ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

நிம்மதியான சமூகம்...

நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த சமூகத்தில் வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும். ஆனால், இந்தச் சமூகம் நம்மை நிம்மதியாக வாழ விடுவதில்லை. இதற்குக் காரணம் நம் குடும்பம் தான் என்று சொல்ல வேண்டும்.
சிறு வயதிலிருந்தே... நான், என் குடும்பம், எனது என்ற எண்ணத்தையே குழந்தைகளின் மனதில் பதிய வைத்து விடுகிறோம். பெரியவர்களாகும் போது அவர்களுக்கு அந்த எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்கின்றது.
சுயநலம்... 'நான் நன்றாய் இருக்க வேண்டும். எனது குடும்பம் நன்றாய் இருக்க வேண்டும்.' என்று எண்ணுகிறோமே தவிர, நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்தைப் பார்க்கத் தவறி விடுகிறோம். இதன் விளைவு தான் 'எவன் எக்கேடு கெட்டால் என்ன? நான் நன்றாய் இருக்கிறேனா? அது போதும்.' என்ற மனநிலை.
நம்மில் எத்தனைபேர் தெருவில் சண்டை நடந்தால் அதை விலக்கி விடச் செல்கிறோம்?
எனக்கு எதற்கு இந்த வம்பு என்று தான் நினைக்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நபருக்கு உதவி செய்ய விரைகிறோம்?
பின்னால் வரும் பிரச்சனையை யார் சமாளிப்பது என்று தான் நினைக்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் நம் வீட்டின் அருகில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு உதவுகிறோம்?
என் பொலப்புக்கே இங்க நாக்கு தள்ளுது என்று தான் சொல்கிறோம்.
ஏன்...
 விரக்தியின் உச்சத்தில் கூட, மற்றவர்களைத் தான் தாக்குகிறோம். கோபம் என்றால் கூட அருகிருப்பவரைத் தான் பதம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட சமூகம் எங்கு ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கும் என்பதில் தான் ஐயம்.
அகிம்சையை விரும்புகிறேன்... அதை என் வீட்டில் இருந்து துவங்கப்போகிறேன். வீட்டில் அனைவரிடமும் அன்புடன் பழகுவேன். அடுத்து, என் தெருவில் உள்ளவர்களிடம்.. அடுத்து, எனக்குத் தெரியாதவர்களிடம்... இப்படியாக நம் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் போது, நமக்குள் அன்பு பெருகும்.
கள்ளம் கபடமற்ற சமுதாயத்தில் நம் தலைமுறைகள் தலைத்தோங்கும்...
இனிய ஞாயிறு வாழ்த்துகளுடன்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: