ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திருப்பு முனை...

கடந்த வருடம் முழுதும் என்னை கண்ணின் மணி போல காத்து, வழிநடத்திய இறைவனுக்கு நன்றி சொல்ல விழைகிறேன்.

இனி வரும் நாட்களிலும் என்னுடன் இருந்து, என்னை வழி நடத்தப் போவதற்கும்  நன்றி சொல்ல ஆசை....

கடந்த வருடத்தில் நான் எடுத்த முயற்சி தான் ' தினமும் வலைப்பதிவு செய்வது '.

மூன்று நாட்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் எழுத முடியவில்லை. அந்த அளவிற்கு என்னை வழிநடத்திய அவருக்கு நன்றி....

இது அடுத்த வருடமும் தொடர முயற்சிக்கிறேன்.

இந்த வருடம் ' என்னால் எல்லோருக்கும் ஆசிர்வாதம் மட்டும் கிடைக்க வேண்டும்' என்று விரும்புகிறேன்.

அது மட்டும் அல்லாமல் ' என்னால் முடிந்த அளவு முக மலர்ச்சி உடன் என்றும் இருக்க ஆசை படுகிறேன்'.

இறைவன் அருள் என்றும் நம்மோடு....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இனிய பாரதி.

சனி, 30 டிசம்பர், 2017

திருமண பந்தம்....

திருமணம் ஒரு கசப்பான அனுபவம் என்று நினைத்த எனக்கு, அதன் மூலம் ஒரு அழகான குடும்பம் கிடைக்கும் என்ற ஒரு புதிய உணர்வு இன்று தோன்றியது. 

எல்லா உறவு நிலைகளிலும் நன்மையும் உண்டு... தீமைகளும் உண்டு... உணர்ந்து வாழ்தல் இனிது...

இனியபாரதி.

வெள்ளி, 29 டிசம்பர், 2017

நன்றாய்த் தான்....

மாமா வீடு, மரினா கடற்கரை, மின்சார ரயில் பயணம், நீண்ட நேர பேருந்து பயணம், அளவான புகைப் படங்கள், அன்பான குடும்பம் என இன்றைய தினம் நன்றாகவே இருந்தது.....

என் செல்லம்மாவிற்கு அதிகம் பிடித்த இந்த சென்னை, எனக்கு மட்டும் ஏன் தான் பிடிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

இந்த நாட்களில் என் அறையை ரொம்ப மிஸ் பண்றேன்... எந்த நேரம், எதைச் செய்ய வேண்டும் என்றாலும் எனக்குத் துணையாய் இருப்பது என் அறை....

என் காதலி அவள்....

என்றும் எனக்காக இருப்பவள்....

இன்னும் இரண்டு நாட்களும் நன்றாய் செல்லும் என்ற நம்பிக்கையில்.....

இனிய பாரதி.

வியாழன், 28 டிசம்பர், 2017

கலை தாகம் ....

ஒவ்வொருவருக்கும் ஒரு தாகம் உண்டு....

காதல் தாகம்...

கவிதை தாகம்...

பணத் தாகம்...

பயணத் தாகம்...

என் தாகம் எதுவென எண்ணத் தோன்றுகிறது....

இனியபாரதி.

புதன், 27 டிசம்பர், 2017

மன சஞ்சலங்கள்..

வெகுநாட்களாக வெளியூர் செல்லாமல், திடீரென சென்னை செல்வது, ஒருமாதிரியான எண்ணத்தை என்னுள் ஏற்படுத்துகின்றது. என்ன தான் இருந்தாலும், தன் வீட்டில், தன் அறையில் இருப்பதற்கும், வெளியில் சென்று மற்றவர் வீடுகளில் தங்குவதற்கும் வித்தியாசம் இருக்கத் தான் செய்கின்றது. இப்போது தான், தன் வீடுகளில் தங்காமல், குடும்பத்திற்காக, பிள்ளைகளுக்காக என்று வெளியூரில் சென்று, தங்கி, படிக்கும், வேலைபார்ப்பவர்களின் நிலைமை புரிகிறது. ஒரு விதத்தில் நான் கொடுத்து வைத்தவள் என்பதை எனக்கு உணர்த்துகின்றது.
பல நேரங்களில் வெளியூர் செல்வதற்கும், உறவினர்களின் வீடுகளில் சென்று தங்குவதற்கும் ஆசைப்பட்டதுண்டு. ஆனால், அங்கு சென்றபின்பு தான், தன் வீட்டின் அருமை தெரியும். அதுவும் அம்மா இல்லாமல் சென்றுவிட்டால், காய்ச்சலே வந்துவிடும்.
இது ஒரு புதிய அனுபவம் தான். இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. செல்கின்ற இடமெல்லாம், கிடைக்கின்ற உணவை உண்டு, அனுதினமும் அயராது உழைக்கும் என் செல்லம்மாவின் பரந்த மனது எனக்கும் வேண்டுமென்று விழைகிறேன்.
குழந்தைகளைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு பாதுகாக்கிறேன் என்று எண்ணும் பெற்றோர்களே! அவர்கள் பெரியவர்களான பின்னர், வெளியூர் சென்று படிக்கும் நிலை வரும் போதோ, மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ நினைக்கும் போதோ அவர்களால் இயல்பாகவே அப்படி நடந்து கொள்ள முடியாது.
பிள்ளைகளை மற்றவர்களுடன் அண்டி வாழப் பழக்குவது பெற்றவர்களின் கடமையே!

இனியபாரதி.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

மனதை மகிழ்ச்சியாய் வை!!!

சில மணித்துளிகளே இவ்வுலகில் வாழும்
வண்ணப் பூக்கள் எப்போதும்
தங்கள் முகங்களை அவ்வளவு அழகாக
புன்சிரிப்புடன் வைத்துக் கொள்கின்றன!
சில நிமிடங்களே உயிர்வாழும்
அழகான பனித்துளிகள்
புல்லின் மேல் அழகாய் படர்ந்து
நம் மனதைக் கொள்ளையடிக்கின்றன!
ஏன் நம் அழகான புன்சிரிப்பால்
மற்றவர் மனதைக் கொள்ளையடிக்க முடியாது?

இனியபாரதி.

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இனியவனின் பிறப்பு...

மார்கழிக் குளிரில்
அந்த இனியனின் பிறப்பு...
பிஞ்சுக் குழந்தையின்
பச்சை உடம்பு
எப்படித் தான் அந்தக் குளிரைத்
தாங்கி இருக்குமோ?
யேசு பாலனைக்
காணச் சென்ற
ஞானியருள் ஒருவராக
நானிருந்திருக்கக் கூடாதா?
ஒவ்வொரு வருடமும்
உமது பிறப்பை
அனைவரும் கொண்டாடுகிறோம்!
உம் பிறப்பு விழா
ஏதோ ஒருவகையில்
எங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக்
கொண்டு வருகின்றது!
இந்த நாளும் எங்கள் வாழ்வில்
ஒரு புத்துணர்ச்சியூட்டும்
இன்னொரு ஆண்டை கொடுக்கப்போகின்ற
தருணத்தை எண்ணி மகிழ்கிறேன்!
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு தின வாழ்த்துகள்!

இனியபாரதி.

சனி, 23 டிசம்பர், 2017

படித்ததில் பிடித்தது...

பிரச்னைக்கு தீர்வு

உங்கள் மனதை போட்டு குழப்பும் *பிரச்சனை விரைவில் சரியாகி விடும்* என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி விட்டு வேலையைப் பாருங்கள்.

விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும்.

அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்,

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.

உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப் பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்து விடும்.

உங்களைச் சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை பட வேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல் படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட் படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்.

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருங்கள்.

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள்
போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்.

உங்கள் *நேர் மறையான சக்தி* இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.
🌹🌹 வாழ்க வளமுடன்🌹🌹🙏🙏

வியாழன், 21 டிசம்பர், 2017

காத்திருக்கச் சொன்னால்!

எனக்காகக் காத்திரு என்று
அவள் கூறும் ஒருவார்த்தைக்காய்
ஒன்பது வருடங்கள் காத்திருந்தேன்!
காத்திருத்தலின் வலி தான்
அதிகரித்ததே தவிர
அவளால் என் மனதில்
ஏற்பட்ட காயங்களின் வலி
குறையவே இல்லை!
இப்படித் தான்
இவளைக் காதல் செய்ய வேண்டுமா
என்று நினைத்து
என் மனதை நானே மாற்றிக்கொண்டேன்!

இனியபாரதி.

Impressive Quote...


புதன், 20 டிசம்பர், 2017

பொறுமை சாத்தியமா?

நம் நண்பரிடமோ, உற்றவரிடமோ, தாயிடமோ, தந்தையிடமோ அவர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக நம்மிடம் நடந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறோம். அதாவது எப்போதும் சந்தோசமாக, மகிழ்ச்சியான முகத்துடன், புன்முறுவலுடன் இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால், அது பல நேரங்களில் நாம் நினைப்பதைப் போல் நடப்பதில்லை.
அப்போது நாமும் கோபமும், கலக்கமும் அடைகிறோம். பல நேரங்களில் மனம் நொந்து அழுகின்றோம். ஆனால், அவர்களின் அப்போதைய நிலைமையை நாம் கொஞ்சம் கூட எண்ணிப் பார்ப்பதில்லை.. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான், என் நண்பனால் இன்று சொல்லப்பட்ட ஒரு உவமை...
பஞ்சை ஏதாவது ஒரு கலர் சாயத்தில் நனைத்து காயவைத்தாலும், காயந்த பஞ்சை மறுபடியும் பிரித்தால், அது பழைய நிலைக்கு வந்துவிடும். அதைப்போலத்தான் மனிதனின் மனமும் என்றார்.
என்ன தான் நான் நல்லவளாக/நல்லவனாக இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதைக்கடைபிடிக்கத் தவறிவிடுகிறேன். இதற்கெல்லாம் பயிற்சி மிகவும் அவசியம்.
ஒருவர் காயப்படுத்தும் போது அதைத் தாங்கிக் கொள்வதற்கும்...
மற்றவரை நாம் காயப்படுத்தாமல் இருப்பதற்கும்...
மன்னிப்புக் கேட்பதற்கும்...
மன்னிப்புக் கேட்பவரை ஏற்றுக் கொள்வதற்கும்...
பொறாமை கொள்ளாமல் இருப்பதற்கும்...
மற்றவரின் நிலையில் இருந்து யோசிப்பதற்கும்...
நிறைய பயிற்சி தேவை...
கற்க முயல்கிறேன்!

இனியபாரதி.

செவ்வாய், 19 டிசம்பர், 2017

மனதும் வலி அறியும் தானே!

நாம் விரும்பும் நபர்
நம்மை விரும்பாமல்
மற்றவருடன் சிரித்துப்பேசும் போது!

நாம் நண்பர்கள் என்று நினைத்து
அனுதினமும் அவர்களுடன்
உரையாட விரும்பும்போது
அவர்கள் நம்மை
ஒருபொருட்டாகக் கூட
மதிக்காத போது!

அவர்களுக்கு நாம் எதுவும்
அனுப்பாத போது
அவர்களும் நமக்கு எதுவும் அனுப்பாமல்
நாம் அவர்களுக்கு முக்கியமில்லை
என்பதை உணர்த்தும் போது!

அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது
ஏதோ வேண்டா வெறுப்பாக
நம்மைப்பார்க்க வரும் போது!

நம்மைப் பற்றி மற்றவர்களிடம்
இல்லாதவை பொல்லாதவை
எல்லாம் சொல்லும் போது!

நாமே வேண்டாமென்று
அவரை வெறுத்து ஒதுக்க
நினைக்கும் போது
நம்மை நெருங்கி வரும்
அவர்களின் ஏமாற்றும் வித்தைகளின் போது!

மனம் ஏனோ வலிக்கின்றது தான்!

இனியபாரதி.

திங்கள், 18 டிசம்பர், 2017

அழகான பாடல் வரிகள்...

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை..
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை..
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தானடி..
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மனம் மாறுதே!

தனியாய் இருக்க ஆசைப்பட்ட நீ
இப்போது குடும்பமாய் வாழ ஆசைப்படுகிறாய்!
சோர்ந்து போய் அலைந்துகொண்டிருந்த நீ
இப்போது சுறுசுறுப்பாய் இருக்க ஆசைப்படுகிறாய்!
கடிந்து கடிந்து பேசிய நீ
இப்போது புன்முறுவலுடன் பேச ஆசைப்படுகிறாய்!
அறையிலேயே அடைந்துகிடந்த நீ
நடுவறையில் அமர்ந்து குடும்பத்துடன் உரையாட ஆசைப்படுகிறாய்!
வீட்டைவிட்டு வெளியேறாத நீ
வெளியில் செல்ல ஆசைப்படுகிறாய்!
சுற்றம் என்ன நினைக்குமென்று ஏங்கிய நீ
சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகிறாய்!

இந்த மாற்றங்களுக்குக் காரணம்
உன்னை நீயே புரிந்து கொண்டது தான்!
இனியபாரதி.

சனி, 16 டிசம்பர், 2017

கானல் தேவதை...

சற்று நேரம் மட்டுமே
என்னுடன் இருந்து விட்டுப் போக
உனக்கு மட்டும்
எப்படி மனம் வந்தது.... 'மகிழ்ச்சி'
வெகுநேரமாகியும் வராமல்
தவிக்கவிட
உனக்கு மட்டும்
எப்படி மனம் வந்தது... 'தூக்கம்'
என் அருகிலுள்ளவரிடம்
மட்டும் இருந்துகொண்டு
என்னிடம் வர பயப்பட
உனக்கு மட்டும்
எப்படி மனம் வந்தது... 'பணம்'
எனக்கு எப்போதாவது அமிர்தம்
அருந்தக் கொடுத்துவிட்டு
அடிக்கடி ஆழ்கடலில் ஆழ்த்த
உனக்கு மட்டும்
எப்படி மனம் வந்தது... 'வெற்றி'

இனியபாரதி.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

உன்னைப்போல்....

ஆயிரம் தந்தையர்களைப் பார்த்திருப்பேன்...
சற்று கூட முகம் சுழிக்காமல் பேசும் குணம்
உம்மிடம் மட்டுமே பார்த்தேன்!!!
என்னைக் கேலியாய் யாருடனாவது
சேர்த்து வைத்துப் பேசியது வார்த்தையில் மட்டுமே அன்று
உணர்வுகளில் அல்ல!
ஒருநாளும் மற்றவர்க்குத் தீங்கிழைக்காத எண்ணம்
உமக்கே உரியது!
உம் வாயின் வார்த்தைகளைக் கேட்க
நாங்கள் தவமிருந்த நாட்கள் உண்டு...
என்ன நடந்தாலும்
'அவனைப்போகச் சொல்லுங்க... முட்டாப்பையன்'
என்று ஒருவார்த்தையில் முடித்துவிடும்
பழக்கம் உம்மைத் தவிர யாருக்கும் இல்லை!
இணையத்தில் புகுந்துவிளையாடுவதில்
சிறிதளவு தடுமாற்றம் இருந்தாலும்
கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தோடு
நீர் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும்
ஆச்சரியம் தான்!
உம்மிடம் வருபவர்க்கு இல்லை என்று
ஒருபோதும் சொன்னதில்லை!
எதையாவது எடுத்துக்கொடுத்து 'இதைக் கொண்டுபோ'
என்று தான் நீர் சொல்லிப் பார்த்திருக்கிறோம்!
எதற்கும் துணிந்தவராய்
இந்த வயதிலும்
தன்னம்பிக்கையோடு
தன் வேலைகளைத் தானே செய்து
எங்களுக்கு முன்மாதிரியாய்
விளங்கிச் சென்று
இன்று தங்கள் உயிரை இழந்து
விண்ணக வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட
எங்கள் அன்புத் தந்தைக்கு...
ஆழ்ந்த இரங்கல்கள்...

வருத்தத்துடன்...
இனியபாரதி.

வியாழன், 14 டிசம்பர், 2017

கண்டுகொள்ளாமல்...

நானும்
எதைப்பற்றியும் யாரைப்பற்றியும்
கண்டுகொள்ளாமல்
என் நாட்களைக்
கழிக்க வேண்டுமென்று தான்
நினைக்கிறேன்!
என் மனம் அவளை நினைக்கச் சொல்கிறது!
என் உள்ளம் அவள் அழைப்பிற்காய் காத்திருக்கின்றது!
என் முவ்வேளைகளும் அவளை மட்டுமே நினைவுபடுத்துகின்றன!
என் அறையின் வாசம் அவள் வாசத்தைக் கொண்டுவருகின்றது!
என் சுவாசம் அவளின் சுவாசத்தை உணரச் செய்கின்றது!
என் தனிமை அவளின் அருகாமையை நினைத்துப் பார்க்கத் தூண்டுகின்றது!
இப்படி என் அனைத்திலும் அவள் மட்டுமே இருக்க
நான் யாரைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமென்று
என்னால் உணர முடியவில்லை!

இனியபாரதி.

புதன், 13 டிசம்பர், 2017

உன் அழகை வருணிக்க...

ஆசையாய் நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையிலும்
குறை கண்டுபிடிக்கும்
உன் குணம் கூட
அழகாய்த் தான் தோன்றுகிறது!
நீ என் அருகில் இல்லாத
அந்தத் தனிமைப் பொழுதுகளில்!
உன்னிடம் உண்மையைச்
சொல்கிறேன் என்றெண்ணி
நானெடுக்கும் ஒவ்வொரு
முயற்சியிலும்
தோற்றுத் தான் போகிறேன்!
என் தோல்வி கூட
உன் முன்னால்
எனக்குப் பெருமையைத் தான் தருகின்றது!
என்றும் உன்னவனாக!!!

இனியபாரதி.

செவ்வாய், 12 டிசம்பர், 2017

பாரதியின் பார்வையில்...

கடந்த இரண்டு வாரங்களாகச் சரியாக எழுத முடியவில்லை... ஆண்டின் இறுதி நாட்களில், இந்த வருடம் முழுவதும் நடந்த பல நல்ல நிகழ்ச்சிகளையும், சிலபல கண்ணீருக்கான நிகழ்வுகளையும் மனம் எண்ணிப் பார்க்கின்றது.
சென்ற வருடம் எடுத்த முடிவுகளில், இந்த வருடம் முழுவதும், அனுதினமும் என்னுடைய வலைப்பதிவைப் பதிவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான்கு நாள்கள் முடியாத பட்சத்தில், மற்ற நாட்கள் எல்லாம் என்னால் இயன்ற அளவு, என் எழுத்துத் திறனை உபயோகப்படுத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.
இந்த வருடம் முழுவதும் எனக்கு நல்ல சுகத்தைக் கொடுத்து, நான் எழுத எனக்குப் பலன் தந்த இறைவனுக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், வருகின்ற நாட்களிலும் என்னை நல்ல முறையில் நடத்துவார்.
நேற்று பாரதியைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று நினைத்து அமர்ந்த எனக்கு ஏமாற்றமே!
எழுத முடியாத நிலை.
இன்று எழுதுகிறேன்!
'நீ பிறந்த காலத்தில்
ஒரு அலைபேசி கூட இல்லை...
அப்படி இருந்தும் நீ காதலித்திருக்கிறாய்!
உன் காதலை வெளிப்படுத்த உனக்கு
நேரம் கிடைத்தது!
உன் காலத்தில் தான்
தொழில்நுட்பக் கருவிகள் ஏதும் இல்லாததால்
உன் கவிதை விடு தூதுகளால்
அனைவரின் மனத்தையும் கவர்ந்தாயோ?
உன் வளரிளம் பருவத்தில்
என்னென்ன விளையாட்டுகள் எல்லாம்
விளையாடியிருப்பாய்?
உன்னுடன் சேர்ந்து விளையாட
எத்தனை நண்பர்கள் இருந்திருப்பார்கள்?
என் மகாகவியாகிய உன்னைப் பற்றி
நினைத்து நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தேன்!
உன் கவிதைகள் உன் வாழ்க்கைச் சூழலை
நான் அறிய உதவுகிறது!
நீ இன்றும்
உயிருடன்
எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்திருக்கக் கூடாதா
என்ற ஏக்கம் மட்டுமே எங்கள் நெஞ்சில்!'

இனியபாரதி.

திங்கள், 11 டிசம்பர், 2017

எல்லாம் நீயாக...

சாதிக்கப் பிறந்துவிட்டு இன்னும்
சாேம்பலுக்கு அடிமையாய்க் கிடக்கிறேன்...
விரைவில் விழித்தெழத் துணையாக வா....

சுறுசுறுப்பு... 

இனியபாரதி.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

எல்லா புகழும்...

உன் கைய்த்தாங்கள்களில் நடந்து கொண்டிருந்த என்னை
நீ விழத் தாட்டிய போது தான்
நான் சாவின் விளிம்பில்
இருந்து தப்பித்ததை உணர்ந்தேன்...

எல்லா புகழும் அவனுக்கே...

இனிய பாரதி.

வியாழன், 7 டிசம்பர், 2017

இன்பமான உறவுகளை...

இனிய உறவுகள் கிடைக்க
கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
அதுவும் நம் உணர்வுகளைப்
புரிந்து கொள்ளும் உறவுகள்
அமைந்தால்...
நம்மை விட அதிர்ஷ்டசாலி
இந்த உலகில் இல்லை
என்றே கூறலாம்!
ஆனால்,
இப்படிப்பட்ட உறவுகளைத் தேடிக்
கண்டுபிடிப்பது தான்
கடினமாக இருக்கிறது
இந்தக் காலத்தில்!!!

இனியபாரதி.

புதன், 6 டிசம்பர், 2017

கருணையில்லா...

நமக்குப் பிடித்த ஒரு பொருள்
நம் நண்பரோ
அண்டை வீட்டாரோ
வாங்கி
அதைப் பயன்படுத்தும் போது
நமக்கு எரிச்சல் வரும்!
சில சமயங்களில்
நாம் அணிந்திருக்கும்
அதே மாதிரியான ஆடையை
வேறொருவர் அணிந்திருக்கக் கண்டு
வெகுண்டெழுவோம்!
நாம் முதலிடம் பிடிக்கத்துடிக்கும்
இடத்தில்
வேறொருவர் இருக்கிறார்
என்று நினைக்கும் போது
அவர் மீது பொறாமைப்படுவோம்!
என்னுடையது எல்லாம் என்னுடையதே!
மற்றவருடையதும் என்னுடையதே என்ற
மனநிலையை என்னிடமிருந்து நீக்க
வரம் தா இறைவா!

இனியபாரதி.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

அறியாத உலகம்...

நம்மைப் பற்றி நாமே அறிய சிறந்த வழி
'தனிமை'
தனிமையை இரசிக்க கண்டிப்பாக
நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும்!
தெரியாத மொழி!
ஆறியாத மக்கள்!
இப்படி ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து
யோசிக்கும் போது
நம்மை நாமே சுலபமாக அறியலாம்!

இனியபாரதி.

திங்கள், 4 டிசம்பர், 2017

✍அழகான வரிகள்....

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

ஆசைப்படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..

சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..

மரணத்தை பற்றிக் கவலைப்படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை..

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார். இதயத்தில் சுகம் தெரியும்....

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை...
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை.... இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருப்போம்..

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

காலத்தால் அழியாத...

உலகில் அழிக்க முடியாத உறவு உண்டென்றால்
அது நட்பாகத் தான் இருக்கும்!
காதலிலும் நட்புள்ளது!
தாயின் அன்பிலும் நட்புள்ளது!
தந்தையின் பாசத்திலும் நட்புள்ளது!
இப்படி நாம் பார்க்கும், பழகும் ஒன்வொன்றிலும்
நட்புள்ளது!
நாம் தான் அதைப் பயன்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும்!

இனியபாரதி.

சனி, 2 டிசம்பர், 2017

கடின உழைப்பு...

கடின உழைப்பிற்குப் பலனுண்டு என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நான் எவ்வளவு தான் உழைத்தாலும், இந்த நிலையிலிருந்து முன்னேற முடியவில்லையே என்ற எண்ணம் பலருக்கும் வருவதுண்டு.
கடின உழைப்பு என்பது நம் உடலை மட்டும் உழைப்பிற்கு உட்படுத்துவது அல்ல... மாறாக நம் மனதையும், அறிவையும், ஆற்றலையும் அதற்கு உட்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் வெற்றி நிச்சயம்..

இனியபாரதி.

செவ்வாய், 28 நவம்பர், 2017

சில கிறுக்கல்கள்....

கருணையின் வடிவு...
கருணை உன் வடிவல்லவா என்று இறைவனை மட்டுமே
நாம் பாடுவதுண்டு!
கருணையின் வடிவம் அவன் மட்டுமல்ல
அவன் உருவில் உள்ள நாம் அனைவரும் தான்!

காவி...
கவிஞனுக்குப் பாட வரும்...
காவி உடை அணிந்தவனுக்கும் ஆசை வரும்...

விரலழகு...
உன் விரலழகை இரசித்துக்கொண்டே இருக்கத் தான்
உன் கைகோர்த்து நடக்க நாளும் ஆசைப்படுகிறேன்...

இனியபாரதி.

ஞாயிறு, 26 நவம்பர், 2017

காதலனின் முகம்...

அன்றாடம் பார்க்கும் முகம் என்றாலும்
அலுத்துப்போகாத ஒரு முகம் உன்னுடையது!
அதற்குக் காரணம் காண இயலவில்லையெனினும்
முயன்று கொண்டேயிருக்கிறேன்!
என் அன்பனின் முகம் என்று உன் முகத்தைத் தவிர
வேறு யாரைப் பற்றிக் கூறுவது?
உலகில் யாரைப் பார்க்கவும் நமக்கு உரிமை
இருக்கிறதென்றாலும்
காணக்கூடாதென்று என்னைக் கடிவாளத்திற்குள்
அடைத்து வைக்கும் சக்தி
உன் முகத்திற்கு மட்டுமே என்று தான் நினைக்கிறேன்!
நிலவிற்கு ஒப்பிட்டுப் பெண் முகத்தைக் கூறினாலும்
உன் முகத்தையும் நான் நிலவுடனே ஒப்பிடுவேன்!
ஏனெனில் உன்னில் என் தாயைப் பார்க்கிறேன்!

இனியபாரதி.