செவ்வாய், 31 அக்டோபர், 2017

மாதத்தின் முதல் நாள்...

இப்போது தான் ஆங்கிலப்புத்தாண்டைக் கொண்டாடியது போல் இருந்தது. அதற்குள் பத்து மாதங்கள் முடிந்து விட்டன. பதினொன்றாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் அடுத்த புத்தாண்டைக் கொண்டாடப் போகிறோமா?
ஆச்சரியமாகத் தான் இருக்கின்றது!!!
எப்படி இந்தப் பத்து மாதங்கள் ஓடின?
இந்தப் பத்து மாதங்களில் எவ்வளவு நல்ல விசயங்கள் என் வாழ்வில் நடந்திருக்கின்றன?
நான் எத்தனை பேருக்கு உதவியாக இருந்திருக்கிறேன்?
எத்தனை பேரிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறேன்?
எத்தனை புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்?
இப்படிப் பல கேள்விகளைக் கேட்டு, அதற்குப் பதிலும் கண்டுபிடிக்கலாம்.
சுவாரஸ்யமாகத் தான் இருக்கும்.
சில நேரங்களில், 'அப்படி என்ன இந்தப் பத்து மாதங்களில் சாதித்து விட்டேன்?
எல்லாம் அப்படியே தான் இருக்கின்றது! எதுவும் மாறவில்லை' என்ற சிலரின் புலம்பல் கூட என் காதுகளில் கேட்கின்றது.
நாம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருவகையில் வளர்ந்து கொண்டே தான் வந்திருப்போம். நம்மைத் தாழ்மையடைய, நம் இறைவன் ஒருநாளும் விடமாட்டார்.
எந்தத் துன்பம் வந்தாலும், அவரை மட்டும் நாடி, நம்மை அவரில் வளர்த்தெடுப்போம்.

வருகின்ற நாட்கள் இனிமையானதாக அமைய வாழ்த்துகளுடன்,

இனியபாரதி.

திங்கள், 30 அக்டோபர், 2017

இறைவன்...

இந்த உலகில் யாராலும் முடியாதென்று
ஏதாவது உண்டென்றால் அதை நிகழ்த்த
இறைவனால் மட்டுமே முடியும்!
அவர் எங்கும் நிறைந்திருப்பவர்!
அமைதியை உருவாக்கும் உள்ளங்களில் வாழ்பவர்!
எத்தீங்கும் நினையாதவர்!
நம் சுக துக்கங்களில் பங்கெடுக்கக் கூடியவர்!
நம் ஆயுளைக் கூட்டவோ குறைக்கவோ அதிகாரம் கொண்டவர்!
அன்பால் அனைத்தையும் வெல்பவர்!
பாசத்தோடு பார்ப்பவர்களுக்குப் பதிலளிப்பவர்!
அவரைக் காண நாம் எங்கெங்கோ ஓடித் தேடத் தேவையில்லை!
அவர் நம் உள்ளங்களில் உறைந்திருக்கிறார்!!!!
கண்டுகொள்வோம்!

இனியபாரதி.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

படித்ததில் பிடித்தது....

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.

"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''

"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.

"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.

"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.

பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.

ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.

மாணவர்களும் கரவொலி எழுப்பினர்... கரவொலி அடங்கவே வெகுநேரம் பிடித்தது..

சனி, 28 அக்டோபர், 2017

அன்போடு அரவணைக்க...

அருகில் இருக்கும் போதெல்லாம்
அரவணைத்துக் கொண்டு
அன்பைப் பொழியும் உன்னை
புரிந்து கொள்ளாமல் விட்டதென்னவோ
என் தவறு தான்!
உன்னைத் தொலைத்தபின் தான் தெரிகிறது
அன்பின் அருமை கூட!!
உன்னைத் தேடிக் கொண்டு என் பயணத்தைத்
ஆரம்பித்தேன்...
இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்!
எப்போது கண்டடைவேன் என்பதை யாரறிவார்?
கவலையில் மிதந்து
கால்கள் சோர்ந்து
இளைப்பாற நிழல் நாடினேன்!!!
தொலைத்த என்னைத் தேடத் தோள் கொடுத்தது
'என் அன்னையின் மடி'

இனியபாரதி.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

உன் காலடியில் தான்...

வைரம் தங்கத்தைப் பார்த்து
கௌரவப்பட்டுக் கொண்டது
'நான் உன்னைவிட விலைமதிப்பற்றவன்' என்று....
மாடி வீடு குடிசை வீட்டைப் பார்த்து
பெருமைப்பட்டுக் கொண்டது
'நான் உன்னைவிட உயர்ந்து நிற்கிறேன்' என்று...
அழகு அசிங்கத்தைப் பார்த்து
சிலிர்த்துக் கொண்டது
'நான் தான் அழகானவன்' என்று...
தோற்பை சுருக்குப்பையைப் பார்த்து
ஏளனமாய் சிரித்தது
'என்னிடம் தான் பணபலம்' என்று...
இவை எல்லாவற்றையும் பார்த்து
மனிதன்
சிரித்துக் கொண்டு இருந்தான்...
அவனைப் பார்த்து
மண்
'உன்னை என்னுள் அடக்கினால் நீ ஒன்றுமில்லை' என்றது!!!

இனியபாரதி.

வியாழன், 26 அக்டோபர், 2017

கோபிப்பது யாராகினும்....

நான் எழுதிய கல்லூரிக் காலக் கவிதைகளுள் சில....

நான் கோபப்படும் சில தருணங்களில்

நீ அமைதியாயும்

நான் அமைதியாய் இருக்கும் சில தருணங்களில்

நீ கோபப்படுவதும்

சகஜம் தான் என்றாலும்

அன்பு செய்வது 'நாம் இருவருமாகத் தான்'

இருக்க வேண்டும்...

கப்பல் கூட நடுக்கடலில் கவிழலாம்!

என் காதல் என்றும் கவிழாது!!!

உன்னுடன் பேசுவதாய் நினைத்து

நானாகப் பேசிக்கொண்டே நடந்து சென்ற

நாட்களே 'என் வசந்த நாட்கள்'

இனியபாரதி.

புதன், 25 அக்டோபர், 2017

அழியாத காேலங்கள்...

எப்படித் தான்
நான் உன்னை விட்டு
விலகிச் சென்றாலும்,
விரட்டி விரட்டி காதல் செய்து
கெளரவப்படுத்தும்
உன் அன்பின் அழகு
என்றும் அழியாத காேலங்களே....

இனியபாரதி.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

தனிமை...

நான் இல்லா அந்தத் தனிமையின் பாெழுதுகள் என்னை நினைக்கத் தூண்டுவதன் மாயம் தான் என்னவாே?

இனியபாரதி.

திங்கள், 23 அக்டோபர், 2017

ஆறுதல்....

காயங்கள் ஆற்றிட துணை இருக்கும் பாேது
காயப்படுவதும் சுகமாய்த் தான் தாேன்றுகிறது.

நீ என்னுடன் இ ணைந்து வரும் இந்தப் பயணத்தில் எந்தத் தடையையும் தாண்டுவேன்....

இனியபாரதி.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

படித்ததில் பிடித்தது....

⚡நம்மில் யாருமே
75 (சராசரி ஆயுள்) ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருக்கப்போவதில்லை.

⚡போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

⚡ஆகவே சிக்கனமாக
இருக்காதீர்கள்.

⚡செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள்.

⚡ மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

⚡உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

⚡எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா?
வருவது வந்தே தீரும்!

⚡நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள்.

⚡அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

⚡நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

⚡உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

⚡ நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் என்ன பெரிய பதவியில் இருந்தாலும் நமது மகன் / மகள் தலைவிதிப்படியே நடக்கும், நாம் ஒரு வழி காட்டியே

⚡சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

⚡பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

⚡ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

⚡அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

⚡ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

⚡பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

⚡யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

⚡மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !
உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.

⚡நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் - இவைகள் இன்னும் சில ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!

⚡அதற்கு மேல் என்ன வேண்டும்,  இந்த உண்மைகளை உணர்ந்தால் கவலையின்றி  சந்தோசமாக வாழ்வை வாழலாம்!

சனி, 21 அக்டோபர், 2017

இறப்பின் வாசல்...

இன்பமும் துன்பமும் கலந்தது தான்
வாழ்க்கை என்பதை உணர்ந்தால்...
பிறப்பு ஒன்று இருக்கிறதென்றால்
இறப்பும் வந்தே சேரும்
என்ற எண்ணம் யாராலும் மறுக்கப்படமாட்டாது!
பிறக்கப்போகின்ற குழந்தைக்காய்
நாம் தயாரிப்புகள் செய்வது வழக்கம்!!!
ஆனால், 'நான் இறக்கப்போகின்ற நாளுக்காக
ஆயத்தம் செய்கிறேன்' என்பது சற்று வேடிக்கையாகவே உள்ளது!!!
இறப்பு – ஒரு நிகழ்வு...
அந்நிகழ்வு நமக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றாலும்
அதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்...
அதற்காகப் பயந்து கொண்டு அறையைப் பூட்டிக் கொண்டு
உள்ளேயே இருக்க வேண்டும் என்றில்லை...
நாம் வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும்
நம் மனதிற்குப் பிடித்தவாறு
நம் உறவுகளுடன்
இனிமையாக வாழ்வோம்!!!!
இறப்பின் வாசல் கூட
சொர்க்க வாசலே!!!

இனியபாரதி.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

இரகசியக் கனவுகள்...

 ஆசையாய் நான் கட்டிவைத்த
கனவுக் கோட்டைகள் எல்லாம்
காணாமல் போக...
இனி என்ன செய்வேனென்று
திகைக்து நிற்க...
அணைத்திடத் துடிக்கும்
அன்புக் கரங்களுக்காய்
ஏங்கி நிற்கிறாள்
மரண வாசலின் விளிம்பினிலே!!!

இனியபாரதி.

வியாழன், 19 அக்டோபர், 2017

காலத்தின் ஓட்டத்தில்...

இன்று நடப்பது நாளை இல்லை...
நாளை நடக்கப்போவது
நம் கையில் இல்லை...
நேற்று நடந்ததோ
நம் ஞாபகத்தில் இல்லை...
ஆனால்
ஒன்று மட்டும் நிச்சயம்...
'காலத்தின் ஓட்டத்தில், நாம் அனைவருமே மாறக்கூடியவர்கள்'

இனியபாரதி.

புதன், 18 அக்டோபர், 2017

குழப்பவாதியாய்...

அநேக நேரங்களில்
குழப்பத்தில் தான்
முடிவுகள் எடுக்கப்படுகின்றன...
குழப்பத்தில் எடுக்கப்படும்
எந்த முடிவும் சரியானதாகவும்
இருப்பதில்லை...
குழப்பமின்றி திண்ணமாய்
எடுக்கப்படும் எந்த முடிவும்
வெற்றியை வருவிக்கும்!!!
பயத்தைத் தராது!!!
குழப்பமின்றி முடிவுகளை எடுக்க
வரம் தா இறைவா!!!

இனியபாரதி.

செவ்வாய், 17 அக்டோபர், 2017

ஒளியின் நாள்....

அக்கம் பக்கத்துடன் பகிர்ந்துண்டு
ஆண்டுக்கொருமுறை உறவுகளுடன்
இன்பமாய் இனிய நாளை
ஈதல் உடன் கழிக்க
உள்ளங்கனிந்த வாழ்த்துகளுடன்
ஊரெல்லாம் ஜொலிஜொலிப்பு
எங்கும் மத்தாப்புகள்
ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி
ஐக்கியமாகி
ஒன்றாய் கூடி
ஓங்கும் நம் பண்பாடு
ஒளவை மொழி கேட்டு
அஃதே போற்றுவோம் நம் விழாக்களை!!!

இனிய தீபத்திருநாள் வாழ்த்துகளுடன்...

இனியபாரதி.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

படித்ததில் பிடித்தது....

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க சில வழிகள்.

1. தியானம்

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள்.  அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.

சனி, 14 அக்டோபர், 2017

நடுநிசி ஓசைகள்...

அந்தி மாலையிலே ஏறி அமர்ந்த
பேருந்தின் ஓட்டத்தில்...
நிசப்தத்தின் மத்தியிலும்
சிறு சிறு முனகல்கள்..
பாடல்களின் ஓசைகள்....
இருவழிப்பாதை...
ஒற்றை விளக்கு வெளிச்சத்தில்
நாற்பத்தைந்து மனங்கள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன!!!
ஒரு உயிர் மட்டும்
மற்றவைகளுக்குப் பாதுகாப்பாய்
தன் உறக்கத்தைத் துறக்கிறது!!!
ஜன்னல் வழியாக வீசும் காற்று
நம் உணர்ச்சிகளைத் தூண்டத்தான்
பார்க்கின்றது!!!
வழிப்பாதையில் இருக்கும்
காடுகளில் பறவைகள், பூச்சிகள்
எழுப்பும் ரீங்காரங்கள் கூட
நமக்கு ரஹ்மானின் இசைதான்!!!
ரோட்டோரக் கடைகளின்
மின்விளக்கு வெளிச்சம்
கண்ணைப்; பறிக்கும்!!!
அந்த இரவுகளில் வரும்
நான்கு சக்கர கனரகவாகனங்களின்
ஓசை மட்டும்
இன்றும்; நீங்காமல்
நெஞ்சத்தில்
ஓசை எழுப்பிக் கொண்டே....
உன்னை நான் அடைந்துவிட்டேனென்று
எனக்கு உணர்த்துகின்றது!!!

இனியபாரதி.

வெள்ளி, 13 அக்டோபர், 2017

சில கிறுக்கல்கள்...

அழகை இரசிக்கும்!!!

உடலழகை இரசிக்கும்
ஆணவ ஆண் வர்க்கம்,
உள்ளத்தழகை இரசிக்கத்
தவறி விடுகிறது!!!

உன்மீது வரும் கோபம்...

மற்ற ஆண்களைப் பற்றி
நீ பேசும் போது மட்டும்
எனக்கு ஏன் இவ்வளவு கோபம்
வருகிறதென்று
எனக்கே தெரியவில்லை!!!

அன்பின் உச்சத்தில்....

உனக்காக நானும்
எனக்காக நீயும்
என்று வாழும் போது
இடையில்
வரும் மரணம் கூட
மனத்திற்கு மகிழ்ச்சி தான்....

இனியபாரதி.

வியாழன், 12 அக்டோபர், 2017

உன்னையே நீ!!!

உனக்கு நீயே தாயாவாய்!!!
உன் தாய்மையில்
தந்தையின் உள்ளம் வெளிப்பட்டு
உனக்கான சகோதர பாசம்
உன் அன்பில்...
நட்பு வட்டத்தின் எல்லா
பகிர்தல்களும்
உன்னுடனே...
காதலியாய் மாறி அரவணைத்து....
காதலனாய் மாறி அன்பைப் பொழிந்து...
எதிரியாய் மாறி உன்னைத் தோற்கடித்து...
ஆசிரியராய் மாறி உனக்குக் கற்பித்து...
ஞானியாய் மாறி உனக்கு ஞானமூட்டி...
சரியான நேரத்தில், சரியான வார்த்தைகளைப் பேசி...
உனக்கு நீயே 'துணையாவாய்'!!!!

இனியபாரதி.

புதன், 11 அக்டோபர், 2017

நானாக நினைத்துக் கொண்டேன்....

கோபப்பட்டுப் பேசும் போது
என் தாய் என்னை வெறுக்கிறாள் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
கண்டுகொள்ளாமல் இருக்கும் போது
என் தந்தைக்கு என்மேல்
அக்கறை இல்லையென்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
என்னுடன் சண்டையிடும் போது
என் சகோதரிக்கு என்மேல்
பாசமில்லை என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
வெளியில் கிளம்பும் போது
என் எதிர்வீட்டுக்காரன்
என்னைப் பார்க்கிறான் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
தெருவில் நடக்கும் போது
எல்லோர் கண்களும் என்மேல் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
நண்பர்கள் என்னைப் பாராட்டும் போது
நான் தான் அழகென்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
கஷ்டங்கள் வரும்போது
எனக்கு மட்டும் தான்
கடவுள் கொடுக்கிறார் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!
ஓரக்கண்ணில் பார்க்கும் போது
அவள் என்னை மட்டும் தான்
பார்க்கிறாள் என்று
நானாக நினைத்துக் கொண்டேன்!

இனியபாரதி.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

நெஞ்சம் மறப்பதில்லை...

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்...
நான் தான் இந்த உலகில் அனைத்தையும்
மறந்துவிடும் மறதிக்காரன் என்று!!
அது தான் தவறு!!!
நாம் எதையும் மறப்பதில்லை!!!
நம் இதயத்தின் ஆழத்தில்
ஏதாவது ஒரு மூலையில்
அனைத்து விசயங்களும்
பதுங்கிக் கிடக்கின்றன!
நமக்கு எப்போது தேவையோ
அவை அப்போது வெளிப்படும்!
காதல் கதைகள்!!!
நட்பு வட்டங்கள்!!!
சுட்டித்தனங்கள்!!!
வீண் வம்புகள்!!!
இப்படி அனைத்துமே நம் மனதில்
இருந்து கொண்டு தான் இருக்கின்றன!!!
அவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில்
சிந்திப்பதில் தான் கடினம்!!!
'எப்படி நம் நெஞ்சம் மறக்கும்?'
அந்த இனிமையான தருணங்களை!!!

இனியபாரதி..

திங்கள், 9 அக்டோபர், 2017

தரம்...

பார்த்தவுடன் ஒருவரைப் பற்றிக் கணிப்பதற்குக்
கடவுளால் கூட முடியாது...
அப்படிப்பட்ட தவற்றை மட்டும் வாழ்வில்
ஒருபோதும் செய்து விடாதீர்கள்!!!
ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதியும்
திறமையும் தெரியும்!!!
அதை எல்லோருக்கும் வெளிப்படுத்த வேண்டிய
அவசியமில்லை...
யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில்
வெளிப்படுத்த வேண்டுமென்பதும் நம்
உள்ளத்திற்குத் தெரியும்...
அதைப் புரிந்து கொள்ளாமல் மற்றவரைக்
குறை கூறுவதையும்
அவரைப் பற்றிய நமது தகாத எண்ணங்களையும்
நம் மனதில் வளர விடாமல் தடுப்போம்!!!

இனியபாரதி.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

எழுதுவதின் சாராம்சம்...

யார் வேண்டுமானாலும் எழுதலாம்...
என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
என்ற எண்ணம் தான்
இன்றுவரை என் மனதில் இருந்தது!
இன்று தான் உணர்ந்தேன்
எழுதுவதற்கும் சில வரைமுறைகள் உண்டென்று!!!
யார் மனதையும் புண்படுத்தக் கூடாது!
சிலரின் ஜாதிகளையும் மதங்களையும் பற்றி எழுதக் கூடாது!
தோலின் நிறங்களைப் பற்றி எழுதக் கூடாது!
செல்வத்தைப் பற்றி எழுதக் கூடாது!
படிப்பைப் பற்றி எழுதக் கூடாது!
அரசியலைப் பற்றி எழுதக் கூடாது!
நாட்டின் ஊழல் குறித்து எழுதக் கூடாது!

மேற்சொன்னவற்றைப் பற்றிப் பேசினாலும்
அப்படி ஏதாவது அதைக் குறித்து விமர்சனம் செய்தாலும்
பாதிக்கப்படுவது எழுத்தாளர் தான்!

வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை
இன்று உணர்ந்தேன்!!!
எழுத்தாளர் ஆவதும் அவ்வளவு சுலபமல்ல.....
எல்லாவற்றிற்கும் கடின உழைப்பு அவசியம் தான்!!!!
இனியாவது நான் எழுதுவதை மற்றவரிடம்
கொடுப்பதற்கு முன் மும்முறை படித்துப் பார்த்துவிட்டுத் தான்
படைக்க வேண்டும்!!!

நன்றி அண்ணா!!!!

இனியபாரதி.

வியாழன், 5 அக்டோபர், 2017

படித்ததில் பிடித்தது....

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*
* What is Maturity of Mind ? *

1. மற்றவர்களை திருத்துவதை விட்டு
விட்டு நம்மை திருத்திக்கொள்வது.
Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)ஏற்றுக்கொள்வது.
Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிக்கொள்தல்.
Learning to leave what are to be avoided.

5.மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.                   Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
நிரூபிப்பதை விடுவது.
Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
Trying to keep our peace in our mind  without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
Understanding the difference between the basic needs and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற
நிலையை அடைதல்.
Reaching the status that happiness is not connected with material things.

இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.

Our life will be simple if only we practice 7 or 8 of the above 12.

Live your Life & Love your Life.