வியாழன், 9 மார்ச், 2017

நீயே பெருமை கொள்வாயோ!

     ஒரு கிராமத்தில் குருகுலம் ஒன்று இருந்தது. அங்கு, கிராமத்திலிருந்து நிறைய மாணவர்கள் படிக்க வருவார்கள். அவர்களுள் சிவநேசன் என்ற பத்து வயது சிறுவனும் ஒருவன். அவன் அந்தக் குருகுலத்தில் மிகவும் முக்கியமானவன். ஏனென்றால், இவனைக் கண்டால் அங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் பயப்பாடுவார்கள்... காரணம் உள்ளது...

    குருவிற்கு சிவநேசன் மீது அதிக மதிப்பு இருந்தது. மற்ற மாணவர்களைவிட, அவன் சற்று உயர்ந்த இடத்தில் இருந்தான். இது தான் அவன் கர்வத்திற்கும், அவன் முக்கியமாகக் கருதப்படுவதற்கும் காரணம்.

     வகுப்பில் தினமும் படித்ததை, அடுத்த நாள் வந்து பார்க்காமல் எழுதிக் காட்ட வேண்டும். அனைவரும் படித்துவிட்டு வந்து எழுதுவார்கள்.  சிவநேசன் மட்டும், அவன் அருகில் அமர்ந்திருக்கும் ராமமூர்த்தியைப் பார்த்து எழுதுவான். இவன் எழுதுவது, ராமமூர்த்திக்கே தெரியாது.
இப்படித் தான் நாட்கள் கடந்தன.

     அதுமட்டுமல்லாமல், குரு ஏதாவது வேலை கொடுத்தால், தான் செய்வதாக வாங்கிவிட்டு, அதை மற்றவர்களிடம் கொடுத்து செய்வான். அவர்களும் அவன் மீதுள்ள பயத்தில் செய்து கொடுப்பார்கள். அதைக் கொண்டு சென்று குருவிடம் காட்டி, அவன் நல்ல பெயர் வாங்கிக் கொள்வான்.
இதைப் பார்த்து சகித்துக் கொள்ள முடியாத மாணவர்கள் அநேகம் பேர் அங்கே இருந்தனர். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

     அந்தக் குருகுலக் கல்வி முறையானது சற்று வித்தியாசமானது. பத்து வயது முதல் பதினைந்து வயது வரை, ஒரு வகுப்பில் இருந்து படிக்க வேண்டும். பதினைந்து வயதில் ஒரு தேர்வு வைப்பார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தான், அடுத்த வகுப்பிற்குள் நுழைய முடியும்.

     பத்து வயதில் வகுப்பில் சேர்ந்த சிவநேசன், பதினைந்து வயது வரை, படிக்கவும் இல்லை.... தன் செயல்களை மாற்றிக் கொள்ளவும் இல்லை.. அளவுக்கு அதிகமாக, எல்லோரையும் தொந்தரவு செய்யத் தான் ஆரம்பித்தான். இப்படியே ஐந்து வருடங்கள் முடிந்து விட்டன.

முக்கியமான தருணம் இது...

தேர்வு நேரம்...

     தேர்வறையில் அனைவரும் நிதானமாக அமர்திருந்தனர், சிவநேசனைத் தவிர... ஏனென்றால், அவன் பார்த்து எழுதலாம் என்று நினைத்திருந்த, ராமமூர்த்திக்கு மஞ்சள் காமாலை ஆதலால், அவன் பள்ளிக்கு வரவில்லை... சிவநேசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.
அதிலிருந்த ஒரு கேள்விக்கு கூட அவனுக்கு விடை தெரியவில்லை.. அப்படியே திகைக்துப்போய் விட்டான்.

    கடைசியில் அவனைத் தவிர, அவன் வகுப்பில் படித்த அனைவரும், அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சி பெற்று சென்று விட்டனர். இவன் மட்டும் அதே வகுப்பில் இருந்தான்.

அப்போது தான் ஞானம் பெற்றான்.

     தனக்கு இல்லாத ஒரு கலையை இருப்பதாகவோ, பிறர் செய்ததைத் தான் செய்ததாகச் சொல்வதோ, பிறர் மனம் புண்படும் படி செய்வதோ – கண்டிப்பாக ஒரு நாள் நம்மைப் பாதிக்கும்.

     அதனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் கவனமாக இருப்போம்.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: