இன்று முகநூலைப்பார்த்துக் கொண்டிருந்த போது, அதில் சொல்லப்பட்ட ஒரு விசயம், உண்மையிலேயே பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை எனக்குத் தூண்டியது.
முன்பெல்லாம் ஒரு தொலைபேசியை வைத்துக் கொண்டு, வாரத்திற்கு ஒருமுறை தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று அழைத்து, குடும்பமே கூடிச் சேர்ந்து பேசும். ஆனால், இப்போது ஒரு குடும்பத்தில் ஐவர் இருந்தால், ஐந்து அலைபேசிகளும் இயக்க நிலையில் தான் இருக்கும். அவரவர் அறையில் அவரவர்க்கு பிடித்தவருடன் உரையாடுவது...
கொஞ்ச நாட்களுக்கு முன், எங்கள் பள்ளி முதல்வர், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களிடம் சொன்னார்... 'இன்னும் கொஞ்ச நாட்களில், வீட்டில் ஒவ்வொருவரும், வாட்ஆப்பில் மட்டுமே பேச வேண்டிய நாட்கள் வந்தால் கூட அதை மறுப்பதற்கில்லை' என்றார்..
அப்படித் தான் சென்று கொண்டிருக்கிறது...
மனிதாபிமானமற்ற நிகழ்ச்சி ஒன்று, மூன்று நாட்களுக்கு முன் போடியில் நடைபெற்றது...
விபத்தில் இரண்டு பேருந்துகள் மோதி, பேருந்தில் இருந்தவர்களில் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சமயம், அவருக்கு உதவி செய்யாமல், அங்கு நடப்பவற்றை வீடியோ எடுப்பதிலேயே ஆர்வமாய் இருந்திருக்கின்றனர், அந்த இடத்தைச் சுற்றி இருந்தவர்கள்..
எவ்வளவு பெரிய வெட்கக்கேடான விசயம் அது....
தலைநிமிர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டிய இளைய சமுதாயம்...
தலைகுனிந்து அலைபேசியைத் தடவிக் கொண்டிருக்கிறது!
தன் பிள்ளையைக் கட்டி அணைத்து முத்தவிட வேண்டிய தாய்
வாட்ஸ்ஆப்பில் முத்த பொம்மையை அனுப்புகிறார்!
குழந்தைகளை வார விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு அனுப்பும் பெற்றோர்
குழந்தைகளில் படங்களை அனுப்பி ஆனந்தப்படுகின்றனர்!
தன் காதலியைக் கண்ணால் பார்த்து கூட அன்பு செய்ய முடியாத காதலன்!
அனைத்தும் அலைபேசியிலேயே முடிந்து விடும் போது நேரில் எதற்கு?
இப்படியே இந்த சமுதாயம் சென்று கொண்டிருந்தால்... கடைசியில் 'உறவு' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் போய்விடும்.
நாம் தான் நம் சமுதாயத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்...
எனக்குப் பிடிக்காத ஒரு விசயம் உண்டு...
யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் மும்முரமாக அவரது அலைபேசியைத் தடவிக் கொண்டு இருப்பார்.
ஒருவர் நம்மிடம் பேச வருகிறார் என்றால், அவருக்கு முதலிடம் கொடுப்போம்... தொழில் நுட்பக் கருவிகளுக்கு அல்ல....
உறவின் மேன்மையை அறிவோம்...
சிறது நேரமாவது நம் உறவுகளுடன் செலவிடுவோம்!
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக