புதன், 24 மே, 2017

எதிர்பார்ப்பு...

ஒரு நாள் இரவு வேளை....
கடைக்காரர், தன் கடையை அடைப்பதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். அந்த வேளையில், ஒரு நாய் கடைக்குள் நுழைந்தது. அதன் வாயில், ஒரு பையைக் கவ்விக் கொண்டு வந்தது. அந்தப் பையில், என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டுமென்றும், அதற்கான பணமும் இருந்தது. கடைக்காரர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, பொருட்களைப் பையில் போட்டார்.
உடனடியாக, நாய், அந்தப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இந்த நாய்க்குச் சொந்தக்காரர் யார் என்று அறிய ஆசைப்பட்டார். அதனால், அந்த நாயைப் பின் தொடர்ந்தார்.
அந்த நாய் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. சிறது நேரத்திற்குப் பின் வந்த பேருந்தில் ஏறியது. நடத்துநர் அருகில் வந்ததும், அவர் அருகில் நகர்ந்து சென்று, தனது வார்க்கச்சையை அவரிடம் காட்டியது. அதில் செல்ல வேண்டிய முகவரியும், பணமும் இருந்தது.
நடத்துநர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, டிக்கெட்டை அதன் கச்சையில் வைத்தார். அது சேர வேண்டிய இடம் வந்ததும், பேருந்தின் முன் பகுதிக்குச் சென்று, தான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதென்பதை, தனது வாலை ஆட்டிக் காட்டியது. பேருந்து நின்றதும், தானே கீழிறங்கியது.

கடைக்காரர் அதைத் தொடர்ந்து கொண்டேயிருந்தார்.

அந்த நாய், ஒரு வீட்டின் முன் சென்று, தனது கால்களால், அதன் கதவைத் தட்டியது. வீட்டுக் காரர் வெளியில் வந்து அந்த நாயை குச்சியால் தாக்கினார்.
கடைக்காரர் திகைத்துப்போய், 'ஏன் இந்த நாயை அடிக்கிறீர்கள்?' என்று அவரிடம் கேட்டார்.
'இந்த நாய் என்னுடைய தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. அதற்குப்பதில் இது, தன்னுடனே வீட்டுச் சாவியையும் எடுத்துச் சென்றிருக்கலாம் அல்லவா?'  என்றாராம்.

ஆம்...

இந்தக் கதை புரிந்தவர்கள், இதற்கான அர்த்தத்தையும் புரிந்து கொள்வார்கள்.
இதுதான் வாழ்க்கையின் உண்மை கூட.. மக்களுக்கு நம்மிடமுள்ள எதிர்பார்ப்பு என்பது எப்போதும் குறையாது. நான் எப்போது தவறாகச் செல்கிறோனோ, உடனே என்னுடைய தவறுகளைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நான் எவ்வளவு தான் நல்லது செய்தவளாக இருந்தாலும், எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.
சிறிய தவறானது பெரிதாக்கப்படுகிறது.
இது தான் இந்தக் காலத்தில் உலக நடப்பு!

ஆதலால், நாமும் மற்றவரிடமுள்ள எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்வோம். உடனடியாக நிறுத்துவது என்பது கடினம் தான். ஆனால், குறைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லையே!

இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: