அழகாய் ஆரம்பித்த இந்த வருடம்... அழகாய் வழிநடத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது....
இன்றோடு எட்டு மாதங்களைக் கடந்துவிட்டோமென்றால் நம்ப இயலவில்லை...
சற்று திரும்பிப் பார்த்தோமென்றால் சொல்வதற்கென்று ஒன்றுமில்லாதது போல் தெரிகிறது...
எப்படி எட்டு மாதங்கள் கடந்ததென்பது பலரின் எண்ணமாகக் கூட இருக்கலாம்!
நாளை ஒன்பதாவது மாதத்தின் முதல் நாள்...
இந்த வருடம் முடிய இன்னும் நான்கே மாதங்கள் உள்ள நிலையில்...
நம்மைப் பற்றியும்...
நம் குடும்பத்தைப் பற்றியும்...
நம் சமூகத்தைப் பற்றியும்...
நம் ஊரைப் பற்றியும்....
நம் மாநிலத்தைப் பற்றியும்...
நம் நாட்டைப் பற்றியும்...
நம் உலகைப் பற்றியும்....
சற்று சிந்திப்போம்...
ஊரில் உள்ள அரசியல்வாதிகளும், தேசத்தலைவர்களும் நமக்குச் செய்கின்ற கொடுமை பத்தாது என்று இந்த நீலத்திமிங்கலம், கருப்புத் திமிங்கலம் என்று மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்க ஏராளமாக ஊடகங்கள் வந்து விட்டன...
இதை உருவாக்கியவர்களின் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது..
எங்கே இருக்கிறது என் சமுதாயம்?
எங்கே சென்றது இந்த மனித இனத்தின் அன்பு? பொறுமை? சகிப்புத்தன்மை?
புதிதாகத் தொடங்க இருக்கும் மாதத்தில் இருந்தாவது இந்த மூன்று குட்டி தேவதைகளை நம் வீட்டில் வரவேற்று நம்முடன் வைத்துக் கொள்வோம்...
வருகின்ற நாட்கள் நமக்கும், நம் சுற்றத்திற்கும் இனிதாய் அமைய வாழ்த்துகள்...
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
வியாழன், 31 ஆகஸ்ட், 2017
மூன்று குட்டித் தேவதைகள்...
புதன், 30 ஆகஸ்ட், 2017
ஆழமான வரிகள்...
#ஏழை...உழைத்தும் கடைசி வரை ஏழையாகவே இருக்கிறான்.
#பணக்காரன்...கடைசி வரை ஏழையின் உழைப்பிலே வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.
#இராணுவ_வீரன்...இவர்கள் இருவருக்காகவும் எல்லையில் நின்று பாதுகாக்கிறான்.
#வரி_செலுத்துவோர்...இந்த மூவருக்கும் சேர்த்தே வரி செலுத்துகிறான்.
#சோம்பேறி...இந்த நால்வருக்கும் சேர்த்தே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்.
#குடிகாரன்...இந்த ஐவருக்கும் சேர்த்தே குடித்துக் கொண்டிருக்கிறான்.
#வட்டிக்_கடைக்காரன்...இந்த ஆறு பேரிடம் இருந்தும் பணத்தை சுரண்டுகிறான்.
#வக்கீல்...இந்த ஏழு பேரையும் தவறாக வழிநடத்துகிறான்
#மருத்துவர்...இந்த எட்டு பேரிடம் இருந்தும் வசூல் செய்து விடுகிறான்.
#வெட்டியான்...இந்த ஒன்பது பேருக்கும் குழி வெட்டுகிறான்.
#அரசியல்வாதி,இந்த பத்து பேரின் வாழ்க்கையையும் சேர்த்தே வாழ்கிறான்.
மார்கஸ் தூலியஸ் சீசரோ என்னும் ரோமானியர் அந்த காலத்தில் சொன்னது இன்றும் கணகச்சிதமாக பொருந்துகிறது.
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017
கடைசித் தருணம்...
இன்று நான் கண்ட காணொளியில், என்னை மிகவும் பாதித்த விசயம்...
மலைக்கரடி ஒன்று காட்டிலிருந்து வெளிவந்த நிலையில், வெளியில் நின்று கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை இழுத்துச் சென்று, ஒரு இடிந்த கட்டிடத்தின் அருகில் நின்று, அவனைச் சாப்பிட ஆரம்பித்தது. அதனருகில் செல்ல எவருக்கும் தைரியமில்லை... அதை விரட்ட வழியும் தெரியவில்லை... அவனைக் காப்பாற்றவும் முடியவில்லை....
அந்த இளைஞன் நடப்பதறியாது திகைத்துப்போய், அதன் பிடியில் மயங்கிய நிலையில் இருக்கிறான். அருகிலிருந்தவர்கள் அவனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். யாராலும் முடியவில்லை.... அந்த இளைஞனைப் பற்றிய நிலையில், அந்தக் கரடி காட்டிற்குள் சென்று விட்டது.
இப்போது அங்கு நின்றிருந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
அந்த இளைஞனின் நிலை என்னவாயிருக்கும்?
அந்த இளைஞனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
அந்த இளைஞனாக நான் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும்?
அந்தக் கரடியை எதிர்த்து சண்டையிட்டு, என்னால் தப்பித்திருக்க முடியுமா?
அந்தக் காணொளியைக் கண்டதும் எனக்கும் பயம் வந்து விட்டது... ஒரு நிமிடம் எதுவுமே செய்ய வேண்டுமென்றுத் தோன்றவில்லை...
அந்த இடத்தில் ஒருவேளை நான் இருந்திருந்தால்... அன்றோடு என் நிலை முடிந்திருக்கும்...
இதற்காகத் தான் இவ்வளவு படித்தேனா?
இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து வேலை செய்கிறேனா?
இவ்வளவு கஷ்;;டங்களை என் அன்பிற்குரியவர்களுக்குக் கொடுக்கிறேனா?
என் நண்பர்களைப் பகைத்துக் கொள்கிறேனா?
இப்படிப் பலவாறு எண்ணங்கள் தோன்றியது.
ஒருவேளை அந்த இடத்தில், என் அன்பிற்குரியவர் இருந்திருந்தால்....
அது... தன் இறப்பைவிடக் கொடுமையானது...
தன் அன்பரின் இறப்பைக் கண்முன் கண்டு உயிருடன் இருப்பது...
இந்தக் காணொளியை எடுத்தவர் யாரென்றுத் தெரியவில்லை... ஆனால், அந்த நேரத்தில் அவனைக் காப்பாற்ற முயற்சிக்காமல், இதை எடுத்த அந்த மனிதாபிமானமிக்க நம் நண்பருக்கு கட்டாயம் வாழ்த்துக் கூற வேண்டும்....
ஒரு நிமிடம் கூட நமக்குச் சொந்தமில்லாத உலகில் வாழ்கிறோம்..
இதில் வீண் பெருமை எதற்கு?
பிடிவாதம் எதற்கு?
கோபம் எதற்கு?
கண்ணீர் எதற்கு?
கவலை எதற்கு?
நம்மால் முடிந்தவரை அன்பைப் பொழிந்து, ஆறுதலடைந்து வாழ்வோம்...
இனியபாரதி.
திங்கள், 28 ஆகஸ்ட், 2017
உயரப் பறக்க....
சிட்டுக் குருவி ஒன்று...
அந்தக் காட்டைச் சுற்றி வந்த பருந்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தது..
குருவிக்குத் தன்னை அறியாமல்
அந்தப் பருந்தின் மீது காதல் வந்தது...
அந்தப் பருந்திடம் சொல்ல முடியாமல்
தூர நின்று அதை இரசித்துக் கொண்டு வந்தது...
காலஓட்டத்தின் கடைசியில்
அந்தப் பருந்தைச் சந்தித்து விசயத்தைக் கூறிவிட
வேண்டுமென்று முடிவெடுத்தது...
ஒரு நாள்....
பருந்து ஆற்றங்கரையில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தது...
அதனருகில் சென்ற குருவி அதைப் பார்த்து 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றது...
இதைக் கேட்;ட பருந்து, அந்தக் காடே அதிரும்அளவிற்கு வாய்விட்டு சிரித்தது...
சிரித்து விட்டு அந்தக் குருவியிடம்....
'உனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று வானைத் தொடுமளவு உயரப்பறக்கும் என்னை, நீ விரும்புவதாகக் கூறுவாய்? நான் அவ்வளவு சிறுமைப்பட்டவனா?' என்றது...
அதைக் கேட்ட சிட்டுக் குருவி துக்கம் தாளாமல் ஆற்றங்கரைக்குள் மூழ்கித் தன் உயிரை விட்டது..
அதைப் பார்;த்து அதிர்ந்துபோன பருந்து.... 'காதலுக்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா? அதை அறியாமல் வீணாக ஒரு உயிரைக் கொன்று விட்டோமே! உயர்வு, தாழ்வு பார்த்து வருவதில்லை காதல்...' என்பதை உணர்ந்தது...
இருந்தும்... அந்தச் சிட்டுக்குருவியின் இழப்பு பருந்தை வெகுநாட்கள் வாழ விடவில்லை...
அதுவும் தன் உயிரை மாய்த்துக் கொண்டது...
இது தான் பருந்திற்கு சிட்டுக் குருவியின் மீது வந்த காதல்....
இருக்கும் போதே அன்பை அனுபவித்து விடுவது நல்லது.. பின் வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை...
இனியபாரதி.
ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017
அரியது தான்...
தாலாட்டுப் பாட கொடுத்து வைத்திருக்கத் தான் வேண்டும்..
அதுவும் இரவு நேரங்களில் குழந்தையைத் தன் அருகில்
வைத்துக் கொண்டு...
அது உறங்கும் அழகை இரசிப்பது...
அது நம் கன்னங்களை வருடும் போது...
இரவின் நிசப்தம் அதன் அழகை இரசிக்க நம்மைத் தூண்டும்...
அதன் மூச்சுக் காற்றின் உஷ்ணத்தால்
நம் முகம் மலரும்....
இப்படி அழகானதொரு வாய்ப்பை எனக்குக் கொடுக்கும்
என் மகள் அம்முவிற்கு....
ஆயிரம் முத்தங்கள்...
இனியபாரதி.
சனி, 26 ஆகஸ்ட், 2017
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்...
👍👌👌👏👏
👉 எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை......
1. புத்தகங்களைத் துணை கொள்.
2. உடலுழைப்பை அதிகரி.
3. சமூகம் புறக்கணித்தவற்றைக் கைவிடு.
4. குளிர்ந்த நீரில் குளி.
5. கொஞ்சமாய்ச் சாப்பிடு.
6. தியானம் கைக்கொள்.
7. இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.
10. எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
11. ஆத்திரம் அகற்று.
12. கேலிக்குப் புன்னகை தா.
13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
14. நட்புக்கு நட்பு செய்.
15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
16. அலட்சியப்படுத்தினால் விலகி நில்.
17. அன்பு செய்தால் நன்றி சொல்.
18. இதமாகப் பேசு.
நீ ஜெயிப்பாய்.... இது நிச்சயம் ! ! !
வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய்.
இது சத்தியம்.
# படித்ததில் பிடித்தது
👍👌👌👏👏
வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017
சிந்திக்க இயலா சில நிமிடங்கள்...
காற்றில் மிதந்து வரும்
பல்வேறு வகையான வாகனங்களின் ஓசைகள்...
தன் இருசக்கரவாகனத்தின் ஓசை வேறு...
நிதானமாய் ஓட்ட முடியாமல்
ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு
ஒரு லாரியின் பின்புறம்
மெதுவாக வாகனம் நகர்ந்து கொண்டிருக்கிறது!!!
மனதின் எண்ணம் மட்டும்
'எனக்கு விபத்து நேரக் கூடாதா?'
இனியபாரதி.
வியாழன், 24 ஆகஸ்ட், 2017
எல்லாமுமாய் நான்....
பிறப்பிலிருந்து பணக்காரியாய் இல்லாவிட்டாலும்
நீ கேட்பதை வாங்கிக் கொடுக்க முடியாத வீட்டில்
பிறக்காமல் இருந்தது நீ செய்த பாக்கியம்!!!
விளையாடுவதற்கு பொம்மை கிடைக்காமல்
அழகாய் ஒரு குட்டிப் பாப்பா கிடைத்தது
உனக்குக் கிடைத்த வரம்!!!
கதை சொல்லி, அறிவுரை கூறி வளர்க்க
தாத்தா, ஆச்சி கிடைத்தது மற்றொரு வரம்!!!
பாசத்தைப் பகிர்ந்திட நல்ல நண்பர்கள் கிடைத்தது...
அண்டை வீட்டாரின் அசையாத அன்பு...
இறைவன் அருளால் அனைத்தும் நிறைவாய்...
இனியபாரதி.
புதன், 23 ஆகஸ்ட், 2017
சில வரிகள்....
எவ்வளவானாலும்...
ஆயிரம் நாட்கள் கூட காத்திருப்பேன்...
நீ என்னுடன் நேரம் செலவிடுவாய் என்று சொன்னால்...
இரவெல்லாம் விழித்திருப்பேன்
நீ என்னுடன் உரையாடுவாய் என்று சொன்னால்...
நீர்த்துளி...
பச்சை நிறமான என்னை
தன் வெள்ளைத் துளிகளால் நிரப்பி
என்னை அழகு பார்க்கும்
என் காதலன்!!!
இனியபாரதி.
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017
என் அன்பு தாத்தாவிற்கு...
என் அன்னைக்கு உயிர் கொடுத்த நீர்
சிந்திக்க இயலா சிறுவயதில்
எங்களுக்கு நற்பண்புகளைக் கற்றுக் கொடுத்தீர்!
ஐம்பது பைசாவைப் பார்த்திராத எங்களுக்கு
நீங்கள் கொடுத்த ஐந்து ரூபாய்
ஒரு இலட்சமாகத் தான் தெரிந்தது அன்று!
ஐந்து ரூபாயை ஐம்பது நாட்கள் பாதுகாத்து
கடைத்தெருவில் வாங்கிச் சாப்பிட்டதும்
ஞாபகம் இருக்கிறது!
அதிகமாகச் சந்திக்கவில்லை என்றாலும்
என்றும் உங்கள் அன்பில் மட்டும் குறைவே
வந்ததில்லை எப்படி?
வருடங்கள் கடந்து சென்றாலும்
எங்களுக்காய் நீங்கள் சேர்த்து வைத்த
ஐம்பது ரூபாய் நோட்டுக்கு
ஈடு இணை ஏது?
பெயர்த்திகளை வேலை வாங்காதே
என்று நீங்கள் ஆச்சியைத் திட்டும் போது
நாங்களும் சேர்ந்து ஆச்சியைத் திட்டியது
இனி நினைத்தாலும் வருமா என்ன?
என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று
எங்களை வற்புறுத்தி எங்களுடன் எடுத்துக் கொண்டதைப்
பார்க்கும் போதெல்லாம்
கண்களில் நீர் தேங்கி நிற்கின்றது!
அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும்
நன்றாகப் படிக்க வேண்டும்
என்றெல்லாம் நீங்கள் அன்று எங்களுக்குத் தந்த
அறிவுரைகளை எங்கள் பேரன் பேத்திகளுக்குச் சாெல்ல
நாங்கள் இருப்போமா என்று தெரியவில்லை!
அன்று உங்களைக் கவனிக்க முடியாமல் போன நாங்கள்
இன்று வருடாவருடம் உங்களுக்குப் பிடித்ததை
வாங்கி உங்களுக்குப் படைக்கிறோம்!
உங்களைப் போன்றொரு பெரியவரின் நிழலில்
நாங்கள் வளர்ந்தது எங்களுக்கு மகிழ்ச்சியே!!!!
இனியபாரதி.
திங்கள், 21 ஆகஸ்ட், 2017
Impressive Story....
*ஒரு குட்டி கதை*
ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.
அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார். “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.
“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங். அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.
“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.
“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.
“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம். என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார். இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.
*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த *சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங்* ஆனார்.*
வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.
அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?
*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*
தினை விதைத்தவன் தினை அறுப்பான். நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
வாழ்க்கையில்
*பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்*
*யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்*
*யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு*
*யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு*
*சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்*
இறுதியாக இதோ ஒரு சின்ன ஐரிஷ் வாழ்த்து எல்லா நண்பர்களுக்கும்:
*உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்*
*உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்*
*உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்*
*ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்*
*எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கருகில் இருக்கட்டும்*
*இயற்கையும் இறைவனும் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்*
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017
படித்ததில் இரசித்தது....
*அம்மா நீ அற்புதம்!
*✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*
*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்*.
*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.*
*அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.*
*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*
*✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.*
*✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.*
*✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!*
*✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.*
*✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'*
*✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்*
*✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்*
*✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!*
*✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக்* *கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித்* *தந்த அந்த (தொட்டில்)* *வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.*
*நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு*
*✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?*
*✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.*
*✏ ஆயிரம் கைகள் என்* *கண்ணீரைத் துடைத்துப்*
*போனாலும், ஆறாத* *துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.*
*✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.*
*✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!*
*✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!*
*✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை*
*என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை*.
*✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.*
*✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை*.
*✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!*
*✏ 'அம்மா...!*' *அன்று நம்* *தொப்புள்கொடியை* *அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின்* *தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு* *விழா ரிப்பன்!*
சனி, 19 ஆகஸ்ட், 2017
இருபத்தைந்து பைசா...
தொண்ணூறுகளில் நான் உலா வராத கடைகளே இல்லை...
இன்று என்னைத் தொட்டு கூடப்பார்க்க ஆள்கள் இல்லை...
ஐந்து அப்பளங்கள் கையில் வாங்கி சொறுகிக் கொள்ள நான் போதும்...
எங்கு சென்றாலும் சில்லரையாக நான் தான் இருப்பேன்..
இப்போது என்னைச் சேகரித்து தான் வைக்கிறார்கள்.. ஒரு வேண்டாத பொருளாய்..
இதே போல் தான்...
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும்...
ஆரம்பித்தில் பெயர் பெற்று வியங்கிய ஒன்று
இப்போது
இடம் தெரியாமல் அழிந்து விடுகிறது!!!!
உணர்ந்து வாழ்வோம்!!!
இனியபாரதி.
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
சாதிக்க வேண்டி...
வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என்று அனதினமும் காலையில் நினைத்துக் கொண்டு தான் எழுகிறேன்!
இரவு உறங்கச் செல்லும் போது தான் தெரிகிறது
நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததென்று!
இருந்தும் விடாமல் துரத்துகிறேன்...
வழியில் பயம்.. சோர்வு... கவலை...
இப்படிப் பலவித போராட்டங்கள்..
விடாமல் துரத்துகிறேன்...
என்றாவது ஒருநாள் உன்னைத் தொட்டுவிடுவேனென்று!
இனியபாரதி.
வியாழன், 17 ஆகஸ்ட், 2017
கவிதையில் கலவரங்கள்...
கலவரம் உன்னில் மட்டும் இல்லை...
என்னை உருவாக்கக் கையாளும் வார்த்தைகள் தங்களுக்குள்
கலவரத்தில் ஈடுபடுகின்றன...
என் மெட்டு இசையில் கலவரத்தை உண்டாக்குகிறது...
என் வர்ணனைகள் அவளுக்குள்
கலவரத்தை ஏற்படுத்துகின்றன...
என் கோர்வைகள் அவனுக்குள்
கலவரத்தை ஏற்படுத்துகின்றன...
கலவரம் இல்லா
காதல் செய்ய
கவிதையை நேசிக்கிறேன்...
இனியபாரதி.
புதன், 16 ஆகஸ்ட், 2017
செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017
எதுவும் எளிதல்ல....
வேலை செய்பவனுக்கு வேலை செய்யாதவனைப் பார்த்தால்
கோபமாக வரும்!
வேலை செய்யாதவனுக்கு வேலை செய்பவனைப் பார்த்தால்
பொறாமையாக வரும்!
வேலை செய்யாமல் இருப்பதும் எளிதல்ல...
வேலை செய்வதும் சுலபமில்லை...
எதுவுவே எளிதல்ல...
அவரவர் நிலையில்.. அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல்
சுமைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன....
இனியபாரதி.
திங்கள், 14 ஆகஸ்ட், 2017
எது சுதந்திரம்...
சுதந்திரம் பெற்று விட்டோம் என்று
வருடாவருடம் ஆகஸ்ட் பதினைந்தாம் நாளைச்
சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்..
என்னைப் பொறுத்தவரை நாம் பெற்றது
சுதந்திரமல்ல...
சுதந்திரம் என்பது...
என் சுயசிந்தனையைப் பயன்படுத்தி
பிறர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது...
மற்றவர்க்கு அடிமையாய் இருந்து தலையாட்டுவது அல்ல...
என் சொந்த விருப்பு வெறுப்புகளில் யாரும் தலையிடாமல்
பார்த்துக் கொள்வது..
மற்றவரின் விருப்பப்படி வாழ்வது அல்ல...
என் கடமையை நானே செய்வது..
மற்றவர் பார்க்கின்றனர் என்பதற்காகச் செய்வது அல்ல..
என்னிடம் உள்ளவற்றை வைத்து நான் வாழ்வது...
மற்றவர்க்காக ஊரெல்லாம் கடன் வாங்கி
பகட்டைக் காட்டுவதற்கு அல்ல...
பெரியவர்களை மதித்து வாழ்வது...
என் மீது உனக்கு எந்த உரிமையும் இல்லை என்று
அவர்களை இழிவுபடுத்துவது அல்ல...
தேவைகளில் உள்ளவர்களுக்குச் சரியான நேரத்தில்
சரியான உதவி கிடைக்கப் பெறுவது..
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இந்த நாடு என்பது அல்ல...
இப்படி...
நம் நாட்டு நடப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனால்
நாம் அந்நியர்களுக்கே அடிமைகளாய் இருந்திருக்கலாம்
என்ற எண்ணம் தான் தோன்றுகிறது!!!!
இனியபாரதி.