பெரும்பாலும் 'குழந்தைகள்' என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சிறுவயதில் குழந்தையாய், நம்மைப் பிடிக்கும் பெற்றோருக்கு, நாம் வளர்ந்து, நான்கு வயதைத் தாண்டிய பின், அந்த அளவுக்குப் பிடிப்பதில்லை. காரணம்? சிறு குழந்தையாய் இருக்கும் போது அதற்கு ஒன்றும் தெரிந்திருக்காது. அதனால், அந்தக் குழந்தையை இரசித்துக் கொண்டிருந்தோம்.ஆனால், இப்போது தான் விவரம் தெரியும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். இனியும் கொஞ்சிக் கொண்டா இருப்பது என்று சில பெற்றோர்கள் கேட்கலாம்! என்னைப் பொறுத்தவரை, பள்ளிப் பருவம் முடியும் வரை, நாம் நம் குழந்தையைச் சிறுகுழந்தைபோல் தான் பாவிக்க வேண்டும்.
குழந்தைப் பருவம் தான் வாழ்வில் முக்கியமான தருணம்.கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது, உணர்ந்துகொள்ள முடியாத நிறைய விசயங்கள், ஆசிரியர் வேலையில் தெரிந்து கொண்டு இருக்கிறேன்.
உண்மையில், ஆசிரியர் பணி மிகவும் உயர்ந்த பணி தான். ஆனால், அதற்கு பொறுமை மிகவும் அவசியம்.
கடந்த வருடம், கோபம் வந்தால் உடனடியாக என் குழந்தைகளிடம் காட்டி விடுவேன். ஒருநாள், மூன்றாம் வகுப்பு மாணவி ஒருத்தி என்னிடம் வந்து, 'மேம்.. நீங்கள் சிரித்தால் அழகாய் இருக்கிறீர்கள். ஆனால், கோபப்படும் போதுதான் உங்கள் அழகே கெட்டு விடுகிறது'என்று கூறினாள். எனக்கு அந்தக் குழந்தை கூறிய பின் தான், என் மேலிருந்த தவறை உணர முடிந்தது.
இந்த வருடம் தேவையில்லாமல், குழந்தைகளிடம் கோபப்படக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். இப்போதெல்லாம் மூன்றாம் வகுப்பிற்குச் சென்றால் அனைவர் முகமும் சிரிப்பால் மலர்வதை என்னால் காணமுடிகிறது. நானும், அதையே வகுப்பு முடியும் வரைக் கடைபிடிக்கிறேன்.
ஆக, இந்தக் குழந்தைப் பருவத்தில் அவர்கள் என்ன கற்றுக் கொள்கிறார்களோ, அதுதான் அவர்கள் வாழ்க்கையில் கடைசிவரை நிலைத்திருக்கும்.
சில குழந்தைகள், தன் ஆசிரியரைப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றனர்.
சிலகுழந்தைகள், தன் பெற்றோரைப் பார்த்துகற்றுக் கொள்கின்றனர்.
சிலகுழந்தைகள், தன் நண்பர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றனர்.
நம் குழந்தைகள், யாருடன் பழகுகிறார்கள், யாருடன் அதிகம் நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிப் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகள் எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளக் கூடியவர்கள். அவர்களுடன் பேசும் போதோ, அல்லது நாம் வேறு யாருடனும் பேசும் போதோ, அவர்கள் நம்மை அப்படியே உட்கிரகித்துக் கொள்கின்றனர். நாம் தான் அவர்களுக்கு முன் மாதிரி. நம்மைப் போல் தான் நம் குழந்தைகளும்.
நேற்று மாலை, என் அண்ணன் மகன் எங்கள் வீட்டிற்கு வந்தான். என் அண்ணன், 'அவன் படிப்பதற்குஅழுகிறான்'என்று அவனைப் பற்றிப் புகார் கூறிக் கொண்டிருந்தார்கள். நேற்று, பள்ளியில் அவன் செய்த ஒரு காரியத்தையும் சொன்னார்கள். அவன், பள்ளி கரும்பலகையில், 'நாளை முதல் நான் பள்ளிக்கு வரமாட்டேன். எனக்கு என் அம்மாவும், அப்பாவும் பிடிக்கவில்லை.'என்று எழுதியிருந்திருக்கிறான். அதை அவன் ஆசிரியர் பார்த்துவிட்டு, என் அண்ணனை அலைபேசியில் அழைத்து, விசயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். ஆசிரியர், என் அண்ணனுக்கு அறிவுரையும் கூறி இருக்கிறார். இதை நினைத்து என் அண்ணன் மிகவும் வருந்திக் கொண்டிருந்தான்.
நான் என் அண்ணன் மகனைத் தனியாக அழைத்து அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். 'ஏன் கண்ணா அப்படி எழுதினாய்?'என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான், 'என் அப்பாவும், அம்மாவும் எப்போது பார்த்தாலும் என்னை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடிப்பதனால் எனக்குப் படிக்கப் பிடிக்கவில்லை. நான் படிக்காததனால் பள்ளிக்குச் செல்லப் பிடிக்கவில்லை' என்று கூறினான். 'சரி. உன்னை எதற்கு அடிக்கிறார்கள்? நீ வீட்டுப்பாடங்களை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதானே அடிக்கிறார்கள்!'என்று கேட்டேன். 'ஆம். ஆனால் அன்பாய் எனக்குச் சொல்லிக் கொடுத்தால், நான் கேட்டுக் கொள்வேன்.'என்று பதில் கூறினான். ஆகையால், அவன் மீது தவறொன்றும் இல்லை. அவனும் சிறு குழந்தை தான்.
அன்பான பெற்றோர்களே!தயவுசெய்து குழந்தைகளை அடித்துப் பழகாதீர்கள். 'அடி உதவுவது போல், அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' என்பதெல்லாம் பழைய காலத்துப் பழமொழி. அதெல்லாம், இந்தக் காலத்திற்கு ஒத்துவராது. அதனால் தான், சிலபள்ளிகளில் குழந்தைகளை, ஆசிரியர் அடிப்பது தவறு என்று கூறுகிறார்கள். யாரையும் யாருக்கும் அடிக்க உரிமையில்லை.
குழந்தைகள் அன்பாய்ச் சொன்னால் எதையும் கேட்பார்கள். அதற்கு, நாம் தான் பக்குவப்படவேண்டும்.
குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், வாழ்க்கைக்கல்வியையும் கற்றுத் தருவது பெற்றோரின் கடமையாகும்.
எங்கள் பள்ளியில் நாங்கள் உபயோகிக்கும் நான்கு பொன்னான வார்த்தைகள்....
Please (தயவுசெய்து)
Pardon(பொறுத்துக் கொள்ளுங்கள்)
Sorry(மன்னியுங்கள்)
Thanks(நன்றி)
நாம் பழக்கினால் தான், நம் குழந்தைகளும் பழகுவார்கள்.
அன்புடன்
இனியாள்.