சனி, 30 செப்டம்பர், 2017

அக்டோபர்...

மோதல்கள் காதல்கள் தேடல்கள்
என எல்லாம் சேரும் மாதம் தான் 'அக்டோபர்'...
அதிகமாய்த் தேடிய நாட்கள் கடந்து....
அதிகமாய்ப் பார்க்க நினைத்த ஞாபகங்கள் அழிந்து...
அதிகமாய் உறவாட நினைத்த உறவுகள் பிரிந்து...
இப்படி அனைத்தையும் அதிகமாய்க் கொடுத்த அக்டோபர் மாதம்...
சிலருக்கு இந்த மாதம் மிகவும் பிடித்ததாய் இருக்கும்...
சிலருக்கு வெறுக்கத்தக்கதாய் இருக்கும்...
ஆனால் எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கும்!!!
கடந்தவை அனைத்தையும் மறந்துவிட்டு
புதிதாய் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம்
நமக்குப் புதிய சிந்தனைகளை
புதிய நோக்கங்களை
புதிய பாதைகளை
புதிய இலக்குகளைக் காட்ட இறைவனிடம் வேண்டுவோம்!!!
வருகின்ற நாட்கள் இனியனவாய் அமைய வாழத்துகளுடன்....

இனியபாரதி.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

வேராக...

அன்பு பரிமாறப்படுகிறதென்றால்
அறிவு புகட்டப்படுகிறதென்றால்
பாசம் காட்டப்படுகிறதென்றால்
கருணை ஊற்றெடுக்கிறதென்றால்
கரிசணை பொங்குகிறதென்றால்
பரிவு நிறைந்திருக்கிறதென்றால்
அகிம்சை வளர்ந்திருக்கிறதென்றால்
அங்கெல்லாம்
நான் வேராக இருக்க ஆசைப்படுகிறேன்!!!

இனியபாரதி.

வியாழன், 28 செப்டம்பர், 2017

யாதுமறியா என் யாதுமானவளே...

அவ்வளவு அழகையும் ஒரே நேரத்தில் கொஞ்சுவது என்பது
கொஞ்சம் கடினம் தான்!
சேர்த்து வைத்துக் கொஞ்சலாம் நூறு ஆண்டுகள்!!!
கொஞ்ச நினைப்பது உன் அழகை மட்டும் அல்ல...
உன் மழலை மொழியையும் தான்!!!
உன் பேச்சுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது அரிது தான்
திருக்குறளைப் போல!!!
இரண்டடிகளி;ல் முடிந்துவிடும் குறளுக்குள் உள்ளார்ந்த அர்த்தம் போல் தான்
உன் பேச்சின் அர்த்தங்களும்!!!
உன் நடையழகைப் பார்த்து வியக்காத நாட்கள் உண்டோ?
உன் சிரிப்பழகின் சத்தத்தில் தான் ஸ்வரங்கள் தவழ்கின்றன!
உன் அழுகை கூட ஒரு இராகம் தான்!
இப்படி மொத்த அழகையும் அள்ளி உன்னிடம் வைத்துக் கொண்டு
பின் ஏன் என் கண்ணம் தழுவுகிறாய்?

இனியபாரதி.

புதன், 27 செப்டம்பர், 2017

அவனின் காதல் கடிதங்கள்...

எழுதிய கடிதங்களெல்லாம்
என் படுக்கையறையில்
என் தலையணையின் அடியில்
ஒளிந்துகொண்டிருக்கின்றன!!!
நான் கொடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் தான்
அனைத்தையும் எழுதினேன்!

ஆனால், ஒரு சந்திப்பில் கூட அவளிடம் அதைக் கொடுக்க முடியவில்லை!!!
அதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை!
இருந்தும் எழுதுவதை நிறுத்தவில்லை!
என்றாவது ஒருநாள் என் கடிதங்கள் அனைத்தும்
அவளைச் சேரும் என்ற நம்பிக்கையில்
எழுதுகிறேன், எழுதுகிறேன்!!!

இனியபாரதி.

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

அவளின் தனிமைப் பயணங்கள்...

அவளின் தனிமையானது
பதினாறு வயதினிலேயே அவளைக் காதலிக்க ஆரம்பித்தது!
அவளும் அத்தனிமையை அவ்வளவு நேசித்தாள்!
அவளருகில் யாரும் நெருங்கவில்லை!
அவளும் யாரையும் நெருங்கவில்லை!
இருபது வயதில் ஒரு இளம்பெண்ணிற்குரிய
அனைத்து உணர்ச்சிகளும் அவளுக்கும் இருந்தன!
வெளியில் காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டே வந்து
ஆறு வருடங்களைக் கடத்திவிட்டாள்!
ஏழாவது வருடம் அவளின் தனிமைத்தோழி
அவளைவிட்டு வேறெங்கோ சென்றுவிட்டாள்!
தோழியைத் தேடிக் கண்டாள், ஒரு தோழனை!
தனிமையை விட இவன் நல்ல நண்பனாய் இருந்தான்!
இருவரும் உறவாடித் திளைத்திருந்தனர்!
அவளில்லாமல் அவனில்லை... அவனில்லாமல் அவளில்லை...
என்றிருந்தனர்...
வருடங்கள் நகர்ந்தன...
அவனும் அவளைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலை வந்தது!
துக்கம் தொண்டையை அடைத்தது!
அவன் பிரிவு அவளுக்கு இறப்பின் வலியைக் கொடுத்தது!
அவளின் கடைசிக் காலங்கள்!
மறுபடியும் தனிமையே அவளின் தோழனாயிற்று!!!!

இனியபாரதி.

திங்கள், 25 செப்டம்பர், 2017

யார் சாென்னது...

யார் சாென்னது நீ அழகில்லை என்று? 
அறிவுச் செல்லம் நீ  அவ்வளவு அழகு...

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

இழந்த அந்தத் தருணங்கள்...

உன்னைவிட்டுப் பிரிந்த அந்த நிமிடம்
என் உயிரும் பிரிந்து செல்லத் தான் துடித்தது!
உன் நினைவுகள் மட்டுமே இப்போதென்னை
வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன!
உன் அன்பில் திளைத்திருந்த என்னைவிட்டுச் செல்ல
எப்படி மனம் வந்ததென்று தான் தெரியவில்லை!
நீ இல்லாத இரவுகள்!
நீ சொல்லாத நிகழ்வுகள்!
நீ அனுப்பாத காலைக் குறுஞ்செய்திகள்!
இணைந்து செல்ல முடியாத நடைப்பயணங்கள்!
உன்னோடு சேர்த்தே எல்லாவற்றையும் இழந்து விட்டேன்...
என்னிடம் இருப்பது இரண்டு மட்டும் தான்..
என் உயிர்...
உன் நினைவுகள்...
அவளுக்காக!!!

இனியபாரதி.

சனி, 23 செப்டம்பர், 2017

ஆசைப்படுகிறேன்!!!

பேசுவது நானாக இருந்தாலும்
கேட்பது நீயாக இருக்க ஆசைப்படுகிறேன்!
ஆசைப்படுவது நானாக இருந்தாலும்
அதைக் கொடுப்பது நீயாக இருக்க ஆசைப்படுகிறேன்!
பாடுவது நானாக இருந்தாலும்
இசை நீயாக இருக்க ஆசைப்படுகிறேன்!
கவலைப்படுவது நானாக இருந்தாலும்
என் கண்ணீர் துடைப்பது நீயாக இருக்க ஆசைப்படுகிறேன்!
அன்பு செய்வது நானாக இருந்தாலும்
அதை அனுபவிப்பது நீயாக இருக்க ஆசைப்படுகிறேன்!
குழந்தை நானாக இருந்தாலும்
கொஞ்சுவது நீயாக இருக்க ஆசைப்படுகிறேன்!
என் உடலாக இருந்தாலும்
உயிர் உன்னுடையதாக இருக்க ஆசைப்படுகிறேன்!

இனியபாரதி.

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஏழையாகிறேன்...

பணக்காரனாகிறேன் நான் அன்பு செய்யப்படும் போது...
ஏழையாகிறேன் நான் அன்பு செய்யத் தவறும் போது...

பணக்காரனாகிறேன் நான் பிறரால் மன்னிக்கப்படும் போது...
ஏழையாகிறேன் நான் பிறரை மன்னியாமல் இருக்கும் போது...

பணக்காரனாகிறேன் நான் உதவி பெறும் போது...
ஏழையாகிறேன் நான் பிறருக்கு உதவ மறுக்கும் போது...

பணக்காரனாகிறேன் நல்ல உணவை உண்ணும் போது...
ஏழையாகிறேன் அதைப் பகிர்ந்தளித்து உண்ண மறக்கும் போது...

பணக்காரனாகிறேன் நான் மற்றவர்க்கு நண்பனாய் இருக்கும் போது...
ஏழையாகிறேன் நான் மற்றவரை நண்பராய் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் போது...

பணக்காரனாகிறேன் நான் பழிச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் போது...
ஏழையாகிறேன் அந்தப் பழிச்சொற்களை நான் மற்றவர் மேல் சுமத்தும் போது...

பணக்காரனாகிறேன் என்னிடம் எல்லாம் இருக்கும் போது...
ஏழையாகிறேன் நான் ஒருவரைப் பார்த்து உனக்கு ஒன்றுமில்லையே என்று நகைக்கும் போது...

பணக்காரனாகிறேன் எல்லாமுமாய் நீ என்று எண்ணும் போது...
ஏழையாகிறேன் எல்லாம் நானே என்று எண்ணும் போது....

ஒன்றுமில்லா ஏழையாய்...
நான்...
உன் முன்னால்...

இனியபாரதி.

வியாழன், 21 செப்டம்பர், 2017

அன்புப் பதுமையே...

இனி காணப்போகிறோமா என்பது கூட தெரியாவிட்டாலும்
உன் மின்னஞ்சல்கள் எனக்கு
மட்டில்ல மகிழ்ச்சியைத் தருகின்றன!
கடல் கடந்து தான் இருக்கிறோம்!
மொழி கடந்து தான் நேசிக்கிறோம்!
என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திப்போம் என்னும் எண்ணத்துடன்....

அன்புடன்....
இனியபாரதி.

புதன், 20 செப்டம்பர், 2017

துணிந்து செய்...

செய்யத் துணிந்த பின்
பின்னோக்கிப் பார்ப்பதெதற்கு?
உன்னால் முடியும்!
நீயே உன்னை ஆள்பவள்!
உனக்கு நிகர் நீயே!
நீயே அன்பு!
நீயே அறிவு!

இனியபாரதி.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

மந்திர மாலை....

கடந்த இரண்டு நாட்களாக மனதில் ஏதோ ஒரு குழப்பம். எதுவும் நான் நினைத்தபடி நடப்பதில்லை.. நான் என்ன செய்கிறேனென்று எனக்கேத் தெரியவில்லை... என்று எண்ணும் அளவிற்கு இருந்தது. அதற்குக் காரணம், நான் கடந்த ஞாயிறன்று இழந்த என் 'ஜெபமாலை'. கிறிஸ்துவைச் சார்ந்தவர்களுக்குச் 'ஜெபமாலை' என்றால் என்னவென்று தெரியும். அதை வைத்து ஒரு சில மந்திரங்களைச் சொல்வோம். இயேசுவின் சிலுவை நமக்கு என்றும் வெற்றியைத் தரும் என்பது என் நம்பிக்கை.
ஞாயிறு ஆலயத்திற்குச் செல்லும் போது என்னுடன் அந்தச் ஜெபமாலையை எடுத்துச் சென்ற நான், வீட்டிற்கு வந்த பிறகு அது எங்கு வைத்தேன் என்ற நினைவில்லை... ஒரு விருந்து விழாவிற்குச் சென்றிருந்தோம். இரவு படுக்கைக்குச் செல்லுமுன் என் அறையில் தேடுகிறேன்.. அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை... என் வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.... நானும் யோசித்துப் பார்த்தேன்... 'நான் ஆலயத்திற்கு எடுத்துச்சென்றது ஞாபகம் இருந்தது. ஆனால், திரும்பக் கொண்டு வரவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது'... சரி... கடவுளின் ஆலயத்தில் அது இருக்க வேண்டும்.. அல்லது... அது யார் கையில் இருக்க வேண்டுமென்று இறைவன் நினைக்கிறாரோ அவர் கைக்குச் சென்றிருக்கும் என்று மனதுள் எண்ணிக் கொண்டேன்.
இரண்டு நாட்களாக அந்தச் ஜெபமாலை இல்லாமல் தான் எனக்குள் இந்த வெறுமை என்று நினைக்கிறேன். அப்படி என்ன அதன் சிறப்பு?
என் உறவினர் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வாடிகன் நகரம் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து எங்கள் குடும்பத்திற்காக வாங்கி வந்தது தான், அந்தச் ஜெபமாலை. வந்த நாள் முதல் நான் தான் வைத்திருக்கிறேன்.. என் கைப்பைக்குள் எப்போதும் இருக்கும். என் இரவு வேளைகளில், என் படுக்கைக்கு அருகில் வைத்திருப்பேன். எப்போது ஜெபித்தாலும், அது என் கையில் இருக்கும், இரண்டு வருடங்களாக...
திடீரென்று காணவில்லை என்றதும் மனது படபடத்து விட்டது... இருந்தாலும்... எல்லாம் இறைவன் அருள் என்றிருந்தேன்...
இன்று மாலை, பள்ளியிலிருந்து வீடு திரும்பி, என் அறைக்குள் நுழைந்தேன்.. இன்ப அதிர்ச்சியாக, என் ஜெபமாலை என் அறையில் இருந்தது... இது கண்டிப்பாக மனிதனால் கூடாத காரியம்... என் வீடு முழுவதும் தேடியும் அன்று கிடைக்காத என் ஜெபமாலை இன்று கிடைத்ததற்குக் காரணம்.. 'இறைவன் என்னோடு உறவாடிக் கொண்டிருக்கிறார்' என்று தான் அர்த்தம். இதை என் வீட்டில் கேட்க நான் விரும்பவில்லை.. காரணம்.... இது இறைவன் செயலே... அவரே எனக்கு, என் பொருளைத் திருப்பித் தந்துள்ளார்....

நன்றி இறைவா!

இனியபாரதி.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

முன் நோக்கி (முன்னோக்கி)

நானும் முன்னோக்கிச் செல்லத் தான் ஆசைப்படுகிறேன்!
இறைவன் என்னவோ பணம் படைத்தவர்களை மட்டுமே
முன்நோக்கித் தள்ளுகிறான்!
அவர்களுக்குக் கீழ் இருக்கும் நான்
என்னை முன்னோக்கித் தான் தள்ளுகிறேன்!
பணம் என்னைப் பின்னோக்கித் தள்ளுகின்றது!
எப்போது தான் முடிவுக்கு வரும்
இந்தப் பண மோகம்!
காதலைவிட பணத்திற்கு மதிப்பு கொடுக்கும்
இந்த உலகில் என்ன நான் செய்வேன்!!!
நான் முன்னேறிச் செல்ல வழி இல்லையா?

இனியபாரதி.

சனி, 16 செப்டம்பர், 2017

ஆர்வமாய்...

ஆர்வமாய் நான் நாடித் தேடிய அழகி நீ...
முவ்விரு வருடங்களுக்குப் பின்
உனக்கு ஆர்வமில்லாமல் போய்விட
நான் செய்த தவறுதான் என்னவோ?
ஏழேழு ஜென்மங்களும் பிரியேன்
என்ற என்னை ஒருசில வரிகளால்
பிரிய வைத்துவிட்டாய்!
பாரதி இல்லாமல் செல்லம்மா வருந்தியிருப்பாள் தான்!
இனியும் பாரதி இல்லாமல் செல்லம்மா வருந்தப்போகும் காலம் தான்!
பாரதியின் அருமை அவர் இருந்தபோது
யாருக்கும் தெரியவில்லை!
அதே நிலை தான் உனக்கும்!
இது நான் உனக்குத் தரும் சாபமல்ல!
நீ எனக்குத் தந்த சண்மானம்!!!
நன்றிகளுடன்....

இனியபாரதி.

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

படித்ததில் பிடித்தது...

வாழ்க்கையின் உண்மை....

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால், அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால், அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால், தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால், அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால், அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள்.
அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின், தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.

எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.

அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் 'சாரி' என்னால் உன் கல்லறை வரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.
அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது.
‘’நீங்கள் எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன்" என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து,  சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி, நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து, சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

நன்றி....

வியாழன், 14 செப்டம்பர், 2017

தாழ்த்திக் கொள்ள....

பெரும்பாலான நேரங்களில்...
நாம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்துவிட்ட பிறகு...
நாம் அடைந்த சிரமங்களையோ, முன்பிருந்த நிலையையோ நினைத்துப் பார்க்க மறந்து விடுகிறோம்!
அதனால் தான் ஒருமுறை நல்மதிப்பைப் பெற்ற நம்மால்
அடுத்த முறை, இது இப்படிச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற
மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை!
இப்படித் தட்டுத் தடுமாறி நாம் உயர்ந்த நிலையை அடைகிறோம்
நம்மை இந்த வேலையைச் செய்யச் சொல்ல இவர் யார்? என்ற எண்ணம் கூட
சிலநேரங்களில் தோன்றலாம்.
வேலைகளில் உயர்ந்தவை தாழ்ந்தவை...
சிறந்தது மோசமானது...  என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது.
நன்றாக வேலை செய்பவர் அதற்கேற்ற கூலி பெறுகிறார்..
மனதார வேலை செய்பவர் அதற்கேற்றவாறும்
கடனுக்காக வேலை செய்பவரும் அதற்கேற்றவாறு
தங்கள் கூலிகளைப் பெறுகின்றனர்!
இதைத் தான் வேதப் புத்தகம்..
'தன்னைத் தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்; தன்னைத் தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்.' என்று கூறுகின்றது.
நம்மைத் தாழ்த்தி, நமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யும் போது, நம்மை உயர்த்த இறைவன் ஆசை கொள்வார். அதனால், எந்த வேலையையும் செய்யக் கூச்சப்படத் தேவையில்லை.

இனியபாரதி.

புதன், 13 செப்டம்பர், 2017

பலனை எதிர்பார்த்து...

நான் செய்யும் செயலுக்குப் பலன் கிடைக்குமென்று
எதிர்பார்த்து
நான் செய்த ஒவ்வொரு காரியத்திலும்
ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றன!
எதையும் எதிர்பார்க்காமல்
நான் செய்யும் சிறு உதவி கூட
எனக்குப் பல மடங்காய் கிடைத்திருக்கின்றது!
எதற்காக நான் எதிர்பார்க்கிறேன்
என்று என்
மனத்தைக் கேட்கவும் நேரமில்லை!
அதை எதிர்பார்க்காமல் இருக்கவும்
முடியவில்லை!
எதிர்பார்க்கிறேன் என் அன்பின் பலனை!!!

இனியபாரதி.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

தவிக்கவிட்ட தாரம்...

நானாய் இருந்திருந்திருந்தால்
யாருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்காது!
இப்போது இவளிடம் அனைத்தையும் கூற வேண்டிய நிலை!
ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினால் கூட
உனக்கு அவ்வளவு திமிரா என்பது!
மற்ற பெண்களைப் பற்றிப் பேசினால் கோபம்!
யாரிடமும் அதிக நேரம் பேசக் கூடாது!
இரவு நேரங்களில் சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும்!
கோபத்தைக் கூட வெளிக்காட்டக் கூடாது!
அவளை மட்டுமே புகழ்ந்து பேச வேண்டும்!
அவளிடம் எதையும் மறைக்கக் கூடாது!
என் தாயிடம் பேச இவளிடம் அனுமதி கேட்க வேண்டும்!
என் தந்தையின் கைச்செலவிற்கு
இவள் கையை நான் ஏந்த வேண்டும்!
வெளியூர் பயணங்களில் அனைத்தையும்
பார்த்துக் கொள்வதும் அவள் தான்!
நான் அணியும் சட்டை கூட
அவள் கண்ணசைவின் சம்மதத்திற்குப் பின் தான்!
என் உணவைத் தீர்மானிப்பதும் அவள் தான்!
என் சந்ததியைத் திட்டமிடுவதும் அவள் தான்!
இப்படி அவள் அவளாகவே மாறி
என்னைத் தரையில் படுக்க வைத்து
தார் ரோடு ஆக்கிவிட்டாள் 'என் தாரம்!'

இனியபாரதி.

திங்கள், 11 செப்டம்பர், 2017

மேகக் கூட்டம்...

கூட்டமாய் நீ சேர்ந்து பேசித் தான்
சிரிப்பென்ற மழையைக் கொடுக்கிறாய்
எங்களுக்கு....
நீ கோபமுறும் நாளெல்லாம்
உன் வெம்மையை நாங்கள் பார்க்கிறோம்!
நீ குளிர்வடையும் நாளெல்லாம்
உன் கருணை மழையைக் காண்கின்றோம்!
உன் வெண்மையை நாங்களும்
பெறத் துடிக்கின்றோம்!

இனியபாரதி.

சனி, 9 செப்டம்பர், 2017

உன்னுடையது மட்டுமே உன்னுடையது!!!

எல்லாம் என்னுடையது என்ற எண்ணம்
என்றும் அழிவையே தரும்!
எல்லாம் மற்றவருடையது என்ற எண்ணம்
தாழ்வு மனப்பான்மையை வருவிக்கும்!
என்னுடையதெல்லாம் மற்றவருடையது
மற்றவருடையது எல்லாம் என்னுடையது
என்ற எண்ணம்
தீய எண்ணங்களை உண்டாக்கும்!
எது தான் என்னுடையது????
இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது!!!

இனியபாரதி.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

கண்டதும் ருசித்திட முடியுமா?

சில நேரங்களில் கண்களில்
காண்பதை எல்லாம் அனுபவித்துவிட
வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகின்றது!
சரியா! தவறா! என்றெல்லாம்
யோசிக்க நேரமே கிடைக்காது!
பார்த்ததும் முடிவெடுத்துவிடுகிறோம்
இது எனக்கு வேண்டுமென்று...
அது கிடைக்க வேண்டுமென்று இருந்த
ஆர்வத்தில் அதனால் வரும்
விளைவுகளை சற்றும் எண்ணிப்
பார்க்கக் கூட இல்லை...
கிடைத்த பிறகு தான் தெரிகிறது
அதன் வலி...
இப்போது முழுமையாக ருசிக்கவும் முடியவில்லை...
வேண்டாமென்று தூக்கி எறியவும் முடியவில்லை...

இனியபாரதி.

வியாழன், 7 செப்டம்பர், 2017

Seven complicated facts about Women

1. They believe in saving.
2. Believe in saving but buy expensive clothes.
3. Buy expensive clothes but never have anything to wear.
4. Never have anything to wear, but always dressed beautifully.
5. Always dressed beautifully, but never satisfied.
6. Never satisfied, but still expect men to compliment them.
7. Expect men to compliment, but don't believe them if complimented.

Extremely Complicated! 😋👏👍😜😜

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வாழ்வதற்கான வழி...

வாழ்வதற்கான வழி மிகவும் எளிதல்ல...
வாழ்வில் வரும்
சுமைகளைச் சுமத்தல்...
சவால்களை எதிர்கொள்ளல்...
பொறுமையுடன் இருத்தல்...
அன்பு காட்டுதல்...
அடங்கிப் போதல்...
ஆறுதல் கூறல்...
சகோதரத்துவத்துடன் பழகுதல்...
மன்னிப்பு வழங்குதல்...
ஆசைகளைக் குறைத்தல்...
ஞானத்துடன் பேசுதல்...
போன்ற மதிப்பீடுகளைக் கடைப்பிடித்து வாழ்தலே 'நல்வாழ்வாகும்'

இனியபாரதி.

திங்கள், 4 செப்டம்பர், 2017

எளிதாய் கிடைப்பதல்ல...

படித்த படிப்பிற்கு வேலை கிடைத்துவிட்டதென்று கூறுவார்கள்...
ஓரளவிற்குப் படித்து விட்டோம்... அதை வைத்து இனி வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்பது தான் அதன் அர்த்தமும் கூட...
ஆனால்... இந்த ஆசிரியர் தொழிலில் மட்டும் நம்மால் அப்படிக் கூற முடியாது..
நாம் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப்
பதில் கூறக் கூடிய விதத்தில் நம் தயாரிப்பு இருந்தால் தான்...
அந்த வகுப்பிலோ... அல்லது அந்தப் பள்ளியிலோ...
ஒரு ஆசிரியரால் தாக்குப்பிடிக்க முடியும்!
ஆசிரியர்...மாணவர்களை ஆளக் கூடியவர்!
ஒரு ஆசிரியரின் பழக்க வழக்கங்கள் எளிதாக மாணவர்களால் உட்கிரகித்துக் கொள்ளக் கூடியவைகளாக இருக்கின்றன...
ஒரு மாணவன் தம்மைப் பார்த்து 'எனக்கு இந்த ஆசிரியர் தான் தமிழ் பயிற்றுவித்தார்' என்று கூறும் போது நாம் அடையும் மகிழ்ச்சி மட்டற்றது.
தனக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியரை விவரம் தெரிந்த எந்த மாணவனும் மறந்திருக்க மாட்டான்.
ஆசிரியர் என்ற பெயரே மெய்சிலிர்க்கச் செய்கின்றது..
அப்படிப்பட்ட ஆசிரியப் பணியை மனதார, விரும்பிச் செய்ய இனிய வாழ்த்துகளுடன்...
அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

இனியபாரதி.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

புதியன புகுந்து....

அது ஏனோ தெரியவில்லை...
புதிதாய் வந்தால் எல்லாமே அழகாய்த் தான் தெரிகின்றது!
புதிதாய் வந்த மனைவி!
புதிதாய் வாங்கிய குளிர்சாதனப்பெட்டி!
புதிதாய் வாங்கிய நாய்க்குட்டி!
புதிதாய் வாங்கிய கைபேசி!
என்று ஏராளம்!!!
புதிதாய் வாங்கிய நாட்களில் நாம் உபயோகப்படுத்திய விதத்திற்கும்,
நாட்கள் ஆக ஆக நாம் கையாளும் விதத்திற்கும்
நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன...
இந்த வித்தியாசங்களுக்குக் காரணம் என்ன?
ஆரம்பத்தில் நாம் அவர்கள் மீது காட்டிய அன்பு

அல்லது

அவற்றின் மீதிருந்த பற்று குறைந்துவிட்டது!

அல்லது

அதற்கு அடுத்த தலைமுறை பொருட்கள் இன்னும் அதிக வசதிகளுடன் கிடைக்கின்றன...

ஏன் நம்மால் எதையும் வைத்துத் திருப்திப்பட்டுக் கொள்ள முடியவில்லை?
புதியது அல்லது இன்னும் அதிக வசதிகள் கொண்டது என்ற ஒரு பழக்கம் இல்லாமல் இருத்தல்...
என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்
நம் தாத்தா, பாட்டி இன்னும் அந்தப் பொத்தான் அலைபேசிகளைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருப்பார்கள்...
காரணம்...
அவர்கள் அந்தப் பொருளை வாங்கியதன் காரணம் 'பேசுவதற்கு'
அதற்கான வேலையை அது செய்வதால்
அவர்களுக்கு அதுவே போதும்!!! வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை!!!
நம் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது?

இனியபாரதி.