வெள்ளி, 24 மார்ச், 2017

கண்டேன் அல்லேன்...

சிறு குழந்தை ஒன்று, வீட்டில் அமர்ந்து, தனது அம்மாவின் அலைபேசியில் 'கண்மணி... கண்மணி...' பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென கடவுள் அந்தக் குழந்தையின் முன்பு தோன்றி 'உனக்கு என்ன வரம் வேண்டும். கேள். தருகிறேன்' என்றார். அந்தக் குழந்தை சற்று யோசித்துவிட்டு 'எனக்கு என் அம்மாவைப் போல் ஆக வேண்டும். ஏனென்றால், அவர் வேலைக்குச் செல்கிறார். தனது சம்பளத்தில் தனக்குத் தேவையானதையும், எனக்குத் தேவையானதையும் வாங்கித் தருகிறார்' என்றது.

கடவுளும் அந்த வரத்தைக் கொடுத்தார். அந்தக் குழந்தை அம்மாவாகவும், அந்த அம்மா குழந்தையாகவும் மாறினர். சிறிது நாட்கள் சென்றன.

மறுபடியும் கடவுள் அம்மாவாக உருமாறிய அந்தக் குழந்தைக்குத் தோன்றி, 'இப்போது என்ன வரம் வேண்டும்? கேள். தருகிறேன்' என்றார். அந்த அம்மா, 'நான் மறுபடியும் குழந்தையாகவே மாற எனக்கு வரம் தா இறைவா' என்றார்.

கடவுளுக்கு ஒரே குழப்பம்... நீ தான் குழந்தையிலிருந்து அம்மா போல் மாற வேண்டும் என்றாய். அதனால் அந்த வரத்தைக் கொடுத்தேன். இப்போது மறுபடியும் ஏன் குழந்தையாகவே மாற வேண்டும் என்கிறாய்? என்று கேட்டார்.
அதற்கு அவள், 'குழந்தையாய் இருந்த போது, அம்மா போல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தேன். இப்போது அம்மாவாக மாறிய பின்பு தான், என் அம்மா பட்ட கஷ்டங்களை என்னால் உணர முடிகிறது. அதற்கு நான், என் ஒவ்வொரு நாளையும், குழந்தைப்பருவத்திலிருந்து இரசிக்க விரும்புகிறேன்' என்றாள்.

அந்தவரத்தைக் கொடுத்துவிட்டு, கடவுள் மறைந்தார்.

உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒருவகையில், தன்னை விட மற்றவர் நன்றாக இருப்பது போல் தெரியும். ஆனால், அவர்கள் நிலையில் இருந்தால் தான் அவர்களின் நிலைமை புரியும்.

நாம்... நாமாக... ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடு, அன்பைப் பகிர்ந்து வாழக் கற்றுக் கொள்வோம்.

இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: