ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அதிர்ஷ்ட வரிகள்....

நண்பர்கள், சகோதரர்கள் உதவி கிடைக்கும். அன்பால் எந்த காரியமும் வெற்றி பெறும்.

பார்க்கலாம்.

இதே போல்...

உறவினர்களுடன் அதிகம் நேரம் செலவிடாத நான், இன்று என் அண்ணியின் வீட்டிற்கு அவர்கள் வற்புறுத்தலின் பேரில் சென்றேன். சென்றதன் பிறகு தான் தெரிந்தது, ஒருவேளை நான் செல்லாமல் இருந்திருந்தால் எவற்றையெல்லாம் அனுபவிக்காமல் இருந்திருப்பேன் என்று. அவ்வளவு அழகான குடும்பம், உறவுகள். அவர்களை மதிக்காத தருணங்களை நினைத்து வருந்தினேன். இந்த மாதம் முழுவதும் சோகப் படலத்தில் தான் ஓடியது. ஒரு சில நாட்களைத் தவிர. இந்த மாதத்தின் கடைசி நாளும் வந்துவிட்டது. இன்றோடு என் கவலைகளையும் தொலைக்கிறேன். பிறக்கின்ற மே மாதம் அனைவருக்கும் இனிதாய் அமைய வாழ்த்துகள்.

இனியபாரதி.

சனி, 29 ஏப்ரல், 2017

மோதிரம்...

உன் கைவிரலைச் சுற்றி
உனக்குக் காவலாய்!
காவல்காரன் கூட இப்படி உன்னைக் காக்க முடியாது!
நான் இரும்பானாலும்
நான் வெள்ளியானாலும்
நான் தங்கமானாலும்
நான் வைரமானாலும்
அழகு தான்!
என்னை அணிபவருக்கு மட்டுமல்ல!
என்னை வாங்கிக் கொடுத்தவரும் கூட பெருமையடைவார்!
இருவருக்குமிடையே உள்ள பிணைப்பை
உறுதிசெய்வேன் நான்!
என்னை விரும்பாதவர் உலகிலுண்டோ!

இனியபாரதி.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

கவலையுடன் கிடக்கிறேன்!

நீ தீண்டுவாய் என்ற நம்பிக்கையில்
உன்னை நம்பி
உனக்காக உன்னுடன்
நான் வந்த பொழுதிலிருந்து
இன்றுவரை நீ என்னைத்
தீண்டியதே கிடையாது!
அழுக்கடைந்து ஒரு மூலையில்
உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்!
நீ தீண்டும் பொழுது உன்மனம்
அடையும் நிம்மதி!
அதில் என் மனம் ஆறுதலடையும்!

அன்புடன்,
இனியபாரதி.

புதன், 26 ஏப்ரல், 2017

கைக்கடிகாரம்...

என் கையுடன் பிணைப்பை
ஏற்படுத்திக் கொண்டேனென்று
பெருமையடித்துக் கொள்ளாதே!
நான் வேலையின்றி இருக்கும்போது
மட்டுமே உன்னைப் பார்க்கிறேன்!
அதுவும் என் வேலையெல்லாம் முடிந்துவிட்டால்
உன்னைக் கழற்றி வைத்துவிடுகிறேன்!
அதுவும் சுற்றுவது நிறுத்திவிட்டால்
நீ குப்பைத் தொட்டிக்குத் தான் செல்வாய்!
இதில் என்ன பெருமை உனக்கு
என் கையில் ஜொலிக்கிறேனென்று?

இனியபாரதி. 

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

தவறில்லை!

வயதிற்கு மீறி சிந்தனை செய்வதில் ஒன்றும் தவறில்லை!
பிறந்த குழந்தை கல்வி கற்க விரும்புவதில் தவறில்லை!
பள்ளிப் பருவத்தில் உலக விசயங்களை அறிந்து கொள்வதில் தவறில்லை!
இளமைப் பருவத்தில் வாயடிப்பது தவறில்லை!
முதுமைப் பருவத்திலும் காதல் தவறில்லை!
சாகும் தருணத்தில் கருணை தவறில்லை!

இனியபாரதி. 

திங்கள், 24 ஏப்ரல், 2017

கவலையின்றி...

என் மணம் காற்றில் கலக்கும்போது கூட
நான் கவலையின்றி சிரிக்கிறேன்!
என்னை மற்றவர் பறிக்கும்போது கூட
அழகாய் ஒத்துழைக்கிறேன்!
என் தாயை யாராவது சேதப்படுத்தினால் கூட
நாங்கள் யாரையும் புண்படுத்துவது இல்லை!
நீரின்றி பல நாட்கள் வாழ்ந்து என்தாய்
எங்களுக்கு உணவூட்டுகிறாள்!
எப்போதும் புன்னகைத்துக்கொண்டே
எங்கள் நாட்களைக் கவலையின்றி கழிக்கிறோம்!
இப்படிக்கு,
மலர்.

இனியபாரதி.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறை...

இன்று ஆலயத்தில், அழகானதொரு மறையுரையைக் கேட்டோம். அதை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம், என்னை இப்போதே எழுத வைத்துவிட்டது.

'கிறிஸ்தவர்கள் பிறந்தவர்கள் அல்ல... உருவாக்கப்படுகிறவர்கள்'

ஆதி கிறிஸ்தவர்கள் 'திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும்' உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.

இந்த நான்கு பண்புகளும், ஒரு நல்ல கிறிஸ்தவன் உருவாகக் காரணங்களாக, காரணிகளாக இருக்கின்றன.

1. திருத்தூதர் கற்பித்தவற்றிலும்
திருத்தூதர்கள் என்றால், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள் என்று அனைத்துத் துறவிகளும் அடங்குவர். அவர்கள் கற்பிப்பதை ஏற்றுக் கொண்டு வாழ்வாக்குபவர்கள்.

2. நட்புறவிலும்
மற்றவர்களிடம் சகோதர எண்ணத்துடன் பழகும் எண்ணம் கொண்டவர்கள், அண்டை அயலாரிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொள்பவர்கள்.

3. அப்பம் பிடுவதிலும்
ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன்திரு நாட்களிலும் தவறாது ஆலயத்திற்கு வந்து, நற்கருணையை உட்கொள்பவர்கள்.

4. இறைவேண்டலிலும்
அனைவரும் ஒன்றாய் கூடி, உலகத்திற்காக வேண்டுபவர்கள்.

இப்படி, இந்த நான்கு குணங்களும் தான், உண்மையான கிறிஸ்தவனை உருவாக்குகின்றன!

இன்று, நான் என்னையே கேள்வி கேட்டுக்கொள்கிறேன்.
நான் வெறுமனே பிறந்தேனா?
அல்லது உருவாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறேனா?

அனைவருக்கும் வாழ்த்துகள்!

இனியபாரதி.

சனி, 22 ஏப்ரல், 2017

இன்பக் கனவொன்று....

போதும் என்று சொல்ல முடியாத அளவிற்கு நட்பு வட்டம்
யாரும் எழுப்பிவிடாத தூக்கம்
மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பேசாத அம்மா,அப்பா
எப்போதும் திட்டிக்கொண்டிராத பாட்டி, தாத்தா
கடைக்குச் சென்றால் விலைபார்க்காமல் வாங்கக்கூடிய அளவிற்குப் பணம்
தனக்குப் பிடித்தமான ஆடை அணிந்துகொள்ள அனுமதி
பொய்யற்ற அன்பு
கள்ளம் கபடமற்ற குழந்தைச் சிரிப்பு
எதிர்பாராத நேரத்தில் பரிசளித்து மகிழ்வது
வீடு நிறைய கைக்கடிகாரங்கள்
கேட்டவுடன் கிடைக்கும் ஆசை முத்தம்
இவையெல்லாம் என்றும் இன்பமான கனவுகள் மட்டுமே!!!


இனியபாரதி.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

காணாமல் போனதை...

தொலைத்து விட்ட  இடமென்னவோ
தூரமாய் இருக்க
அருகிலேயே தேடிக் கொண்டிருந்தால்
கிடைப்பதென்னவே
அற்ப சந்தோஷங்களும்
இடைவிடாத் தூக்கமும்
மௌன குளியல்களும்
அதிகநேர அரட்டைகளும் தான்!
தேடுகிறேன்... தேடுகிறேன்...
தேடிக்கொண்டேயிருக்கிறேன்!
கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...


இனியபாரதி. 

வியாழன், 20 ஏப்ரல், 2017

இருந்துவிடக் கூடாதா?

உறவுகளுடனும், நட்புகளுடனும், தெரிந்தவர்களுடனும், தெரியாதவர்களுடனும் கூடி மகிழ்ந்து, நேரம் செலவிடும் போது, அந்த நாள் இனிமையானதொரு நாளாகத் தான் தெரிகிறது, நம் கண்களுக்கு... இன்று காலையில் என் தோழியின் வீட்டிற்குச் சென்றது முதல் இன்று இரவு புதிதாக பழக்கப்படுத்திக் கொண்ட நட்பிடம் அலைபேசி எண் வாங்கும் வரை எல்லாமே என் மனதில் ஏதோ ஒரு வரலாறு போல் பதிந்துவிட்டது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு வரலாறு புத்தகமே எழுதலாம் போல... நண்பர்களுடன் செலவிடும்போது மட்டும், நேரம் செல்வதே நமக்குத் தெரிவதில்லை. அதுவும் அவர்களுடனான நெடுந்தூரப் பயணம், சிறிய ஒரு கடையில் நொறுக்குத்தீனி, நண்பர்களின் குழந்தைகளைக் கொஞ்சுவது, சேர்ந்து டீவி பார்ப்பது, அரட்டை அடிப்பது, எல்லாமே சுகம் தான்.
இப்படியே தினமும் இருந்துவிடக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன்.... நண்பர்களுடன் இருக்கும் சந்தர்பத்தை மட்டும் என்றும் இழக்கவே கூடாது.
இந்த இனிய நாளுக்கு நன்றி இறைவா!!!

இனியபாரதி. 

புதன், 19 ஏப்ரல், 2017

தேடிக்கொண்டு...

மனம் குளிர்ந்த மாலைப்பொழுதில்
மயில் போல நடனமிட்டு
நடைபோட்டுப் பாடிக்கொண்டு
சந்தர்பங்கள் பலகிட்டினும்
சகிக்காமல் மறைத்துக் கொண்டு
பாதவழியைல்லாம் உன்தடம்
தேடிக்கொண்டு...
கண்டடையும் அந்தக்கண நேரம்
கதவடையும் என் இதயவாசலின்!

இனியபாரதி.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

கணிசமாய் குறைந்ததென்று...

மற்றவரிடம் காட்டும் அன்பும்...
உற்றவரிடம் காட்டும் கரிசணையும்...
மட்டும் தான் குறைந்து கொண்டிருக்கிறதென்று
நினைத்துக் கொண்டிருந்தேன்!
முகம் பார்த்து பேசும் பழக்கமும்
அன்பாய் அரவணைக்கும் எண்ணமும்
உண்மையான நட்பும்
காதல் கடிதங்களும்
உறவுகளின் பிடிப்பிணையும்
கணிசமாய் குறைந்துவிட்டதென்று
உணர முடிகிறது!

இனியபாரதி.

திங்கள், 17 ஏப்ரல், 2017

இலவசமாய்...

இலவசமாய் கிடைக்கிறதென்பதற்காய்...
பெற்றேன் என் தாயின் அன்பை....
அனுபவித்தேன் என் தந்தையின் பாசத்தை... பணத்தை....
உணர்ந்தேன் சகோதர நேசத்தை...
பெற்றுக் கொண்டேன் நல்ல நட்பினை...
இன்னும் நிறைய இலவசங்கள்...
பெறுவதில் மட்டுமே லயித்துப்போன என் மனம்
கொடுக்க மறுக்கிறது! மறக்கிறது!

இலவசமாய் கிடைக்கிறதென்பதற்காய் அதில் சுகம் கண்ட என்னை
இலவசமாய் மற்றவர்களுக்கும் கொடுக்கும் வரம் தா என் இறையே!

இனியபாரதி.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

நிம்மதியான சமூகம்...

நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த சமூகத்தில் வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும். ஆனால், இந்தச் சமூகம் நம்மை நிம்மதியாக வாழ விடுவதில்லை. இதற்குக் காரணம் நம் குடும்பம் தான் என்று சொல்ல வேண்டும்.
சிறு வயதிலிருந்தே... நான், என் குடும்பம், எனது என்ற எண்ணத்தையே குழந்தைகளின் மனதில் பதிய வைத்து விடுகிறோம். பெரியவர்களாகும் போது அவர்களுக்கு அந்த எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்கின்றது.
சுயநலம்... 'நான் நன்றாய் இருக்க வேண்டும். எனது குடும்பம் நன்றாய் இருக்க வேண்டும்.' என்று எண்ணுகிறோமே தவிர, நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்தைப் பார்க்கத் தவறி விடுகிறோம். இதன் விளைவு தான் 'எவன் எக்கேடு கெட்டால் என்ன? நான் நன்றாய் இருக்கிறேனா? அது போதும்.' என்ற மனநிலை.
நம்மில் எத்தனைபேர் தெருவில் சண்டை நடந்தால் அதை விலக்கி விடச் செல்கிறோம்?
எனக்கு எதற்கு இந்த வம்பு என்று தான் நினைக்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நபருக்கு உதவி செய்ய விரைகிறோம்?
பின்னால் வரும் பிரச்சனையை யார் சமாளிப்பது என்று தான் நினைக்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் நம் வீட்டின் அருகில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு உதவுகிறோம்?
என் பொலப்புக்கே இங்க நாக்கு தள்ளுது என்று தான் சொல்கிறோம்.
ஏன்...
 விரக்தியின் உச்சத்தில் கூட, மற்றவர்களைத் தான் தாக்குகிறோம். கோபம் என்றால் கூட அருகிருப்பவரைத் தான் பதம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட சமூகம் எங்கு ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கும் என்பதில் தான் ஐயம்.
அகிம்சையை விரும்புகிறேன்... அதை என் வீட்டில் இருந்து துவங்கப்போகிறேன். வீட்டில் அனைவரிடமும் அன்புடன் பழகுவேன். அடுத்து, என் தெருவில் உள்ளவர்களிடம்.. அடுத்து, எனக்குத் தெரியாதவர்களிடம்... இப்படியாக நம் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் போது, நமக்குள் அன்பு பெருகும்.
கள்ளம் கபடமற்ற சமுதாயத்தில் நம் தலைமுறைகள் தலைத்தோங்கும்...
இனிய ஞாயிறு வாழ்த்துகளுடன்....

இனியபாரதி.

சனி, 15 ஏப்ரல், 2017

உயிர்ப்பு நாள்...

உனக்காக இந்த உலகில் வந்தேன்...
உனக்காக வேலை செய்தேன்...
உனக்காக சோதனைகள் ஏற்றேன்...
உனக்காக பாடுகள் பட்டேன்...
உனக்காக சிலுவை சுமந்தேன்...
உனக்காக உயிர்விட்டேன்...
உனக்காக...
எல்லாம் செய்த எனக்கு என்ன நீ செய்தாய்?
உனக்காக என்னையே அளிக்கும் வரம் தாரும் இறiவா!
அனைவருக்கும் உயிர்ப்பு பெருநாள் வாழ்த்துகள்!!!
இனியபாரதி.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தவிக்க வைக்கும் வெள்ளி...

உன்னை நோக்கிய என் பயணம் ஆரம்பமான
அந்த இனிய காலை வேளை!
யாருக்கும் அஞ்சாமல் தேடி வரத் தூண்டிய துடிப்பு!
வெயிலையும் பொருட்படுத்தாமல் வெறிச்சோடிய
தெருக்களில் சுற்றி வந்த பேருந்தில்...
உல்லாசமாய்...
உன் முகத்தைக் காண...
கண் இமை மூடாமல் உன் உடனிருப்பை
நினைத்துக் கொண்டு...
பேருந்திலிருந்து இறங்கிய அந்த நிமிடம்
உன் அருகாமை அனைத்தையும் மறக்கச் செய்தது!
அன்று மாலை உன்னுடன் சேர்ந்து அருந்திய தேநீர்...
திக்கிக்கும் தேனமுதமாய் இன்றும் இனிக்கின்றது!
அன்று தான் உணர்ந்தேன் உன் அருகாமை எனக்கு
எவ்வளவு தேவை என்று!
இனிமையான இரவுப்பொழுதில் உன்னுடன் உரையாடிய
அனைத்தும் என்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே
இன்று என்னைத் தவிக்க வைக்கிறது....


இனியபாரதி.

வியாழன், 13 ஏப்ரல், 2017

அந்த ஆறு மணி நேரங்கள்....

என்னையே மறந்து நின்றேன்...
உன்னை மறக்க முடியாமல் நின்றேன்...
ஒரு நிமிடம் கூட மற்றவற்றை எண்ணத் தோன்றவில்லை...
என் எண்ணமெல்லாம் ஒன்றாகவே இருந்தது!
உன்னை உறுதியாய் பற்றிக் கொண்ட பிறகு
வேறொன்றிற்கு இடமில்லை போல் தெரிகிறது!
இவ்வளவு வருடங்களை இழந்தவிட்டேனோ என்று
எண்ணத் தோன்றுகிறது!
உம் அருகில் அமர்ந்து உம்முடன் பேச...
உம் கைகோர்த்துக் கொண்டு கதைகள் பேச...
ஆரம்பித்துவிட்டேன்...
என்னை ஏற்று முழுமையாக அன்புசெய்ய
உம்மால் மட்டுமே முடியும் என்பதை உணர்கிறேன்!
தொடர்ந்து உடனிருந்து வழிநடத்தும்.

இனியபாரதி.

புதன், 12 ஏப்ரல், 2017

படித்ததில் பிடித்தது...

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள். "உனக்குத் தம்பி வேண்டுமா அல்லது தங்கை வேண்டுமா?"

மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.

"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!

ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.

இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.

கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை. கோவிலுக்குச் செல்பவன் என்பதால், ஒருவன் நல்லவனும் இல்லை.

கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

நானும் துறவி தான்!

ஒரு குட்டிக் கிராமத்தில், ஒரு ஆசிரமம் இருந்தது. அங்கு ஒரு துறவி, தனது ஐந்து சீடர்களுடன் வசித்துவந்தார். தன் சீடர்களுக்கு உபநிடதங்களையும், வேதங்களையும் விளக்கிக் கூறுவதும், மக்களுடன் உரையாடுவதும் தான் இவரது அன்றாட வேலையாக இருந்தன. இப்படியாக நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தன.
ஒரு நாள் காலையில் மரத்தடியில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார், துறவி. அவர் யோசித்;துக் கொண்டிருந்தது இதுதான்... 'நான் துறவி போலா இருக்கிறேன்? என் வேலை போதிப்பதும், உரையாடுவதும் மட்டும் தான். இதைச் சாதாரண பாமரன் கூட செய்யலாமே? பின் எதற்கு நான் துறவி என்று என்னையே ஏமாற்றிக்  கொள்ள வேண்டுமென்று' சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கடவுள் அவருக்குத் தோன்றினார். 'உன் குழப்பத்திற்குப் பதில் உன்னிடம் தான் இருக்கிறது.' என்று கூறி மறைந்துவிட்டார்.
யோசித்துக் கொண்டிருந்த துறவி ஞானம் பெற்றார்.
துறவறம் - துறவி – துறவு என்பது என்னை முற்றிலும் துறப்பது, என் தேவைகளை அறவே மறந்து மற்றவரின் தேவையை மட்டும் மனதில் இருத்தி அதைப் பற்றி யோசிப்பது, மற்றவர்கள் மீது உண்மையான அன்பு செலுத்துவது, சாந்த நிலை... இவை எல்லாம் தான் துறவறத்தின் அடையாளம். ஆனால், நான் அதைச் செய்யத் தவறிவிட்டேன் என்று உணர்ந்தார்.
அதற்காக அவர் போதிப்பதையோ, மக்களிடம் பேசுவதையோ நிறுத்தவில்லை.. அத்துடன் சேர்த்து தன் நேரம் அனைத்தையும் மற்றவர்களுக்காகச் செலவிட்டார். ஊர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். போற்றுதற்குரிய நல்ல துறவியாய் வாழந்து இறந்தார்.

அன்புடன்
இனியபாரதி.

திங்கள், 10 ஏப்ரல், 2017

முப்பரிமாணம்...

இன்று நான் கேட்ட, பேசிய வார்த்தைகளில் என்னைப் பாதித்தது... 'முப்பரிமாணம்' என்ற வார்த்தை தான். இது ஒரு தமிழ்ப் படத்தின் தலைப்பு. இந்தப் படத்திற்குத் தலைப்பு பொருந்துகிறதோ இல்லையோ, என்னைச் சிந்திக்க வைத்தது. முப்பரிமாணம் (3னு னுiஅநளெழைn). இதை நான் புரிந்து கொண்ட விதம்.. நாம் ஒரு செயலைச் செய்கிறோம் என்றால், அதை ஒரு கண்ணோட்டத்தில் இருந்து மட்டும் பார்க்கக் கூடாது. எல்லா விதத்திலும் இது சரிதானா என்று யோசிப்பது.
இந்தப் படத்தில், கதாநாயகனை விரும்பும் கதாநாயகி, ஒருகட்டத்தில் படத்தில் நடிக்கும் ஒரு நடிகனுக்குத் தன்னைப் பிடித்ததால், அவன் பின்னால் சென்றுவிடுவாள். இதைக் காதலித்தவன் வந்து கேட்கும்போது, 'உனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், போக மாட்டாயா?' என்கிறாள். மனமுடைந்த கதாநாயகன் தற்கொலை செய்து கொள்கிறான். இந்தவிசயம் நடிகனுக்குத் தெரியவர அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இது தான் கதை....
ஆக, வாழ்க்கைக்குத் தேவை பணம் மட்டும் தான் என்று அந்தப்பெண் நினைத்து, தன் காதலனைவிட்டுச் செல்கிறாள். கடைசியில், அவள் கதையும் கேள்விக்குறியில் தான் முடிகின்றது!
எங்கள் பள்ளி முதல்வர் அடிக்கடி சொல்வார் 'கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே' என்று. அது நூற்றுக்கு நூறு உண்மை தான்.
ஒரு செயலை மற்றவர்க்கு செய்யும்போதே 'இதைச் செய்வதால் நமக்கு என்ன இலாபம்?' என்று தான் மனம் யோசிக்கின்றது. எல்லா வகையிலும் நமக்குச் சாதகமாய் இருந்தால் மட்டும் தான் அந்த வேலையைச் செய்கிறோம். இல்லையென்றால் அதைச் செய்யத் துணிவதில்லை.
ஒருவருடன் பேசுகிறோம், உறவு வைத்துக் கொள்கிறோம் என்றால்... இவர் பணக்காரரா... செல்வாக்கு நிறைந்தவரா... காரில் செல்பவரா!!! என்று தானே பார்க்கிறார்களே தவிர, உண்மையாக அன்பு செய்பவரா என்று யாரும் பார்ப்பதில்லை... அதனால் உண்டானதே இந்த முப்பரிமாணம்.
இப்படி ஒரு விசயத்தைப் பற்றி என்னை யோசிக்க வைத்த என் உறவுகளுக்கு நன்றி!

இனியபாரதி.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

குருத்து ஞாயிறு...

இன்று, குருத்து ஞாயிறு எங்கள் ஆலயத்தில், சிறப்பாக, அழகாக, நேர்த்தியாக நடைபெற்றது. எங்கள் இளையோர் இயக்கம் கடந்த ஆறேழு மாதங்களுக்கு முன்பு தான் நான்கு நபர்களுடன் தொடங்கப்பட்டது. எங்கள் பங்கிலுள்ள அனைவரும் கிண்டல் செய்வார்கள். வெறும் நாலு பேரை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?' என்று சொல்வார்கள். ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல், அடிக்கடி நால்வரும் கூட்டம் போட்டு பேசுவோம்.
இப்படியே சில மாதங்கள் சென்றன. யாரும் இல்லாமல் இருந்தால் பரவாயில்லை. எங்கள் ஆலயத்தில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் முன்னால் வருவதேயில்லை. சரி. இவர்களை இளையோர் இயக்கத்திற்கு வரவைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
இளைஞர் இயக்கத்திற்கு வர இளைஞர்களுக்கு முதலில் ஆர்வம் வர வேண்டும். அவர்கள் பார்க்கும் வண்ணமாக, பெற்றோர்கள் எங்களை நம்பும் வண்ணம், நாங்கள் செயல்பட வேண்டுமென்று முடிவெடுத்தோம். வாரந்தோறும் கூடினோம். கலந்தாலோசித்தோம்.
படிப்படியாக நான்காக இருந்தது, இப்போது பதினொன்று இளம்பெண்கள், ஐந்து இளைஞர்கள் எங்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம், சில நேரங்களில் மெய்சிலிர்க்க வைக்கின்றது. எங்கெல்லாம் சரியான தலைமை இருக்கின்றதோ, அங்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எங்கள் இயக்கத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லியே ஆக வேண்டும்.
இன்று, நாங்கள் முன்னின்று நடத்தியதால், அதைப் பார்த்து ஆர்வம் கொண்டு, இன்னும் இரண்டு இளம்பெண்கள் எங்கள் இயக்கத்தில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். பெருமையாக இருக்கின்றது. இயக்கங்கள் அனைவரும் நல்லது செய்வதற்கே. திருவிழாக்கள் அனைவரையும் ஒன்றாய் கூட்டுவதற்கே.. இது இரண்டையும் உணர்ந்து, எங்கள் கடமைகளைச் செவ்வனே செய்வோம்.
குருத்தோலைப்பவனி எப்படி இயேசுவைப் புகழ ஒரு வாய்ப்பாக இருந்ததோ, அதே போல் எங்கள் இயக்கமும், எங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளும் இயேசுவை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்!
இந்த வாரம் இனிய வாரமாகட்டும்.

இனியபாரதி.

சனி, 8 ஏப்ரல், 2017

Nice...

Two things are very difficult to achieve!!!

1. To plant your ideas in someone else's head.
2. To put someone else's money in your own pocket.

The one who succeeds in the first one is called a TEACHER.
And the second is called a BUSINESSMAN.

The one who succeed in both is called a WIFE.

The one who fails in both is called a HUSBAND!!!
😄😅😄😅😄😅

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

எப்போது மதிப்பு?

இன்று எங்கள் ஆலயத்தில் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து 'சிலுவைப்பாதையை' நடத்தினோம். இதற்காக நாங்கள், கடந்த ஒரு வாரகாலமாக நன்றாகப் பயிற்சி எடுத்தோம். பயிற்ச்சிக்காகவே அவர்களுக்கு, அவர்களுடைய குறிப்புகளை, நான் அவர்களுக்கு எழுதிக் கொடுத்திருந்தேன். அதை வைத்துத் தான் பயிற்சி எடுத்தார்கள். எழுதிக் கொடுத்திருந்த தாளை, மிகப் பத்திரமாகப் பார்;த்துக் கொண்டார்கள்.
இன்று சிலுவைப்பாதையும் முடிந்து விட்டது. அந்தக் காகிதங்களின் வாழ்வும் முடிவுக்கு வந்து விட்டது. சிலுவைப்பாதை முடிந்து, நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி, வாசித்து முடித்த அனைத்து காகிதங்களும் கிடந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
வீட்டிற்கு வந்து, அதை எடுத்து வெளியில் வைக்கும் போது தான் பார்த்தேன். எவ்வளவு அழகான வார்த்தைகள், இயேசுவின் வார்த்தைகள்.... இவற்றின் நிலைமையே ஒரு சில நேரங்களுக்குப் பின் குப்பைத் தொட்டியில் தான் கிடக்கின்றன!
நம் நிலைமை!!! நம் வாழ்க்கை!
ஒரு சில நேரங்களில், நம் நண்பர்களை, நம் உறவுகளை ஒரு சில காரணங்களுக்காக நம்முடன் வைத்துக் கொண்டு, நம் வேலை முடிந்ததும், அவர்களை உதாசினப்படுத்துவது, உதறித்தள்ளுவது போன்ற சம்பவங்கள் நம் வாழ்க்கையில், ஏன் நாமே கூட மற்றவர்களுக்குச் செய்திருக்கலாம்.
அந்தத் தருணங்களை நினைத்துப் பார்ப்போம்.
நமக்காகத் தன்னையே வருத்திக் கொண்டவர்களை நினைத்துப் பார்ப்போம்.
தேவைக்கு உபயோகிக்கும் கருவிகளாய் இல்லாமல், நம் உறவுகளுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக் கொள்வோம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்.
இனியபாரதி.

வியாழன், 6 ஏப்ரல், 2017

அலைச்சல்...

நண்பர்களுக்காக நண்பர்களுடன்..
உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது என்னவோ
அழகாகய் தான் இருக்கின்றது!
தெருவில் செல்லும் யாரையும் கண்டு கொள்ளாமல்
கடைத்தெருவில் வடை வாங்கி இருவரும்
சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டே சுற்றும் போது
தெரியாது... நம்மைத் தான் தெருவில் செல்பவர்கள்
பார்க்கிறார்கள் என்று!
ஏதாவது கடைக்குள் நுழைந்தால்
நம்மைத் தான் எல்லோரும் பார்ப்பார்கள்..
பார்க்கக் காரணம் அழகு என்று சொல்ல முடியாது..
நாம் சிரிக்கும் ஓசை தான் அவர்களைப் பார்க்க வைக்கிறது!
அது கூட தெரியாமல் நாம் பேசிக் கொண்டிருப்போம்!
சில நேரங்களில் பேசிக் கொண்டே
நம் வீட்டைத் தாண்டி சென்று விட்டிருப்போம்!
வீட்டிற்கு வந்து சற்றும் இளைப்பாறாமல்
மறுபடியும் பேச ஆரம்பித்து விடுகிறோம்!
நமக்கு அலைச்சல் தெரியாதா என்ன?

இனியபாரதி.

புதன், 5 ஏப்ரல், 2017

படித்ததில் பிடித்தது....

கடலில் பெய்யும் மழை பயனற்றது,

பகலில் எரியும் தீபம் பயனற்றது,

வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,

நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.

அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.

பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.

ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,

சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,

பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.

பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.

அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,

குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.

கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.

ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

எல்லா காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.

வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.

காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.

கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹

இருபது ரூவா  பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா  கொடுக்குறோம்...

ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...

கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வருகிறாேம்...

காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...

ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...

திங்கள், 3 ஏப்ரல், 2017

வறுமையில் வாழக் கூடாது!

வறுமை என்பது பணம் இல்லாமை மட்டுமல்ல!

செல்வம் இல்லாமை மட்டுமல்ல!

கார் இல்லாமை மட்டுமல்ல!

குணம் இல்லாமையும் தான்!

மகிழ்ச்சி இல்லாமையும் தான்!

பொறுமை இல்லாமையும் தான்!

கற்றல் இல்லாமையும் தான்!

சுயக்கட்டுப்பாடு இல்லாமையும் தான்!

தன்நம்பிக்கை இல்லாமையும் தான்!

நான் வறுமையில் வாழ
விரும்பவில்லை!

வறுமையில் பிறந்திருந்தாலும்
வளமையில் வாழ்ந்து
வென்று காட்டுவேன் இந்த உலகை!

இனியபாரதி.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

எது பெரிய பாவம்?

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்?
ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்.

”நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?”

அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,
‘நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன்.
தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?”

ஞானி சிரித்தார்.

முதல் ஆளிடம்,
”நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா,” என்றார்.

இரண்டாமவனிடம்,
‘நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா” என்றார்.

இருவரும் அவ்வாறே செய்தனர்.

முதலாமவன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான்.

இப்போது ஞானி சொன்னார்,
”சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,” என்றார்.

முதலாமவன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான்.

இரண்டாமவன் தயக்கத்துடன்,
‘இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?” என்று கேட்டான்.

ஞானி சொன்னார்,” முடியாதல்லவா, அவன் பெரிய தவறு செய்தான்.
அதற்காக வருந்தி, அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம்.
நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன்.
யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது.

அவனுக்கு மீட்சி சுலபம். உனக்குத்தான் மீட்சி என்பது மிகக் கடினம்.” !!

படித்ததில் பிடித்தது....