ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

குருத்து ஞாயிறு...

இன்று, குருத்து ஞாயிறு எங்கள் ஆலயத்தில், சிறப்பாக, அழகாக, நேர்த்தியாக நடைபெற்றது. எங்கள் இளையோர் இயக்கம் கடந்த ஆறேழு மாதங்களுக்கு முன்பு தான் நான்கு நபர்களுடன் தொடங்கப்பட்டது. எங்கள் பங்கிலுள்ள அனைவரும் கிண்டல் செய்வார்கள். வெறும் நாலு பேரை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?' என்று சொல்வார்கள். ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல், அடிக்கடி நால்வரும் கூட்டம் போட்டு பேசுவோம்.
இப்படியே சில மாதங்கள் சென்றன. யாரும் இல்லாமல் இருந்தால் பரவாயில்லை. எங்கள் ஆலயத்தில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் முன்னால் வருவதேயில்லை. சரி. இவர்களை இளையோர் இயக்கத்திற்கு வரவைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
இளைஞர் இயக்கத்திற்கு வர இளைஞர்களுக்கு முதலில் ஆர்வம் வர வேண்டும். அவர்கள் பார்க்கும் வண்ணமாக, பெற்றோர்கள் எங்களை நம்பும் வண்ணம், நாங்கள் செயல்பட வேண்டுமென்று முடிவெடுத்தோம். வாரந்தோறும் கூடினோம். கலந்தாலோசித்தோம்.
படிப்படியாக நான்காக இருந்தது, இப்போது பதினொன்று இளம்பெண்கள், ஐந்து இளைஞர்கள் எங்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம், சில நேரங்களில் மெய்சிலிர்க்க வைக்கின்றது. எங்கெல்லாம் சரியான தலைமை இருக்கின்றதோ, அங்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எங்கள் இயக்கத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லியே ஆக வேண்டும்.
இன்று, நாங்கள் முன்னின்று நடத்தியதால், அதைப் பார்த்து ஆர்வம் கொண்டு, இன்னும் இரண்டு இளம்பெண்கள் எங்கள் இயக்கத்தில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். பெருமையாக இருக்கின்றது. இயக்கங்கள் அனைவரும் நல்லது செய்வதற்கே. திருவிழாக்கள் அனைவரையும் ஒன்றாய் கூட்டுவதற்கே.. இது இரண்டையும் உணர்ந்து, எங்கள் கடமைகளைச் செவ்வனே செய்வோம்.
குருத்தோலைப்பவனி எப்படி இயேசுவைப் புகழ ஒரு வாய்ப்பாக இருந்ததோ, அதே போல் எங்கள் இயக்கமும், எங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளும் இயேசுவை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்!
இந்த வாரம் இனிய வாரமாகட்டும்.

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: