புதன், 27 டிசம்பர், 2017

மன சஞ்சலங்கள்..

வெகுநாட்களாக வெளியூர் செல்லாமல், திடீரென சென்னை செல்வது, ஒருமாதிரியான எண்ணத்தை என்னுள் ஏற்படுத்துகின்றது. என்ன தான் இருந்தாலும், தன் வீட்டில், தன் அறையில் இருப்பதற்கும், வெளியில் சென்று மற்றவர் வீடுகளில் தங்குவதற்கும் வித்தியாசம் இருக்கத் தான் செய்கின்றது. இப்போது தான், தன் வீடுகளில் தங்காமல், குடும்பத்திற்காக, பிள்ளைகளுக்காக என்று வெளியூரில் சென்று, தங்கி, படிக்கும், வேலைபார்ப்பவர்களின் நிலைமை புரிகிறது. ஒரு விதத்தில் நான் கொடுத்து வைத்தவள் என்பதை எனக்கு உணர்த்துகின்றது.
பல நேரங்களில் வெளியூர் செல்வதற்கும், உறவினர்களின் வீடுகளில் சென்று தங்குவதற்கும் ஆசைப்பட்டதுண்டு. ஆனால், அங்கு சென்றபின்பு தான், தன் வீட்டின் அருமை தெரியும். அதுவும் அம்மா இல்லாமல் சென்றுவிட்டால், காய்ச்சலே வந்துவிடும்.
இது ஒரு புதிய அனுபவம் தான். இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. செல்கின்ற இடமெல்லாம், கிடைக்கின்ற உணவை உண்டு, அனுதினமும் அயராது உழைக்கும் என் செல்லம்மாவின் பரந்த மனது எனக்கும் வேண்டுமென்று விழைகிறேன்.
குழந்தைகளைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு பாதுகாக்கிறேன் என்று எண்ணும் பெற்றோர்களே! அவர்கள் பெரியவர்களான பின்னர், வெளியூர் சென்று படிக்கும் நிலை வரும் போதோ, மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ நினைக்கும் போதோ அவர்களால் இயல்பாகவே அப்படி நடந்து கொள்ள முடியாது.
பிள்ளைகளை மற்றவர்களுடன் அண்டி வாழப் பழக்குவது பெற்றவர்களின் கடமையே!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: