புதன், 29 டிசம்பர், 2021

தவறில்லையே!!!

உற்றவள் இல்லாக் குறையை

மற்றவளைக் கொண்டு 

சமன் செய்யத்

துடிக்கும் மனம் தான்

அவனது என்றால்....

அவள் அவனை விட்டுச் சென்றதில் ஒன்றும்

தவறில்லையே!!!

இனியபாரதி.


செவ்வாய், 28 டிசம்பர், 2021

என் தேவதை!!!

கேட்கும் வரம் கொடுக்கும்

தெய்வம் அல்ல...

நான் நினைப்பதை எல்லாம்

நிறைவேற்றும்

சாமி அல்ல...

சாகா வரம் கொடுக்கும்

ஈசனும் அல்ல...

நான் தேடிக் கொண்டிருக்கும்

என் தேவதை!!!

இனியபாரதி. 


சனி, 25 டிசம்பர், 2021

யாருக்கு கவலை....

தேடாமல் விட்டுவிட்டால்

கவலை

தொலைத்தவருக்கு மட்டுமே....

பொருளை

விற்றவருக்கு அல்ல...

இனியபாரதி.

வியாழன், 23 டிசம்பர், 2021

முடித்துக் கொண்டதால்....

தென்றலாய் வரும்

அவள் மணம் மட்டும்

என்றும் என் நினைவலைகளில்...

காது கொடுத்து

கேட்க முடியவில்லை

அவள் வார்த்தைகளை

என்று முடித்துக் கொண்டதால்....

இனியபாரதி. 

செவ்வாய், 21 டிசம்பர், 2021

கலங்கும் போல...

தெளிவாய் இருக்கும் குட்டையும்

ஒரு நாள் கலங்கும் போல...

அது

அதன் இயல்போ

இல்லை

அதையும் மாற்றி விட்டார்களா?

இனியபாரதி. 

திங்கள், 20 டிசம்பர், 2021

கனவும் காதலும்...

கனவும் காதலும்

ஒன்றாய் வருவதில்லை...

காதல் வந்து சென்ற

பின்பு தான்

கனவு வருகிறது....

அவளை மறப்பதற்கா?

இல்லை...

நினைத்துக் கொண்டே இருப்பதற்கா?

இனியபாரதி. 

சனி, 18 டிசம்பர், 2021

காணாமற்போன..

காணாமற்போன

இரண்டும்

அந்த இடத்திலேயே தான்

இருக்கின்றன....

அது

தொலைத்தவர் கண்களுக்கு மட்டும் தான் தெரியும்....

இனியபாரதி. 

வெள்ளி, 17 டிசம்பர், 2021

காரணம் அறியாமல்.....

காரணம் அறியாமல்

காத்திருந்த நேரங்களும்

சேர்த்து வைத்த ஆசைகளும்

இன்று

காரணம் தெரிந்து 

கலையத் தொடங்கும் போது

வலியும் அறியும்

வலியின் வேதனையை...

இனியபாரதி. 

புதன், 15 டிசம்பர், 2021

எப்போதும்....

 அவள் கண்களும் இதழ்களும்

என்னைப் பார்க்காமலே

பேசிக் கொண்டிருக்கும்

நான் அருகில்லா நேரங்களில்.... 

இனியபாரதி. 

திங்கள், 27 செப்டம்பர், 2021

காட்சியும் கருணையும்....

என்றோ ஒரு நாள்

அவள் கண்ட காட்சி

அவள் மனதில்

பல எண்ணங்கள் தோன்றச் செய்து

இன்று

அந்த எண்ணங்கள் எல்லாம்

கருணையாய் மாறி உள்ளன....

இனியபாரதி. 

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

முப்பது முதல் முப்பது வரை....

சிறுக சிறுக

சேர்த்து வைத்த

பொக்கிஷங்கள் எல்லாம்

தினமும்

நினைவில் வந்து போக

காரணமாய் இருந்த காலம்...

இனியபாரதி. 

சனி, 25 செப்டம்பர், 2021

எல்லாம் புரியும்...

எனக்கு 

எல்லாம் தெரியும்

எல்லாம் புரியும்

என்றிருந்த அவளுக்கு

"அவன் முகம்"

எல்லாவற்றையும்

மறக்கச் செய்தது ...

இனியபாரதி. 

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

ஒரு புள்ளியில்....

ஒரு புள்ளியில் ஆரம்பித்த அக்கோலம்

பல புள்ளிகளை இணைத்து

அழகிய கோலமாக மாறியது

சற்று வியப்பு தான்....

ஒற்றைக் காரணத்திற்காய்

ஆரம்பித்த உறவு

பல காரணங்களுக்காய்

பல உறவுகளை இணைக்கும் பாலமாக

மாறியதில் வியப்பில்லை!!!

"என்றும் உறவுகள் புடைசூழ!!!"

வாழ்க வளமுடன்....

இனியபாரதி. 

வியாழன், 23 செப்டம்பர், 2021

கண்ணும் நானும்...

கண்கள் நோக்கிய திசையை மட்டுமே

என் கண்களும் நோக்கிக் கொண்டிருந்தன...

காரணம் அறியாமல்

காத்திருத்தலில் 

சங்கடம் தவிர்த்து!!!

சோர்வும் கூட....

காத்திருந்தேன்....

காத்திருந்தேன்....

விடியும் வரை அல்ல...

"என் இமைகள் மூடும் வரை...."

இனியபாரதி. 


புதன், 22 செப்டம்பர், 2021

கேள்வி கேட்பதில்....

கேள்விகள் கேட்கப்படுவதினால் மட்டும்

பதில்கள் கிடைத்து விடுவதில்லை....

கேள்விகள் கேட்கப்படாத இடத்திலும்

"மெளனமான புன்முறுவல்"

பதில்களைப் பெற்றுக் கொடுக்கும்....

இனியபாரதி. 

புதன், 25 ஆகஸ்ட், 2021

தேனும் மருந்தும்....

அவள் கொடுக்கும்

தித்திப்பான தேனும் பிடிக்கும்...

தெவிட்டும் மருந்தும் பிடிக்கும்....

காரணம்...

' அவள் மட்டுமே!!! '

இனியபாரதி. 

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

சட்டை...

அவன் அரைக்கைச் சட்டை

அழகில்லை என்றாலும்...

அவன் முகம் கோணாமல் இருக்க

அவள் கொடுக்கும் 

பரிசு தான்....

' அணைப்பு '

இனியபாரதி. 

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

இதில் கூட...

இதில் கூட சமரசம் செய்து கொள்ளவில்லையே

என்று அவனும்...

இதில் கூட சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கிறானே

என்று அவளும்....

இழக்கும் நாட்கள் தான் அதிகம்.

இனியபாரதி. 

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

ஒரே ஒரு புன்னகை மட்டுமே....

அவள் என்றோ ஒருநாள்

புன்னகைத்த முகம் மட்டும்

என் நினைவில் நின்று நீங்காமல்...

என் அருகிலும்

தொலையிலும் இல்லாமல்

என் எண்ணத்தில் மட்டும்

வந்து செல்லும் அவள்...

என் புன்னகையின் காரணம் ' அவள் '

இனியபாரதி. 

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

அன்புடன்....

இனிய என் எதிர்காலமே....

உன்னை வேண்டுவதும்

நான் விரும்புவதும் இது தான்...

என் கஷ்டங்கள்

என் துன்பங்கள்

என் வருத்தங்கள் 

எல்லாம்

என்னோடு முடியட்டும்...

என் அன்புக்குரிய யாரையும்

என் நிலை பாதிக்கக் கூடாது.

இனியபாரதி. 

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

புதுமை....

அவள் காட்டிய

அன்பும் அரவணப்பும்

என்றும் நீங்காமல் 

இருக்கும் என்று

ஏமாந்த எனக்கு

இன்று

பெண்மையும்

அவள் அன்பும்

புதுமையாகத் தான் உள்ளது...

இனியபாரதி. 

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

கொடுக்கும் போது....

கொடுக்கும் போது

அவளிடம் இருந்த

அன்பும் ஆசையும்

பெற்றுக் கொண்ட பின்பு

இல்லையே என்பதால் தான்

அவனும் விலகிச் சென்றான் போல....

இனியபாரதி. 

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

கனவுகள் மெய்ப்பட....

கனவுகள் மெய்ப்பட

கனவுகள் மட்டும் முக்கியம் இல்லை....

அதை நிறைவேற்றத் துடிக்கும்

தீராத ஆவலும் தாகமும் 

வேண்டும்!!!

இனியபாரதி. 

புதன், 11 ஆகஸ்ட், 2021

கனவுகளுடன்....

கனவுகள் அதீதமாக இருப்பதில் தவறில்லை...

அந்தக் கனவை அடைய

நான் என்ன முயற்சி செய்கிறேன்

என்பதில் தான்

என் முன்னேற்றம்.

இனியபாரதி. 

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

தேடி வரும்...

உன்னைத் தேடி வரும் உறவை

எப்போதும் அலட்சியம் செய்யாதே...

அவர்கள்

அன்பு செய்ய ஆள் இல்லாமல் போனவர்கள் அல்ல...

உன்னை அன்பு செய்ய 

இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள்.

இனியபாரதி. 

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

இரண்டு...

"இரண்டு"

மிகப் பெரிய தாக்கத்தை

நம் வாழ்வில் ஏற்படுத்தும் எண் என்றே சொல்லலாம்...

எல்லாவற்றிலும்

ஏன்

அன்பில் கூட

நெருக்கமும் விரிசலும்

சகஜம் தான்....

இனியபாரதி. 


ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

என்றும் அன்புடன்....

அவளின் உடனிருப்பை விட

அவள் மொழியும்

ஆசை வார்த்தைகள்

என்னையும் 

என் நாட்களையும்

இனிமையாக்குகின்றன...

இனியபாரதி. 

சனி, 7 ஆகஸ்ட், 2021

மிம்மி...

அழகிய பாவை....

கனவு ஒரு பக்கம், காலம் ஒரு பக்கம் ...

வாழ்வை இழுத்துச் செல்ல...

தேர்வு செய்த வழி

தவறென்று நினைக்கவில்லை....

தன் முடிவில் நிலையாய் இருந்து

தான் ஈன்றெடுத்த குழந்தைக்காய்

தன் வாழ்வை அர்ப்பணம் செய்த

அழகிய அன்பு அம்மா.... 

"மிம்மி'

இனியபாரதி. 

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஒற்றிலை...

இலையுதிர் காலத்தில் உதிராத

ஒற்றிலையின் இருப்பு

அதற்குப் பெருமை...

இனியபாரதி. 

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

கடமை....

கடமையின் விளிம்பில்

கடவுளும் அடுத்த நிலை தான்....

இனியபாரதி. 

புதன், 4 ஆகஸ்ட், 2021

ஊமை அன்பு...

கண்டும் காணாதது போன்று...

பார்வையிலே பரிமாறிக் கொண்டு...

எதிலும் ஈடுபாடு இல்லாதது போல்...

தன் பணியை மட்டும் செய்து...

அக்கறை இல்லாமல்...

அழகுபடுத்தாமல்....

அடிக்கடி பார்க்க வேண்டி...

அஞ்சா நெஞ்சத்துடன்...

அறநெறி முறையில்...

அதீத ஆர்வம் கொண்டு...

ஏக்கம் மட்டும் மிஞ்சிப் போக...

ஏழு நாட்களும் ஏழு யுகங்களாய்...

திரும்பும் திசையும் அறியா மனது...

திக்குமுக்காடிப் போன பின்பு...

காரணமும் கருப்பொருளுமாகி...

கடிந்து கொள்ள மனம் இல்லை....

கருத்து சொல்ல வார்த்தை இல்லை...

திங்கள் அன்று திணறிய தருணம்...

தீங்கு செய்ய விரையா மனம்...

எப்பொருளும் ஆசை இல்லை...

என்றும் அருகில் மட்டும்...

ஒன்றாகி ஓய்வு கொள்ள முடியா

"ஊமை அன்பு"

இனியபாரதி. 

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

இதுவும் கடந்து போகும்...

ஆழ்ந்த உறக்கத்தில்

அலைபாயா அவள் மனம்

துக்கம்

துன்பம்

சோதனை

தனிமை

எதையும் நினைப்பதில்லை!!!

விடியும் ஒவ்வொரு பொழுதும்

அவளுக்குச் சொல்வது

"இதுவும் கடந்து போகும்"

இனியபாரதி. 

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

கண்கட்டி வித்தை....

கண்கட்டி வித்தையாய்

ஒவ்வொரு நாளும்

நகரும் நரகம்

யாரும் அனுபவிக்கக் கூடாது....

என் தோழனோ!!!

என் எதிரியோ!!!

வருத்தத்தின் அளவு ஒன்று தானே....

இனியபாரதி. 




ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கண்கள் மட்டுமே...

அவள் இருவிழிகளும்

சொல்லும் அர்த்தம்,

வேறெந்த அகராதியிலும்

கண்டுகொள்ள முடியாதவை....

இனியபாரதி. 


திங்கள், 21 ஜூன், 2021

மெருகூட்டும்!

நிறங்களின் கைகோர்ப்பு

அவளின் அழகிற்கு

மெருகூட்டும்!

இனியபாரதி. 

ஞாயிறு, 20 ஜூன், 2021

காவியம்....

அழகுக்காவியம் படைக்க
இரண்டு மட்டும் தான் தேவை...

மனமும்

தைரியமும்

இனியபாரதி. 

ஓ கடலே....

நீல நிறம்

ஒரு சாந்தம்...

ஓ கடலே....

உன் கரை அருகே

மௌன மொழி அழகு...

உன் உரசல் சத்தம் 

அதனினும் அழகு...

உன் அருகே

என் இருப்பும் அழகு...

இனியபாரதி. 


மனமும் மாறுகின்றது....

சில்லென்று வீசும் காற்று

அடிக்கடி தன் திசையை 

மாற்றிக் கொண்டே 

இருப்பது போல்

அடிக்கடி மனமும் மாறுகின்றது....

இனியபாரதி. 

வியாழன், 17 ஜூன், 2021

நனவாகும்...

அவன் அருகில் மட்டுமே

அவள் கனவுகள் எல்லாம்

நனவாகும்...

இனியபாரதி. 

புதன், 16 ஜூன், 2021

அவள் மடி....

உள்ளத்தின் 

எண்ணங்களும்

ஏக்கங்களும்

கொட்டித் தீர்க்கப்படும்

ஒரே இடம்...

"அவள் மடி"

இனியபாரதி. 

போட்டிக்கு நிற்குமோ?

ஒளிர்ந்து கொண்டு இருக்கும்

நம் அன்பு

சந்திரன் ஒளியுடன்

போட்டிக்கு நிற்குமோ?

இனியபாரதி. 


காத்துக் கிடக்கும்....

கிளியும்

காத்துக் கிடக்கும்

உன் பேச்சைக் கேட்க...

இனியபாரதி. 

ஞாயிறு, 13 ஜூன், 2021

உரக்கக் சொல்கின்றன...

காற்றில் ஆடும் மரக்கிளைகள்

மறக்காமல் அவள் வரவை

ஊரிற்கு உரக்கக் சொல்கின்றன...


இனியபாரதி. 

சனி, 12 ஜூன், 2021

அன்பு

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். 

1 கொரிந்தியர் 13:7

வெள்ளி, 11 ஜூன், 2021

நன்றாய் தான் சென்றன...

நாட்களின் எண்ணிக்கை 

அதிகரிக்க அதிகரிக்க

அன்பும் கூடுவது போலத்தான் தெரிந்தது...

அன்பு

பாசம்

பகிர்வு

பக்குவப்படல்

எனப் பல மாற்றங்கள்...

நண்பர்களை அறிமுகம் செய்தல்...

குடும்பத்துடன் கூடி உரையாடுவது...

என எல்லாம் நன்றாய் தான் சென்றன...

இனியபாரதி. 

வியாழன், 10 ஜூன், 2021

தத்தளித்துக் கொண்டிருந்தது...

காலமும்

சூழ்நிலையும்

பல்வேறு மாற்றங்களைத் தந்தாலும்

தளர்ந்து போகாமல்

தத்தளித்துக் கொண்டிருந்தது

அந்த உறவு...

இனியபாரதி. 

புதன், 9 ஜூன், 2021

இறுகக் கட்டி வைத்திருந்தது...

கடந்து சென்ற 

மாதங்களும்

நாட்களும் 

எண்ண முடியாதவை...

காரணம் தேடி அலைந்த

ஒரு மனம்

எப்படிப் பிரியலாம் என்று...

காரணம் புரியாமல் தவித்த

இன்னொரு மனம்

பிரிந்துவிடக் கூடாது என்று...

காரணங்களும்

சூழ்நிலைகளும்

பல எழுந்தன

பிரித்துவிட வேண்டுமென்று...

ஆனால்,

எதனாலும் பிரிக்க முடியாதபடி

இறுகக் கட்டி வைத்திருந்தது

"அன்பு"

இனியபாரதி. 


செவ்வாய், 8 ஜூன், 2021

தடையாக இல்லை...

முதல் சந்திப்பு

முக்கியமானதாய் படவில்லை...

இரண்டாம் மூன்றாம் சந்திப்புகள் கூட

அப்படித் தான்...

என்றோ ஒரு சந்திப்பில்

தோன்றிய சிறு சினேகம்....

இருவருக்கும் ஏற்பட்டிருக்க

வாய்ப்புண்டு....

சலனமோ சஞ்சலமோ இல்லை.

'சினேகம் மட்டுமே...'

உடலால் அருகில் இல்லை...

மனங்கள் மிக அருகில்...

காத்திருப்பு...

தேடல்...

ஆர்வம்...

ஆசை...

சில நிமிடங்கள் கிடைத்தால் கூட

கால்கள் விரையும்...

அன்பா என்று தெரியவில்லை...

ஆனால்

அங்கு ஏதோ ஒரு நல்ல மனம் இருந்ததை உணர முடிந்தது...

வாழ்க்கை ஓட்டத்தின் கட்டாயத்தில்

பிரிந்து சென்றாலும்

அது ஒரு பெரிய தடையாக இல்லை...

காலம் வரும் என்று காத்திரு...

பிரிவு ஒரு குறை இல்லை என்பதை உணர...

இனியபாரதி. 

திங்கள், 7 ஜூன், 2021

அறிவா? முட்டாள்தனமா?

இரவில்

கண்ணுக்குத் தெரியாத

சூரியனிடம் ஒளி கேட்டு நிற்பது

முட்டாள்தனம்...

அருகில் இருக்கும்

மின்மினிப் பூச்சிகளின் ஒளியில்

வாழக் கற்றுக் கொள்வது 

அறிவு!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 6 ஜூன், 2021

பாரம் தெரிகிறது...

தூக்கிச் சுமந்த காலங்களில்

பாரம் தெரியவில்லை.

இறக்கி வைத்த காலங்களில்

பாரம் அதிகமாகத் தெரிகிறது...

இனியபாரதி. 


சனி, 5 ஜூன், 2021

ஒருநாள் வந்துவிட்டு...

காதல்....

உன் மீது எப்போதும் உள்ளது தான்...

மோகம்...

அதற்கு மேல்...

நீ தீண்டிச் செல்லும்

ஒரு சில நொடிகள் போதும்

ஒரு யுகம் வாழ...

உன் தீண்டல் மட்டும் உண்மை...

ஆனால் நிரந்தரம் அல்ல...

என்றோ ஒருநாள் வந்துவிட்டு

அப்படி என்ன அவசரம்?

நீ தழுவிச் சென்ற வழியில்

நானும் நடக்கிறேன்

அவள் ஞாபகங்களுடன்....

இனியபாரதி. 


வெள்ளி, 4 ஜூன், 2021

காய்ந்த மனம்...

அவளின் தேவை

எதுவென்று தெரிந்தாலும் கூட,

அதை நிறைவேற்ற முடியா நிலையில்

"அவனும் அவன் மனமும்...."

இனியபாரதி. 

வியாழன், 3 ஜூன், 2021

பிரித்துப் பார்க்க முடிகிறது...

வெண்மை என்றொன்று

இருப்பதனால் தான்

கருமையைப் பிரித்துப் பார்க்க முடிகிறது...

சுகவீனம் என்றொன்று

இருப்பதனால் தான்

நலத்தைப் பிரித்துப் பார்க்க முடிகிறது...

ஆசை என்றொன்று

இருப்பதனால் தான்

அன்பைப் பிரித்துப் பார்க்க முடிகிறது...

இனியபாரதி.



புதன், 2 ஜூன், 2021

அன்பின் உச்சக்கட்டம்...

அவள் கொண்ட

காதலின்

உச்சக்கட்டம்

எல்லாவற்றையும்

ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 1 ஜூன், 2021

இல்லை என்று தான் சொல்வான்...

திறந்திருந்ததும்

நுழைந்து விட்டு

இப்போது

சொல்லாமல் கொள்ளாமல் செல்வது

அவளுக்கு மட்டும்

இல்லை

அவளைச் சார்ந்தவற்றிற்க்கும்

இழப்போ என்று

எண்ணினால்

இல்லை என்று தான் சொல்வான்...

இனியபாரதி. 

திங்கள், 31 மே, 2021

கருகிப்போய்விட்டன...

கருகிப்போய் விடுமோ

என் வாழ்க்கை

என்று

ஆதங்கப்பட்ட பலருக்குத்

தோன்றிய எண்ணங்கள் தான்

கருகிப்போய்விட்டன...

இனியபாரதி. 

ஞாயிறு, 30 மே, 2021

மறந்த செய்தி மட்டுமே....

அவள் சிரிப்போசை

மறந்து விட்டேன்...

அவள் எழும் நேரம்

மறந்து விட்டேன்...

அவள் வழக்கம்

மறந்து விட்டேன்...

அவள் உணவுப்பழக்கம்

மறந்து விட்டேன்...

அவள் காதழகு

மறந்து விட்டேன்...

அவள் மச்சங்கள்

மறந்து விட்டேன்...

மறக்காமல் இருப்பது

அவள் என்னை மறந்த செய்தி மட்டுமே....

இனியபாரதி.

அவள் அறிவாளோ???

சத்தம் கேட்டதும்

தாவி ஓடி விட்டாள்...

திரும்பி வருவாள்

என்று காத்திருந்தேன்....

காரணம் அறியாமல்

ஓடிய அவளை

எங்ஙனம் அழைப்பேன்

என்று என்னுள் எழும் போராட்டம்

அவள் அறிவாளோ???

இனியபாரதி.

வெள்ளி, 28 மே, 2021

அவசியம் இல்லை என்றால்...

அவசியம் இல்லை என்றால்

புன்னகை கூட

வெறும் சிரிப்பாகி விடும்...

சிலர் வாழ்க்கையைப் போல....


இனியபாரதி. 


வியாழன், 27 மே, 2021

ஏங்கும் அப்பாவை....

காலமும் நேரமும்

கைகூடா நிலையில்

அவள் மனமும் நினைவுகளும்

தவிப்பது

அவளுக்கு மட்டும் தான் தெரியும்....

அப்படியே கைகூடினாலும்

அதைக் காத்துக் கொள்வது

எப்படி என்று தான் 

அவளுக்குத் தெரியவில்லை...


இனியபாரதி. 

புதன், 26 மே, 2021

உன் வழிகளும் விரிவடையும்...

எனக்கென யாரும் இல்லை,

எதுவும் இல்லை

என்று சொல்வதை விட...

இந்த உலகமே

எனக்காகப் படைக்கப்பட்டது என்று

எண்ணிப் பார்...

உன் வழிகளும் விரிவடையும்...

இனியபாரதி.

செவ்வாய், 25 மே, 2021

வழி பிறக்கும்...

என்றாவது ஒரு நாள்

புதிய வழி பிறக்கும்

என்ற நம்பிக்கையில் தான்

ஒவ்வொரு நாளும்

புலர்ந்து கொண்டு இருக்கிறது...

இனியபாரதி. 

திங்கள், 24 மே, 2021

என் இதயம்....

நீ மட்டும் இல்லை என்றால்

நான் என்றோ இறந்திருப்பேன்...

இப்படிக்கு

என் இதயம்.

இனியபாரதி.

ஞாயிறு, 23 மே, 2021

என்றும் உன்னோடு...

என்றும் என்னோடு நீ இருப்பதால் மட்டுமே

நான் நானாக இருக்கிறேன்...

என் மனமும் என்றும்

உன்னோடு இருக்கிறது...

இனியபாரதி.

சனி, 22 மே, 2021

நிஜம் மட்டுமே...

அவள் கனவாய்

மாறிப் போவாளோ

என்று எண்ணும் போது தான்,

"நிஜமாய்"

என் அருகில் இருப்பாள்...

இனியபாரதி.

வெள்ளி, 21 மே, 2021

தென்றலும் தேடி வரும்...

அவளின் மென்மைக்குத்

தென்றலும் அவளைத் தேடி வரும்...

அவள் மனமும்

மென்மையாய் இருக்கும்...

அவள் குணமும்

மென்மையாய் இருக்கும்...

அவள் சாந்தமும்

மென்மையாய் இருக்கும்...

இனியபாரதி.


வியாழன், 20 மே, 2021

கனிவின் மொத்த உருவம்....

அவள்

கொடுப்பதில் மட்டும் வல்லவள் அல்ல...

பிறரைப் புரிந்து கொள்வதிலும்

வல்லவள் தான்...

இனியபாரதி.

புதன், 19 மே, 2021

பக்குவம் வேண்டும்...

நல்லவை எல்லாவற்றையும்

ஏற்றுக் கொள்ளும்

பக்குவத்தைப் போல...

உற்றவர் செய்யும்

சில விஷயங்களையும்

ஏற்றுக் கொள்ளும்

பக்குவம் வேண்டும்...

இனியபாரதி.

செவ்வாய், 18 மே, 2021

அவள் இல்லாமல்...

முந்தின இரவே

அவன் தூக்கம் கலைந்ததால்

அடுத்த நாள்

மிகவும் கவனத்துடன்

சீக்கிரம் உறங்கச் சென்றான்....


ஆனால்

அன்றிரவும் அவன் கனவில் வர

அவள் மறக்கவில்லை...

வந்தாள்...

தழுவிச் சென்றாள்...

அன்றும்

அவன் தூக்கம் கலைந்தது...

அடுத்த நாள்

முடிவே எடுத்து விட்டான்...

"அவள் இல்லாமல் இனி உறங்கச் செல்லக் கூடாது என்று..."

இனியபாரதி. 

திங்கள், 17 மே, 2021

தேற்றும் ஒன்று...

என்னைத் தேற்றும் ஒன்று

அவளின் புன்சிரிப்பு மட்டுமே....

இனியபாரதி.

ஞாயிறு, 16 மே, 2021

காத்திருப்பின் பரிசு...

காத்துக் கிடந்த 

அந்தத் தெரு ஓரம் என்னவோ 

அவ்வளவாக 

ஒவ்வவில்லை என்றாலும் 

அந்த இரவிலும் 

எப்படியாவது 

அவள் முகம் 

காண வேண்டும் என்று 

அவன் முகத்தில் இருந்த 

ஒரு பதைபதைப்புக்கு மத்தியில் 

தெருவில்  கடந்து சென்ற 

மனிதர்கள் 

வாகனங்கள் 

எல்லாம் 

உணர்த்தி விட்டுச் சென்றது 

ஒன்றே ஒன்று தான்...

காத்திருப்பின் பரிசு 

"அவமானமும் 

வெட்கமும் 

என்று"

இனியபாரதி.

சனி, 15 மே, 2021

தூசி படிந்த....

தூசி படிந்த அவள் கைக்கடிகாரம் காட்டியது...

அவள் நாட்கள் முடிந்துவிட்டது என்று எண்ணி 

அவள் வீணடித்த நேரத்தை...

இனியபாரதி. 

வெள்ளி, 14 மே, 2021

எப்படி இருக்கும்???

மண்ணுக்குள் இருக்கும் போது 

வைரத்திற்கே மதிப்பில்லை....

மனிதனுக்கு எப்படி இருக்கும்???

இனியபாரதி.


வியாழன், 13 மே, 2021

மஞ்சள்...


மஞ்சள் 

ஒரு நிறம் மட்டும் அல்ல...

அழகின் அர்த்தம்....

அமைதியின் வடிவம்...

இசையின்  தோழி...

இன்ப வரவு...

குட்டி ஆசை...

இனியபாரதி. 

புதன், 12 மே, 2021

அழுகையும் ஆனந்தமே...

ஒவ்வொன்றுக்கும்  ஒரு காலம் உண்டு 

ஒரு நேரமும் உண்டு...

உன் அழுகையும் ஆனந்தமாய் மாறும் 

காலமும் நேரமும் வரும்...

அதுவரை 

உன் அழுகையை 

ஆனந்தமாய் அனுபவி....


இனியபாரதி. 

செவ்வாய், 11 மே, 2021

உன் அருகில்...

காற்றும் 

இசையும் 

உற்ற தோழனாக 

என்றும் 

உன் அருகில்...

இனியபாரதி. 

திங்கள், 10 மே, 2021

தொலைந்தது தொலைந்தது தான்!!!

கண்டுபிடித்து விட்டேன் என்று 

ஒருநாள் அவள் சொன்னாலும் 

அவன் சொன்னாலும் 

தொலைந்தது  தொலைந்தது   தான்!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 9 மே, 2021

அவன் பெருமூச்சு...

தீராத அவளின் ஆசைகள் அனைத்தும் 

என்றும் அவன் நினைவலைகளில்...

என்றாவது ஒருநாள் 

நிறைவேற்றியே தீருவேன் என்ற 

அவன் பெருமூச்சு...

இனியபாரதி.

சனி, 8 மே, 2021

பக்குவப்பட்டேன்...

கிடைப்பது எதுவாக இரு‌ந்தாலு‌ம் 

ஏற்றுக் கொள்ளும் பக்குவம் 

வருவது 

சரியோ தவறோ என்று தெரியவில்லை!!!

ஆனால்,

ஏற்றுக் கொண்ட பொருளை 

பத்திரப்படுத்திக் கொள்ள பக்குவப்பட்டேன்.

இனியபாரதி.

வெள்ளி, 7 மே, 2021

முதல் பார்வையில்...

முதல் பார்வையில் மயங்கியது 

நானாக இருந்தாலும் 

கடைசி வரை 

நீ என்னில் 

மயக்கம் கொள்ள விரும்புகிறேன் நான்...

"நிலவும் அவரும்..."

இனியபாரதி. 

வியாழன், 6 மே, 2021

அவளிடம்...

கேட்பது எல்லாம் கிடைக்கும் ஒரே இடம் 

அவள் மட்டுமே...

அவளிடம் இல்லாததது 

என்று 

எதுவுமே இல்லை....

இனியபாரதி. 

இருக்கக் கூடாது...

கனவின் அர்த்தம் 

முன்னரே தெரிந்திருந்தால் 

அந்தக் கனவே 

கண்டிருக்க மாட்டேன்.....

கனவில் கூட 

நாம் பிரிவது போல் 

இருக்கக் கூடாது என்பதற்காக....

இனியபாரதி. 

புதன், 5 மே, 2021

தேவைப்படும் பொழுது....

தேவைப்படும் பொழுது மட்டும் 

அவள் வே‌ண்டு‌ம் என்றால் 

அதற்கான 

சரியான தெரிவு 

அவள் அல்ல....

இனியபாரதி. 

செவ்வாய், 4 மே, 2021

அதிக கவனம்....

அற்பமாய் மனிதன் 

சொர்க்க பூமியில் விலங்குகள் 

மதிக்கத் தெரியுமா?

இல்லை 

மிதிக்க மட்டும் தான் மனிதனை 

எத்தனை இன்னல்கள்,

எத்தனை  சோகங்கள்,

எத்தனை வருத்தங்கள்....

இருந்தாலும் 

அவர்கள்  வேலை முடிவதில் மட்டும் 

அதிக கவனம்....

இனியபாரதி.  

திங்கள், 3 மே, 2021

இரவுகள் தான் அதிகம்...

நானு‌ம் அவளும் 

சேர்ந்து சென்ற 

பொழுதுகளை விட 

சேர்ந்து சென்ற 

இரவுகள் தான் அதிகம்...

காரணம் 

அவள் அழகு 

நிலவின் கர்வத்தை 

உடைக்க வேண்டும் என்பதற்காக 

இனியபாரதி.

சனி, 1 மே, 2021

கேட்கும் வரம் கொடுக்கும்....

வேண்டும் வரம் தருவது 

அந்தச் சாமி மட்டும் இல்லை...

என் 

உற்றவளின் கண்ணசைவும் தா‌ன்...

இனியபாரதி.  

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

மிகப்பெரிய பரிசுl!!

அவளின் 

உடனிருப்பு மட்டுமே

எனக்குக் கிடைத்த 

மிகப்பெரிய பரிசுl!!

இனிபாரதி. 

வியாழன், 29 ஏப்ரல், 2021

அவன் முடிவு...

இணைத்து இருப்பதும் 

பிரிந்து இருப்பதும் 

என்றும் 

"அவன் முடிவு"

என்பது மட்டும் நிச்சயம்...

இனியபாரதி. 


புதன், 28 ஏப்ரல், 2021

எனக்கு எல்லாம் என்று ....

நான் என்றால் 

நான் மட்டும் அல்ல 

அவளும் தான் என்று 

எனக்கு உணர்த்தியவள்!!

இன்று 

நான் மட்டுமே 

எனக்கு எல்லாம் என்று 

தனக்குத் தானே 

ஆறுதல் தேடிக் கொள்ளச் சொல்கிறாள்...

இனியபாரதி.  


செவ்வாய், 27 ஏப்ரல், 2021

எனக்கென்ன உரிமை???

கொடுப்பதும் 

எடுப்பதும்

அவன் செயல்....

அதில் எனக்கென்ன உரிமை???

இனியபாரதி. 

திங்கள், 26 ஏப்ரல், 2021

சாத்தியமே....

கேட்பது எதுவாக இருந்தாலும்

உன் செயலில் நீ தெளிவாய் இருந்தால் 

உனது வெற்றியும் 

சாத்தியமே....

இனியபாரதி.


ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

எனக்கானவள்...

ஒரு புன்னகையில் மயக்கும் 

அவள் முகம் 

எனக்கென தவிக்கும் 

அவள் மனம் 

என்னை மட்டும் நினைக்கும்

அவள் நெஞ்சம் 

என்றும்  என்னில் நிரந்தரம்....

இனியபாரதி. 

சனி, 24 ஏப்ரல், 2021

நீயே...

உன் அனைத்துக் கேள்விகளுக்கும் 

பதில் நீயே....


இனியபாரதி. 

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

நினைக்கும் நேரம்...

அவள் நினைக்கும் நேரம் எல்லாம்

அவனுடன் இருக்க முடியாவிட்டாலும் 

அவள் நினைவுடன் 

என்றும் இருப்பான் அவன்!!!

இனியபாரதி. 


வியாழன், 22 ஏப்ரல், 2021

தெரிய வருகிறது...

நடப்பதெல்லாம் நன்மைக்கே 

என்று எண்ணும் ஒவ்வொரு நொடியும் 

ஏதோ ஒரு விதத்தில் 

நான் பைத்தியமாகிப் போன விஷயம்

தெரிய வருகிறது....

இனியபாரதி.

புதன், 21 ஏப்ரல், 2021

அது மட்டுமே....

என்ன பேசினாலும் 

என்ன திட்டினாலும் 

என்ன கொஞ்சினாலும்

என்ன கெஞ்சினாலும்

என்ன சண்டையிட்டாலும் 

'அவள் என்னவள் 

அவன் என்னவன்'

என்பது மட்டுமே "அன்பு"



இனியபாரதி. 

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

எண்ணித் துணிக...

சில வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னால் 

சிந்திப்பதே நலம்....


துணிந்த பின் 

பின்வாங்க வழி இல்லை....


இனியபாரதி.

திங்கள், 19 ஏப்ரல், 2021

உயர்விற்கான நாள்...

அருகாமையோ

தூரமோ

இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் 

போகும் நாள் தான்,

உன் அன்பின் 

அடுத்தக்கட்ட உயர்விற்கான நாள்...

இனியபாரதி. 

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

சுகம் தான்....

காத்திருப்பின் மதிப்பு 

ஒன்றை அடைந்த பின் தான் தெரியும்...

காத்திருப்பு சுகம் என்றால்,

அதைச் செய்யத் தூண்டும் 

அவள் அன்பும் சுகம் தான்....

இனியபாரதி.  


சனி, 17 ஏப்ரல், 2021

என்றும் தனித்துவம் பெற்றது தான்...

அருமை பெருமை என்று 

ஆயிரம் சொன்னாலும்,

கூடவே இருந்து 

அனுபவிக்கும் சுகம்

என்றும் தனித்துவம் பெற்றது தான்...

இனியபாரதி. 

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

அவள் மதிப்பு என்ன?

அவள் செய்கைகள் அனைத்தும் 

கிண்டலும் 

கேலியும் 

ஆன பின்பு 

அங்கு 

அவள் மதிப்பு என்ன?


இனியபாரதி. 

வியாழன், 15 ஏப்ரல், 2021

மகிழ்ச்சியைத் தருவான்....

தேடலின் முடிவு 

வருத்தம் மட்டுமே 

என்று நினைக்கும் பொழுது தான்

மகிழ்ச்சியைத் தருவான் 

அந்த இறைவன்...

இனியபாரதி. 


புதன், 14 ஏப்ரல், 2021

நல்ல நட்பு...

இதயமும் 

கண்களும் 

மனமும் 

தேடும் ஒரு உறவு உண்டென்றால் 

அது 

ஒரு சிறந்த நட்பாகத் தான் இருக்கும்...

காரணம்,

நட்பு 

அதைப் பெற்றவர்களின் நலனை மட்டுமே நாடும்...

இனியபாரதி.

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

எல்லாம் ஒரு கனவு போல....

தேன் இனிமை 

மழை அழகு 

வானவில்

மர நிழல்

அடர்ந்த காடு 

யாருமில்லா உணவகம் 

எல்லாம் ஒரு கனவு போல....

இனியபாரதி. 

திங்கள், 12 ஏப்ரல், 2021

என்றும் அழகானது...

எதிர்பாராமல் 

கிடைக்கும் 

அந்த அன்பு 

என்றும் அழகானது...

இனியபாரதி. 

அம்மா மட்டுமே...

என்றும் ஒரு புன்னகையுடன் 

தன் வலியை 

வெளியே சொல்லாமல் 

நடமாடும் ஒரு உயிர் 

உலகில் உண்டென்றால் 

அது அம்மா மட்டுமே...


இனியபாரதி. 

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

அவள் கருவறை...

அழகாய் 

அம்சமாய் 

எளிமையாய் 

எழில் சூழ்ந்த 

ஒரு அமைதியின் இடம்....

"அவள் கருவறை"

இனியபாரதி. 

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

தொலைத்த இரண்டே இரண்டு....

அவள் தேடலில் தொலைத்த இரண்டே இரண்டு....

ஒன்று 

அவளின் கனவுகள்....

மற்றொன்று 

அவளின் ஆசைகள்...

இனியபாரதி.

வியாழன், 8 ஏப்ரல், 2021

உன் உரிமைக்காக மட்டும்...

காரணம் இன்றி 

சண்டையிட்டு 

அதனால் வரும் 

வலியை அனுபவிப்பது 

அவன் மட்டும் அல்ல

அவளும் தான் என்பது 

என்று தான் அவளுக்குப் புலப்படுமோ?

சண்டை வெறும் வலியை மட்டும் தருவதில்லை...

ஒருவித மன உளைச்சல் ஏற்படவும் 

காரணமாக அமைகிறது...

சண்டையிடு...

அவனிடம்...

உன் உரிமைக்காக மட்டும்...

இனியபாரதி. 


புதன், 7 ஏப்ரல், 2021

அவள் மௌனம்...

அறிவெல்லாம் கடந்த 

அவளின் அன்பிற்கு 

ஈடு இணை ஒன்று மட்டுமே...

"அவள் மௌனம்"

இனியபாரதி. 

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

தீண்டிய நேரம்...

தென்றல் வந்து 

தீண்டிய நேரம் 

அந்தி மாலை தான்...

அதன் ஸ்பரிசம் 

உணரும்  நேரம் 

அதிகாலை...

இனியபாரதி. 

திங்கள், 5 ஏப்ரல், 2021

பொறுமை அவசியமோ...

பெற்றுக் கொண்ட 

அவளின் அன்பு 

அளவிற்கு  அதிகமாய் இரு‌ப்பதா‌ல்,

சிறிது இடைவெளி விட்டு 

அன்பு செய்வாள் போல...

இனியபாரதி. 

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

கடவுள் தந்தது...

எல்லாம் கிடைத்து விட்டது என்று 

பெருமிதம் கொள்ளும் எனக்கு,

எதுவும் கிடைக்காமல் போகாது 

என்ற ஆணவமும் உண்டு...

இனியபாரதி. 

சனி, 3 ஏப்ரல், 2021

Love makes life beautiful 😍

ஒவ்வொரு நாளும் 

அவளின் தவிப்பும் தன்னம்பிக்கையும் 

என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன...

நான் கொடுத்து வைத்தவன் தான் 

அவள் என் அருகில் இருக்கும் வரை...

இனியபாரதி. 

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

வியாழன், 1 ஏப்ரல், 2021

என்றும் உனதாக...

நான் கொடுக்கும் அன்புப்பரிசுகள்

சில நேரங்களில் 

உனக்கு பிடிக்காமல் போயிருந்திருக்கலாம்...

ஆனாலும்

என் மெளனம் 

மறுபடியும்

உன்னை நோக்கிக் வரச் செய்யும்...

இனியபாரதி. 

புதன், 31 மார்ச், 2021

வேண்டுமென்று...

காரணம்

அறிய வேண்டுமென்று

நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்

தனிமையைக் கொடுக்குமே தவிர

அன்பை அல்ல...

இனியபாரதி. 

செவ்வாய், 30 மார்ச், 2021

யூகிக்க முடியாதவை...

நடப்பதும்

நடக்க இருப்பதும்

நம்மால் யூகிக்க முடியாதவை...

நடப்பதை

நடப்பது போல்

விட்டு விடுவதே நலம்

நடக்க இருப்பது

நல்ல முறையில் நடக்கும் என்ற நம்பிக்கையுடன்....

இனியபாரதி. 

திங்கள், 29 மார்ச், 2021

வியப்பே...

அவளின் ஒவ்வொரு செயலும் 

வியப்பே தந்தாலும்,

அச்செயலின் மையம்

அவனாக இருக்கும் போது

கவலை கொள்ளாமல் இருக்கலாம்...

இனியபாரதி. 

ஞாயிறு, 28 மார்ச், 2021

இருக்கலாம்...

ஒன்று தான் என்று

புரிந்து கொள்ளாத தருணங்கள்...

பின்பு புரிந்து கொள்வதற்குக்

காரணங்களாகவும் இருக்கலாம்,

பிரிந்து செல்லக்

காரணங்களாகவும் இருக்கலாம்.

இனியபாரதி. 

சனி, 27 மார்ச், 2021

எல்லாம் அவன் செயல்...

எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்று

ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருப்பான் போல....


அவன் எண்ணப்படி

எல்லாம் நடந்தேறி

இறுதி நிலையில்

முழுமையாய் துரத்திவிட்டான்

அவன் உலகினின்று...

இனியபாரதி. 


வெள்ளி, 26 மார்ச், 2021

குறைந்து விட்டன...

அவளுடன் உறவாடும்

நேரம் மட்டும் குறையவில்லை...

ஆனால்

அவளுக்கு

அவன் மீதான 

அன்பும்

பாசமும்

அக்கறையும் மட்டும் குறைந்து விட்டன...

இனியபாரதி. 



வியாழன், 25 மார்ச், 2021

உன்னைச் சரணடைந்தேன்...

என் பணி

உன் அடி பணிந்து கிடப்பதே...

அதை அன்றி

வேறென்ன வேண்டும் 

என் வாழ்வில்???

இனியபாரதி. 

புதன், 24 மார்ச், 2021

தழுவி நின்ற நான்....

நிஜமாய்

நின்ற அவள்!!!

அந்த நிஜத்தைத்

தழுவி நின்ற

நான்...

இனியபாரதி. 

அவசரம்...

அவசரம்

என்ற வார்த்தை 

கொஞ்சம் அவசரப்படாமல்

நம் வாழ்வில்

வரும் போது

நம் வீணான அவசரங்களும்

தவிர்க்கப்படுகின்றன...

இனியபாரதி. 

செவ்வாய், 23 மார்ச், 2021

நிஜமாய்...

நிழல் என்று மட்டும் எண்ணி

நின்று விட முடியாது...

நிழலாய் நின்றவள்

நிஜமாய் 

மனத்தின் ஆழத்தில்

ஓர் இடம் பிடித்து

அழகாய் அமர்ந்திருப்பாள்....

அவளை

மறக்கவும் முடியாது...

நினைக்காமல் இருக்கவும் முடியாது...

இனியபாரதி. 


ஞாயிறு, 21 மார்ச், 2021

முடிவும் அவளே...

ஒரு புதிய பாதையின்

தொடக்கமாய் இருந்தவள்...

இன்று

அதே பாதையின் 

முடிவாய் நிற்கிறாள்...

விடை பெற்றுச் செல்வதா???

தழுவி அணைத்துக் கொள்வதா???

இனியபாரதி. 

சனி, 20 மார்ச், 2021

எல்லாம் அறிந்தவன்....

அவளின் அந்த ஒலி

அவன் காதுகளுக்குள் மட்டும் ஒலிக்கும்...

அவளின் அந்த மெளனம்

அவன் மனதை மட்டும் வருடும்...

அவளின் அந்த சிரிப்பு

அவன் உள்ளம் மட்டும் அறியும்...

அவளின் அந்த வாசம்

அவன் நாசி மட்டும் துளைக்கும்...

அவளின் அந்தப் பார்வை

அவன் கண்கள் மட்டும் அறியும்...


இனியபாரதி. 



வெள்ளி, 19 மார்ச், 2021

வரம்...

இருக்கும் சில நல்ல பண்புகளை

எப்படி உபயோகித்தாலும்

மற்றவர்களுக்கு நன்மை கிடைப்பதே

ஒரு வரம் தான்....

இனியபாரதி.

வியாழன், 18 மார்ச், 2021

கருநீல மேகம்...

அவள் கருத்திருக்கக் காரணம்

மகிழ்ச்சி அல்ல

மனவருத்தம்!!!


இனியபாரதி. 

புதன், 17 மார்ச், 2021

என் எண்ணங்கள்...

இனிப்பும் கசக்கும் காலம் வரும்...

அது

அந்தப் பண்டங்களின் தவறல்ல...

என் எண்ணங்களின் தவறு...

இனியபாரதி.

செவ்வாய், 16 மார்ச், 2021

தேவதை...

என் தேவதை அருகினில்

என்றும் என் இருப்பு

காட்டும் என் அன்பை!

அன்பு மட்டுமே ஆணிவேராய்

அவள் அருகில்

என்றும் உணர...

இனியபாரதி. 




திங்கள், 15 மார்ச், 2021

அம்மா...

அம்மா...

என்ற வார்த்தை எனக்குள் உணர்த்துவது...

ஒரு தாரக மந்திரம்...

ஒரு நல்ல மருத்துவம்...

ஒரு நல்ல வாழ்க்கை...

ஒரு நல்ல உயிர்...

ஒரு நல்ல தோழி...


இனியபாரதி. 


ஞாயிறு, 14 மார்ச், 2021

என்றுமாக...

என் எல்லாமுமாக

என்னுடன்

எனக்காக

என்றும்

இருப்பவள்...

"அவள் மட்டுமே...."


இனியபாரதி. 

சனி, 13 மார்ச், 2021

என்றும் துணையாக...

எல்லாவுமாய் அவளால்

இருக்க முடியும் என்பதை

உணரும் ஒவ்வொரு நொடியும்,

மனதில் ஏதோ ஒரு

இனம் புரியா மகிழ்ச்சி....

இனியபாரதி.

வெள்ளி, 12 மார்ச், 2021

மொட்டு...

மொட்டு

ஒருநாள்

அழகான பூவாய் 

மலரும் என்ற 

நம்பிக்கையில் தான்

தலை குனிந்து வாழ்கிறது....

இனியபாரதி. 

வியாழன், 11 மார்ச், 2021

காலம் கழிகின்றது...

எதிர்பார்த்துக் காத்திருந்த

நாட்கள் எல்லாம்

கனவாய் போக...

எல்லாம் முடிந்துவிட்ட

இந்த நாட்கள் மட்டுமே

நிரந்தரம் என்று

காலம் கழிகின்றது...

இனியபாரதி. 

புதன், 10 மார்ச், 2021

மழையால் மகிழ்வு...

 எங்கிருந்து வருகிறாய்

என்று எண்ணும் போதே

எனக்குள் ஓர் சிலிர்ப்பு...


வந்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி...

என் மீது நீ உரசும்

ஒவ்வொரு நொடியும் 

ஏதோ ஒரு சலனம்...


மகிழ்ச்சியும் தருகிறாய்...

குளிர்ச்சியும் தருகிறாய்...


உன்னைப் பின் தொடர

முடியவில்லை என்றாலும்

முழுமையாய் அனுபவிக்கிறேன்

ஒவ்வொரு பொழுதும்...


நீ அழகானவள்...

அமிர்தமானவள்...

ஆசையாய் அள்ளி அணைக்க

ஏக்கமாய் நான் இருக்க

எனக்காய் அடிக்கடி 

மின்னல் ஒளி தந்து மகிழ்விக்கிறாய்!!!


இனியபாரதி.

செவ்வாய், 9 மார்ச், 2021

அவனும் அவளும்...

தன்னிலை

மறவாமல்

இருக்கும்

அவள்...

அவளை

மறக்க வைத்த

அவன்!!!


இனியபாரதி. 

திங்கள், 8 மார்ச், 2021

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளுடன்....

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்

இந்த வாழ்க்கைப் போராட்டத்தில்

எப்படியாவது ஜெயித்துவிடலாம்

என்ற நம்பிக்கையில் மட்டுமே

பல பெண்களின் வாழ்க்கை

ஓடிக் கொண்டிருக்கிறது....

பெண் உயிர் கொடுப்பவள்...

எதையும் சாதிக்கத் துணிந்தவள்...

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளுடன்....

இனியபாரதி. 

ஞாயிறு, 7 மார்ச், 2021

சுகம்தான்...

எங்கு இருந்தாலும்

மனம் மட்டும் 

என்றும் அவளை நினைக்கும்

ஒரு வாழ்க்கை 

சுகம்தான்...

இனியபாரதி. 

சனி, 6 மார்ச், 2021

காவியக் காதல்...

காவியக் காதல் படைக்க

பத்து வருடம் மிகக் குறைவு...

ஐம்பது வருடம் என்பது

எண்ண இயலாதது...

அப்படிப் படைக்கப்பட்ட காதல் அரிது!!!

அந்தக் கதையில் வந்த 'வெள்ளையன் மீனாட்சி' போல...

நன்றி மாறா...

இனியபாரதி. 

வெள்ளி, 5 மார்ச், 2021

எல்லை உண்டு...

அவளின்

ஆசைக்கும்

அடக்கத்திற்கும்

ஒரே ஒரு ஒற்றுமை தான்..


இரண்டிற்கும் ஒரு எல்லை உண்டு.

இனியபாரதி. 

வியாழன், 4 மார்ச், 2021

உம் பாடலின் அழகோ அழகு...

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ


சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்


சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

மகாகவி பாரதியார்.

புதன், 3 மார்ச், 2021

வாய்ப்பு இல்லை...

என் கண்ணீரும்

மெளனமும்

ஏற்படுத்தாத தாக்கத்தை

எப்படி என் அன்பு ஏற்படுத்தி இருக்கும்?

இனியபாரதி. 

செவ்வாய், 2 மார்ச், 2021

வானவில்லாய்...

வானவில்லாய் வந்த அவன்

சிறிது நேர இன்பம் தந்து

இருந்த இடம் தெரியாமல் 

மறைந்து விடுகிறான்...

அவன் வருகை எதிர் பார்த்து

அடுத்த மழைக்காய்

காத்திருக்கத் தான் வேண்டும்...

இனியபாரதி. 

திங்கள், 1 மார்ச், 2021

என் இனியவளே...

கண்ணுக்கு இனிய என்

கன்னிப் பூவே...

உன் வாசம்....

என்னைத் தவிர வேறு யார் அறிவார்?

உன் மெளனத்தின் அர்த்தம் கூட அறிவேன்...

உன் மகிழ்ச்சியின் காரணம் கூட அறிவேன்...

நீ

என்றும் என் அருகில்...

எனக்கானவளாய்

எனக்கு மட்டும் சொந்தமானவளாய்

என்றும் என்னுடன்....

இனியபாரதி. 

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

இனிய விடியல்...

நாம் இருவரும் பேசிக் கொள்ளும் நேரம்

குறைவானாலும்,

நம் மனம் இரண்டும் பேசிக் கொள்ளும் நேரம்

அதிகம்.

அன்பிற்கு அருகாமை முக்கியம் தான்...

அதைவிடப் புரிதல் முக்கியம்...

நம் புரிதலுக்கு இணை "நாம் மட்டுமே..."

புலரப் போகும் மாதம் நம்மையும் நம் உறவுகளையும் நிறைவான அன்பில் வளரச் செய்யட்டும்.

இனியபாரதி. 


சனி, 27 பிப்ரவரி, 2021

காரணம்...

அவன் அன்பை வெல்ல

யாராலும் முடியாது...

காரணம்,

தாய் 

தந்தை

உறவு

நட்பு

எல்லாம் அவன் தான்!!!

இனியபாரதி. 


வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

என்றும் நிலைக்கும்...

என்றும் நிலைப்பவை!!!

தீராத அவன் காதல்...

கொஞ்சலில் அவள் வெட்கம்...

சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள்...

அவன் கொடுக்கும் மல்லிகையின் மணம்...

இனியபாரதி. 

வியாழன், 25 பிப்ரவரி, 2021

எல்லாம் மாறலாம்...

எது மாறினாலும்

அவனுக்கு அவள் மீதுள்ள அன்பும்

அவளுக்கு அவன் மீதுள்ள அன்பும்

மாறாது...

காரணம் ஒன்றே ஒன்று தான்...

"அவர்களின் உண்மையான அன்பு"

இனியபாரதி. 

புதன், 24 பிப்ரவரி, 2021

ஊடல் வழி காதல்...

அவளுடன் சண்டையிட்ட

பல நாட்களை நினைத்துப் பார்க்கையில்,

எம் அன்பின் ஆழத்தை

உணர முடிகிறது.

இனியபாரதி. 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

அன்பு மட்டுமே...

எல்லாவற்றிலும் முதலிடம் பிடிப்பது

அன்பு மட்டுமே...

அந்த ஒற்றைச் சொல் தான்

அகில உலகையும் ஆட்டிப் படைக்கும்

சக்தி மிக்கது!!!

இனியபாரதி. 

திங்கள், 22 பிப்ரவரி, 2021

கொஞ்சம் மட்டும் போதும்...

அவள் கொடுப்பது எதுவாக இருந்தாலும்

எனக்குக் கொஞ்சம் மட்டும் போதும்

என்ற மனநிலை எல்லோருக்கும் வருவதில்லை

அவனைப் போல!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கர்வம் தான்...

நான் கர்வப்பட்ட நேரங்கள் மிகப் பல...

அதிலும் குறிப்பாக,

அவள் புன்னகையின் அழகால் தோன்றும்

கன்னக் குழிகள்

எனக்குரியவை என்றென்னும் போது

எழும் கர்வம் கொஞ்சம் அதிகம் தான்!!!


இனியபாரதி. 

சனி, 20 பிப்ரவரி, 2021

காலம்... நேரம்....

காலமும்

நேரமும்

சரியாகக் கூடி வரும் போது

நினைத்தவை நடக்கும் என்ற

உறுதி மட்டும் கொள்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்...

அன்பு என்ற ஒற்றைச் சொல்

எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்....

மனிக்கவும் செய்யும்...

காலம் சிலரை மறக்க முடியாமலும்

மன்னிக்க இயலாமலும்

இருக்கும் நிலைக்கு

நம்மைத் தள்ளி விடும்...

இனியபாரதி. 

வியாழன், 18 பிப்ரவரி, 2021

நான் இல்லை....

நினைப்பதெல்லாம் நடக்க

நான் ஒன்றும் கடவுளும் இல்லை...

வேண்டிக் கொள்ள

நான் பக்தனும் இல்லை...

இனியபாரதி. 

புதன், 17 பிப்ரவரி, 2021

தருமம் எப்படி மறுபடியும் வெல்லும்?

இங்கு தர்மம் என்பது என்ன என்று தெரியவில்லை?

சூது யாரிடம் இருந்து யாருக்கு என்று தெரியவில்லை?

எப்படிக் கவ்வும் என்று தெரியவில்லை?

"தருமம் எப்படி மறுபடியும் வெல்லும்?" என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை....

இனியபாரதி. 



செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

எனக்கு மட்டும் ஆனவன்....

அவனுக்காக 

என் ஒரு சிறு முயற்சி கூட

அவ்வளவு ஆனந்தத்தைத் தருகிறது...

காரணம்!!!

அவன் என்னுடையவன்...

எனக்கு மட்டுமானவன்....

இனியபாரதி. 

திங்கள், 15 பிப்ரவரி, 2021

கண்ணுக்கு அழகு...

அவள் கண்ணுக்கு 

அழகென்று பட்டதெல்லாம்

நலமாய் இருந்தாலும்

தேவை இல்லாத பட்சத்தில்

வேண்டாம் என்று சொல்வதையே

கற்றுக் கொண்டாள்!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

மறைந்த... மறந்த வார்த்தைகள்.....

மன அமைதி

மெளனம்

சாந்தம்

அன்பு

கருணை

காதல்

நேசம்

சிரிப்பு

உண்மை

இது போன்ற பல வார்த்தைகளை

பலருக்கும் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது!!!

இனியபாரதி. 

சனி, 13 பிப்ரவரி, 2021

திரை விலக்கப்பட்ட அவள்...

திரைக்குப் பின்னால்

தன் அடையாளத்தை 

மறைத்து நின்ற அவள்!!!

தன்னை அடையாளப்படுத்த

ஒரு திரையைத் தேர்ந்தெடுத்து

அதில் அனைவரும்

தன் முகம் கண்டு களிக்க

ஆசைப்பட்ட  "வீரமங்கை!!"

இனியபாரதி. 

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

முரட்டுவேசம்....

தீண்டிச் செல்லும்

தென்றல் காற்றும் அறியும்

அவள் மனம் மிகவும் மென்மை என்று!!!

அதை

ஒப்புக் கொள்ள மறுக்கும்

அவள் முரட்டு வேசம் தான்

அனைத்தையும் களைக்கும்!!!

இனியபாரதி. 

வியாழன், 11 பிப்ரவரி, 2021

முடியவில்லை...

கனவில் வந்தால் கூட

சமாளித்து விடலாம் போல!

நேரில் வந்தால் தான்

சமாளிக்க முடியவில்லை 

'அவளை...'

இனியபாரதி. 

தெளிவான அவன்...

பார்ப்பதும்

கேட்பதும்

உணர்வதும்

உறவாடுவதும்

உரையாடுவதும்

அவள் மட்டுமே அன்றி 

வேறிருக்கக் கூடாது 

என்பதில் மட்டும் 

"தெளிவான அவன்!"

இனியபாரதி. 

இரண்டும் கஷ்டம் தான்....

கொடுப்பதும் கஷ்டம்

கேட்பதும் கஷ்டம்

"உன்னை மட்டும்..."

இனியபாரதி. 

உன் மனம் அழகு!

காவல் காக்கும் அளவுக்கு

எங்கிருந்து வந்தது

அந்த அன்பு?

என ஆச்சரியப்பட வைக்கும் உன்னை

வியந்து போற்றாமல் இருக்க

மனம் இல்லை...

உன் மனம் அழகு!

உன் செயல்களும் அழகு!

நானும் உனைப் போல் இருக்க ஆசை...

இனியபாரதி. 

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

எல்லாம் இருக்கிறது என்று...

எல்லாம் இருக்கிறது என்று

அடக்கிக் கொண்டு

அவன் இல்லாமல் வாழ்வது

அவ்வளவு சுலபம் இல்லை...

இனியபாரதி. 

திங்கள், 8 பிப்ரவரி, 2021

ஒன்று மட்டும் நிச்சயம்....

அவள் 

இருந்தாலும்

இல்லாவிட்டாலும்

அவன் உலகம் இயங்கும் என்பது நிச்சயம்!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

தெரிந்தே தெரியாமல்...

பிரிவு ஒரு பாரம் என்பது தெரிந்தே

பிரியத் துணிந்த

துணிச்சல் மட்டும் தான் மிச்சம்!!!

ஏன் இந்த வீண் வேசம் என்று அவளைப் பார்த்து

அவ்வப்போது கேட்டுக் கொள்கிறான்...

இனியபாரதி.

சனி, 6 பிப்ரவரி, 2021

போதை...

அதிகாலையில் அருகில் இருந்தது போன்ற உணர்வு...

இடைவேளைகளில் தழுவிச் சென்ற தாக்கம்...

உணவுப் பரிமாற்றத்தில் உள்ளம் பரிமாறிய ஞாபகம்...

அந்திமாலை நடைப்பயிற்சியில் கை கோர்த்து சென்ற நினைவு...

இரவு படுக்கையில் மூச்சுக் காற்றின் உஷ்ணம்...

இவை எல்லாம் "வெறும் போதையே..."

இனியபாரதி. 

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

அவளும் கூட...

மல்லிகையும் அவளும் ஒன்று...

வாடாமல் இருக்கும் போது மணம் வீசும் மல்லிகை...

வாடி விட்ட பின் தெருவில் வீசப்படுகிறது...

அவளும் கூட...

இனியபாரதி. 

வியாழன், 4 பிப்ரவரி, 2021

அவனுக்குத் தெரியும்...

பல நேரங்கள்

நாம் எதிர்பார்க்காத

நிகழ்வுகள் 

நாம் வாழ்வையே 

புரட்டிப் போடும்...


ஆனால்

அவை நல்லவை என்பது அவனுக்குத் தெரியும்...


இனியபாரதி. 

திங்கள், 1 பிப்ரவரி, 2021

அங்கு தான்...

எனக்கான அவனது நேரம்

மிகவும் விலையேறப்பெற்றது...


ஏனெனில்

அங்கு தான் 

அன்பும் ஆசையும் பகிரப்படுகின்றன...

இனியபாரதி.

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

கொஞ்சம் கிறக்கம்....

அவன் அழகு தான்!!!

அந்த அழகிலும் ஒளிந்திருக்கும்

அவன் சிரிப்பழகு தான்

மேலும் என்னை கிறங்கச் செய்கிறது...

இனியபாரதி. 


வெள்ளி, 29 ஜனவரி, 2021

தேடி...

ஆசை இருந்தாலும்

அடக்கிக் கொண்டு,

எந்தவொரு வெறுப்பும் இல்லாமல்

எப்போதும் போல் 

பேசும் அன்பைத் தேடி...

இனியபாரதி. 

புதன், 27 ஜனவரி, 2021

அவள் அன்பு மட்டுமே...

தேடாமல் கிடைத்த

அவள் அன்பு மட்டுமே

அவன் தேடிப் பெற்ற

எல்லா செல்வங்களையும் விட மேலானது...

இனியபாரதி. 

செவ்வாய், 26 ஜனவரி, 2021

நானும் அறிவேன்...

நீ என்னை எவ்வளவு அன்பு செய்கிறாய் என்று

நானும் அறிவேன்...

இருந்தும்

உன் மீது உள்ள அதீத அன்பால்

அதை தினமும் சோதிக்கிறேன்...

இனியபாரதி. 

திங்கள், 25 ஜனவரி, 2021

கனவு மட்டுமே...

உன் கனவை மட்டுமே நோக்கிய உன் பயணம்

இறுதியில் வெற்றி பெறும் என்பதில்

ஐயம் மட்டும் கொள்ளாதே....

உன் நம்பிக்கை உன்னைக் கைவிடாது...

இனியபாரதி.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

யாரோடு என்று...

மோதுவது என்று முடிவெடுத்து விட்டால்

உனக்கு இணையானவர்களுடன் மோது...

தகுதி இல்லாதவர்களிடம்

பேசுவது கூட

உன் தகுதிக்கு இழுக்கு தான்...

இனியபாரதி. 

சனி, 23 ஜனவரி, 2021

எப்படியோ...

எப்படியோ 

காத்திருந்த அவளுக்கும்

காக்க வைத்த அவனுக்கும்

ஒரு நல்ல செய்தி!!!

மறு சந்திப்பில் காத்திருக்கத் தேவை இல்லை என்பது தான்...

இனியபாரதி. 

வெள்ளி, 22 ஜனவரி, 2021

பாதி வழியில்...

பாதி வழியில்

நீ என்னைச் சந்தித்தாலும்

மீதி வழி முழுவதும்

உன்னுடன் வருவது மட்டுமே

என் இன்பம்...

இனியபாரதி. 

வியாழன், 21 ஜனவரி, 2021

காதலும் மோதலும்...

காதலும்

மோதலும்

பல நேரங்களில் நம்மை ஏமாற்றி விடும் இயல்பு உடையவை...


இரண்டிற்கும்

நேரம் காலமே கிடையாது...

இனியபாரதி. 

புதன், 20 ஜனவரி, 2021

அழியாப்புகழ்...

அவன் அன்பு மட்டுமே

என்னிடம் என்றும் நிலைக்கும்

அழியாப்புகழ்...


இனியபாரதி.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

நீயே அவள்....

அவள் போகும் பாதை நீளம்!!!

ஆனால் அழகு...


அவள் காணும் கனவுகள் ஆழமானவை!!!

ஆனால் அடையக் கூடியவை...


அவள் பேசும் பேச்சு மழலை!!!

ஆனால் மகிழ்ச்சி தருபவை...


அவள் கொள்ளும் வெட்கம் அபூர்வம்!!!

ஆனால் அதிசயம்...

அவளாக அவள் மட்டுமே!!!

"நீயே அவள்...."

இனியபாரதி. 

திங்கள், 18 ஜனவரி, 2021

பாடலும்....

நாம் இருவரும்

சேர்ந்து இரசித்த

ஏதோ ஒரு பாடல்

அடிக்கடி உன் ஞாபகத்தைத் தூண்டுகிறது...

இனியபாரதி. 

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

காற்றும் தூதா?

தூது செல்ல நான் தயார்

என்று என் அருகிலே

எப்போதும் நின்று கொண்டு

அறைகூவல் விடும் உன்னிடம்

எப்படிச் சொல்வேன்

அவன் என்னை விட்டுச் சென்று விட்டானென்று!!!

இனியபாரதி.

சனி, 16 ஜனவரி, 2021

கொஞ்சம் சிரமம் தான்...

சீக்கிரம் நகர்ந்து விடாதோ இந்த நாள்

என்று எண்ணும் ஒவ்வொரு நாளும்

மிகவும் மெதுவாக நகர்வது தான் அதிசயம்...

அங்கும் "உன் நினைவலைகள் மட்டுமே..."

இனியபாரதி. 



வெள்ளி, 15 ஜனவரி, 2021

நான் நானாகவே...

நான் நானாகவே இருக்க நினைக்கும்

ஒவ்வொரு நொடியும்

என்னுள் வந்து செல்லும் உருவம் 'நீ...'

இனியபாரதி. 







முல்லை...

கருமேகம்...

பச்சை இலைகளைத் தாங்கிய

செம்பழுப்பு நிற மரங்கள்...

சாலையின் பக்கங்களில்

ஆங்காங்கே தேநீர் கடைகள்...

சப்தமில்லா சாலையில்

அவ்வப்போது வாகனங்கள் நகர்ந்தவண்ணம்...

இறுகப் பற்றிக் கொண்டு

ஒரு காதல் ஜோடி

விரைகிறது இரு சக்கர வாகனத்தில்...

கேட்பாரின்றிக் கிடக்கிறது

அந்த "முல்லை மலர்"...

இனியபாரதி. 

வியாழன், 14 ஜனவரி, 2021

இது மட்டும் போதும்...

கவலைகள் மறந்து

கனவுகள் பிறக்கும்...

கனவின் நடுவில்

தூக்கம் கலையும்...

இரவின் மடியில்

இனிய விருந்தாய்

அவன் அழைப்பு இருக்கும்!!!

இனியபாரதி. 


செவ்வாய், 12 ஜனவரி, 2021

மணம்...

காற்றில் மிதந்து வரும்

அவன் மூச்சுக் காற்று கூட

மணம் பரப்பும்!!!

இனியபாரதி. 

திங்கள், 11 ஜனவரி, 2021

சுகமே...

தலையணை என்று எண்ணி

முள்ளின் மீதும் படுப்பது சுகமே...

நீ என் அருகில் இருந்தால்!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

விரும்பாமல்....

அவன் விருப்பம் இல்லாமல்

காதலும்

கனிந்த பழம் தான்!!!

இனியபாரதி. 

சனி, 9 ஜனவரி, 2021

அவன் அழகு...

அவன் அழகு

பார்த்தவுடன் தெரிந்து கொள்வதோ

பார்க்காமல் தெரிந்து கொள்வதோ அல்ல...

அனுபவித்துப் புரிந்து கொள்வது...

அந்த அனுபவம் கூட

எல்லோருக்கும் கிடைப்பதில்லை...

அதிர்ஷ்டம் கொண்ட என்னைப் போன்ற சிலருக்குத் தான் கிடைக்கும்... 

இனியபாரதி. 

வெள்ளி, 8 ஜனவரி, 2021

காதல் மழை...

மழை பிடிக்கும்...

காதல் மழை ரொம்ப பிடிக்கும்...

காரணம்...

மழையில் நனைவது நான் மட்டுமே...

காதல் மழையில் நனைய

என்னுடன் நீ இருப்பதால் 

அது மிகவும் பிடிக்கும்...

இனியபாரதி. 

வியாழன், 7 ஜனவரி, 2021

தெவிட்டி விடலாம்...

தித்தித்த நேரம் கூட தெவிட்டி விடலாம்

சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப...

அனைத்தையும் சகித்துக் கொள்ளும்

பக்குவம் மட்டும் வேண்டும்...

இனியபாரதி. 

புதன், 6 ஜனவரி, 2021

நொடி கூட....

கடக்க நினைக்கும் சாலையில்

சிக்னல் போட்டு

90 நொடிகள் நிற்கும் போது தான்

ஒவ்வொரு நொடியும்

எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது!!!


விபத்து நடக்காமல் தப்பித்த

ஒரு சில நிமிடம் கழித்து தான்

ஒரு நொடி தாமதித்திருந்தால்

என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது!!!


பாதி வாழ்க்கை வாழ்ந்த பின்

திரும்பிப் பார்த்து

நான் எதுவுமே சாதிக்கவில்லை என்று எண்ணும்போது

எனக்கான நொடிகளை நான் ஏன் இப்படி விரயம் செய்துவிட்டேன் என்று எண்ணத் தோன்றுகின்றது!!!


அன்புக்குரியவர்களின் கருணை கூட

சில நேரங்களில் 

இந்த நொடிப்பொழுதில் மாறி விடுகிறது...

"ஒவ்வொரு நொடியும் வாழ்வின் மாற்றத்திற்கான நொடி..."


இனியபாரதி. 

செவ்வாய், 5 ஜனவரி, 2021

கண்டநாள் முதலாய்...

அவனைக் கண்ட நாள் முதலாய்

நானும் பித்துப்பிடித்துத் தான் அலைகிறேன்..

அன்புடன்

கிறுக்கி.

இனியபாரதி. 

திங்கள், 4 ஜனவரி, 2021

ஓய்வு கொள்...

சிறிது நேரப் பார்வை...

சிறிது நேர இடைவெளி...

மறுபடியும் ஓர் அழகுச் சிரிப்பு...

தொடர்ந்த அவன் வேலைகள்...

வேலைகளின் நடுவில்

அவளின் குட்டி முகம்...

கன்னங்கள் தழுவ,

வேலையும் தொடர...

மழையின் சாரல்...

வீட்டு முற்றத்தோடு

அவள் பாதங்களையும் நனைக்க...

குளிர் காய அலையும் அந்தப் பாதங்களுக்குக் கிடைத்தது

அவன் உள்ளங்கைகள்...

இணையத் துடிக்கும் இதயங்கள் அருகருகில்!!!

மனதிற்கு இதமாய்

ஓய்வு கொள்கிறாள் அவன் தோள்களில்!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

தேன் இனிமை...

ஒன்றும் அறியாமல் இருக்கும் சுகத்தை விட...

எல்லாவற்றையும் அறிந்த பின் இருக்கும் சின்ன

சண்டை கூட,

தேன் இனிமை தான்!!!

இனியபாரதி. 

சனி, 2 ஜனவரி, 2021

இப்படியும் நகருமோ?

கனவில் பல தொல்லைகள்...

நிஜத்தில் பல மோதல்கள்..

கண்டால் ஒரு பேச்சு...

காணாவிட்டால் ஒரு பேச்சு...

இப்படியும் நகருமோ ஒரு காதல் கதை...

இனியபாரதி. 

வெள்ளி, 1 ஜனவரி, 2021

ஆரம்பம்...

எங்கள் தொடக்கமும் முடிவும் ஆன இறைவா...

இந்த ஆண்டு

எங்கள் உடல், மனம் முழுவதையும்

உமது அடிகளிலே சமர்பிக்கிறோம்...

நீரே துணையாளராய் இருந்து வழிநடத்தும்...

எங்கள் குடும்பங்கள்

உற்றார், உறவினர்கள்

நண்பர்கள்

தெரிந்தவர்கள்

தெரியாதவர்கள்

அனைவருக்கும் 

என்றும் பயனுள்ள விதத்தில் வாழ

உமது ஆசியைப் பொழிந்து வழிநடத்தும்...

மற்றவர்களையும் எங்களைப் போல் எண்ணி

அவர்களின்

சுகங்களிலும் 

துக்கங்களிலும்

உடனிருந்து

ஆறுதல் தர

உமது அருள் வரங்களை 

எங்களுக்கு நிறைவாய்த் தந்து

ஒவ்வொரு நாளும் வழிநடத்தும்.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். 

இனியபாரதி.