ஒரு குட்டிக் கிராமத்தில், ஒரு ஆசிரமம் இருந்தது. அங்கு ஒரு துறவி, தனது ஐந்து சீடர்களுடன் வசித்துவந்தார். தன் சீடர்களுக்கு உபநிடதங்களையும், வேதங்களையும் விளக்கிக் கூறுவதும், மக்களுடன் உரையாடுவதும் தான் இவரது அன்றாட வேலையாக இருந்தன. இப்படியாக நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தன.
ஒரு நாள் காலையில் மரத்தடியில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார், துறவி. அவர் யோசித்;துக் கொண்டிருந்தது இதுதான்... 'நான் துறவி போலா இருக்கிறேன்? என் வேலை போதிப்பதும், உரையாடுவதும் மட்டும் தான். இதைச் சாதாரண பாமரன் கூட செய்யலாமே? பின் எதற்கு நான் துறவி என்று என்னையே ஏமாற்றிக் கொள்ள வேண்டுமென்று' சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கடவுள் அவருக்குத் தோன்றினார். 'உன் குழப்பத்திற்குப் பதில் உன்னிடம் தான் இருக்கிறது.' என்று கூறி மறைந்துவிட்டார்.
யோசித்துக் கொண்டிருந்த துறவி ஞானம் பெற்றார்.
துறவறம் - துறவி – துறவு என்பது என்னை முற்றிலும் துறப்பது, என் தேவைகளை அறவே மறந்து மற்றவரின் தேவையை மட்டும் மனதில் இருத்தி அதைப் பற்றி யோசிப்பது, மற்றவர்கள் மீது உண்மையான அன்பு செலுத்துவது, சாந்த நிலை... இவை எல்லாம் தான் துறவறத்தின் அடையாளம். ஆனால், நான் அதைச் செய்யத் தவறிவிட்டேன் என்று உணர்ந்தார்.
அதற்காக அவர் போதிப்பதையோ, மக்களிடம் பேசுவதையோ நிறுத்தவில்லை.. அத்துடன் சேர்த்து தன் நேரம் அனைத்தையும் மற்றவர்களுக்காகச் செலவிட்டார். ஊர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். போற்றுதற்குரிய நல்ல துறவியாய் வாழந்து இறந்தார்.
அன்புடன்
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக