வெள்ளி, 19 மே, 2017

எளிமையான வழி...

அப்பா, வீட்டின் வெளியில், திண்ணையில் அமர்ந்து, செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த அவர் மகள், அவரைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தாள். ஒருகட்டத்தில், கோபம் தாங்காமல், தான் படித்துக்கொண்டிருந்த, செய்தித்தாளிலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்து, அதில் இருந்த இந்தியாவின் வரைபடத்தை, பலவாறு கிழித்து, அதைச் சரியாக அடுக்கும்படி அவளிடம் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு சென்ற மகள், இரண்டு நிமிடங்களில் தந்தையிடம் திரும்பினாள். தந்தைக்கு ஒரே ஆச்சரியம். எப்படி உன்னால், இவ்வளவு சீக்கிரமாக சரியான வரிசையில் அடுக்கி வைக்க முடிந்தது? என்று கேட்டார்.
அதற்கு மகள், 'அப்பா... நீங்கள் கொடுத்த தாளின் பின்புறத்தில் ஒரு மனித உருவம் இருந்தது. ஆகையால், நான் அந்த வரைபடத்தைப் பார்க்காமல், இந்த மனிதனைச் சரியாக அடுக்கி வைத்தேன். வரைபடம் கிடைத்துவிட்டது' என்றாள்.
ஞானம் பெற்றார் தந்தை.

அன்பிற்கினியவர்களே,
இந்தச் சிறு கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது....
நமக்கு எவ்வளவு பெரிய கஷ்டமான விசயங்கள் கூட நடக்கலாம். ஆனால், அதைச் சரிசெய்வதற்கான, எளிமையான வழியைக் கண்டுபிடித்து, வாழ்ந்தால், நாமும் சுலபமாக வெற்றி அடையலாம்.

தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும், கஷ்டங்களைக் கண்டு பின்வாங்காமலும், எதிர்கொள்ளத் துணிந்து விட்டால், நாமும் வெற்றி பெற்றவர்களே!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: