கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
வெள்ளி, 31 மார்ச், 2017
வியாழன், 30 மார்ச், 2017
அழத் தோன்றவில்லை!!!
வெறுமை
தனிமை
இவை இரண்டும் வாட்டும் போது கூட
அழத் தோன்றவில்லை!
நீர் என்னோடு கூட இருப்பதால்!
இனியபாரதி.
புதன், 29 மார்ச், 2017
உறங்கையிலும்...
உன் அழகை இரசிக்க எனக்கு நேரமில்லையா?
இல்லை
நீ உறங்கும் போது தான் உன் அழகு
எனக்குத் தெரிகிறதா என்று தெரியவில்லை!
உறங்கையில் உன் கண் இமைகள்
துடிக்கும் அழகு...
உன் கைவிரல்களை வருடும் அழகு..
உன் தலைமுடிகளைக் கோதிவிடும் அழகு....
உன் உதடுகளைத் தடவும் அழகு...
இவ்வளவு அழகாய் உன்னைப் படைத்தவனுக்குத் தான் பெருமை!
உனக்காக... உன் அம்மா
இனியபாரதி.
செவ்வாய், 28 மார்ச், 2017
இயேசுவின் வார்த்தைகள் - 2
சென்ற வாரம் (19-3-17) ஞாயிறன்று, கோட்டூர் பங்கில் நடந்த தியானத்தின் சுருக்கம் - பாகம் - 2
பள்ளியில் சமூகவியில் பாடவேளை நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்து, பாடத்தை வாசிக்கச் சொன்னார். அவனும் எழுந்து 'ஆசிரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர்' என்றான். ஆசிரியர் அவனை மறுபடியும் வாசிக்கச் சொன்னார். மறுமுறையும் அப்படியே வாசித்தான். அந்த ஆசிரியரைப் பழிவாங்கவே அவன் அவ்வாறு செய்தான். ஆக, ஒரு எழுத்து மாறும் போதே எவ்வளவு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது.
'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என்கிறார் இயேசு.
அவ்வாறு, அவர் வழி செல்வதற்கு, நாம் முதலில் நம்மைத் தயாரிக்க வேண்டும். அதற்கான வழிகள்:
1. உடல்
'உடல் ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர்' – 1கொரி 6:13
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். ஒருநாள் அவர் வெளிநாடு சென்றிருந்தபோது, அங்கிருந்த ஒருவர், இவரது நிறத்தைக் குறித்துக் கேவலமாகப் பேசினாராம். 'You dirty'. அதற்கு இராதாகிருஷ்ணன் சிறிதும் கோபப்படாமல், அவருக்கு ஒரு கதையைச் சொன்னாராம். கேக் கடை ஒன்று இருந்தது. அந்தக் கடைக்காரர் மாவைப்பிசைந்து எடுத்து கனலுக்குள் வைத்தாராம். சரியாக வேகாத நிலையில் வெளியில் எடுக்கப்பட்ட அந்த கேக் வெள்ளையாக இருந்ததே தவிர, அதில் சுவையில்லை. அடுத்து ஒரு தட்டை எடுத்து, அதிலும் மாவைப்பிசைந்து சூடேற்றினார். அதிக சூட்டினால் கறுகிப்போனது. யாராலும் சாப்பிட இயலவில்லை. இறுதியாக, மீதமிருந்த மாவைப் பிசைந்து, மிதமான வெப்பத்தில் சூடேற்றினார். அந்த கேக் ருசியாக இருந்தது. இந்தக் கதை, கேட்டுக் கொண்டிருந்தவரை வெட்கப்பட வைத்ததாம்.
வாழ்வின் மிகப்பெரிய சவால், உடலால் ஏற்படக்கூடிய சவால்.
பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. பெற்றோர் கல்லூரியில் பேராசியர்களாகப் பணிபுரிகின்றனர். சமூக வலைதளத்தின் மூலம் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு, தன் நிர்வாணப்படத்தை அவருக்கு அனுப்பும் அளவிற்கு நட்பாகிவிட்டது. கடைசியில் இந்த விசயம் வீட்டிற்குத் தெரியவர, அனைவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வருகின்றனர். அந்த சமயத்தில், அருட்தந்தையின் உதவியால், அந்த நபரைக் கண்டுபிடிக்கின்றனர். அந்த 21 வயது நபரின் உண்மையான வயது 40. அந்த மாணவி அவனைப் பார்க்கும் வரையில் நம்பவே இல்லை.
எசாயா 54: 5 ல் சொல்லப்பட்டது போல்,'உன்னை உருவாக்கியவரே உன் கணவர். 'படைகளின் ஆண்டவர்' என்பது அவர் பெயராம்.
நீ கடவுள் வாழும் ஆலயம்.
2. மனம்
'நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப்பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்' – திருப்பாடல்கள் 63: 3
நம்முடைய இரவு உரையாடல்களும், சிந்தனைகளும் யாரைப் பற்றி இருக்கின்றன.
மனம் போல் வாழ்வு – என்ற சொற்றொடர் உண்டு.
'நல்ல குடும்பங்கள் நல்ல மனிதர்களை உருவாக்குவார்கள்.
நல்ல மனிதர்கள் நல்ல மனங்களை உருவாக்குவார்கள்'
3. ஆன்மா
நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. மறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்;. எனினும் பாவம் செய்யாதவர். – எபி 4:15
நீதிமான் கூட ஒருநாளைக்கு ஏழு முறை தவறுகிறான் என்கிறது பழமொழி நூல்.
4. உணர்வுகள்
காண்க – மத்தேயு 26: 37 முதல் 39
நம் வாழ்வில் கஷ்டங்கள் வரும் போது, கடவுள் எங்கே இருக்கிறார் என்ற போராட்டம் நமக்குள் நடக்கிறது.
உதாரணமாக.
ஒரு சிறு கதை.
ஒரு குழந்தை, தன் அப்பாவிடம் 'கடவுள் எவ்ளோ பெரிசா இருப்பார்?' என்று கேட்டதாம். அதற்கு அந்த அப்பா 'பிளைட் மாதிரி இருப்பார். அதாவது தூரத்தில் பார்க்கும் போது சிறயதாய் தெரிவார். அருகில் வைத்துப் பார்க்கும் போது பெரிதாய் தெரிவார்' என்றாராம்.
நும் தாய், தந்தையின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
'உயிரும் மெய்யுமாக இருப்பதால் தான், நம் உயிரோடு இருக்கிறோம்'
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
உலகத்தையே சிரிக்க வைக்கத் தெரிந்த சார்லி சாப்ளினுக்கு, தன் சொந்த வாழ்க்கையில் சிரிப்பு என்பதே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதைத் தொடர்ந்து மன்னிப்பைக் குறித்து சிந்தித்தோம்.
1. மன்னிப்பு ஒரு நிபந்தனை
மத்தேயு 6: 14-15
2. மன்னிப்பு ஒரு இறைச்செயல்
கொலோ 3:13
3. மன்னித்தல் ஒரு அழைப்பு
லூக்கா 6:37
4. மன்னிப்பு ஓர் அன்புச்செயல்
லூக்கா 17:3. மாற்கு 11:25
5. மன்னிப்பு ஓர் பழக்கம்
மத்தேயு 18:22
இறுதியாக, நாம் அனைவரும் கடவுளின் கொடை, நம்மிடம் உள்ளவற்றைக் கொண்டு நிறைவு கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும், எதிர்காலத்தைக் குறித்துப் பயம் கொள்ளக் கூடாது, துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவனிடம் வேண்ட வேண்டும் என்ற சிந்தனையோடு அன்றைய தியானம் இனிதே நிறைவுற்றது.
அன்புடன்
இனியபாரதி.
திங்கள், 27 மார்ச், 2017
இயேசுவின் வார்த்தைகள்...
சென்ற வாரம் (19-3-17) ஞாயிறன்று, கோட்டூர் பங்கில் நடந்த தியானத்தின் சுருக்கம்.
'இயேசுவின் வார்த்தைகள்' என்ற தலைப்பில் இன்றைய கால இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வார்த்தையின் வலிமை பற்றி எடுத்துச் சொல்ல, கருமாத்தூரிலிருந்து அருட்தந்தை ஜெரோன் அவர்கள் வந்திருந்தார்.
முதலாவது ஒரு உண்மைச் சம்பவத்துடன் ஆரம்பித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன். அவன் பெயர் விஜய். அவனை இவருக்கு நன்கு தெரியும். பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுள் இவனும் ஒருவன். ஒருநாள் ஏற்பட்ட சண்டையில் இவன் அப்பாவும் அம்மாவும் தீக்குளித்து, அவனது முழு ஆண்டுத் தேர்வு சமயத்தில் இறந்து விடுகின்றனர். தந்தை – அவன் தேர்விற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இறக்கிறார். தாய் - இரண்டு நாட்களுக்கு முன்பு இறக்கிறார். இவன் எப்படித் தேர்வு எழுதப் போகிறான் என்று எல்லோரும் பதைபதைத்த நேரம்.
அவன் ஆசிரியர்களுடன் சேர்ந்து இவரும், அவனைக் காணச் செல்கிறார். அவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றுத் தெரியாமல் தவிக்கிறார். அவன் இந்த அருட்தந்தையைப் பார்த்து சொன்னது இதுதான் 'என் தம்பிக்காகவாவது நான் படிக்க வேண்டும்'.
அந்த வார்த்தை தான் அவரை மிகவும் பாதித்ததாம்.
தாய், தந்தையை இழந்த அந்த பொழுது கூட, தன் தம்பிக்காக நன்றாய் படிக்க வேண்டும் என்று அவன் கூறிய வார்த்தைகள்.
வார்த்தைகள் - மிகவும் மதிப்பானவை.
'தூய வார்த்தைகளை உள்ளத்தில் வைத்திருப்பவர்கள் வேறுபெற்றோர்' என்பார் நம் திருத்தந்தை.
கெட்ட வார்த்தைகளை வரையறை செய்ய வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்...
'கேட்ட வார்த்தைகள்... கெட்ட வார்த்தைகள்'
திருக்குறளில் கூறியிருப்பது போல், 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு'.
கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகின்ற இளைஞர், இளம்பெண்களுக்கு வார்த்தை முக்கியம். இந்தக் காலம் தான் எதிர்காலம் அழிவதற்கு மிகப்பெரிய சவாலான காலம்...
'Watch your words'
அடுத்த பாகத்தை நான் நாளை எழுதுகிறேன்...
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.
ஞாயிறு, 26 மார்ச், 2017
கலைகள்...
நம் நாட்டை எடுத்துக் கொண்டேமென்றால், பழைய கலைகள் எல்லாம், இப்போது அழியத்துவங்கி விட்டன. உதாரணத்திற்கு தெருக்கூத்து, நாடகம்... இப்படிப் பல கலைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். கலைகள் அழியக் காரணம் என்ன? நம் தாய்நாட்டின், தாய்மொழியின் மீது பற்றின்மை. கலாச்சாரத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். எதையும் கற்றுக் கொள்ள நேரம் போதாமை. பொருளாதார வசதி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
நம் நாட்டின் கலைகள் அழிந்து போகாமல் காப்பது, நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். அதற்கு என்ன செய்வது? நம் குழந்தைகளுக்குப் பிடித்த ஏதாவது ஒரு கலையை அவர்கள் கற்றுக் கொள்ளும்படிச் செய்வது. இவ்வாறு செய்வதால், நமக்குப் பின் வரும் சந்ததிகளாகவது, கலைகளைப் பாதுகாக்கிறவர்களாக மாறுவார்கள்.
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.
சனி, 25 மார்ச், 2017
நல்ல பதிவு...
_அவளும் நானும்_
ஒரு பேரங்காடி வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இவ்விளைஞனை அணுகி," தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.
"ஒன்னுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடிஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப்பேத்திகிட்டு". முதியவர் சிறு புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.
இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன். என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.
அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...
விழியோரம் நீர் தேங்க, அதான் தம்பி, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.
சரி தம்பி, நான் வரேன் என்று புறப்பட்ட பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன். பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்.
ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?
வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா? இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா? பதில் 100 க்கு 90 சதவீதம், இல்லைதான். பொண்டாட்டி சமைத்து போடுறதை, கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை, அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு மனைவியும் சொல்றதில்லை.
இதெல்லாம் சொல்லணும். அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.
விழியோரம் நீர்த் துளி...
வெள்ளி, 24 மார்ச், 2017
கண்டேன் அல்லேன்...
சிறு குழந்தை ஒன்று, வீட்டில் அமர்ந்து, தனது அம்மாவின் அலைபேசியில் 'கண்மணி... கண்மணி...' பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென கடவுள் அந்தக் குழந்தையின் முன்பு தோன்றி 'உனக்கு என்ன வரம் வேண்டும். கேள். தருகிறேன்' என்றார். அந்தக் குழந்தை சற்று யோசித்துவிட்டு 'எனக்கு என் அம்மாவைப் போல் ஆக வேண்டும். ஏனென்றால், அவர் வேலைக்குச் செல்கிறார். தனது சம்பளத்தில் தனக்குத் தேவையானதையும், எனக்குத் தேவையானதையும் வாங்கித் தருகிறார்' என்றது.
கடவுளும் அந்த வரத்தைக் கொடுத்தார். அந்தக் குழந்தை அம்மாவாகவும், அந்த அம்மா குழந்தையாகவும் மாறினர். சிறிது நாட்கள் சென்றன.
மறுபடியும் கடவுள் அம்மாவாக உருமாறிய அந்தக் குழந்தைக்குத் தோன்றி, 'இப்போது என்ன வரம் வேண்டும்? கேள். தருகிறேன்' என்றார். அந்த அம்மா, 'நான் மறுபடியும் குழந்தையாகவே மாற எனக்கு வரம் தா இறைவா' என்றார்.
கடவுளுக்கு ஒரே குழப்பம்... நீ தான் குழந்தையிலிருந்து அம்மா போல் மாற வேண்டும் என்றாய். அதனால் அந்த வரத்தைக் கொடுத்தேன். இப்போது மறுபடியும் ஏன் குழந்தையாகவே மாற வேண்டும் என்கிறாய்? என்று கேட்டார்.
அதற்கு அவள், 'குழந்தையாய் இருந்த போது, அம்மா போல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தேன். இப்போது அம்மாவாக மாறிய பின்பு தான், என் அம்மா பட்ட கஷ்டங்களை என்னால் உணர முடிகிறது. அதற்கு நான், என் ஒவ்வொரு நாளையும், குழந்தைப்பருவத்திலிருந்து இரசிக்க விரும்புகிறேன்' என்றாள்.
அந்தவரத்தைக் கொடுத்துவிட்டு, கடவுள் மறைந்தார்.
உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒருவகையில், தன்னை விட மற்றவர் நன்றாக இருப்பது போல் தெரியும். ஆனால், அவர்கள் நிலையில் இருந்தால் தான் அவர்களின் நிலைமை புரியும்.
நாம்... நாமாக... ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடு, அன்பைப் பகிர்ந்து வாழக் கற்றுக் கொள்வோம்.
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.
வியாழன், 23 மார்ச், 2017
இனிய மாலை வேளை...
இன்று மாலை எங்கள் வீட்டில் எல்லோரும் கூடி ஜெபித்தோம். எங்கள் பங்கின் தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரையும் சேர்த்து ஒரு நாற்பது பேர் இருந்திருப்போம். வீடு பார்க்கவே அழகாக இருந்தது. பங்குத் தந்தை நிறைய விசயங்களைப் பற்றி எங்களுடன் கலந்தாலோசித்தார். இதற்கு முன்பிருந்த பங்குத்தந்தையர் யாரும் செய்யாத ஒரு காரியம் தான் இது. உண்மையில் இவரைப் பாராட்ட வேண்டும் போல் தோன்றியது. ஜெபித்து முடித்து மக்களுடன் மக்களாக உண்டு, எங்களுடன் சேர்ந்து இரவுணவு உண்டார்.
இன்று நாங்கள் சிந்தித்த ஒரு சிந்தனைப்பகுதி இது தான்... 'நம்முடன் யார் யார் எப்படிப் பழக வேண்டுமென்று எண்ணுகிறோமே தவிர, அவர்களுடன் நாம் எப்படிப் பழக வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை யோசிக்க மறந்து விடுகிறோம்'. சிம்பிள். நான் என்னை எப்படி பார்க்கிறேனோ.. அப்படியே மற்றவரையும் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது எம்பதி. (Empathy).
இன்றைய மாலை வேளை நன்றாகவே சென்றது. ஜெபத்திற்கு பின் அனைவரும் சேர்ந்து உண்டோம். கலகலவென்று அனைவரும் சேர்ந்து உறவுகள், அயலார் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து இருந்த அந்தத் தருணமே நன்றாய்த் தான் இருந்தது.
களைப்பையும் மீறி ஏதோ ஒரு உந்து சக்தி தான் என்னை எழுதத் தூண்டியது.
இந்த நேரத்தில் என் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியைச் சொல்ல வேண்டும்.
அன்புடன்
இனியபாரதி.
புதன், 22 மார்ச், 2017
இனிய நாள்...
தினமும் காலை எழுந்தவுடன், காலண்டர் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் ஏராளம். அதில் நானும் ஒருத்தி. அதுவும் இராசி பலன் பார்க்க மறக்க மாட்டேன். அதில் ஏதாவது விபரீதமாக இருந்தால், அதைப்பற்றியே அந்த நாள் முழுதும் யோசித்துக் கொண்டே இருப்பேன். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டிருப்பது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன். நல்ல நாள் என்பது, நாம் பார்க்கும் இராசி பலன்களை வைத்து வருவதில்லை. நம்மைச் சுற்றி எப்போதும் நல்ல நண்பர்கள், நம்முள் நல்ல எண்ணங்கள் இருக்கும் போது எல்லா நாளும் இனிய நாளே!
இனியபாரதி.
செவ்வாய், 21 மார்ச், 2017
படித்ததில் பிடித்தது
*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...*
*பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..*
☺😟😏
*கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*
😔😒😞
*துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..*
😪😥😰
*பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..*
😣😖
*எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..*
😠😡☹
*அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..*
😊
*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..*
☺☺☺
*சந்தோஷமாக இருந்தால் நல்ல செல் சுரக்கும்..*
*இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..*
😨😱😀
*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...*
திங்கள், 20 மார்ச், 2017
போலியாக...
போலியாக வாழத் தெரிந்த எனக்கு
போலியாக அன்பு செய்யத் தெரியவில்லை!
போலியாக சண்டை போடத் தெரிந்த எனக்கு
போலியாக உன்னைவிட்டுச் செல்ல முடியவில்லை!
போலியாக பேசாமல் செல்லும் எனக்கு
போலியாக அதைத் தொடர முடியவில்லை!
போலியாகக் கோபம் கொள்ளும் எனக்கு
போலியாக அழத் தெரியவில்லை!
எல்லாவற்றையும் மறைத்து மறைத்து
இந்த மனம் என்ன பாடு படுகிறதென்பது
அதற்கு மட்டும் தான் தெரியும்!
இனியபாரதி.
ஞாயிறு, 19 மார்ச், 2017
படித்ததில் பிடித்தது!
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாகவே இரு !
சனி, 18 மார்ச், 2017
வெள்ளி, 17 மார்ச், 2017
நினைக்க இயலவில்லை...
ஒரு நிமிடம் கூட நான் வேலை செய்யாமல் இருக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை...
சில நேரங்களில் நினைத்தபடி வாழ முடியவில்லை...
சில நேரங்களில் என் கடமையைச் செய்ய முடியவில்லை...
சில நேரங்களில் பிடித்ததைச் செய்ய முடியவில்லை...
சில நேரங்களில் நண்பர்களுடன் நேரம் செலவிட முடிவதில்லை...
சில நேரங்களில் என் வாழ்க்கையை வாழ முடியவில்லை...
சில நேரங்களில் பெற்றோரிடம் சரியாகப் பேச முடியவில்லை...
சில நேரங்களில் என் உறவுகளுடன் உரையாட முடிவதில்லை...
சில நேரங்களில் நான் நினைத்ததை சாப்பிட முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பியதை உடுத்த முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பும் படங்களை சுவர் ஒப்பனைத் தாளாகக்(Wall Paper)கூட வைக்க முடிவதில்லை....
சில நேரங்களில் நான் விரும்பும் படத்திற்குச் செல்ல முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பும் மழையை இரசிக்க முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பும் பெண்ணை மணக்க முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பும் நபரிடம் நட்பு வைத்துக் கொள்ள முடிவதில்லை...
இப்படி
எத்தனை சில நேரங்களை...
நான்
மற்றவருக்காகச் செலவிட்டேன்
என்று
என்னால்
நினைக்க இயலவில்லை....
இனியபாரதி.
வியாழன், 16 மார்ச், 2017
பிரம்மை...
நீ வருவதாய் நினைத்து கதவைத் திறக்கிறேன்....
நீ அழைப்பதாய் நினைத்து ஓடி வருகிறேன்....
நீ கொஞ்சுவதாய் நினைத்து என் கண்களை மூடிக் கொள்கிறேன்....
நீ பார்ப்பதாய் நினைத்து என்னை அழகுபடுத்திக் கொள்கிறேன்...
நீ பேசுவதாய் நினைத்து நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...
நீ தருவதாய் நினைத்து நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்...
நீ படிப்பதாய் நினைத்து நான் கவிதைகள் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
நீ திட்டுவதாய் நினைத்து நான் சோகமடைகிறேன்...
நீ அணைப்பதாய் நினைத்து நான் ஆறுதலடைகின்றேன்...
இனிய உன் இனியபாரதி.