வெள்ளி, 30 ஜூன், 2017

மாதத்தின் முதல் நாள்...

பனிவிழக் கூடாதா என்ற ஏக்கத்தில்
இரவு வேளையில்
மொட்டைமாடியில் தனிஆளாய் அமர்ந்து
இந்தியன் படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கையில்
தோன்றிய சிறிய நினைவு தான்...
நாளை 'ஜூலை மாதத்தின் முதல் நாள்'
ஒவ்வொரு மாதமும் பிறக்கும் போது
ஏதோ புதிதாய்ப் பிறப்பது போல் தோன்றுகிறது!
மாதத்தின் இறுதி நாளில்
என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி
'இந்த மாதம் முழுவதும் எனக்கு எப்படி இருந்தது என்று?'
பெரும்பாலும் அந்த மாதத்தின் முதல் நாள்
பெரும் சோகத்தில் தான் ஆரம்பிக்கும்!
ஆனால், அந்த மாதம்முடியும் போது
ஒரு மாதத்தைக் கடந்துவிட்டோமென்ற திருப்தி மனதில்....
ஒவ்வொரு மாதமும் என்னைத் தவறாமல்
கண்ணிமைக்குள் வைத்துக் காக்கும் இறைவனுக்கு நன்றியும்...
என்னுடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும்
இனிய வாழ்த்துகளுடன்....

இனியபாரதி. 

வியாழன், 29 ஜூன், 2017

நான் இருப்பது....

மழலையின் சிரிப்பில்
என்னைக் காணலாம் என்றேன்!
இயற்கையின் எழிலினிலே
நான் இருக்கிறேன் என்றேன்!
பகிர்ந்து வாழும் போது
நான் இருக்கிறேன் என்றேன்!
அன்பின் வடிவில்
நான் இருக்கிறேன் என்றேன்!
ஆறுதல் கிடைக்கும் இடங்களில்
நான் இருக்கிறேன் என்றேன்!
இவற்றில் எந்த இடத்திலும்
என்னைக் கண்டு கொள்ளாத நீ
பணத்திலும், செல்வத்திலும், பெருமையிலும்
கண்டு கொண்டது யாரை?

இனியபாரதி.

புதன், 28 ஜூன், 2017

அழகு...

அழகிற்கு அழகு சேர்க்க இந்த நீர்க் குமிழ்களால் மட்டுமே முடிகிறது....

இனியபாரதி.

செவ்வாய், 27 ஜூன், 2017

கடமையைச் செய்...

அநேக முறை உன்னை நோக்கியபின்
எனக்கு மேற்சொன்ன தலைப்பே மறந்துவிட்டது!
நான் என் கடமையைத் தான் செய்கிறேன்
பலனையும் எதிர்பார்க்கவில்லை!
பலன் கிடைக்கவில்லை என்றாலும்
அதில் வருத்தம் இல்லை!
ஆனால்... ஒன்றும் செய்யாமல்...
ஒரு கடமையைக் கூட நிறைவேற்றாமல்
உனக்குக் கிடைக்கும் பலனைப் பார்க்கும் போது தான்
என் கடமையை நான் செய்யத் தவறுகிறேன்!!!

இனியபாரதி.

திங்கள், 26 ஜூன், 2017

உயர்வானது எதுவோ???

வைரக்கல் பதித்த தங்க நகைகள் தான்
உயர்ந்தவை என்று நினைத்தேனோ?
பெரிய வீட்டில் எல்லா சௌகரியங்களும்
இருப்பது தான் உயர்வென்றேனோ?
உயர்ந்த பதவி வகிப்பதைத்தான்
உயர்ந்ததென்று நினைத்தேனோ?
மற்றவரை அடிமைப்படுத்துவதைத் தான்
உயர்வென்று எண்ணினேனோ?

இல்லை... இல்லை...

'அன்பே' உலகில் உயர்வானது...
எதனாலும் சாதிக்க முடியாததை
அன்பு சாதாரணமாகச் சாதித்துவிடும்...
அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்!!!

இனிய இரமலான் நல்வாழ்த்துகள்!!!

இனியபாரதி.

ஞாயிறு, 25 ஜூன், 2017

இரமலான் வாழ்த்துகள்...

ஆயிரம் ஆயிரமாய் சம்பாதித்தாலும்
ஒருவருக்கு உணவளிக்கும் போது
கிடைக்கும் இன்பம்
அளவிட முடியாதது!
தான் பட்டினி இருந்து
அந்த உணவை மற்றவருடன்
பகிர்ந்து கொள்ளும் பண்பு
எவ்வளவு உயர்வானது!
இவ்வாறு தங்கள் உணவை
மற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்து
அவர்கள் முகத்தில்
புன்சிரிப்பை வரச் செய்யும்
என் இனிய தோழி/தோழா
உனக்கு
இனிய இரமலான் வாழ்த்துகள்....

அடிமையாகிறேன்!!!

அழகிய மலர்கள் சொறிந்த பூந்தோட்டத்தில்
நான் இரசிக்கும் மலருக்கு
அடிமையாகிறேன்!!!
இயற்கை எழில் நிறைந்த வனத்தில்
புல்லின் மீது படரும் பனிக்கு
அடிமையாகிறேன்!!!
பல வண்ணம் தீட்டிய ஓவியத்தில்
நான் விரும்பும் நிறத்திற்கு
அடிமையாகிறேன்!!!
என் நெடுந்தூரப் பயணத்தில்
ஜன்னல் ஓர இருக்கைக்கு
அடிமையாகிறேன்!!!
வழியோரம் பார்க்கும்
குழந்தையின் புன்சிரிப்பிற்கு
அடிமையாகிறேன்!!!
அன்பு செய்யும் போது
என் தாய்க்கு முன்
அடிமையாகிறேன்!!!
கேட்பதை வாங்கிக் கொடுக்கும் போது
என் தந்தைக்கு முன் அடிமையாகிறேன்!!!
என் மீது கோபப்படும்போது
என் காதலிக்கு
அடிமையாகிறேன்!!!
என் மீது பாசம் காட்டும் போது
என் நண்பனுக்கு
அடிமையாகிறேன்!!!
இதுபோன்று அடிமையாயிருப்பதில் மனம்
இலயித்துப் போய்விட்டது!!!

நானும் அடிமையாகிறேன்!!!

இனியபாரதி.

சனி, 24 ஜூன், 2017

படித்ததில் இரசித்தது!!!

வருவதும் போவதும் இரண்டு
இன்பம்
துன்பம்

வந்தால் போகாதது இரண்டு
புகழ்
பழி

போனால் வராதது இரண்டு
மானம்
உயிர்

தானாக வருவது இரண்டு
இளமை
முதுமை

நம்முடன் வருவது இரண்டு
பாவம்
புண்ணியம்

அடக்க முடியாதது இரண்டு
ஆசை
துக்கம்

தவிர்க்க முடியாத இரண்டு
பசி
தாகம்

நம்மால் பிரிக்க முடியாதது இரண்டு
பந்தம்
பாசம்

அழிவைத் தருவது இரண்டு
பொறாமை
கோபம்

எல்லோருக்கும் சமமானது இரண்டு
பிறப்பு
இறப்பு

திருமுருக கிருபானந்தவாரியார்.

வெள்ளி, 23 ஜூன், 2017

என்னைப் புரிந்து கொள்ளாதவள்!!!

தவறாமல் மற்றவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர்க்கு
தான் என்ன செய்கிறாேம் என்பதே ஒரு அறையில் தனியாக அமர்ந்து
தன்னைப் பற்றி யோசிக்கும் போது தான் புலப்படுகிறது!


அதிலும் நாம் சரியாக நடந்து கொண்டாலும் அதைத் தவறாக
எடுத்துக் கொண்டு நம்முடன் சண்டையிடும் உறவுகள் தான் ஏராளம்!
உண்மையாய் ஒருவரிடம் பழகும் போது தான்
பொய் கூறுவதற்கான சந்தர்பங்கள் பல வருகின்றன!


நம் நிலைமையை எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ளாத
சில உறவுகளை விட்டுச் சில நாட்கள் பிரிந்திருப்பதே நலம்!


காரணமில்லாமல் நீ காயப்படுத்தும் ஒவ்வொரு மனமும்
படும்பாடு நாளை உனக்கு வந்துவிடாதபடி பார்த்துக் கொள்!


என் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள ஆளே இல்லை என்று
நீ நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த நிமிடங்கள் எல்லாம்
உன்னை நினைத்து சோகத்தில் ஏங்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன்
என்பதை மறந்து விடாதே!

இனியபாரதி.

வியாழன், 22 ஜூன், 2017

தேடிக் கொண்டே...

அருகிலேயே பார்த்துக் கொண்டு இருப்பதைவிட
தூரத்தில் நினைத்துக் கொண்டே இருப்பதில்
சுகம் அதிகம் தான் போலும்!
சந்தித்த நாட்களை எண்ணுவதைவிட
சந்திக்கும் போது அனுபவித்த சந்தோசங்களை
எண்ணி மகிழ்வதுதான் அர்த்தம் தரும்!
நீயின்றி நானில்லை
என்ற பழைய பஞ்சாங்க வாசகங்களைக் கூறாமல்
நீ நீயாய்.... நான் நானாய்...
நாம் இருவரும் நமக்காய் என்று... அழகிய கோட்பாடுகளை
எப்போதும் மனதில் கொண்டு
முழுமையாக அன்பு செய்வது கூட சாத்தியமே!!!
வெகுநாட்கள் பேசாமல் இருந்தும்
கொஞ்சம் கூட அன்பு குறையாமல்
நேற்று பேசியதுபோல நடந்துகொள்ள முடிகிறது இந்த அன்பில்!!!
இடைவிடாமல் சண்டை
இடையிடையே கொஞ்சல்...
எல்லாவற்றையும் தாண்டி
இத்தனை வருடங்கள் ஒரே அன்பின் மழையில் நனைய
தவம் செய்திருக்கத் தான் வேண்டும்!
உங்கள் ஒரே மனமும்...
ஒரே எண்ணமும்...
உங்கள் இருவரையும்...
ஒன்றாய் என்றும் இணைத்திருப்பதாக!!!

இனியபாரதி.

புதன், 21 ஜூன், 2017

ஆச்சரியத்தில் ஆழ்த்துபவள்...

என் இனிய செல்லம்மா...
நாம் இருவரும் சேர்ந்து இருந்த நேரங்களை விட
சண்டை போட்ட நேரங்கள் அதிகம்!
என் மனம் உன்னை நினைக்கும் தருணம்
என் குறுஞ்செய்திப் பெட்டிக்குள் உன் அழகிய பெயர்...
நீ என்னை நினைக்கும் தருணம்
எனக்கு ஏற்படும் விக்கல்!
இப்படி இருவரின் உள்ளமும் ஒருவரையொருவர்
அறியாமலே ஆழ அன்பு செய்வது
எனக்கு அதிக வியப்பை ஏற்படுத்துகிறது!
இன்று கூட நாம் எதிர்பார்க்காமல்
நடந்த இந்த நிகழ்ச்சி
என்னால் என்றும் மறக்க முடியாது!
என்றும்
உனக்கேற்ற பாரதியாய்...
உன்னை
முழுமையாக அன்பு செய்பவனாய்...
என்றும் இருப்பேன்!!!

இனியபாரதி.

செவ்வாய், 20 ஜூன், 2017

அடிமையாய் இருப்பதே மேல்!!!

சுயமாய் சிந்திக்காத
சுதந்திரவாதியாய் இருப்பதை விட
சுயமாய் சிந்திக்கும்
அடிமையாய் இருப்பது மேல்!

பிளாஸ்டிக் அரிசி என்று ஊரை ஏமாற்றி
பணம் சம்பாதிக்கும்
கார்ப்பரேட் கரடிகளுக்கு
தக்க பாடம் நடத்திய
அன்பு அண்ணனுக்கு
நன்றிகள் பல!

'தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!'
என்று சொன்னதெல்லாம் அந்தக் காலத்திலிருந்த தமிழர்களுக்குப் போல!
தெர்மாகோல் தடுப்பான்!
பிளாஸ்டிக் அரிசி!
என்று நம்பிக்கொண்டிருக்கும் தமிழர்கள்
எங்கு தலைநிமிர்ந்து நிற்பது?

இனியபாரதி.

திங்கள், 19 ஜூன், 2017

உனக்காக...

உனக்காக உனக்காக என்று அதிகம் சாெல்லிக் காெண்டிருந்த என்னால்
எனக்கே நேரம் செலவிட முடியவில்லை....

இனியபாரதி.

ஞாயிறு, 18 ஜூன், 2017

சில குட்டிக் கவிதைகள்...

புகைப்படம்...
அழகை இரசிப்பதற்காய் நமக்குக் கிடைத்த ஒரு வரம்...

கைக்கடிகாரம்...
நம் நேரத்தை வீணடிப்பதை ஞாபகப்படுத்த
நம்முடனே வரும் நம் நண்பன்....

அலைபேசி...
என் நிம்மதியைக் கெடுக்க வந்த
முகம் தெரிந்த எதிரி!!!

பேனா...
என் ஆசைகளை எழுத
எனக்காகவே
இறைவன் படைத்த படைப்பு!!!


இனியபாரதி.

சனி, 17 ஜூன், 2017

நாட்குறிப்பு...

என்னைப் புரட்டிப் பார்க்கும் போது
உன் முகத்தைக் காண எனக்கு ஆசை!
உன் கண்களில் வழியும் அந்த ஒரு சொட்டுக் கண்ணீர் தான்
என் மொத்த பெருமையையும் எனக்கு உணர்த்துகிறது!
வெறும் காதிதமான என்னை முழுமையானவனாக மாற்றியவள் நீ!
என்னில் நீ எழுதும் போது நான் உன்னவனாக உணர்கிறேன்!
நீ என்னவள் போன்று எனக்குத் தோன்றுகிறது!
உன் மகிழ்ச்சி, துக்கம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும்
உன் நிழலாக இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே!
சில வேளைகளில் நீ என்னைத் தீண்டாமல் இருக்கும் போது
எனக்குள்ளான வலி எனக்கு மட்டுமே தெரியும்!
வருடம் முடிவில் பரன் மேல் வைப்பதற்கு முன்
என் பக்கங்களைப் புரட்டும் உன் தென்றல் கையின் ஈரம்
என் ஒவ்வொரு பக்கத்தையும் பூக்கச் செய்கின்றது!
உன் தரிசனம் காண அனுதினமும் தவமிருக்கிறேன்!
தவறாமல் என்னைத் தழுவி விடு!!!

இனியபாரதி.

வெள்ளி, 16 ஜூன், 2017

நினைப்பேன்...

அழகாய் பிறக்க ஆசைப்பட்டால்
நான் நீயாயிருந்திருக்க வேண்டுமென நினைத்தேன்!
அன்பாய் இருக்க ஆசைப்பட்டால்
உன்னை அன்பு செய்ய வேண்டுமென நினைத்தேன்!
நிறத்தைப் பெற ஆசைப்பட்டால்
உன்னைக் கவர்வதாக இருக்க வேண்டுமென நினைத்தேன்!
பசியாக இருக்க ஆசைப்பட்டால்
உனக்கு ருசியாக இருக்க வேண்டுமென நினைத்தேன்!
கனவில் வர ஆசைப்பட்டால்
என் நினைவாக நீ வேண்டுமென நினைத்தேன்!
கருவில் சுமக்க ஆசைப்பட்டால்
என் குழந்தை நீயாக வேண்டுமென நினைத்தேன்!
காற்றை அடக்க ஆசைப்பட்டால்
பூந்தென்றலென நீ வேண்டுமென நினைத்தேன்!

நினைத்தேன்! நினைக்கிறேன்! நினைப்பேன்!

இனியபாரதி.

வியாழன், 15 ஜூன், 2017

காத்திருத்தலின் கனிவு...

இருபது வருடங்களாய் இல்லை இந்த பதற்றம்...
திடீரென ஏனோ இந்த எதிர்பார்ப்பு?
பார்க்கவில்லை என்றாலும் பேசிவிட்டால் போதும்!
என் தனிமைக்கு இனிமை கிடைத்துவிடும்!
நடந்து செல்லும் பாதையெங்கும்
உன் தடங்கள் தெரிகின்றன!
கண்பார்க்கும் இடமெல்லாம்
உன் பிம்பம் தெரிகின்றது!
தென்றல் காற்றில் உன் வாசம் வருகின்றது!
அலைபேசியின் ஓசை கூட
உன் பேச்சை ஞாபகப்படுத்துகிறது!
ஆனால்...
எதையும் சற்றும் மதிக்காமல்
இருக்கும் 'உன்'
திமிர் தான்....
என்னை இன்னும் காத்திருக்கச் செய்கின்றது!!!

இனியபாரதி.

புதன், 14 ஜூன், 2017

எப்படி என்று தெரியவில்லை!

ஒரு விபத்தில் தன் ஆருயிர் காதலனை இழந்த காதலியின் சோகக் கவிதை!!!

வாழ்க்கையில் நீ மட்டுமே எல்லாம் என்று வாழ்ந்த அவள்
கடைசியில் எல்லாமுமாய் கண்டது யாரோ ஒருவனை!
உன் அன்பு மகனுக்கு ஆசைச் சோறூட்டி அரவணைத்து
வளர்க்க நினைத்த அவளின் எண்ணம்
இப்போது கடமைக்கென்று பெற்றெடுத்த பிள்ளைக்குச் சோறூட்டுகிறது!
இனிமையாய் பேசி இன்ப இரவுகளைக் கழிக்கலாம் என்றிருந்த அவளுக்கு
இரவுகளெல்லாம் துன்பக்களமாய் இருப்தென்னவோ அவளின் விதி!
தொலைக்காட்சியில் அவனுக்குப் பிடித்த பாடல் ஓடும்போது கூட
இரசிக்க முடியவில்லை!
தனிமையில் அவனைப் பற்றிக் கூட சிந்திக்க இயலவில்லை!
வெளியில் செல்லும்போது இரசிக்கிறேன்..
நாங்கள் சேர்ந்து சென்ற இடங்களின் நினைவலைகள் என்னுள் எழும்போது!
என்னைச் சுற்றி ஒரு குடும்பம் இருந்தும்
அனாதை என்று உணர்கிறேன்!
என் உள்ளக் கிடக்கைகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல்
உள்ளுக்குள் தவிக்கிறேன்!
உன்னிடம் பகிர்ந்து கொண்ட என் ஆசைகள் எதுவும் நிறைவேறாமல்
புதைந்து விட்டதை எண்ணி தினமும் அழுகிறேன்!
தண்ணீரில்லா நதிபோல்!
கண்ணீரில்லாமல் வறண்டுவிட்ட என் கண்களுக்கு
ஆறதலளிக்க என் கைகள் மட்டும் தான் இருக்கின்றன!
என் படுக்கை அறை கூட
நீ இல்லாமல் மௌன அஞ்சலி தான் செலுத்துகின்றன தினமும்!
சீக்கிரம் உன்னிடம் வந்துவிடுவேனோ என்ற பயத்துடன்
மொட்டை மாடியில் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்!
நீ இந்த நட்சத்திரமாக இருப்பாயோ என்று என்னுள் நினைத்துக் கொள்கிறேன்!

இப்படிக்கு,
உன் அன்புக் கிளி.

இனியபாரதி.

செவ்வாய், 13 ஜூன், 2017

அனுபவமே...

ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அதைப் புரிந்து கொண்டு வாழும் போது, நம்மால் ஓரளவு, நம் வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர் கொள்ள முடிகிறது.

திங்கள், 12 ஜூன், 2017

என் இனியவளுக்கு...

இரண்டு நாட்களுக்கு முன்பு தான்
உன் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்ததுபோலுள்ளது!
அதற்குள் இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன!
உன்னை முதன்முதலாக தூக்கிக் கொஞ்சிய
அதே மகிழ்ச்சி...
இன்று நீ என்னைக் கொஞ்சும் போது அடைகிறேன்!
உன் 'அம்மா' என்ற அழகிய அழைத்தலுக்கே
உன் காலடியில் கிடந்து தவமிருக்க வேண்டும்!
என்ன தான் சில நேரங்களில் உன்னை அடித்தாலும்
மறுபடியும் வந்து 'அம்மா' என்று கொஞ்சும் அழகைக் காணும் போது
உன்னைப் போல் ஆயிரம் குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் போல்
ஒரு துடிப்பு என்னுள்!
என் வயிற்றில் பிறவாத என் அன்புச் செல்லமாய்!
என்றும் என் குழந்தையாய்!
இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்!

இனியபாரதி.

ஞாயிறு, 11 ஜூன், 2017

தெரிந்து கொண்டேன்...

'பிதா, சுதன், பரிசுத்த ஆவி' என்பது எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்த ஒன்றே.
பிதா என்று சொல்லும் போது நெற்றியில் கை வைப்போம். அதன் அர்த்தம் - தலை, முதன்மையானது மற்றும் உடலின் முக்கியமான பகுதியும் கூட. மண்டை ஓட்டிற்குள் இருக்கும் மூளை தான், நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. பிதாவானவர் நம் முதன்மையானவராக இருந்து, நமக்காகச் சிந்தித்து, செயலாற்றுகிறார்.

சுதன் என்று சொல்லும் போது நெஞ்சில் கை வைப்போம். அதன் அர்த்தம் - மனம். உள்ளத்தின் சிந்தனைகள் அனைத்தையும் அறிந்தவர், நம்முடன் இருந்து, நமக்காகச் செயலாற்றுவார்.

பரிசுத்த ஆவி என்று சொல்லும் போது தோள்பட்டைகளில் கை வைப்போம். தோள் - வலிமை. வலிமை – நாம் செய்யப்போகின்ற செயல்களை ஆசீர்வதித்து, அதைச் செய்வதற்கானத் தெம்பைக் கொடுப்பவர், பரிசுத்த ஆவி.

ஆக, ஒரே இயல்புகளை உடைய, இந்த மூவொரு இறைவனை, நம்மைப் பாதுகாக்க, நம்மை வழிநடத்த, நம்முடன் இருக்க, நாம் ஜெபிப்பது தான் இந்த 'பிதா... சுதன்... பரிசுத்த ஆவியின் பெயராலே... ஆமென்'.

அழகான மறையுரை கொடுத்த அருட்தந்தைக்கு நன்றிகள் பல...

சனி, 10 ஜூன், 2017

முடியுமோ?

இனிமையாய் பேசினால் மட்டும்
அன்புள்ளதாய் எண்ணிவிட முடியுமோ?
என்னதான் கோபம் இருந்தாலும்
உன்னைவிட்டுப் போக முடியுமோ?
உன்னைக் கோபப்படுத்தினாலும்
பாசம் குறைய முடியுமோ?
கண்டுகொள்ளாமல் இருந்தாலும்
நினையாமல் இருக்க முடியுமோ?

காதல் மழையைப் பொழிந்தேன் அவள் மேல்...
குடைச் சுவர் கொண்டு காத்துக் கொண்டாள் தன்னை!!!

இனியபாரதி.

வெள்ளி, 9 ஜூன், 2017

Nice Line!!!

அடுத்தவரின் விருப்பத்திற்குத்தான் வாழ வேண்டுமென்றால்
செத்துவிடு....

வியாழன், 8 ஜூன், 2017

படித்ததில் பிடித்தது...

காலம் மாறிவிட்டது...

முன் கடந்து போவோரின்

முகம் காண முடியவில்லை.

பின் நின்று சிரிப்போரின்

எண்ணம் எனக்கு புரியவில்லை.

தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.

தொடுதிரையை தொட்டபடி

உள்ளங்கையில் தான் உலகம்.

என் கைபேசி காதலியானாள்- நான்

கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...

உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,

நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.

சாமக் கோழி கூவிய பின்னும்,

கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,

வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமென்னும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.

எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி.

Hi என எவரோ அனுப்ப

Hai என பதிலுரைத்தேன் - ஏனோ

நான் பெற்ற பிள்ளை

'அப்பா'என்றழைக்க,

சற்றே புருவம் உயர்த்தி

பார்வையாலே சுட்டெரித்தேன்...

அடுத்தவரின்,

Status பார்த்து ரசித்தேன்,

profile பார்த்து வியந்தேன்,

Picture Msg பார்த்து லயித்தேன்,

video பதிவிறக்க ஆர்வத்தில்.

கை அலம்பியபின் யோசித்தேன்.

நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...

மாமன் வீட்டு மீன் குழம்பு,

மாமி பொறித்த அப்பளம்,

தங்கை வீட்டு தக்காளிச்சோறு,

மதினி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,

அமிர்தம் தந்த மனையாளிடம்.

இது நஞ்சை விட கேவலமென்று...

நானாய் சிரித்தேன்,

நானாய் அழுதேன்,

நானாய் வியந்தேன்,

நானாய் ரசித்தேன்-ஏனோ

நான்,

நானாய் மட்டும் இல்லை...

ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.

என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட

Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...

இமோஜியில் கூட

சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,

ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.

ஆனால்...

நான் நிமிர்ந்து பார்க்கும் போது

என் முன்னே எவருமில்லை.,

சுற்றமும், நட்பும்

உள்ளங்கை உலகத்தோடு என்னை கடந்து போயினர்...

இந்த வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்

சொந்தமே.....

இனி என்னோடு நேரில் புன்னகையிடுங்கள்.

புதன், 7 ஜூன், 2017

தேடுகிறேன்...

கலங்கிக் கொண்டே இருப்பதற்குப் பதில்
கலங்காமல் இருப்பதற்கான வழியைத் தேடுகிறேன்...
தேடிக் கொண்டே இருப்பதற்குப் பதில்
தேடாமல் இருப்பதற்கான வழியைத் தேடுகிறேன்...
சேர்ந்து கொண்டே இருப்பதற்குப் பதில்
தனித்து இருப்பதற்கான வழியைத் தேடுகிறேன்...
சோர்ந்து கொண்டே இருப்பதற்குப் பதில்
சோர்வைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுகிறேன்...

தேடிக் கிடைக்காத பொக்கிஷங்கள்
எதுவும் உண்டோ இவ்வுலகில்?

இனியபாரதி.

செவ்வாய், 6 ஜூன், 2017

மதிக்கப்பட வேண்டுமா?

இன்று மாலை, பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் சென்றேன். நிறைய ஏ.டி.எம் களில் பணம் இல்லாத காரணத்தால், தேடிக் கண்டுபிடித்து, சற்று தொலைவில் இருந்த ஒரு ஏ.டி.எம்மைக் கண்டுபிடித்து, அங்கும் கூட்டமாக இருந்ததால், வரிசையில் சென்று நின்றேன். நான் ஏழாவது ஆளாக நின்றிருந்தேன்.

ஒவ்வொருவராக, பொறுமையாக, அனைவரும் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தனர். சிறது நேரத்தில் அங்கு வந்த, ஒரு பெண் காவலாளி, யாரிடமும் எதுவும் கேட்காமல், உள்ளே நுழைந்து, அங்கு பணம் எடுத்துக் கொண்டிருந்தவரிடம், நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, கார்டைத்தேய்த்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

எனக்கு அதைப் பார்த்ததும் கோபம் தான் வந்தது.

நான் அந்த இடத்தில் இருந்திருந்தால், என்னை எடுக்க விட்டிருப்பார்களா?

கட்டாயமாக இல்லை தான்.

அந்த ஆடைக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது!
இதற்குப் பெயர் தான் 'அதிகார துஷ்பிரயோகம்'.

இப்படி அதிகாரத்தில் உள்ளவர்கள் எல்லாம், தானாதிக்கம் கொண்டால் எங்கு செல்லும் இந்த நாடு?

இது உருப்படுவதற்கான வழியா?

எங்கே செல்கிறோம் நாம்?

ஒரு அதிகாரம் நமக்குக் கொடுக்கப்படுகிறதென்றால், அது மற்றவரை அடிமைப்படுத்துவதற்கு அல்ல.

நம் கடமையை இன்னும் சரியாகச் செய்வதற்கு!!!

இதனால் தான் எனக்கு மருத்துவர்களைக் கூட சில நேரங்களில் பிடிப்பதில்லை!

இப்படிப்பட்டவர்களைப் பார்த்து வளரும் இந்த இளைய சமுதாயம் எங்கு முன்னேறப் போகிறது???

கவலைப்படத் தான் முடிகிறது!
குரல் கொடுக்க முடியவில்லை!

இனியபாரதி.

ஞாயிறு, 4 ஜூன், 2017

காயங்களை ஆற்ற...

எனக்குக் காயமாகப்படும் ஒன்று உனக்கு காமெடியாகப் படலாம்...
நான் காமெடி என்று நினைக்கும் ஒரு விசயம் உன்னைக் காயப்படுத்திவிடலாம்...
இப்படியே
ஒருவர் காயப்படுவதும் மற்றவர் காயப்படுத்துவதும்...
ஒருவர் காமெடி செய்வதும் மற்றவர் காமெடியை இரசிப்பதும் என்று...
வெவ்வேறு சூழ்நிலைகளில்
தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தாலும்...
இறுகிய...
காயப்பட்ட...
குணமாக்க முடியா...
'மனத்தை' ஆற்ற
'அன்பால்' முடியும்!!!

இனியபாரதி.

சனி, 3 ஜூன், 2017

சிந்திக்க வைத்தவை...

மற்றவர் மனதைக் கூட வென்றுவிடலாம் போல...
வாழ்க்கையில் வெல்வது தான் கடினமாக இருக்கின்றது!

திருமணம் செய்து கொள்வான் என்று நினைத்துக் கொண்டிருந்த அவளுக்கு
கிடைத்தது அவனது திருமணப் பத்திரிக்கை!

நீ பேச நினைக்கும் போது
நான் பேசாமல் தவிர்ப்பது தான்
அலைபேசியின் தத்துவம்!

இரண்டு இதயங்களுக்கு ஒரே சுவாசப் பை! – காதல்

நல்ல நட்பிற்கு
அடிக்கும் உரிமையும் உண்டு...
அணைக்கும் உரிமையும் உண்டு...

கவலைக்குரிய கருப்பு நிறம்
என் கவலைகளை போக்கும் நிறமாகியது!

இனியபாரதி.

வெள்ளி, 2 ஜூன், 2017

அமைதியாய்...

மேலிருந்து எல்லாவற்றையும் காணும் வாய்ப்பு
எனக்கு கிடைத்துள்ளது...
எங்கும் பணம் கொடுத்து தான் நான் செல்லவேண்டுமென்ற
அவசியம் கூட கிடையாது!
உலகின் அழகையும்
இயற்கையின் வியப்புகளையும்
பார்த்து இரசிக்கிறேன்!
பலவித மனிதர்களைப் பார்க்கிறேன்!
என்னையும் பலபேர் பார்க்கின்றனர்!
ஒரு மனிதனின் செயல்களால்
அவன்
நல்லவனா கெட்டவனா
என்பதை எங்களால்
புரிந்து கொள்ள முடிகிறது!
நாங்களும் கூட்டமாய்
இங்கு உலவிக் கொண்டு தான்
இருக்கிறோம்!
எங்களில்
பொறாமை இல்லை!
போட்டி இல்லை!
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை!
ஜாதி மதம் இல்லை!
ஏழை பணக்காரன் இல்லை!
நீங்கள்
எங்களை அண்ணாந்து பார்க்கும் போதெல்லாம்
சிரிப்பு தான் வருகிறது!
எத்தனை நாட்கள் தான்
மற்றவரின் உயர்வை மட்டுமே
அண்ணாந்து பார்ப்பீர்கள்?
என்றுதான் நீ உயரப்போகிறாய்
என்று
நான் கேட்பதுனக்கு
கேட்கவில்லையா?

விண்மீன்!!!

இனியபாரதி.

வியாழன், 1 ஜூன், 2017

காேபம்

என் கோபத்திற்குள்
நான் மறைத்து வைப்பது...
என் தேடல்களை...
என் எண்ணங்களை...
என் கொள்கைகளை...
என் ஆசைகளை...
என் பாசத்தை...
என் கண்ணீரை...
என் விருப்பங்களை...
கடைசியில்
நான் அடைந்ததென்னவோ...
ஒன்றுமில்லை தான்!!!

இனியபாரதி.