ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

பத்து இளைஞர்கள்...

'பத்து இளைஞர்களைக் கொடுங்கள்.. உலகத்தை மாற்றி அமைக்கும் சக்தி அவர்களிடம் இருக்கிறது'  என்றார், சுவாமி விவேகானந்தர். இது வெறும் வாய் வார்த்தை தான்.. நடைமுறையில் இதுவெல்லாம் ஒத்து வராது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், உண்மையில் இளைஞர்களிடம் உள்ள சக்தி, செயல் வடிவம் பெறும் போது தான் நம்மால் உணர முடிகிறது. செயல் வடிவம் பெற பத்து பேர் தேவையில்லை.. ஐந்து பேர் ஒற்றுமையாக இருந்தாலே போதும் என்பது தான் என் கருத்து.

அந்தக் காலங்களில் தொலைத் தொடர்பு வசதிகளின்றி தபால் மூலமும், ஓலைகள் மூலமுமாக மட்டுமே தகவல்கள் பரிமாறப்பட்டன. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் தன் கணவனைத் திட்ட வேண்டுமென்றால் கூட, மனைவி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் போட்டுத் தன் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்கிறார். நேரடியாக எதுவும் நடைபெறுவதில்லை... சில நேரங்களில் ஒரு வீட்டில் இருந்து கொண்டு வாட்ஸ்ஆப் மூலம் தன் மகனையோ, மகளையோ சாப்பிட அழைக்கும் காலம் வந்துவிட்டது. இப்படி இருக்கையில் இந்த கால இளைஞர்களை எப்படி நம்புவது...
ஓவியாவைக் காப்பாற்றுவதற்கு ஓட்டுப் போடும் நாம்..
நம்மைக் காப்பாற்றப் போகும் தலைவர்களைச் சரியான முறையில் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை...
நமக்கும் நம் நாட்டில் நடக்கும் ஊழல், ஏமாற்றங்கள், இலஞ்சங்கள் எல்லாம் தெரியும் தான்..
இருந்தாலும் எனக்கென்ன என்ற மெத்தன நிலை...
என்னால் என் வேலையை விட்டுச் செல்ல முடியாது... டீவி பார்க்காமல் என்னால் இந்த வேலைகளைச் செய்ய முடியாது... தொலைபேசியில் பேசாமல் என்னால் இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்க முடியாது... இப்படிப் பற்பல காரணங்களை நாம் கூறுகிறோம்...
காரணங்கள் அதிகரிக்க அதிகரிக்க நம்மிடம் கண்ணியம் குறைகின்றது..
இப்படிப்பட்ட சமூகத்தில் ஆயிரம் இளைஞர்களைக் கொடுத்தால் கூட ஒன்றும் செய்ய இயலாது.
என்று தான் நம் நாட்டிற்கு விடிவு காலமோ?
இன்னொரு விவேகானந்தருக்காய் காத்திருக்க முடியுமா?

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: