செவ்வாய், 1 டிசம்பர், 2015

திருவருகைக் காலம்(Advent Season) – புதுமை 1


இன்று டிசம்பர் ஒன்றாம் நாள். இன்று முதல், இந்த மாதத்தில் சிறப்பாக ஒரு செயலைச் செய்யலாம் என்று நினைத்தேன். யோசித்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றேன். அங்கு, என் மாமா கொடுத்ததாக என் அப்பா ஒரு புத்தகத்தை வாங்கி வந்திருந்தார். அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் ஒரு யோசனை தோன்றியது.
'கிறிஸ்தவர்கள்' என்று நம்மை அடையாளப்படுத்துவார்கள் பிற மதச் சகோதரர்கள்.

அவர்களுக்கு இயேசுவையும் மரியாவையும் மட்டுமே தெரியும்.
அதை விடுத்து மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கத் தெரியும்.
முழந்தாளிட்டு வேண்டத் தெரியும்.
முக்காடிட்டுக் கொள்வது தெரியும்.
இதைத் தவிர, தெரிந்து வைத்திருப்பார்களா என்றால் பெரும்பாலும் இல்லை தான்.
அதனால் என் அன்பு நண்பர்களுக்கு, இயேசுவைப் பற்றி இன்னும் அதிகமாகச் சொல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

அதன் படி, இயேசு செய்த புதுமைகளைப் பற்றி உங்களுடன் தினமும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து 33 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் செய்த அற்புதங்களை தினமும் ஒன்றாக உங்களுக்கு விளக்குகிறேன்.

கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதற்கு முன் உள்ள ஒரு மாத காலத்தை 'திருவருகைக் காலம்' என்று அழைக்கிறோம். இயேசு கிறிஸ்து மீண்டும் இந்த உலகத்திற்கு வருவார் என்று ஆவலுடன் காத்திருக்கும் காலமாக இந்தத் திருவருகைக்காலம் கொண்டாடப்படுகிறது. அதன் பின் டிசம்பர் 25ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுவோம்.

இந்த திருவருகைக் காலத்தில் ஒரு சிலர் சில ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
ஒறுத்தல் என்றால்...
தனக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை விட்டுக் கொடுப்பது...

ஆசையாய்ச் செய்யும் ஏதாவது ஒன்றைச் செய்யாமல் இருப்பது...

மற்றவர்களுக்கு உதவுவது...

தன் நேரத்தைச் செலவிடுவது...

இப்படி நிறைய இருக்கின்றன.

நான் மேற்கொண்டிருக்கும் ஒறுத்தல் முயற்சி... இந்த மாதத்தில் நான், என்னை அழகு செய்வதற்காய் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, அந்த நேரத்தில் மற்றவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதனால் இனி நெற்றியில் பொட்டு வைப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

தினமும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து ஜெபிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எனக்காக எதுவும் வேண்டுவதாக இல்லை.

எல்லாம் இருக்கட்டும். இன்று இயேசு செய்த அற்புதங்களில் ஒன்றைப் பார்ப்போம்.

இராமாயணம், மகாபாரதம் போல் பைபிளிலும் புத்தகம், பிரிவு, அதிகாரம், வசனம் எனப் பிரித்து வைத்திருப்பார்கள்.
நான் கூறப்போகும் புதுமைகள் அனைத்தும் 'லூக்கா' புத்தகத்தில் உள்ளன.
1. தொழுநோயினை குணப்படுத்திய இயேசு
இயேசுவின் காலத்தில் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே கருதப்பட்டனர். ஒரு நாள், இயேசு ஒரு ஊருக்குச் சென்றிருந்தார். அங்கு, தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் இயேசுவிடம் 'ஆண்டவரே நீர் விருப்பப்பட்டால் என் நோயை நீக்க உங்களால் முடியும்' என்று வேண்டினார். இயேசுவும் தம் கையை நீட்டி 'நான் விரும்புகிறேன்; உமது நோய் உம்மை விட்டு நீங்குக' என்றார். உடனே அவரது தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் மகிழ்வுடன் தன் வீட்டிற்குச் சென்றார்.

இதைப் போல் இயேசு செய்த மற்ற புதுமைகளையும் வருகிற நாட்களில் பார்ப்போம்.

இன்று மாதத்தின் முதல் நாள். மாதத்தில் கடைசி மாதம். மிகவும் விசேசமான மாதம்.

இந்த மாதம் முழுவதும் நாம் விரும்பும் அனைத்தும் நமக்குக் கிடைக்க இறைவனைப் பிராத்தித்து, இந்த நாளை இனிதே தொடர்வோம்!

அன்பே கடவுள்.

2 கருத்துகள்:

Jegan Coonghe சொன்னது…

Thanks my dear sister, I tried to call you. God blesses you

Giana Giana சொன்னது…

very good