இன்று, எங்கள் வாழ்வில், மறக்க முடியாத, அம்லுவின் குட்டித் தம்பி, மண்ணில் மலர்ந்த நாள்...
அந்தக் குட்டி ரோஜாவைப் பார்க்க, மனம் ஏங்குகின்றது.
மாலை பள்ளி முடிந்து, வீட்டிற்கு வந்ததும், அம்மா என்னிடம் சொன்னார்... 'அம்லு அம்மாவிற்கு ஆண்மகன் பிறந்துள்ளான்' என்று... மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அதைத் தொடர்ந்து அம்மா பேசிய விசயங்கள் எல்லாம், எனக்கு மிகுந்த மனப்பாரத்தைக் கொடுத்தன.
இந்தக் காலத்தில் தான், தனியார் மருத்துவமனைகள் என்றால் சிஸேரியன் என்று சொல்லி, வயிற்றைக் கிழித்து, குழந்தையை எடுத்துவிடுகிறார்கள். அதனால், அம்லுவின் அம்மா, அரசு மருத்துவமனைக்குச் சென்றார். சரியாக, ஒருவாரத்திற்கு முன்பு, அவர் அங்கு போய் சேர்ந்தார். நாங்களும், தினமும் அலைபேசியில் விசாரித்துக் கொள்வோம் 'வலி வந்ததா?' என்று.
இன்று காலை தான், வலி வந்து, அவரை பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றார்களாம்.. அங்கு நடந்த ஒரு சம்பவம் தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை....
வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரிடம், 'உனக்கு எதற்கு மூன்றாவது குழந்தை? ஏன் முதல் இரண்டு குழந்தைகளும் செத்துப்போச்சா? என் உயிரை வாங்குவதற்கா இங்கு வந்து சேர்ந்தாய்?' என்று அவருக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் கூறியிருக்கிறார்.
இதைப் பதிவிடவே கேவலமாக இருக்கிறது. இருந்தாலும், இதைப் படிக்கும் ஒருசில நல்ல உள்ளங்கள், தங்கள் குடும்பங்களில், இதுபோன்ற கேவலமான மருத்துவர்கள் இருந்தால், அவர்களுக்கு எடுத்துச் சொல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இதேப் போல் நான் விசாரித்த போது ' அரசு மருத்துவமனை என்றாலே, திட்டிக் கொண்டு தான் மருத்துவம் பார்ப்பார்கள்' என்று கேள்விப்பட்டேன். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால், நான் மேற்சொன்ன விசயம் நூறு சதவிகிதம் உண்மை.
வெளிநாடுகளில் எல்லாம், அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனை, கல்வி நிலையங்களில் தான், எல்லாம் தரமாக இருக்கும்.
ஆனால், நம் நாட்டில்?
நம் தேசத்தில், இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களைப் பற்றி நினைக்கும் போது, சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.... கண்களில் கண்ணீர் மட்டும் தான் தேங்குகிறது!
பணமுள்ளவர்கள் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
பணமில்லாத, ஏழைகளில் நிலை என்ன?
இதற்காகத் தான், நம் தேசத் தலைவர்கள், நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தனரா?
சிந்திப்போம்!
இதுபோன்று, தவறான முறையில் வேலை செய்யும், ஒவ்வொரு மருத்துவரின் கண்ணில் படும் வரை பகிர்வோம்.
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக