புதன், 31 மே, 2017

படித்ததில் பிடித்தது...

✍அழகான வரிகள்....

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன், விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை..

சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..

மரணத்தை பற்றிக் கவலைப்படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

அறிவுரை தேவைப்படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட, உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார். இதயத்தில் சுகம் தெரியும்.

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருப்போம்..

செவ்வாய், 30 மே, 2017

மகிமையிழந்து....

ஒவ்வொரு காய்ந்து போன மலருக்குப் பின்னும் உள்ள சோகம்...
செம்மண்ணிலேயே பரம்பரை பரம்பரையாக
வளர்ந்து வந்த ஒரு அழகான காட்டுச் செடி...
அதன் கிளைகள் தேவைக்கு ஏற்றவாறும்
அதன் இலைகள் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் காட்சி தரும்...
இலைகளின் குளிர்ச்சி தணியும் காலத்தில்
அம்மரத்திற்கு அழகு சேர்ப்பது நாங்கள் தான்!
என்னைத் தூர நின்று பார்ப்பவர்கள் 'ஆ' என்று தான் இரசிப்பார்கள்!
என் அருகில் வந்து பார்ப்பவர்கள் 'என்னுடன் செல்ஃபி' எடுத்துக் கொள்வார்கள்!
இப்படி
என் ஒரு நாள் வாழ்க்கையில்
என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும்
மகிழ்ச்சியைத் தந்துவிட்டு
மகிமையிழந்து கிடக்கிறேன்
தரையில்!!!
இந்த அழகான மலரைப் போல்
தன் வாழ்வையே தியாகமாக்கும்
குணம் தாய்க்கு மட்டுமே!!!

இனியபாரதி.

திங்கள், 29 மே, 2017

அறிவது கடினம்...

தன்னைத் தானே அறிந்துகொள்வது
கடினமென்று தான் இத்தனை நாட்கள்
நினைத்திருந்தேன்!
ஆனால், நான் மற்றவரைப் பற்றி
எல்லாம் தெரிந்தது போல்
அவரைப்பற்றி மற்றவரிடம் பேசும் போதுதான்
தெரிந்து கொண்டேன்...
என்னையே அறிந்துகொள்ள முடியாத நிலையில்
மற்றவரை நான் எப்படி அறிந்துகொள்ள முடியுமென்று!
அத்தோடு நிறுத்துக்கொண்டேன்!!!
மற்றவரை அறிந்துகொள்வதை அல்ல!!!
அவரைப் பற்றி மற்றவரிடம் பேசுவதை!!!

இனியபாரதி.

ஞாயிறு, 28 மே, 2017

சில வரிகள்...

காயப்படுத்துவதும்...
காயப்படுவதும் மனிதனின் இயல்புகள்!
காயத்தை ஆற்றுவது...
இறைவனின் இயல்பு!

என்ன தான் அன்பை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும்
தகுதியுள்ளவர்களை மட்டுமே
அது போய் சென்றடைகின்றது!

உன் புன்னகைக்குப் பின் உள்ள
சுகத்தையும், துக்கத்தையும்
கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்!

இனியபாரதி.

சனி, 27 மே, 2017

வரமா! சாபமா!

பார்த்ததில்லை... பழகியதில்லை!!!
ஒன்றாய்ச் சேர்ந்து ஊர் சுற்றியதில்லை!!!
தெரியாமல் நாமிருவரும்
சந்தித்த நாளைத் தான் தவறாமல்
நினைத்துக் கொண்டிருக்கிறேன் அனுதினமும்!
எப்படியோ பேச வைத்து
இப்படி ஒரு அழகான உறவை
கொடுத்த இறைவனுக்குத் தான் நன்றிகள்!
ஆரம்பத்தில் அலட்டிக்கொண்டது
உண்மை தான் என்றாலும்,
பேசப் பேச உண்மையான அன்பாய் மாறியது!
பொதுவாக யாரிடமும் பேச
ஏற்படவில்லை சலனம் எனக்கு...
உன் நட்பு அந்த எல்லையைத் தாண்ட வைத்தது!
பேசிக் கொண்டே என்னைப் பற்றி எல்லாவற்றையும்
அறிந்து கொண்டாய் விவரமாக!
அறிமுகமே செய்யாமல் என் குடும்பத்துடன்
உனக்கு ஏற்பட்ட உறவு எப்படி?
என்னைப் பற்றி ஆர்வமாய் நீ
அறிந்து கொண்ட விதம்
மெய்சிலிர்க்க வைத்ததென்னை!
என் ஒவ்வொரு செயலிலும்
உன் விமர்சனம் முக்கியமாகப்படுகிறது
இப்போதெனக்கு!
உன் அன்பான பேச்சென்னை
சில நேரங்களில் என் பேச்சிழக்கச் செய்தது!
உன் கபடற்ற உண்மை வழி
என் பாதையை மாற்றிவிடுமோ என்ற பயமெனக்கு!
நீ
தோழனாய்
தம்பியாய்
எவ்வாறிருந்தாலும்....
என் அன்பு குறையாது தான்!
சந்தேகப்பட அவசியமில்லை!
என் குழந்தைப் பருவ நாட்களை எல்லாம்
நான் திரும்பிப்பார்க்க எனக்குதவியது
உன் வேண்டல் தான்!
என்றும்
என்றென்றும்
உன் அன்பில்,

இனியபாரதி.

வெள்ளி, 26 மே, 2017

கவலைக்கு நேரமில்லை....

எனக்குத் தெரிகிறது
நான் மகிழ்ச்சியாக இல்லை என்று!
எனக்குத் தெரிகிறது
நான் பரிதவித்துக் கொண்டிருக்கிறேன் என்று!
எனக்குத் தெரிகிறது
நான் பொய்யாகப் புன்னகைக்கிறேன் என்று!
எனக்குத் தெரிகிறது
நான் சரியாகச் சாப்பிடுவதில்லை என்று!
எனக்குத் தெரிகிறது
நான் சரியாக உறங்குவதில்லை என்று!

இவற்றையெல்லாம் எண்ணி
கவலைப்படத் தான் நேரமில்லை!

இனியபாரதி.

வியாழன், 25 மே, 2017

படித்ததில் பிடித்தது...

● எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது.

● எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.

● ஜெயிக்கிறதுங்கிறது வாழ்க்கையில்ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,பணக்காரனுக்கு பல கோடிசொத்தாகவும் உள்ளது.

● பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது.

● குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது.

● உலகினில் எவருமில்லை சைவமென!தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது?

● தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும், அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது.

● சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு.

● விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும்.

● ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம்.

● உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலை கொள்ளாதே

.● இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து."இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.

● வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை.

● ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்டுர அளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை.

● அடுத்த வாக்கியம் பொய்.முந்தய வாக்கியம் உண்மை.இதுல எது உண்மை?எது பொய்?அதுதான் கடவுள்.

● 500 ரூபாயை எண்ணினாலும், 50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும்"ஏடிஎம்" மெசின்.ஏன்னா அது மெசின், மனிதன் இல்லை.

● என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க.

● இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல.

● சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது.

● இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு.

● 250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும், இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்.

● மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

● கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள், டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.

● கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால். கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை.

● கொட்டும் "மழையில்" இரண்டு விதமான பிள்ளைகள்.1. மாம்.இட்ஸ் ரைனிங்.ஏசியை கம்மி பண்ணுங்க.2. அம்மா.இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா.

புதன், 24 மே, 2017

எதிர்பார்ப்பு...

ஒரு நாள் இரவு வேளை....
கடைக்காரர், தன் கடையை அடைப்பதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். அந்த வேளையில், ஒரு நாய் கடைக்குள் நுழைந்தது. அதன் வாயில், ஒரு பையைக் கவ்விக் கொண்டு வந்தது. அந்தப் பையில், என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டுமென்றும், அதற்கான பணமும் இருந்தது. கடைக்காரர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, பொருட்களைப் பையில் போட்டார்.
உடனடியாக, நாய், அந்தப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இந்த நாய்க்குச் சொந்தக்காரர் யார் என்று அறிய ஆசைப்பட்டார். அதனால், அந்த நாயைப் பின் தொடர்ந்தார்.
அந்த நாய் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. சிறது நேரத்திற்குப் பின் வந்த பேருந்தில் ஏறியது. நடத்துநர் அருகில் வந்ததும், அவர் அருகில் நகர்ந்து சென்று, தனது வார்க்கச்சையை அவரிடம் காட்டியது. அதில் செல்ல வேண்டிய முகவரியும், பணமும் இருந்தது.
நடத்துநர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, டிக்கெட்டை அதன் கச்சையில் வைத்தார். அது சேர வேண்டிய இடம் வந்ததும், பேருந்தின் முன் பகுதிக்குச் சென்று, தான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதென்பதை, தனது வாலை ஆட்டிக் காட்டியது. பேருந்து நின்றதும், தானே கீழிறங்கியது.

கடைக்காரர் அதைத் தொடர்ந்து கொண்டேயிருந்தார்.

அந்த நாய், ஒரு வீட்டின் முன் சென்று, தனது கால்களால், அதன் கதவைத் தட்டியது. வீட்டுக் காரர் வெளியில் வந்து அந்த நாயை குச்சியால் தாக்கினார்.
கடைக்காரர் திகைத்துப்போய், 'ஏன் இந்த நாயை அடிக்கிறீர்கள்?' என்று அவரிடம் கேட்டார்.
'இந்த நாய் என்னுடைய தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. அதற்குப்பதில் இது, தன்னுடனே வீட்டுச் சாவியையும் எடுத்துச் சென்றிருக்கலாம் அல்லவா?'  என்றாராம்.

ஆம்...

இந்தக் கதை புரிந்தவர்கள், இதற்கான அர்த்தத்தையும் புரிந்து கொள்வார்கள்.
இதுதான் வாழ்க்கையின் உண்மை கூட.. மக்களுக்கு நம்மிடமுள்ள எதிர்பார்ப்பு என்பது எப்போதும் குறையாது. நான் எப்போது தவறாகச் செல்கிறோனோ, உடனே என்னுடைய தவறுகளைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நான் எவ்வளவு தான் நல்லது செய்தவளாக இருந்தாலும், எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.
சிறிய தவறானது பெரிதாக்கப்படுகிறது.
இது தான் இந்தக் காலத்தில் உலக நடப்பு!

ஆதலால், நாமும் மற்றவரிடமுள்ள எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்வோம். உடனடியாக நிறுத்துவது என்பது கடினம் தான். ஆனால், குறைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லையே!

இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.

செவ்வாய், 23 மே, 2017

படித்ததில் பிடித்தது

*சில அருமையான விஷயங்கள்*

💠வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது *"மரம்...."*
வெட்டுங்கள் - மழை நீரை சேமிப்பேன் என்கிறது *"குளம்..........."*

💠ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..

💠தோசைகளின் எண்ணிக்கையை *சட்னியின் தரமே* தீர்மானிக்கிறது.

💠கல்வி கற்க புத்தகங்களை விட *நோட்டுக்களே*அதிகம் தேவைப்படுகின்றன.!

💠நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி..

💠பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை!

💠காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

💠திருக்குறளை... வாழறதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்க'தா அதிக பேரு..!

💠அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு
*பல தோல்விகளும்,*
*சில துரோகிகளும்* தேவை!!

💠Money மட்டுமே மதிக்கப்படுகிறது... *மனிதம்*பலரால் மிதிக்கப்படுகிறது..

💠நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :-
நம்மட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..!
எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..!

💠எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

💠பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!

💠பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்...

💠நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம்.

உணர்ந்தவன் உயர்வான்!!

திங்கள், 22 மே, 2017

முக்கியத்துவம்...

இன்று நான் பார்த்து வியந்த ஒரு நபர் என்றால்,அது என் தாய் மாமன் தான். அவர், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில், உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி வியந்த விசயத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
பொதுவாக, நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். எனக்கும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேனா என்றால், 'இல்லை' என்று தான் பதில் வரும்.
சிலரிடம் சில நாட்கள் பேசுவேன். வேறு சிலரிடம் சில நாட்கள்.. சிலரிடம் பேசுவதே கிடையாது.. சிலரிடம் சில நாட்கள் நன்றாகப் பேசுவேன்.. இப்படிப் பலவிதம் உள்ளது. ஆனால், ஒருவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேனா, இல்லை அவருடன் தொடர்பில் இருக்கிறேனா என்றால், அது கேள்விக் குறி தான்.
சிலர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குக் கூட நேரம் கிடைக்காது. ஆனால், என் மாமா, அவருடன் உரையாடும் ஒவ்வொருவருக்கும் பதில் அளிப்பார்.

தெரிந்தவர், தெரியாதவர், படித்தவர், படிக்காதவர், நல்லவர், கெட்டவர், ஏழை, பணக்காரர் என்றெல்லாம் பார்ப்பதே கிடையாது. அனைவரிடமும் சகஜமாகப் பேசுவார்.

அவர் எப்போதும் போனும் கையுமாகத் தான் இருப்பார். அவரிடம் கேட்பவருக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டே இருப்பார். இது போன்ற பொறுமையும், மற்றவர்களை மதிக்கும் தன்மையும் ஒருசிலருக்கு மட்டும் தான் வரும்.
கண்டிப்பாக எனக்கு வருவதெல்லாம் கொஞ்சம் (இல்லை ரொம்பவே) கஷ்டம் தான்.
இப்படியும், மனிதர்கள், இந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்றால், ஆச்சரியம் தான்!
வாழ்த்துகள் மாமா!

இனியபாரதி.

ஞாயிறு, 21 மே, 2017

மிச்சம் வைப்பது...

நீ
அள்ளிக் கொண்டு செல்ல நினைப்பதென்னவோ
என் உயிரை மட்டும் அல்ல!
என் உயிரோடு இணைந்த என் உணர்வுகளை!
என் உணர்வுகளோடு இணைந்த என் ஏக்கங்களை!
என் ஏக்கங்களோடு இணைந்த என் எண்ணங்களை!
என் எண்ணங்களோடு இணைந்த என் மனத்தை!
என் மனத்தோடு இணைந்த என் ஆசைகளை!
என் ஆசைகளோடு இணைந்த என் உடலை!
கடைசியில் நீ மிச்சம் வைப்பது...
என் நினைவலைகளை மட்டும் தான்!

இனியபாரதி.

வெள்ளி, 19 மே, 2017

எளிமையான வழி...

அப்பா, வீட்டின் வெளியில், திண்ணையில் அமர்ந்து, செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த அவர் மகள், அவரைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தாள். ஒருகட்டத்தில், கோபம் தாங்காமல், தான் படித்துக்கொண்டிருந்த, செய்தித்தாளிலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்து, அதில் இருந்த இந்தியாவின் வரைபடத்தை, பலவாறு கிழித்து, அதைச் சரியாக அடுக்கும்படி அவளிடம் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு சென்ற மகள், இரண்டு நிமிடங்களில் தந்தையிடம் திரும்பினாள். தந்தைக்கு ஒரே ஆச்சரியம். எப்படி உன்னால், இவ்வளவு சீக்கிரமாக சரியான வரிசையில் அடுக்கி வைக்க முடிந்தது? என்று கேட்டார்.
அதற்கு மகள், 'அப்பா... நீங்கள் கொடுத்த தாளின் பின்புறத்தில் ஒரு மனித உருவம் இருந்தது. ஆகையால், நான் அந்த வரைபடத்தைப் பார்க்காமல், இந்த மனிதனைச் சரியாக அடுக்கி வைத்தேன். வரைபடம் கிடைத்துவிட்டது' என்றாள்.
ஞானம் பெற்றார் தந்தை.

அன்பிற்கினியவர்களே,
இந்தச் சிறு கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது....
நமக்கு எவ்வளவு பெரிய கஷ்டமான விசயங்கள் கூட நடக்கலாம். ஆனால், அதைச் சரிசெய்வதற்கான, எளிமையான வழியைக் கண்டுபிடித்து, வாழ்ந்தால், நாமும் சுலபமாக வெற்றி அடையலாம்.

தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும், கஷ்டங்களைக் கண்டு பின்வாங்காமலும், எதிர்கொள்ளத் துணிந்து விட்டால், நாமும் வெற்றி பெற்றவர்களே!!!

இனியபாரதி.

வியாழன், 18 மே, 2017

அன்பு மொழி

ஆசையாய் நீ பேசும்
ஆயிரத்தெட்டு வார்த்தைகளும்
எனக்கு மறந்துவிடுகிறது!
கொஞ்சிப் பேசும்
அலைபேசி வார்த்தைகளும்
எனக்கு மறந்துவிடுகிறது!
வார்த்தைகளே இல்லாமல் பேசும்
உன் கண்கள் மட்டும்
என்னை மறந்துவிடச் செய்கிறது!

இனியபாரதி.

செவ்வாய், 16 மே, 2017

வாழ்வே நீயாக!

கண்கொட்ட விழித்தும் கண்டேன் அல்லேன்
நல்ல காதலை!
எப்படி நுழைந்தாய் என் வாழ்வில்
என் வாழ்வாய்?
கவிதைகள் பல கூறி
கவிழ்க்கவும் தெரியவில்லை!
நகைச்சுவை சில கூறி
சிரிக்க வைக்கவும் தோன்றவில்லை!
உன் உணர்வுக்குள் புகுந்தேன்!

நீயாக மாறினேன்!

நீயாக சிரித்தேன்!

நீயாக சிந்தித்தேன்!

நீயாக நடந்தேன்!

என் எண்ணமெல்லாம் நீயானாய்!

உன் உணர்வில் கலந்து
உன்னை இரசித்த என்னை
என்றும் உதறிவிடாதே!

இனியபாரதி.

திங்கள், 15 மே, 2017

மழை...

கேட்பதையெல்லாம் கொடுத்துவிட்டால்
எங்கே என்னை மறந்துவிடுவார்களோ
என்று பயந்து தான்
இறைவன்
எங்களுக்குன்னைக் கொடுக்கவில்லை போலும்!

மழை.

இனியபாரதி.

ஞாயிறு, 14 மே, 2017

அன்னையர் தினம்...

நீ தெரிந்தே தவறு செய்தாலும்
உன்மீதுள்ள அன்பில் சிறுதுளிகூட குறையாது!
நீ கோபமாய் திட்டினாலும்
என் பிள்ளை தானே என்று தாங்கிக் கொள்பவள்!
நீ குறைவாய் மதிப்பிட்டுப் பேசினாலும்
அதையும் பொறுத்துக் கொள்பவள்!
நீ தாழ்வாய் நினைத்து நடத்தினாலும்
உன் காலடிவிட்டு நகர மாட்டாள்!
உனக்காக கணவனைக் கூட விட்டுக் கொடுத்துவிடுவாள்!
உனக்காய் அவள் உதிரத்தையும்...
தன் வாழ்நாள்களையும்...
தன் சுக,துக்கங்களைக் கூடப் பாராமல்
உனக்காய் எல்லாவற்றையும் கொடுத்து...
உன்னைத் தன் கருவிழிக்குள் வைத்துக்
காப்பவள் தான்...
'அம்மா'
என்னைக் கருவில் சுமந்தவளுக்கும்...
என் பிம்பமாய் என்னுடனிருப்பவளுக்கும்...
என்னைத் தன் கருவிழிகளுக்குள் வைத்துக் காக்கும் என் இனிய தாய்க்கும்....
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!

இனியபாரதி.

சனி, 13 மே, 2017

ஓவியக்கலை....

ஒரு ஊரில், நன்கு வரையக்கூடிய வயதான ஓவியர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஓவியம் கற்றுக் கொள்வதற்காக ஒரு மாணவன் வந்தான். அவரும், அவனுக்கு அனைத்துவிதமான நுணுக்கங்களையும் ஓவியக்கலையில் கற்றுக் கொடுத்தார்.
அனைத்தையும் கற்றுக் கொண்ட அந்த மாணவன், தான் ஓவியக்கலையில் வல்லவனாகிவிட்டேனா என்று சந்தேகத்தில் இருந்தான். அதைச் சோதிக்கும் நோக்குடன், ஒரு அழகான ஓவியத்தை வரைந்து, அதை மக்கள் நடமாடும் வீதியில் வைத்து, அதன் அருகில், ஒரு கரும்பலகையில் இவ்வாறு எழுதி வைத்தான்... 'இந்தப் படத்தில் நீங்கள் குறை ஏதேனும் கண்டறிந்தால், அதைக் குறித்து வைக்கவும்' என்று எழுதி வைத்தான்.
மாலையில் வந்து பார்த்தபோது, அந்தப் படம் முழுவதும் தவற்றிற்கான குறிகள் மட்டுமே இருந்தன. படம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அவன் மனம் மிகவும் சோர்வடைந்தது. நம்மால் நன்றாக வரையத்தெரியவில்லையே என்று ஏங்கினான். கடைசியில், தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்திற்கு வந்தான்.

அதற்கு முன், தன் குருவைச் சந்திக்க வேண்டுமென்று முடிவெடுத்து, அவரிடம் வந்தான். அவரிடம் அனைத்தையும் சொன்னான். அவனுக்கு உண்மையைப் புரிய வைக்க குரு ஒரு வேலை செய்தார்.
அவர் அவனிடம், முன்பு அவன் வரைந்த படத்தையே மீணடும் வரையச் சொன்னார். அவனும் மிகுந்த சிரத்தையுடன் வரைந்து முடித்தான். அதே படத்தை, அதே இடத்தில், மீண்டும் பார்வைக்கு வைத்தார், குரு. அதற்கு அருகில், 'இந்தப்படத்தில் ஏதேனும் குறை கண்டுபிடிப்பவர்கள், அருகில் இருக்கும் பிரஷ் மற்றும் பெயிண்டை எடுத்து, அதைச் சரிசெய்யவும்' என்று எழுதி வைத்தார்.
மாலையில் இருவரும் வந்து பார்த்தனர். எந்த மாற்றமும் இல்லை. அடுத்த நாளும் எந்த மாற்றமும் இல்லை.
சீடன் ஞானம் பெற்றான்.
யார் மேலாவது குற்றம் கண்டறியச் சொன்னால், நாமும் பல நேரங்களில் இப்படித் தான். ஆனால், அதே குற்றத்தைக் கண்டறிந்து திருத்தச் சொன்னால், பின்தங்கி விடுகிறோம்.
இந்தக் கதை, கண்டிப்பாக, அனைவரின் மனதையும் பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்!
நாமும், இதை இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம்.

இனியபாரதி.