
எனக்கு மிகவும் நெருக்கமான, என் தோழியிடம் உரையாடினேன். தீபாவளி வாழ்த்து சொன்னதும், அவள் அழும் சத்தம் கேட்டது. ஏன் அழுகிறாய் என்று கேட்டேன். அவள் சொன்ன ஒரே வார்த்தை 'பணம் பத்தும் செய்யும் ஜெனி. பணம் இருந்தால் தான் பெற்றோர், உறவினர், கணவன் எல்லாம் மதிப்பார்கள்' என்று கூறினாள். நாம் கல்லூரியில் படித்த போது பணத்தைப் பார்த்துத் தான் பழகினோமா? என்று நான் கேட்டேன்.
"அது விவரம் தெரியாத வயசு. இப்போதெல்லாம் பணம் தான் எல்லாம்" என்று சொன்னாள்.வேறு யார் இந்தவார்த்தையைச் சொல்லியிருந்தாலும் ,எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்காது. அவள் சொன்னது தான் ஆச்சரியம். 10 வருடங்கள் காதலித்து,காதலித்தவரையே கரம் பிடித்தவள். வீட்டின் செல்லப்பிள்ளை. இவளுக்கே, இந்த நிலைமையா?எங்காவது ஓடிவிடலாம் போல் இருக்கிறது, என்று கூறினாள். மிகவும் வருத்தமாக இருந்தது.
எனக்கும், என் நண்பனுக்கும் இடையில் பணத்தைப் பற்றிய பட்டிமன்றம் நடக்கும். அவன், திட்டமிட்டு செயல்படுபவன். நான், கிடைப்பதை எல்லாம் செலவு செய்பவள். நான் அவனைக் கஞ்சன் என்று திட்டுவது வழக்கம். "பணத்தின் அருமை" என்று அறிவுரையைத் தொடங்கிவிடுவான்.
பணம் - பணத்தைப் பற்றிய என் அபிப்பிராயம் இதுதான்.
பணம் தான் எல்லாம் என்று நினைப்பவர்கள் பணத்துடன் மட்டுமே இருந்து விடலாம். பின் ஏன் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள், சுற்றம்?வாழ்க்கைக்கு பணம் தேவைதான். ஆனால், அளவுக்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சுதானே? அதையும் ஞாபகம் வைத்துக் கொள்வோம்.
குறைவான பணத்துடன், வாழ்க்கையை இனிமையாக வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.
நிறைவான பணத்துடன், மனஅமைதி இல்லாமல் இருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு,
மனித மனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன் இந்த அகிம்சைப் போரை!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக