

நீ மட்டுமே என்று

உன்னை நம்பி வரும்

அனைவரையும்

ஏமாற்றுவது மட்டுமே

உன் தொழிலா?

உன்னை என்னோடு சேர்த்து

இந்தக் குட்டிப் பிஞ்சுக் குழந்தைகளும் தான்

உண்கிறார்கள்!

தெரிகிறதா? தெரியவில்லையா!

உன்னால் இனி

வரப்போகும் பேரழிவுகள்

எத்தனை எத்தனையோ?

வுயதானவர்கள் மீது கூட

உனக்கு இரக்கமில்லை!

எங்களை சீக்கிரம் இந்த உலகத்தைவிட்டு

அனுப்புவதில் உனக்கு

ஏன் இவ்வளவு ஆர்வமோ!

உன்னைப் பற்றிக் கேள்விப்படும்

ஒவ்வொரு செய்தியும்

உன் மேல் எரிச்சல் கொள்ளச் செய்கிறது!

நீ எப்போது தான் தூய்மையாவாய்!

இல்லை!

நாங்கள் எப்போது தூய உணவு உண்போம்!

அந்த நாளுக்காய் காத்திருக்கிறோம்!

இனியபாரதி.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

காதலர் தினம்...

இன்று ஒரு அழகான ஹிந்தி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாளில் நான் இந்த படத்தைப் பார்த்தது, இந்த படத்தைப் பற்றிப் பேசத் தூண்டுகிறது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த கதாநாயகி, தன் சித்தப்பாவின் வீட்டில் வளர்கிறாள். இவள் மிகவும் அழகானவள் என்பதால் இவள் சித்திக்கு இவளைப் பிடிக்காது. ஆனால், இவள் வீட்டிலுள்ள அனைவர் மேலும் அன்புடன் இருப்பாள். இவளும், சித்தியின் மகளும் வளர்ந்து பெரியவளான பிறகு, இவளுக்கு மணமகன் தேடும் படலம் ஆரம்பிக்கிறது. அது சித்திக்குப் பிடிக்கவில்லை... தனக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.. அவளை எப்படி கரைசேர்ப்பது என்று சித்தப்பாவைத் திட்டுகிறாள்... அந்த நேரத்தில் டெல்லியிலிருந்து, ஒரு பெரிய இடத்தில் சம்பந்தம் அமைகிறது. கதாநாயகன் அவளைப் பார்க்க வருகிறார். இருவருக்கும் பிடித்துவிடுகிறது. திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், இது அவள் சித்திக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதனால் அவளை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய நாள் கூட, அவள் சித்தி எந்த ஒரு வைபவத்திலும் கலந்து கொள்ளாமல் இருப்பாள். இதைப் பார்த்து அழுதுகொண்டே தன் அறையில் படுத்திருப்பாள், நாயகி. திடீரென எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்தில் அவளும், சித்தியின் மகளும் மாட்டிக் கொள்வார்கள். கதாநாயகி தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் தங்கையைக் காப்பாற்றுவாள். அதில், அவள் முகம் தவிர உடலெங்கும் தீக்காயம் ஆகிவிடும். அடுத்த நாள் திருமணம். ஆனால், அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பாள். தன் தவறை உணர்ந்து சித்தி அழுவாள். கதாநாயகன் அவள் உடல் முழுவதும் காயப்பட்டிருந்தாலும், எனக்கு இவள் தான் வேண்டும் என்று மருத்துவமனையிலேயே இவளைத் திருமணம் செய்து கொள்வான்..

இது தான் இந்தப் படத்தின் சுருக்கம்...

எனக்கு அந்தக் கதாநாயகன்,கதாநாயகியிடம் இரண்டு விசயங்கள் பிடித்தன...

ஒன்று... கதாநாயகிக்குத் தன் குடும்பத்தின் மீதிருந்த அன்பு...

என்ன தான் சித்தப்பா குடும்பமாக இருந்தாலும், அவர்கள் மீது அவள் காட்டிய அன்பு அளவிட முடியாதது.

இரண்டு... கதாநாயகனுக்குக் கதாநாயகியின் மீதிருந்த அன்பு...

கதாநாயகியின் அழகை மட்டும் பார்த்து, அவன் விரும்பியிருந்தால் கண்டிப்பாக, அவன் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்திருக்க மாட்டான். ஆனால், அவன் அவளை முழுமையாக நேசித்தான். என்ன ஆனாலும், அவள் தான் என்னவள் என்பதில் உறுதியாக இருந்தான்.

என்ன தான் கதையாக இருந்தாலும்... இந்த இருவரும் தாங்கள் கொண்டிருந்த அன்பில் நிலைத்திருந்தனர்.

படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

உலகத்தில் பணம், பொருள், பதவி இவைகளைத் தாண்டி அனுபவிக்க எவ்வளவோ விசயங்கள் உள்ளன. ஆனால், நம் உள்ளம் நோக்குவது என்னவோ இந்த மூன்றை மட்டும் தான்...

இந்தக் காதலர் திருநாளில், அன்பின் அர்த்தத்தை உணர வழி தேடுவோம்....

நாமும் ஏனோ தானோ வென்று நம் வாழ்க்கையை நடத்தாமல்...

அன்பாய்...

அன்பிற்காய்...

அன்புடன்...

நம் அன்பிற்குரியவர்களிடம்...

இருப்போம்!!

இனிய காதலர் தின நல் வாழ்த்துகள்!

இனியபாரதி.