திங்கள், 20 நவம்பர், 2017

அன்பின் ஆழம்..

ஓர் சிற்றூரில், ஒரு தாயும் அவள் மகளும் வசித்துவந்தனர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த அந்தக் குழந்தையை, எப்படியாவது நன்றாக வளர்த்து கரைசேர்க்க வேண்டுமென அந்தத் தாய் நினைத்தாள். அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும் போதிலிருந்தே, உலக நடப்புகளைப் பற்றி, வீட்டில் நடப்பவற்றைப் பற்றி, செய்திகளில் வாசிப்பதைப் பற்றி... என்று பல்வேறு கருத்துகளை அவளுக்குக் கூறிக்கொண்டே இருப்பாள்.

அவளுக்கு வயது இரண்டான போது, ஓரளவு தன்னைச் சுற்றி நடப்பவற்றைப் புரிந்துகொண்டாள். அவளுக்கு இருந்த திறமையே, அவளின் கவனிப்புத் திறன் தான்... எதைப் பார்த்தாலும், அதைப் போலச் செய்து விடுவாள். தொலைக்காட்சியில் கண்பவற்றைப் போல நடித்துப் பார்ப்பாள்.
இப்படி அவளுக்குள்ளிருந்த பல்வேறு திறமைகளை, அவள் தாய் நோட்டமிட்டுக் கொண்டே இருந்தாள். அவளை இரண்டரை வயதிலேயே ஓவியப்பயிற்சிப்பள்ளியில் சேர்த்துவிட்டாள். கூடுதலாக அவளுக்கு நடனத்திலும் ஆர்வம் இருந்ததால், அதையும் அவளுக்கு முழுமையாக வழங்க அவள் தாய் தயங்கவில்லை.

தான் எவ்வளவு துன்பங்கள் அனுபவித்தாலும், தன் மகள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளை வகிக்க வேண்டுமென்று அயராது பாடுபட்டாள், அத்தாய்.

அதற்கு பலனும் கிடைத்தது.

அந்தக் குழந்தை படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டு, ஆடல், பாடல், நடிப்பு என அனைத்திலும் முன்னிலை வகித்தாள்.
இப்படி ஒரு உயர்ந்த இடம் கிடைக்கக் காரணம் தன் தாய் தான் என்றாலும், அவள் மனம் அதை வெகுவிரைவாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை, அவள் தாய்.

நாட்கள் உருண்டோடின...

அவளுக்குத் திருமணமும் அவள் விருப்பப்படியே நடந்தது.
நல்ல மனையாளனைப் பெற்றாள்.
அவளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தைக்கு தான் கற்றறிந்தது போலவே, அனைத்தையும் திணித்துவிட நினைத்தாள். ஆனால், அக்குழந்தையின் ஆர்வம் எல்லாம் இசையைக் கற்பதில் மட்டும் தான் இருந்தது. அதனால், அக்குழந்தையை அடிப்பது, திட்டுவது என ஆரம்பித்தாள்.
குழந்தை மிகவும் வேதனையுற்றது. தன் தாயை வெறுக்கும் அளவிற்கு இருந்தது அவளின் நடவடிக்கைகள்...

அப்போது தான் அவளின் கண்களில் நீர் வடிந்தன...
'தன் தாய், அவள் விருப்பத்திற்காகத் தன் மொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்ததை நினைத்து அவளைத் தன் உள்ளத்தில் போற்றினாள். அவளின் அருமையை உணர்ந்தாள்.'

அவளின் அன்பின் ஆழத்தை அளக்க ஆழ்கடல் சென்றாலும் முடியாது.

அன்னையைப் போற்றுவோம். அவளை மதித்து வாழ்வோம்.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: