வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அவனின் ஆதரவற்ற இரவுகள்....

எட்டரை மணிக்கு எதிர்பார்த்து காத்திருந்தேன்...
ஒன்பது மணிக்கு ஏக்கத்தில் விழித்திருந்தேன்...
ஒன்பதரை மணிக்கு அலைபேசியை நோக்கியிருந்தேன்...
பத்து மணிக்கு பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்..
பத்து மணி நான்கு நிமிடங்களில் வந்த உன் குறுஞ்செய்தி
சற்றே அதிருப்தியாய் என் மனதில்..
ஒன்றும் பதில் கூறாமல் கடத்திய இருபத்தைந்து நிமிடங்களில்
ஒரு நிமிடம் கூட என் வேலையைச் செய்யவில்லை!
இறுதியாக நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதில் கூறாமல்
நீ கடத்திய அந்த பத்து நிமிடங்கள்..
கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை..
இரவு வணக்கத்திற்குக் கூட பதில் கூற முடியவில்லையா
என்ற எனக்கு இன்னும் வேலையில் இருக்கிறேன் என்ற பதில்
திருப்தியைத் தரவில்லை....
காத்திருந்தேன்... காத்திருந்தேன்...
பதினைந்து நிமிடங்களாய்...
வேறொன்றும் உன்னிடமிருந்து வரவில்லை...
தவித்தது போதும் உறங்கச் செல்லலாம் என்று நினைத்து
இறுதி குறுஞ்செய்தி அனுப்பினேன்..
அதற்கும் பதில் வரவில்லை...
தவித்தேன்... தவித்துக் கொண்டே இருந்தேன்....
அழுதேன்.... அழுதுகொண்டே இருந்தேன்....
ஏங்கி ஏங்கி என் மனம் ஆறுதலடைய மறுத்தது...
கடைசியில் கடிகாரம் எனக்குச் சொன்னது
மணி ஒன்றரை என்று..
இனியாவது சிறிது ஓய்வெடுத்துக் கொள் என்றது...
புரண்டு படுத்தேன்... குப்புறப்படுத்தேன்...
ஒருசாய்த்துப் படுத்தேன்...
வேறு ஏதாவது வழி இருக்கிறதா என் 'உறக்கத்திற்கு?'
எழுந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்...
காரணம் அவள் மட்டுமே என்பது மட்டும் தெளிவு...
ஏன் அழுகிறாய் என்று கேட்கக் கூட ஆளில்லா நிலை!
அழுது முடித்த எனக்குக் கடிகாரம் காட்டிய நேரம்
இரண்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்!
இனியாவது உன் கண்களுக்குக் சற்று ஓய்வு கிடைக்குமா
என்று என்னைப் பார்த்து என் தலையணை கேட்டது!
சரியென்று சற்றே தலை சாய்த்தான் அவன்....
அடுத்த நாளுக்கான சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்டு
அவன் எலும்பில் ஒட்டியிருந்து கொஞ்ச நொஞ்ச சக்தியும்
இழக்கப்பட்டு பொலிவிழந்த சந்தன மரமாய் கிடக்கிறான் அவன்...
ஆறுதல் தரப்போவதென்னவோ அடுத்த நாளுக்கான காலண்டர் கிழிப்பு மட்டுமே...
இன்றாவது என்னுடன் பேசுவாளா என்று ஏங்கிப்போய் தான் அதையும் கிழிக்கிறான்!!!
எத்தனை இரவுகள் உன் அழுகை உனக்கு ஆறுதலளிக்கப் போகின்றதென்று
தெரியவில்லை எனக்கு...

ஆழ்ந்த வருத்தங்களுடன்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: