ஒரு விபத்தில் தன் ஆருயிர் காதலனை இழந்த காதலியின் சோகக் கவிதை!!!
வாழ்க்கையில் நீ மட்டுமே எல்லாம் என்று வாழ்ந்த அவள்
கடைசியில் எல்லாமுமாய் கண்டது யாரோ ஒருவனை!
உன் அன்பு மகனுக்கு ஆசைச் சோறூட்டி அரவணைத்து
வளர்க்க நினைத்த அவளின் எண்ணம்
இப்போது கடமைக்கென்று பெற்றெடுத்த பிள்ளைக்குச் சோறூட்டுகிறது!
இனிமையாய் பேசி இன்ப இரவுகளைக் கழிக்கலாம் என்றிருந்த அவளுக்கு
இரவுகளெல்லாம் துன்பக்களமாய் இருப்தென்னவோ அவளின் விதி!
தொலைக்காட்சியில் அவனுக்குப் பிடித்த பாடல் ஓடும்போது கூட
இரசிக்க முடியவில்லை!
தனிமையில் அவனைப் பற்றிக் கூட சிந்திக்க இயலவில்லை!
வெளியில் செல்லும்போது இரசிக்கிறேன்..
நாங்கள் சேர்ந்து சென்ற இடங்களின் நினைவலைகள் என்னுள் எழும்போது!
என்னைச் சுற்றி ஒரு குடும்பம் இருந்தும்
அனாதை என்று உணர்கிறேன்!
என் உள்ளக் கிடக்கைகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல்
உள்ளுக்குள் தவிக்கிறேன்!
உன்னிடம் பகிர்ந்து கொண்ட என் ஆசைகள் எதுவும் நிறைவேறாமல்
புதைந்து விட்டதை எண்ணி தினமும் அழுகிறேன்!
தண்ணீரில்லா நதிபோல்!
கண்ணீரில்லாமல் வறண்டுவிட்ட என் கண்களுக்கு
ஆறதலளிக்க என் கைகள் மட்டும் தான் இருக்கின்றன!
என் படுக்கை அறை கூட
நீ இல்லாமல் மௌன அஞ்சலி தான் செலுத்துகின்றன தினமும்!
சீக்கிரம் உன்னிடம் வந்துவிடுவேனோ என்ற பயத்துடன்
மொட்டை மாடியில் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்!
நீ இந்த நட்சத்திரமாக இருப்பாயோ என்று என்னுள் நினைத்துக் கொள்கிறேன்!
இப்படிக்கு,
உன் அன்புக் கிளி.
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக