செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

என் அன்பு தாத்தாவிற்கு...

என் அன்னைக்கு உயிர் கொடுத்த நீர்
சிந்திக்க இயலா சிறுவயதில்
எங்களுக்கு நற்பண்புகளைக் கற்றுக் கொடுத்தீர்!
ஐம்பது பைசாவைப் பார்த்திராத எங்களுக்கு
நீங்கள் கொடுத்த ஐந்து ரூபாய்
ஒரு இலட்சமாகத் தான் தெரிந்தது அன்று!
ஐந்து ரூபாயை ஐம்பது நாட்கள் பாதுகாத்து
கடைத்தெருவில் வாங்கிச் சாப்பிட்டதும்
ஞாபகம் இருக்கிறது!
அதிகமாகச் சந்திக்கவில்லை என்றாலும்
என்றும் உங்கள் அன்பில் மட்டும் குறைவே
வந்ததில்லை எப்படி?
வருடங்கள் கடந்து சென்றாலும்
எங்களுக்காய் நீங்கள் சேர்த்து வைத்த
ஐம்பது ரூபாய் நோட்டுக்கு
ஈடு இணை ஏது?
பெயர்த்திகளை வேலை வாங்காதே
என்று நீங்கள் ஆச்சியைத் திட்டும் போது
நாங்களும் சேர்ந்து ஆச்சியைத் திட்டியது
இனி நினைத்தாலும் வருமா என்ன?
என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று
எங்களை வற்புறுத்தி எங்களுடன் எடுத்துக் கொண்டதைப்
பார்க்கும் போதெல்லாம்
கண்களில் நீர் தேங்கி நிற்கின்றது!
அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும்
நன்றாகப் படிக்க வேண்டும்
என்றெல்லாம் நீங்கள் அன்று எங்களுக்குத் தந்த
அறிவுரைகளை எங்கள் பேரன் பேத்திகளுக்குச் சாெல்ல
நாங்கள் இருப்போமா என்று தெரியவில்லை!
அன்று உங்களைக் கவனிக்க முடியாமல் போன நாங்கள்
இன்று வருடாவருடம் உங்களுக்குப் பிடித்ததை
வாங்கி உங்களுக்குப் படைக்கிறோம்!
உங்களைப் போன்றொரு பெரியவரின் நிழலில்
நாங்கள் வளர்ந்தது எங்களுக்கு மகிழ்ச்சியே!!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: