சனி, 13 மே, 2017

ஓவியக்கலை....

ஒரு ஊரில், நன்கு வரையக்கூடிய வயதான ஓவியர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஓவியம் கற்றுக் கொள்வதற்காக ஒரு மாணவன் வந்தான். அவரும், அவனுக்கு அனைத்துவிதமான நுணுக்கங்களையும் ஓவியக்கலையில் கற்றுக் கொடுத்தார்.
அனைத்தையும் கற்றுக் கொண்ட அந்த மாணவன், தான் ஓவியக்கலையில் வல்லவனாகிவிட்டேனா என்று சந்தேகத்தில் இருந்தான். அதைச் சோதிக்கும் நோக்குடன், ஒரு அழகான ஓவியத்தை வரைந்து, அதை மக்கள் நடமாடும் வீதியில் வைத்து, அதன் அருகில், ஒரு கரும்பலகையில் இவ்வாறு எழுதி வைத்தான்... 'இந்தப் படத்தில் நீங்கள் குறை ஏதேனும் கண்டறிந்தால், அதைக் குறித்து வைக்கவும்' என்று எழுதி வைத்தான்.
மாலையில் வந்து பார்த்தபோது, அந்தப் படம் முழுவதும் தவற்றிற்கான குறிகள் மட்டுமே இருந்தன. படம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அவன் மனம் மிகவும் சோர்வடைந்தது. நம்மால் நன்றாக வரையத்தெரியவில்லையே என்று ஏங்கினான். கடைசியில், தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்திற்கு வந்தான்.

அதற்கு முன், தன் குருவைச் சந்திக்க வேண்டுமென்று முடிவெடுத்து, அவரிடம் வந்தான். அவரிடம் அனைத்தையும் சொன்னான். அவனுக்கு உண்மையைப் புரிய வைக்க குரு ஒரு வேலை செய்தார்.
அவர் அவனிடம், முன்பு அவன் வரைந்த படத்தையே மீணடும் வரையச் சொன்னார். அவனும் மிகுந்த சிரத்தையுடன் வரைந்து முடித்தான். அதே படத்தை, அதே இடத்தில், மீண்டும் பார்வைக்கு வைத்தார், குரு. அதற்கு அருகில், 'இந்தப்படத்தில் ஏதேனும் குறை கண்டுபிடிப்பவர்கள், அருகில் இருக்கும் பிரஷ் மற்றும் பெயிண்டை எடுத்து, அதைச் சரிசெய்யவும்' என்று எழுதி வைத்தார்.
மாலையில் இருவரும் வந்து பார்த்தனர். எந்த மாற்றமும் இல்லை. அடுத்த நாளும் எந்த மாற்றமும் இல்லை.
சீடன் ஞானம் பெற்றான்.
யார் மேலாவது குற்றம் கண்டறியச் சொன்னால், நாமும் பல நேரங்களில் இப்படித் தான். ஆனால், அதே குற்றத்தைக் கண்டறிந்து திருத்தச் சொன்னால், பின்தங்கி விடுகிறோம்.
இந்தக் கதை, கண்டிப்பாக, அனைவரின் மனதையும் பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்!
நாமும், இதை இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம்.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: