முதுகலைப்பட்டப்படிப்பிற்காய் தன்னைத் தயாரித்துக்கொண்டிருந்த ஒரு தமிழ் ஆசிரியருக்கு, 'உலகில் உள்ள உயிர்களுக்கு எது முக்கியம்?' என்று ஆராய வேண்டுமென்ற ஆசை வந்தது. அந்த ஆசையின் படியே, தன் ஆராய்ச்சியை ஆரம்பித்தார்.
முதலில் சிறியவரிலிருந்து தொடங்குவோம் என்று நினைத்த அவர், ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை அழைத்து 'உனக்கு எது மிகவும் அவசியம் என நினைக்கிறாய்?' என்றார். அவன் 'என் அன்னையின் அரவணைப்பும், என் தந்தையின் பாசமும்' என்றான்.
இரண்டாவது ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞனிடம் சென்று, 'உன் வாழ்வில் எது முக்கியம் என் நீ நினைக்கிறாய்?' என்றார். அதற்கு அவன் 'நான் செய்கின்ற வேலையும், அதன் மூலம் வரக்கூடிய வருமானமும் தான் எனக்கு முக்கியம்' என்றான்.
மூன்றாவதாக, ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் சென்று, 'உங்களுக்கு எது முக்கியம்?' என்றார். அவர், 'நான் எந்தவித உடல் வியாதிகளும் இல்லாமல், நலமுடன் இருப்பது தான் எனக்கு முக்கியம்' என்றார்.
கடைசியாக அந்த ஆசிரியர் மிகவும் கலைத்துப் போய் ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தார். அவருக்கு அப்போது தேவைப்பட்டதோ ஒரு செம்பு தண்ணீர் மட்டும் தான்..
ஆசிரியர் ஞானம் பெற்றார்.
ஒவ்வொருவர் வாழ்விலும், அவர் அவர்க்கு எண்ணங்கள் வேறு... சிந்தனைகள் வேறு... நமக்கு எது முக்கியமென்று படுகிறதோ, அது மற்றவர்க்கு ஒரு பொருட்டாகக் கூடத் தெரியாது. நாம் ஒரு பொருட்டாக மதிக்காத சில விசயங்கள், பலரால் பெரிதும் விரும்பப்படும்.
எந்த ஒரு நபருக்கும், அவரவர் மனநிலையைப் பொறுத்தே, அவருக்கு என்ன தேவை என்பது தெரிகிறது.
தேவையின் அவசியத்தை உணர்ந்து, முக்கிய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம்.
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக