குழந்தைகள் தினத்தன்று, குழந்தைகளுக்கு சில நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று நேற்றைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இன்று தான், அதற்குப் பின் ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டோமென்று உணர்ந்தேன்.
குழந்தைகளுக்கு ஒருசில நல்ல நெறிகளைச் சொல்லித் தருவதற்கு முன், நாம் அவற்றைக் கடைபிடிக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
நேற்றைய தினம் 'கண்ணியம்' என்ற ஒரு மதிப்பீட்டைக் குறிப்பிட்டிருந்தேன். தான் செய்யும் வேலைகளில், பணியிடங்களில் நேர்மையாக இருத்தலைக் குறிக்கின்றது.
இன்று மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். எப்போதும் helmet அணிந்து வரும் நான், இன்று ஏதோ ஒரு ஞாபகத்தில், helmet இல்லாமல் என் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். இடையில் வாட்டசாட்டமான இரு காவலர்கள் என்னை வழிமறித்து, helmet இல்லாமல் வந்ததற்காக 100 ரூபாய் அபராதம் கொடுக்கச் சொன்னார்கள். நான் வழக்கம் போல், பணம் எதுவும் என்னிடம் எப்போதும் வைத்துக் கொள்வதில்லை. என்னிடம் பணம் இல்லை என்பதை அவரிடம் கூறினேன். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. கடைசியில், என்னைப் பற்றி எல்லாம் விசாரித்துவிட்டு, பக்கத்தில் இருந்தவர்களிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு, அவர்கள் முன்பு எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தேன்.
அப்போது, அந்த வழியாக, ஒரு வெள்ளை வேட்டி ஆசாமி, தன் இருசக்கர வாகனத்தில் helmet அணியாமல் வந்து, அந்தக் காவலர் முன்பு தன் வண்டியை நிறுத்தி, 'என்ன சார்? நானும் helmet அணிந்திருக்க வேண்டுமா?' என்றார். அதற்கு அந்தக் காவலர், 'நீங்க போங்க சார்' என்றுத் தன் கண்களால் ஜாடை காட்டுகிறார். அவரும் தன் வண்டியில் பயணமாகிறார்.
நானும், என்னைப் போல் இரண்டு அப்பாவிக் கல்லூரி மாணவர்களும் அவர்களிடம் மாட்டிக் கொண்டு, விழித்துக் கொண்டு இருந்தோம். கடைசியில் என்னிடம் 'ஐநூறு ரூபாய் வாங்கணும். நீ ஒரு ஐம்பது ரூபாய் மட்டும் குடுத்துட்டுப்போமா!' என்றார்.
என்னிடம் உண்மையிலேயே பணம் இல்லை... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கொஞ்சினேன். ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு என்னைக் கிளம்பச் சொன்னார். அதுவும் சில நிபந்தனைகளுடன்...
இனி எங்காவது உன்னை helmet இல்லாமல் பார்த்தால், இதற்கும் சேர்த்து அன்று நீ பணம் கட்ட வேண்டுமென்றார்... சரி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றேன்....
நான் helmet அணியாமல் வந்தது என் தவறு தான் என்றாலும், அவர் செய்ததும் தவறாகவே எனக்குத் தோன்றுகிறது. அவருக்கு வேண்டியவரென்றால் தவறு செய்து கொள்ளலாம். தெரியாதவர்கள் தவற்றிற்கு இலஞ்சம் கொடுக்க வேண்டுமா?
படித்த, பெரிய பதவிகளில் இருப்பவர்களே இப்படிச் செய்யும் போது, நம் குழந்தைகள் நல்லவர்களாக இருக்க வேண்டுமென்று, நாம் எதிர்பார்ப்பது, நமக்கே அடுக்குமா????
இது போன்ற நேரங்களில் அவர்களைத் தட்டிக் கேட்க வேண்டுமென்று தோன்றினாலும், அவர்களின் பதவி மற்றும் நமது இயலாமை, நம்மை ஒன்றும் செய்ய விடாமல் தடுத்துவிடுகிறது.
தவறுகளைத் தட்டிக் கேட்கும் உள்ளங்களும்...
தவறு செய்யத் தயங்கும் உள்ளங்களும் கிடைக்கும் வரை
நம் தேசம் 'இலஞ்சங்களின் நாடு தான்'
இலட்சியங்களின் நாடாக எப்பாேது மாறுமாே?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக